ஒரு கார்ப்பரேட் நிறுமத்தின் ஊழியர்கள், இயக்குநர்களின் சேவைகளுக்கு வெகுமதியாக சாதாரண பங்குகளை தள்ளுபடி விலையில் வழங்குவதையே பணிபுரிவோருக்கான பங்குகள் (Sweat equity shares) என அழைக்கப் பெறுகிறது. அதாவது அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் சலுகை விலையில் அந்நிறுமத்தின் பங்குகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறான பங்குகளை வழங்குவதற்கு முதலில் அந்நிறுமத்தின் இயக்குநர் கூட்டத்தில் இதற்கான சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்படுகிறது. அடுத்து பங்கு பரிமாற்ற ஆணையத்தின் (SEBI) வழிகாட்டுதல்களின் படி இருக்க வேண்டும். இந்த பங்குகளின் மதிப்பு மேலாண்மை அலுவலர்களுக்கு வழங்கப் பெறும் ஊதிய உச்ச வரம்பிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறான சலுகை விலையில் வழங்கப் பெறும் பங்குகளின் மொத்த மதிப்பு ஒவ்வொருமுறையும் 15 சதவிகித பங்குத் தொகைக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆயினும் ஒட்டு மொத்தமாக சாதாரண பங்குகளின் 25 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த பங்கு வெளியீட்டில் பங்குகளின் விலை, பதிவு பெற்ற மதிப்பீட்டார் பரிந்துரைக்கும் தள்ளுபடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு வழங்கப் பெறும் பங்குகளை இவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்கு பங்குச் சந்தையில் விற்பனை செய்ய இயலாது.
இவ்வாறு பங்குகளை அளிப்பதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இந்த பங்குகள் வழங்கப்பட்டு விட வேண்டும். புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இவ்வாறான பங்குகளை வெளியிடக் கூடாது. இந்த வகையான பங்குகளை வெளியிடும் நிறுவனமானது இந்த வகையானபங்கு வெளியீட்டினை படிவம் எண் SH.3 இல் பதிவு செய்து ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதற்கான விதிமுறைகள் கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு 54 விளக்குகிறது.
-ச. குப்பன்