புதிதாக கடை தொடங்கும் இளைஞர்கள் வளர்ச்சிக்கான சில செய்திகளை மனதில் வைத்து இயங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மிகவும் விவரமானவர்கள் என்று எண்ண வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் பற்றித் தெளிவாக இருந்தாலும், சில சின்னச் சின்ன உத்திகளை வகுத்து அவர்களை கவர்ந்து விடலாம்.
விலை என்பது வாடிக்கையாளர்களை இழுக்க உதவும் ஒரு காரணி. தரத்தை முதன்மையாக கொண்டு வாங்கும் வாடிக்கையாளர்களும் விலை என்ற விஷயத்தில் அடிபட்டுப் போவார்கள். எனவே விலையில் தள்ளுபடி, சலுகைகள் என்று அறிவிக்கும் போது வாடிக்கையாளர்களை அதிகமாக வாங்க வைக்க முடியும்.
வாடிக்கையாளர்கள் மீது மிகவும் அக்கறை காட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் பொருட்கள் அல்லது சேவையை வாங்க வரும்போது, இதனால் உங்களுக்கு அந்ததந்த பயன் இருக்கும் என்பது போன்றவற்றை விளக்கிச் சொல்ல நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பல பிராண்டுகள், பல மாடல்கள், பல பொருட்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் சரியான பொருட்களை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். விலை உள்ள பொருட்களை எப்படியாவது அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும் என்று நினைத்து விற்பனை செய்ய கூடாது.
விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களே எதை வாங்கலாம் என்ற யோசனையை விற்பவர்களிடம் கேட்பார்கள்.
விற்பனையைத் தாண்டி வேறு செய்தகளையும் பேசலாம். அந்த செய்திகள் அவர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். கிராமங்களில் மளிகைக் கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் குடும்பம், கிராமம், அரசியல் போன்ற பல உரையாடல்கள் நடைபெறுவதை பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களிடம் பொருட்களை வாங்குபவர் என்ற ஒரு பிணைப்பை தாண்டி நட்பு உறவைப் பேணுங்கள்.
நம்மில் பல பேருக்கு அந்த கடைக்காரர் எனக்கு நன்றாக தெரியும்; அந்த கடையில் நான் சொன்னால் சற்று குறைத்து கொடுப்பார்கள்; அந்த கடைக்காரருக்கு என் பெயர் சொன்னால் நன்றாக தெரியும் என்று மற்றவர்களிடம் சொல்வது வழக்கம். இது போன்றவகளை அடையாளம் கண்டு உறவை பேண வேண்டும். அவர்கள் மற்ற வாடிக்கையாளர்களை கடைக்கு அழைத்து வரும் பொழுது அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும். இது பல வாடிக்கையாளர்களிடம் உங்கள் கடையை பரிந்துரைக்க அவர்களை தூண்டும்.
வாடிக்கையாளர்களின் சந்திப்புகளில் முடிந்த வரை அவர்களின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு மற்றும் தொடர்பு ஏற்படுகிறது. அதே போன்று உரையாடலின் தொடக்கத்திலேயே உங்கள் பெயரையும் தெரியப்படுத்துவது நல்லது.
மேலும் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமில்லாமல் அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின் போது மற்ற அவசியமான, தேவையான விபரங்களை அறிந்து அதற்கேற்றவாறு அவர்களுக்கு மனநிறைவு ஏற்படுமாறு செய்யலாம்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வெகுமதி திட்டங்கள், அதாவது குறிப்பிட்ட அளவுக்கு வாங்கினால் இலவச பொருட்கள், கூப்பன்கள், சலுகைகள் தருவதும் விற்பனையைக் கூட்டும். இலவசமாக வீடுகளுக்கு பொருட்களைக் கொண்டு போய்க் கொடுத்தல் போன்றவற்றுக்கும் பயன் கிடைக்கும்.
-சந்தோஷ்