Latest Posts

பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

- Advertisement -

அண்மையில் தனது வாழ்விணையருடன் சென்னைக்கு வந்திருந்தார், இலங்கை, வனியாவில் அம்பாள் கஃபே என்ற பெயரில் சைவ உணவகம் நடத்தி வரும் திரு. சிதம்பரநாதன் விமலன். புத்தகங்கள், இதழ்களை படிப்பதில் ஆர்வம் உள்ள அவர் வளர்தொழில் அலுவலகம் வந்திருந்தார். அவரிடம், வவுனியாவில் செயல்படும் அவரது உணவகம் பற்றி கேட்டபோது,

“வவுனியாவின் முக்கிய பகுதியில் செயல்படும் எங்கள் அம்பாள் கஃபே உணவகத்தை 1960களில் எனது பெரியப்பா திரு. சின்னையா சிவபாலன் மற்றும் எனது அப்பா திரு. சின்னையா சிதம்பரநாதன் ஆகியோர் தொடங்கினர்.

அப்போது மிகச்சிறு உணவகமாகத்தான் தொடங்கப்பட்டது. சிற்றுண்டிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அடுத்த தலைமுறையில் நானும் என் பெரியப்பா மகன் திரு. சிவபாதம் ஜெயராமன் அவர்களும் இணைந்து பொறுப்பேற்று நடத்தி வருகிறோம்.
தற்போது பத்து மேசைகள். நாற்பது பேர் அமரும்படியாக பெரிதாக்கி இருக்கிறோம். எங்களிடம் 15 பேர் பணியாற்றி வருகிறார்கள்.


காலையில் இட்லி, இடியாப்பம், கிச்சடி, புரோட்டா.. மதியம் சாப்பாடு, இரவு இட்லி, தோசை, மசாலா தோசை, இடியாப்பம், புட்டு, கொத்து புரோட்டா, கொத்து இடியாப்பம் ஆகியவை எங்களது சிறப்பு உணவு வகைகளாகும்.


எங்களது அப்பா, பெரியப்பா தொடங்கிய உணவகம் என்பதால் உணவகம் தொடர்பான பணிகள் எங்களுக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். என் அப்பாவும் பெரியப்பாவும் தரத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாங்களும் அதையே பின்பற்றுகிறோம்.
வவுனியா மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்துதான் பெரும்பாலான காய்கறிகள் வாங்குகிறோம். சில காய்கறிகளை தம்புள பகுதியில் வாங்குகிறோம். அவற்றின் தரத்தில் சமரசம் செய்வதே இல்லை. அதே போல பருப்பு, புளி போன்ற மளிகைப் பொருட்களையும் தரமாகத் தேடி வாங்குகிறோம்.

Also read: பல தொழில்களை வளர்க்கும் ஓட்டல் தொழில்


இத்தனை தரம் பார்த்து பொருட்களை கொண் டுவந்தாலும் உணவின் சுவைக்கு சமையற்காரர்களே முதன்மையான காரணம். அதாவது உணவை செய்யும் முறை மிக முக்கியமானது. ஆகவே சிறப்பாக சமையல் செய்யும் சமையல் கலைஞர்களைத் தேடிப் பிடித்து நியமித்து உள்ளோம். எல்லோருமே நல்ல அனுபவசாலிகள்.
அதே நேரம் இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக கேட்டரிங் படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் கேட்டரிங் படித்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


வவுனியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வளவாக வருவார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து பயணிகள் வருவது உண்டு. அவ்வளவுதான்.


மற்றபடி உள்ளூர்வாசிகளே எங்களது நுகர்வோர்கள். அண்மைக் காலமாக பெண்களும் வேலைக்குச் செல்வதால், காலை மற்றும் மதிய உணவுக்கு உணவகங்களை நாடும் வழக்கம் இங்கே ஏற்பட்டிருக்கிறது. உணவகங்களின் வருமானம் அதிகரிக்க இது ஒரு காரணமாக இருக்கிறது.


அதே போல இரவு நேரங்களில் குடும்பத்துடன் உணவகம் வரும் பழக்கமும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவும் இங்கு உள்ள உணவகங்களுக்கு சாதகமான போக்குதான்.


ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் குடும்பத்தினருடன் உணவகம் வந்து செல்லும் அளவுக்கு இங்கு நிலைமை மாறவில்லை. மேலும் ஸ்விக்கி, சோமோட்டோ, ஊபர் ஈட் போன்ற உணவுகளை உணவகங்களில் பெற்ற வீடுகளுக்கு டெலிவரி கொடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் இன்னும் இங்கே தொடங்கப்படவில்லை.

Also read: அசைவ உணவகத்தை சிறப்பாக நடத்துவது எப்படி?

அவை இங்கு காலூன்ற இன்னும் கூடுதல் காலம் பிடிக்கும் என்று கருதுகிறேன்
வவுனியாவில் எங்களைப் போலவே எட்டு அல்லது ஒன்பது உணவகங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளே முதன்மையாக இருக்கின்றன. அசைவ ஓட்டல்களிலும் புரோட்டா, பிரியாணி, மீன், கறி வகைகள் என பாரம்பரியமான உணவு வகைகளே இருக்கும். மற்றபடி பீட்சா, பர்கர் போன்றவை பெருமளவில் இங்கே மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.” என்றார், திரு. சிதம்பரநாதன் விமலன்.

  • தமிழ் இனியா

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news