காட்டுயிர் ஒளிப்படக் கலையில் உள்ள வாய்ப்புகள்.

0

வன விலங்குகளைப் படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும்? என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? ஒருவர் முழு நேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் விலங்கியல் ஒளிப்படக்கலை (வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வன விலங்குகளுக்கு என்று “உயிர்” என்ற இருமாத இதழையும் நடத்தி வருகிறார், திரு. ஏ. சண்முகானந்தம், வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றி நாம் அவரிடம் கண்ட நேர்காணலில் அவர் கூறியதாவது-

“1990 -ஆம் ஆண்டு, கேமரா பற்றிய ஒர் ஆண்டுப் பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்துத் தொடங்கிய என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள், பூச்சிகளை படம் எடுப்பதாக தொடர்ந் தது. நாள் அடைவில் திருமண விழாக்களில் இருந்து விலகி வன விலங்குகளை படங்கள் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு விலங்குகள், பறவைகள், பூச்சிகளை படம் எடுப்பதற்கு என்று பல்வேறு காடுகளுக்கு பயணம் செல்லத் தொடங்கினேன்.

நான் தொடங்கிய தொன்னூறாம் ஆண்டுகளில் இப்போது இருப்பது போல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில் நுட்பம் வரவில்லை. அதனால் ஃபிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன். ஃபிலிம் களைக் கழுவி பிரின்ட் செய்து பார்த்த பிறகே, படத்தின் தன்மை தெளிவாகத் தெரியும். சரியாக இல்லை என்றால் மீண்டும் அதே படங்களை எடுக்க முடியாது. அதனால், முதல் முறையி லேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய ஓராண்டு பயிற்சியும், அதனைத் தொடர்ந்து ஒளிப்படக் கலை வல்லுநர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள் கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.

திரு. ஜீ.உ. கரன் என்ற ஒளிப்படக் கலைஞரின் உதவியால் ஃபோட்டோ கிராஃபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் என்ற ஆசியாவில் பழமை வாய்ந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். இதில் சேர்ந்த பிறகு ஒளிப்படக் கலை பற்றிய பார்வை எனக்கு மாறியது. எப்படி பல விதமான ஒளிகளில் படங்களை எடுப்பது என்று கற்றுக் கொண்டேன்.

இந்த சங்கத்தில் உள்ள மனிதர்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் படங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொள்ள உதவின. மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் ஒளிப்படக்கலை பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுவார்கள். மாநில அளவிலும், இந்தியா முழுவதும் நடைபெறும் ஒளிப் படக்கலை கண்காட்சியில் பங்கு பெற்று, பரிசு பெற்ற படங்களை காட்சிப் படுத்துவார்கள். அவற்றில் கலந்து நிறைய ஒளிப்படக் கலை அறிவை வளர்த்துக் கொண்டேன்.

இன்று பலர் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி -யின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், இவற்றில் நிறைய நிலைகள் உள்ளன. சிலர் ஆர்வத்தில் படம் எடுக்க வருவார்கள். சிலர் விலை உயர்ந்த கேமரா கொண்டு பொழுது போக்குக்கு படம் எடுப்பார்கள். சிலர் முழு நேரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடுபடுவார்கள்.

வன விலங்குகளைப் படம் எடுப்பது, மனிதர்களை நிற்க வைத்து எடுப்பது போல் எளிதான வேலை அல்ல. காரணம் எந்த விலங்கும் நின்று நமக்கு போஸ் தராது. அதனால், பொறுமை மிகத் தேவை. நமக்கும் ஏற்ற படம் எடுக்க பல நாட்கள் கூட ஆகலாம். குறிப்பாக நாம் எடுக்கும் விலங்கு, பறவை, பூச்சிகள் ஆகியவற்றின் பெயர், தகவல்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்காக வாசிப்பு மிக அவசியம். எடுக்கும் படம் நேர்த்தியாக வருவதற்கு என்னுடைய வாசிப்புப் பழக்கம் உதவியாக இருக்கிறது. ஒளிப்படம் தொடர்பான புத்தகங்கள், எடுக்கப் போகும் படங்கள் பற்றிய படித்தல் மிகத் தேவை.

வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்காகவே ஒரு சங்கத்தை தொடங்கி நடத்தி வந்தோம். “கூழைக்கடா இயற்கை புகைப்பட சங்கம்” என்ற பெயரில் முழுக்க முழுக்க வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றிய பேச்சுக்கள், நுணுக்கங்கள், எப்படி போட்டியில் கலந்து கொள்வது? என்பது போன்று செயல்படுத்திக் கொண்டி ருந்தோம். மெடிஸ்கேன் தலைவர் டாக்டர். சுரேஷ், இயற்கை ஒளிப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

மெடிஸ்கேன் தளத்திலேயே, மாதம் ஒரு கூட்டம் நடத்த அனுமதி தந்தார். பிறகு அவரேயே சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொன்னோம். அவரின் ஒத்துழைப்பில் இயற்கைப் புகைப்பட சங்கம் மிக நன்றாகவே நடக்கிறது.

அதன் தொடர்ச்சி யாக வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்கு என்றே “உயிர்” என்ற காட்டுயிர் இதழை நடத்த தொடங் கினோம். இந்த இதழில் முழுக்க முழுக்க காட்டுயிர் பற்றிய தகவல்கள், படங்கள் இடம் பெறுகின்றன. இதில் நீங்கள் எடுத்த விலங்குகள் படங்களை அனுப்பி இடம் பெறச் செய்யலாம். தமிழகத்தில் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றிய எந்த வித வளர்ச்சியும் இல்லாததால் இதில் ஈடுபடுபவர்கள் ஒரு கட்டத்தில் அதனை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படி விலகாமல் அவர்களை ஒருங்கிணைத்து, அவர் களுக்கு ஒரு பாலமாக செயல்பட அனைத்து வித முயற்சிகளும் செய்து வருகிறோம்.

ஃபோட்டோகிராஃபியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்குப் பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன்.

ஒருவர் முழு நேரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடு படலாமா? அதன் மூலம் வாழ்க்கையை நடத்த முடியுமா என்றால், ஈடுபடலாம். வாய்ப்புகளும் உள்ளன. அவற்றை சரியாக செயல்படுத்தினால் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எடுக்கும் படங்களை மாநிலம், நாடு தழுவிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் டிஸ்கவரி, அனிமல் பிளானெட், நேஷனல் ஜியோகிராஃபி போன்ற சேனல்களிலும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
நான் எடுத்த படங்கள் அடிப்படையில் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். குறிப்பாக, பகலில் நடமாடும் உயிரி னங்கள் போல் இரவிலும் நிறைய உயிரினங்கள் நடமாடுகின்றன. அதனை வைத்து ஒரு புத்தகம் வெளியிட்டு உள்ளோம்.

“தமிழகத்தின் இரவாடிகள்” என்ற புத்தகம் மூலம் இரவில் நடமாடும் சிறு உயிரினங்கள், முதல் பெரிய உயிரினங்கள் வரை படங்களை எடுத்து, கட்டுரைகள் எழுதி வெளியிட்டதில், அவை வாசகர் களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயங்களை நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து, “தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்” என்ற பெயரில் எழுதி நூல் வெளியிட்டேன்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவை சரணாலயங்களைப் பற்றி வெளி வந்திருக்கும் முதல் புத்தகம் இது ஆகும். ஆனந்த விகடன், விலங்கியல் ஒளிப்படக் கலை தொடர்பாக ஆண்டு தோறும் வழங்கும் விருதை எனக்கு வழங்கியது.” என்றார், திரு. சண்முகானந்தம்.

– செழியன்.ஜா

பெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’!

0
வளர்தொழில், ஜூன் 2018

சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் ‘வானமே எல்லை’. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது. சின்ன அளவில் வணிகம் செய்பவர்களில் இருந்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்கள் வரை ‘வானமே எல்லை’ நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் நடத்தி வருபவர், தொகுப்பாளர் திருமிகு. அப்சரா.

வானமே எல்லை நிகழ்ச்சி பற்றி அப்சரா கூறும்போது -“நான் இதழியல் துறையில் எம். ஏ., பட்டம் பெற்று இருக்கிறேன். படித்து முடித்ததும் ஊடகத் துறையிலேயே வேலை தேடினேன். நான் திருநங்கை என்ற காரணத்தால் வேலை தேடும் நேரங்களில் தயக்கங்களை சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.

நான் வாழ்க்கையில் பல இடர்களைத் தாண்டி வந்ததால், வெற்றியாளர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சுவையான கதைகளைக் கேட்பதில் ஆர்வம் இருந்தது. இயல்பிலேயே எனக்கு கதை சொல்வது மிகவும் பிடிக்கும். அதிலும், மக்களுக்கு பயன் உள்ள கதைகளைக் கூறுவது எனக்கு இன்னும் பிடிக்கும். ஜெயா தொலைக்காட்சிக்கு வேலை தேடிப் போன போது அதன் தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) திரு. விவேக் ஜெயராமனின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரு புது நிகழ்ச்சி பற்றி சிந்தித்த போது ”வானமே எல்லை’ நிகழ்ச்சி உருப்பெற்றது. நானும் அவரும் நிறைய ஆலோசனைகளை மேற் கொண்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

இயல்பாக, பெண்கள் தொழில் முனைவைப் பொறுத்த வரை மக்கள் இடையே ஒரு பொதுப்புத்தி நிலை இருக்கிறது. அது, சில இடர்களை சந்தித்ததும் அவர்கள் பின்வாங்கி விடுவார்கள், தாக்கு பிடிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. ஆண்களை விட பெண் களுக்குத்தான் அதிகமான மன வலிமை மற்றும் உடல் வலிமை இருக்கிறது. அவர்களால், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியும். வீட்டுச் சூழல் மற்றும் வெளியே உள்ள சூழல் என பலவற்றையும் சமாளிக்கும் திறமை மற்றும் மனவலிமை பெண்களுக்கு உண்டு. அதனால், பெண்களின் வெற்றியைக் கொண்டாடுவதே எங்கள் நிகழ்ச்சியின் குறிக்கோள்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல பெண் தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக் கதைகளை என்னால் கேட்க முடிந்தது. அதில் சிலவற்றைக் குறிப்பாக சொல்லலாம். திருமதி. கலைச்செல்வி, பதினைந்து வயதில் திருமணமாகி அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். மிகவும் வறுமை. இக்கட்டான நிலையில் வாழ்க்கை. பின்னர் அருகில் இருந்த ஒரு பினாயில் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தனது கைக் குழந்தையுடன் வீடு வீடாகச் சென்று, பினாயில் விற்றார். இப்போது அவர் தானாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, பினாயில் தயாரித்து விற்கிறார். தற்போது சுமார் நானூறு நிறுவனங் களின் தூய்மைப் பணிக்காக பினாயிலை விற்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். பலர் இவரிடம் பினாயிலை வாங்கி, வீடுகளுக்கும், அலுவலகங் களுக்கும் விற்பனையும் செய்கிறார்கள்.

அடுத்ததாக, மதுரையைச் சேர்ந்த திருமதி. ஜோஸ்பின். அவரது மகள் மற்றும் கணவர் இருவருமே புற்றுநோய் தாக்குதலால் இறந்து விடுகின்றனர். தனது ஒன்பது வயது மகன் மட்டுமே உடன் இருந்தார். மனம் வெறுத்துப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு நூலகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது, தேனீக்கள் வளர்ப்பைப் பற்றிப் படித்து இருக்கிறார். பின்னர் தன் வீட்டிலேயே தேனீக்கள் வளர்க்கத் தொடங்கி தற்போது நான்கு ஏக்கர் அளவில் பண்ணை வைத்து தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய தேனீக்கள் பண்ணை இவருடையதுதான். மேலும் பல மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்.

இத்தகைய வெற்றிக் கதைகளுக்குப் பின்னால், தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அவற்றை அவர்கள் கடந்து வந்த பாதையையும் கேட்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். வானமே எல்லை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாகவே ஆகி விட்டார்கள். அவர்களிடம் காணும் பல திறமைகள் என்னையும் மெருகேற்றிக் கொள்ள பயன்படுகின்றன. அவற்றில் சில – மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.

ஒரு ஆண் தொழில் செய்வதற்கும் ஒரு பெண் தொழில் செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்பல. ஒரு ஆண் என்பவர் தன் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு அதில் வெற்றி பெற முடியும். ஆனால், ஒரு பெண் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்பம், குழந்தைகளையும் அன்புடன் கவனிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு குடும்பம் அவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டியது மிகத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய வாழ்விணையரின் கனிவு இன்றி அமையாதது ஆகும்.

அவ்வாறு குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வீரியமாக உழைத்து ஒரு பெண் வெற்றி கொள்ள வேண்டும். இவ்வளவு சுமைகளைச் சுமந்து கொண்டு ஒரு பெண் தனது தொழிலில் பெறும் வெற்றி என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தொலைக்காட்சி நேயர்களின் மனதில் பெண் தொழில் முனைவோரை பாராட்டும் மன நிலையை எங்கள் நிகழ்ச்சி உருவாக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண் தொழில் முனை வோரின் குடும்பத்தினர், நிகழ்ச்சிக்குப் பிறகு, இவர்களுக்கு கனிவுடன் உதவத் தொடங்கியதையும் அந்த பெண் தொழில் முனைவோர் எங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், பல பெண் தொழில் முனைவோர், அவர்களின் தொழில் முனைவிற்குப் பெரிய தடையாக முதலீடு இருப்பதாக கூறினர். மேலும் அதே துறையில் இருக்கும் மற்ற ஆண் தொழில் முனைவோரின் போட்டி களையும் சமாளிக்க வேண்டியிருப் பதாகவும் கூறுகின்றனர். முதலீட்டிற்காக வங்கிக் கடன், சட்ட ரீதியான நிறுவனப் பதிவுகள் போன்றவற்றிற்கும் சிரமப் பட்டதாகக் கூறி இருக்கின்றனர்.
எனது பார்வையில், பெண்கள் பணத்தை சேமிக்க வேண்டும். அது அவர்களது தொழில் முனைவிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு பல தொழில்களை பல கோணங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அதில் அனைத்துமே சிறந்த தொழில்கள்தான்.

நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்த பிறகு, அவரது இடத்திற்கே எங்களது குழுவுடன் சென்று, அவர்கள் தொழில் மற்றும் அவர்களின் சுற்றுப்புறம், அவர்களின் மனநிலை என அனைத்தையும் பதிவு செய்து சேகரிப் போம். பின்னர் அதை எங்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர்களைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக ஒளிபரப்பு செய்கிறோம்.

மேலும், நாங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பி விண்ணப்பிப் பவர்களில் இருந்து, மிகவும் கவனத்துடன் நிகழ்ச்சியில் பங்கு பெற ஏற்றவர்களை தேர்வு செய்கிறோம். குறிப்பாக வணிகப் பின்புலம் இல்லாத, வீடும் நாடும் உதவாத நிலையிலும் வெற்றி பெறும் பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம். நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது பார்வையாளர்களாக பங்கு பெறுபவர் களையும் கவனத்துடன் தேர்வு செய்கி றோம். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களைத்தான் பார்வையாளர்களாக தேர்வு செய்கி றோம். அவர்கள் அந்த வெற்றியாளர் களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கின்றனர். இவர்கள் கருத்து களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பெண் தொழில் முனைவோர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக எங்கள் நிகழ்ச்சி இருக்கிறது” என்றார், அப்சரா.

– உஷா சிவலிங்கம்

தமிழ்நாடு அரசு வெற்றி பெறட்டும்! மக்களைக் காப்பாற்றட்டும்!

0

தொழிற்சாலைகள் வேண்டும்தான்; தொழில்கள் வளர வேண்டும்தான். ஆனால், அவை நாட்டின் காற்றையும், தண்ணீரையும் மாசு படுத்தி, வாழும் மக்களின் உடல் நலனின் மீது போர் தொடுக்கும் வகையில் நிச்சயம் அமையக் கூடாது.

கண்ணுக்குத் தெரிந்து தூத்துக்குடியின் மண்ணையும், காற்றையும், நீரையும் கடுமையாக மாசு படுத்தி, மக்களின் உடல் நலனுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இயங்கிக் கொண்டு இருந்த ஸ்டெர்லைட்டுக்கு தமிழ்நாடு அரசு ‘சீல்’ வைத்து இருப்பது, மக்களுக்கு ஒரு அமைதியான மனநிலையைத் தற்காலிகமாகவாவது தந்து உள்ளது.

ஆயிரக்கணக்கான தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம், அந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த போராட்டக்காரர்களின் தியாகத்துக்கு கிடைத்த முடிவாக இந்த ‘சீல்’ அமைந்து உள்ளது.

பல மாநிலங்களும் விரட்டி அடித்த ஸ்டெர்லைட்டுக்கு தமிழ் நாட்டில் மட்டும் எப்படி இடம் கிடைத்து இருக்கும்?

முதன்மையான சில அரசியல் தலைவர்களின், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களின், பெரிய அதிகாரிகளின் செயல்பாடுகளில் புரிதல் உள்ள நமக்கு இதற்கான பதில் தெரியாமல் இல்லை.

வேதாந்தா போன்ற நிறுவனங்கள் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து உள்ள அளவற்ற நன்கொடைகள், வெறுமனே நன் கொடைகள் மட்டும் அல்ல! நாட்டை மாசு படுத்தி அவர்கள் இயக்கும் தொழிற்சாலைகளுக்கு, இவர்களால் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் தரப்படும் கோடிகள் அவை.

மக்களும் வேண்டாம் என்று போராடுகிறார்கள்;

தமிழ்நாடு அரசும் வேண்டாம் என்று ‘சீல்’ வைத்து விட்டது.

இனி தமிழ்நாடு அரசின் சட்ட வல்லுநர்கள், இந்த ஆலை இனி அறவே இயங்காமல் இருக்க, சட்டப்படி என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ந்து அத்தனை வழிமுறைகளையும், சட்டம் சார்ந்த அத்தனை செயல்பாடுகளையும் மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும். நீதி மன்றங்களும் மக்களை நோயாளிகளாக்கும் இந்த ஆலையை மூடிய தமிழ் நாட்டு அரசுக்கு ஆதரவாக இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

-ஆசிரியர் க.ஜெயகிருஷ்ணன்

சிறந்த உரையாடல் உருவாக்கும், நட்பு வலைப்பின்னல்!

0

நமக்கு தெரிந்த மனிதரை நினைவுகூறும் போது, அவரோடு நாம் நடத்திய உரையாடல்களை அசை போடுதல் ஒரு இனிமையான அனுபவம். கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்கும் இந்த பண்பு இயல்பான ஒன்று. முதல் முறை சந்தித்தபோது பேசியது, கடைசியாக பார்த்த போது கண்கலங்கி விடை பெற்றது என்று உரையாடல்களே அந்த உறவுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும்.

உரையாடல் என்பது ஒரு கருவி; அதனைக் கொண்டு ஒரு வேலையை எளிதில் முடிக்கலாம். உரையாடல் ஒரு பூங்கொத்து; அதைக் கொண்டு புதிய மனிதர்களை சொந்தமாக்கலாம். உரையாடல் ஒரு கூர்முனை கத்தியும் கூட; அதை வைத்து சமூகத்தின் அமைதியையும் கெடுக்கலாம். உரையாடல் ஒரு அருமருந்து; அதைக் கொண்டு காயங்களை ஆற்றலாம். உரையாடல் ஒரு ஒட்டுப்பசை; அதை வைத்து உலகெங்கும் பிரிந்து வாழும் உயிர்களையும் இணைக்கலாம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு (Man is a social animal) என்பார்கள். விலங்குகளைப் போல உண்டு, உறங்கி, இனவிருத்தி செய்வதோடு நின்று விடாமல், ஏற்றத்தாழ்வு மிக்க, வேறுபாடுகள் நிறைந்த இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழவும் அதன் பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும், மனிதனால் முடியும். ஆகவேதான் மனிதனை ஒரு சமூக விலங்கு என்கிறார்கள். விலங்குகளுக்கு இல்லாத சிறப்புகளுள் ஒன்று அவனது பேசும் திறன். அதனைக் கொண்டு பிறிதொரு மனிதனோடு உரையாட முடிகிறது. தனக்கான நட்பு வட்டத்தை தானே உருவாக்கவும், அதை விரிவு செய்யவும் முடிகிறது. நல்ல பேச்சுத் திறன் உள்ளவர்களுக்கு இயல்பாகவே நட்பு வட்டம் பெரிதாக இருப்பதை பார்க்க முடியும். நல்ல பேச்சுத் திறன் என்பது மணிக் கணக்காக சொற்பொழிவு ஆற்றும் திறமை அன்று. ஒருவரிடத்தில் நயம்பட, இனிமையாக, நேர்மையாக, பயன் உள்ளதாக பேசுவது.

நீங்கள் ஒரு மனிதரோடு நடத்தும் உரையாடல் என்பது அந்த நேரத்தில் நிகழும் ஒரு வினை மட்டுமல்ல; அந்த உரையாடலைப் பொறுத்து உங்கள் நட்பு வட்டம்/ தெரிந்தோர் எண்ணிக்கை /ஆதரவு ஆற்றல் அதிகரிக்கும் அல்லது குறையும். ஒருவரிடம் நயம்பட, இனிமையாக, நேர்மையாக, நேர்மறையாக, புத்துணர்வாக, பயன் உள்ளதாக பேசும் போது நமக்கும் அவருக்கும் இடையே கண்களுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டாகிறது.

அதுவே எதிர்மறையாக, விரோதமாக, அவதூறாக பேசும் போது அதே பிணைப்பு பலவீனப்பட்டு நாளடைவில் துண்டிக்கப்படுகிறது. உங்கள் நட்பு வட்டத்தின், தெரிந்தவர்களின், நலம் விரும்பிகளின், எதிரிகளின் எண்ணி க்கையை எண்ணிப் பார்த்து உங்கள் பேச்சு எப்படிப் பட்டதாக இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். உங்களுக்கான ஆதரவு ஆற்றல் குறைவானதாக இருக்குமானால், உங்கள் உரையாடலின் தரத்தை, இயல்பை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்யுங்கள்.

ஒரு உரையாடல் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். நன்மை தரும் நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி பல பிணைப்புகளை ஏற்படுத்தும். அவை ஊர் கடந்து, மொழி கடந்து, நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து பூமிப் பந்தில் ஒரு மாபெரும் வலையைப் போல பரவிக் கிடக்கும். அதுவே நமக்காக நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற நமது நட்பு வட்டம், ஆதரவு ஆற்றல், தெரிந்த மனிதர் குழு.இவை தனிமனித வாழ்வுக்கு மட்டுமானது அன்று. நமது கடைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இவ்வகையான ஒரு வலைப்பின்னல் இருக்கும்.

அந்த வலைப் பின்னலுக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி வலைப்பின்னல் இருக்கும். ஒரு வாடிக்கையாளரிடம் நாம் நடத்தும் இனிமையான உரையாடல் என்பது அந்த நேரத்தில் நமக்கு ஏற்படும் வணிகத்துக்கு மட்டும் அல்ல, நாம் பின்னிக் கொண்டிருக்கும் மாபெரும் நமது வலைப்பின்னலுக்கும் (ழிமீtஷ்ஷீக்ஷீளீ) அது நன்மை பயக்கும். அவரது, வலைப்பின்னலில் நாமும், நமது வலைப்பின்னலில் அவரும் இணைந்து கொள்கிறோம். ஒரு வாடிக்கையாளர் என்பவர் ஒரு தனி ஆள் அல்ல என்பதையும், அவரோடு நாம் நடத்தும் உரையாடல் நம்மை இன்னொரு குழுவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

கிராமத்து வீடுகளில் இன்றளவும் வெற்றிலை பாக்கு போடுவது வழக்கம். அதுவும் கும்பகோணம், மாயவரம் போன்ற காவிரி டெல்டா பகுதிகள் இன்னமும் வேளாண்மையை விடாப்பிடியாக வைத்திருப்பதால் அதன் இயல்பு மாறாமல் இப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் வெற்றிலைப் பெட்டியுடன் பெரியவர்களை பார்க்க முடியும். வீட்டின் திண்ணை யில் வந்து அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டே தெருவில் போகிற மனிதர்களிடம் பேசுவார்கள். தெரிந்தவர்கள் என்றால் அருகில் வரவைத்து, வெற்றிலை போடச் சொல்லி அடுத்த தெருவின் செய்திகளைப் பற்றி அறிவார்கள். அந்த ஊருக்கு புதிதாக யாராவது வந்தாலும், யார் நீங்கள்? யார் வீட்டு விருந்தாளி? என்று அலசி ஆராய்ந்து விடுவார்கள். அவர்கள் பேசுவதற்கு ஒரு காரணமும் தேவை இல்லை; ஒரு மனிதர் இருந்தால் போதும். தொலைத் தொடர்பு சாதனங்கள் ஏதுவும் அற்ற காலக் கட்டத்திலும் சிறப்புற செய்திப் பரிமாற்றங்கள் செய்து காட்டியவர்கள். இப்போதும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் ஊரின் நாட்டாமையாக இருந்த ஒரு பெரியவர், கொஞ்சம் கோபக்காரர். ஊரே அவரைக் கண்டால் பேசுவதற்கு சற்று தயங்கும். என் தந்தையை விட வயதில் பெரியவர். எனக்குத் தெரிந்து நல்ல மனிதர், அங்குள்ள மக்களுக்குள் சண்டை சச்சரவு, நிலத் தகராறு என்று எல்லாவற்றுக்கும் நியாயமான தீர்வு சொல்வார். ஐம்பது வயதைக் கடந்த பின்னும் மனைவியோடு சண்டைபோடும் பெரிய மீசைக்காரர். ஒரு நாள் நடந்த சண்டையில் அவர் மனைவி அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேற அப்போது திண்ணையில் வெற் றிலை போட்டுக் கொண்டு இருந்த எனது பாட்டி அவரை வழி மறித்து, நடந்தவற்றைக் கேட்டு, எங்கள் வீட்டிலேயே தங்க வைத்து விட்டார்.
மாலை நேரம் மீசையை முறுக்கிக் கொண்டு தெருவில் கோபமாக நடந்து போன நாட்டாமையை என் பாட்டி அருகில் அழைத்தார். அங்கே நடந்த உரையாடல் பின்வருமாறு-

பாட்டி: ஏ, நடராசா இங்க வா!

நாட்டாமை: ஏன் பெரிம்மா? (மாற்று சமூகம் என்றாலும் உறவுமுறை போலவே பழகுவார்கள்)

பாட்டி: வீட்ல சண்டையாமே, ஏன் என்னா?

நாட்டாமை: அவள அறுத்து விட்டுற வேண்டியதுதான். இனிமே சரிவராது (கோபமாக).

பாட்டி: எலே உனக்கு எதாவது அறிவு இருக்கா?

நாட்டாமை: ஆமா நீ என்னைய தான் குத்தம் சொல்லுவ. அவள கேக்கமாட்ட!

பாட்டி: கட்டுன பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிறியே. வெக்கமா இல்ல?

நாட்டாமை: அவ என்னா பண்ணா, தெரியுமா உனக்கு?

பாட்டி: எலே, அவ ஆயிரம் செஞ்சி இருக்கட்டும்; அதுக்காக அடிச்சிருவியா? ஊருக்கே நியாயம் சொல்ற.., காறித் துப்ப மாட்டாங்க?

நாட்டாமை: என்ன பண்ண சொல்ற, வேகம் வருதா இல்லையா?

பாட்டி: ஏ, முட்டாப் பயல என்னமோ நேத்து கல்யாணம் பண்ண மாதிரி பேசுற. மானங்கெட்ட பயல, நாலு புள்ள பெத்துமா சண்ட போடுவ?

நாட்டாமை: (மௌனமாக சிரித்துக் கொண்டே) இங்க தான் இருக்காளா?

பாட்டி: ஆமா, வருவா போ.

நாட்டாமை: சரி பெரிம்மா, வெத்தல குடு.

நான் சிறுவனாக இருக்கும் போது நடந்த நிகழ்வு இது. நாங்கள் கண்டு நடுங்கும், எங்கள் தந்தை கூட பேசுவதற்கு சற்று தயங்கும் ஒருவரை, நாங்கள் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்யும் எழுபது வயது பாட்டி ஒருவர் மிகவும் நேர்த்தியாக பேசி, குடும்ப சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும், ஊர் மக்கள் முன்னிலையில் கம்பீரமாக நிற்கும் நாட்டாமை அன்று என் பாட்டியின் வசவுகளை வாங்கிக் கொண்டு; தவறை உணர்ந்து கொண்டதும். வியப்பிலும் வியப்பு.

ஒருவேளை அவர் மனைவி அன்று அந்த ஊரில் இருந்து வெளியேறி இருந்தால், வறட்டு மதிப்புக்காக நாட்டாமை கடைசி வரை சமரசத்துக்கு வந்திருக்கவும் மாட்டார். அவர்களை மீண்டும் அழைத்து வரவும் ஒத்துக் கொண்டிருக்கவும் மாட்டார். ஆனால் அன்று நடந்த ஒரு சிறு உரையாடல் இந்த சிக்கல்களை எல்லாம் தவிர்த்தது.
தரமான உரையாடல் களால் மனிதர்கள் இடையே வலுவான பிணைப்புகளை உருவாக்க முடியும். அதைப் போலவே உடைந்து போன பிணைப்பு களை ஒட்ட வைக்கவும் முடியும். அதனால் தானோ என்னவோ இன்ற ளவும் தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் எல்லா நிகழ்வு களிலும் தவறாமல் தட்டில் வெற்றிலை-பாக்கு இடம் பெறுகிறது. உரையாடல்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆரோக்கியமான, நம்பிக்கையூட்டும், பயனுள்ள உரையாடல்கள் நிச்சயம் ஒரு நல்ல பிணைப்பை உருவாக்கும். அவ்வாறான பிணைப்புகளால் நமக்கு தெரிந்த மனிதர்கள்/நட்பு வட்டம்/ வாடிக்கையாளர்/ஆதரவு ஆற்றல் என்ற வலைப் பின்னல்கள் பலம் பெறும். புறக் கண்களுக்குப் புலப்படாத இவ்வாறான ஒரு தொடர்பு தொழில்முனைவோருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இன்றி அமையாத ஒன்று.

இப்படிப்பட்ட வலைப் பின்னல் சாத்தியமா, இவ்வாறான ஆதரவு ஆற்றல்களால் என்ன பயன்? என்று கேட்பவர் களுக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்களே, அது எப்படி?

வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைகிறதே, அது எப்படி?

இங்கு தமிழ்நாட்டில் அரசு நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் உள்ள அனில் அகர்வாலின் இல்லம் முற்றுகை இடப்படுகிறது, அது எப்படி? என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும், அமெரிக்கா வாழ் தமிழனுக்கும், இங்கிலாந்தில் ஸ்டெர் லைட்டுக்கு எதிராக போராடிய தோழர்களுக்கும் கண்களுக்கு புலப்படாத ஒரு பிணைப்பு இருப்பது புரியும்.

– வளர்வோம்!

புத்தர் கற்றுத் தந்த வாழ்வியல்

0

மகந்தர் என்னும் பெயர் உடைய துறவி ஒருவர் இமயமலைப் பகுதியில் ஒரு ஆசிரமம் அமைத்துத் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரும் அவர்தம் சீடர்களும் மீனையோ, இறைச்சியையோ,                           பறவையின் தசைகளையோ உணவாக உண்பதில்லை.

அரிசி, கம்பு, அவரை, பட்டாணி முதலிய தானியங்களையும், மரங்கள் கொடிகளில் விளையும் பழங்களையும், உண்ணத் தகுந்த இலைகளையும், கிழங்கு வகைகளையுமே உணவாகக் கொள்வார்கள்.

ஆண்டுதோறும் அவர்கள் தம் ஆசிரமத்தை விட்டுக் கீழிறங்கி மலை அடிவாரங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் செல்வார்கள். அக்கிராமங்களில் உள்ள மக்களும் அவர்களை நன்மதிப்புடன் வரவேற்று நன்கு உபசரித்து, உப்பு, புளி முதலிய பொருட்களை மிகுதியாக அளிப்பர்.

ஒரு சமயம் புனிதர் புத்தர், தம் சீடர்களுடன் அக்கிராமப் பகுதிகளுக்குச் சென்றார். அவர்களிடம் தர்மத்தைப் போதித்தார். புனிதர் புத்தரின் நல் உரைகளைக் கேட்ட அக்கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், புனிதர் புத்தரைப் பின்பற்றுவோராயினர்.
ஆமகந்தரும் அவர்தம் சீடர்களும் வழக்கம் போல அந்த ஆண்டும், கிராம மக்களிடம் வந்தனர். ஆனால் கிராம மக்கள் வழக்கப்படியான ஆர்வம் காட்டவில்லை. புனிதர் புத்தரும் அவர்தம் சீடர்களும் அக்கிராமத்திற்கு வந்திருந்ததையும் புனிதர் புத்தரின் வாய்ச் சொற்களால் தம் உரைகளைக் கேட்டு, அக்கிராமத்தினர் புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர்களானார்கள் என்பதையும் ஆமகந்தர் அறிந்தார்.

மேலும் புனிதர் புத்தர் மீனையும், இறைச்சி உண்ணுதலையும் தடை செய்யவில்லை என்பதை அறிந்த ஆமகந்தர் மிகவும் ஏமாற்றமடைந்தார். இதை உறுதி செய்து கொள்ள விரும்பி புனிதர் புத்தர் தங்கியிருந்த ஜேத வனத்திற்குச் சென்றார்.
புனிதர் புத்தரைக் கண்டு வணங்கி, அவரிடம் பின்வருமாறு கூறினார்.

“மேன்மையாளரே! நாங்கள் தானியங்கள், பழங்கள், பருப்புகள், கொட்டைகள், கனிச்சுளைகள், தண்டுகள், கீரைகள் போன்ற சரியான வழியில் பெறப்பட்ட உணவுகளையே உண்கிறோம். ஒரு மனிதனின் குண நடத்தையில் நல்லியல்பை ஏற்படுத்தும் இவ்வகை உணவுகளே நல்வாழ்வை என்றும் உறுதி செய்வன. இதற்கு மாறாக, மீனும், இறைச்சியும்,. பறவைகளின் தசையும் ஒரு மனிதனின் குண நடத்தையில் தீய இயல்பை ஏற்படுத்தித் தீயவனாக்குகிறது. ஆனால் அறிவு ஒளி எய்திய புத்தராகிய தாங்கள் மீன், இறைச்சி முதலிய உணவுகளைத் தடை செய்யவில்லை என்று அறிகிறேன். இது குறித்துத் தங்களின் கருத்தறிய விழைகிறேன்”.

இதற்கு புனிதர் புத்தர் இவ்வாறு கூறலானார்.

“இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர்களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று”

“இவ்வுலகில் கடுமையானவராய், நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காத வராய், புறங்கூறுபவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

 “இவ்வுலகில் தீயொழுக்கம் உடையவராய், தம் தொழிலில் ஏமாற்றுக்காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக் காரராய், பிறரை இகழச்சியாய் நினைப் பவராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

“இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர்பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப் பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.
“இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல் களில் ஈடுபடுவோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

“இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

“எவரொருவர் மீனையும், இறைச்சியையும் உண்பவராய் இருந்தும், நல்லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடையவராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறுவோராய், நன்நெறியில் நிலைப்போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை”.

“எவரொருவர் பற்றுகள் நிறைந்தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற்றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குறறச் செயல்களில் தொடர்புடையோராய், புலன்களை வெல்ல முடியாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீயபெயர் பெறுவோராய், தீயநெறியில் நிலைப்போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப்பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப்பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல்லோராக கருதப்படுவது இல்லை”.

“மீனையும், இறைச்சியையும் உண்ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித்தலும், உரோம உடை உடுத்தலும், யாகத்தீ வளர்த்தலும் போன்ற இவையெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப்படுத்தி விடாது”.

“தீமைகளை உருவாக்குவது தீயசெயல்களே அன்றி மீனையோ, இறைச்சியையோ உண்பதனால் அன்று”.
“உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்டவற்றாலும் களங்கப்படுவது இல்லை”.

“புனிதர் புத்தரின் போதனைகளிலிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன்னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க, புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர்களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.

-‘புத்தர் இவ்வாறு கூறினர்’ நூலில் இருந்து
(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு). மொழியாக்கம் : திருமகன்

விலை ரூ.75. வெளியீடு: அறம்பதிப்பகம், 3 கண்ணன் நகர் முதல் தெரு, மதுரவாயில், சென்னை – 95. (9962276969)

பல தொழில்களை வளர்க்கும் ஓட்டல் தொழில்

0

சென்னை, வடபழனி அருகே ஓட்டல் அம்பிகா எம்பயர் என்ற பிரபலமான ஏழு அடுக்கு மூன்று நட்சத்திர ஓட்டல் உள்ளது.
இதன் பொது மேலாளர் திரு. ஆர். காளத்திநாதன், வளர்தொழில் இதழுக்கு இன்றைய ஓட்டல் தொழில் குறித்து பேட்டி அளித்த போது,

“ஓட்டல் வர்த்தகம் மிக நன்றாகவே உள்ளது. நிறைய புதுப்புது ஓட்டல்கள் வருகையை உலகமெங்கும் பார்க்கலாம். இந்தியாவிலும் நன்றாகவே நடைபெறுகிறது. அதாவது சங்கிலித் தொடராக ஓட்டல்கள் இயங்கும் காலம், கனிந்து வெற்றி நடை போடுகின்றன.

நகரத்தின் நடுப்பகுதியில் இந்த ஓட்டல் அமைந்திருப்பதால் 10 நிமிடத்தில் தி.நகர் போய் விடலாம். 20 முதல் 25 நிமிடத்தில் ஏர்போர்ட் போய் சேரலாம். 25 நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து விடலாம். அந்த அளவுக்கு இடவசதி சூழல் நடுவே நாங்கள் இருக்கிறோம்.

ஒரு ஓட்டல் தொழிலுக்கு முக்கியமானவை, நல்ல இடம், அந்த ஏரியாவிலே வீடுகள் நிறைய இருக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் எவ்வளவு கம்ப்யூட்டர் கம்பெனிகள் இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ் இருக்கணும். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் உடனுக்குடன் கிடைக்கிற மாதிரியான சூழ்நிலையும் அவசியம்.

திருமண விழாக்கள் நடத்துவாங்க, குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவாங்க, அதே மாதிரி தொழில் நிறுவனங்கள் கூட்டங்களை நடத்துவார்கள்.
இது மாதிரி பல்வேறு விஷயங்களையும் முன்யோசனையுடன் சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஓட்டல் தொழில் ஒரு மதிப்பும், மரியாதையும் மிக்கத்
தொழிலாகப் பார்க்கிற அளவுக்கு சமுதாயக் கண்ணோட்டம் அமைந்திருக்கிறது.

பல திருமண விழாக்கள் இப்போதெல்லாம் ஓட்டல்களில் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு காது குத்துதல், வயதுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துதல் இப்படி வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் அனைத்தும் ஓட்டல்களில் நடைபெற்று வருகின்றன. நம் பண்பாட்டில் விருந்தினர்களை உபசரிப்பது என்பது நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

நகரங்களில் பரபரப்புக்கும், வேகத்திற்கும் ஈடு கொடுக்கிற மாதிரி அமைதியான, இதமான சூழ்நிலையை ஓட்டல் அறைகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. முழு பாதுகாப்பை உணர்கின்றனர். மிக அழகான செயற்கை கலந்த இயற்கைச் சூழலில் தங்களின் வீட்டுக்குள் உறங்குவது போல தூங்குபவர், அதிகாலையில் எழுந்து ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச்சல் அடித்துவிட்டு, பின்னர் ஷவரில் குளித்து முடித்து, நல்ல சூடான சிற்றுண்டி யோடு தம் பணிகள் நோக்கிச் சென்று, புத்துணர்ச்சியோடும், புதுதெம்போடும், சிக்கெனப்போய் ஸ்டைலாக நிற்கும்போது அவரைப் பார்த்ததும், அவர் எதிர்பார்த்தவற்றை நிர்வாகம் உடனுக்குடன் அவருக்குச் செய்துக் கொடுத்து விடுகிறது. அந்த அளவுக்கு முகமும் அகமும் மலர வைத்து அனுப்பும் வசதிகள் நிறைந்தவை எமது ஓட்டல் பிசினஸ் அறைகள்.

எங்கள் ஓட்டலில் பட்ஜெட் பயமே தேவையில்லை. எவ்வளவு செலவு பண்ண விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு பொதுவான பட்ஜெட் இருக்கு.

ஒரு அறை 4500 ரூபாய்க்கும் கிடைக்கும், 5000-க்கும் இருக்கின்றன. நமக்கு எந்த பட்ஜெட் பொருந்துமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். இது மாதிரியே பட்ஜெட் ஒட்டல், மீடியம் மார்க்கெட், லக்சுரியஸ் ஓட்டல்கள்-னு பிரிச்சு வெச்சிருக்கிறோம்.
ஒரு நான்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் என்னென்ன வசதிகள் கிடைக்குமோ அந்த வசதிகளை நாங்கள் இங்கேயே தருகிறோம்.

எவ்வளவு ஓட்டல்கள் வந்தாலும், நல்ல சேவை; பொறுப்புள்ள கவனிப்பு; இனிமையான உபசரிப்பு இந்த மூன்றிலும் நாங்கள் மிகவும் கவனம் செலுத்துகிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயம் ஓட்டலைப் பொருத்த வரையில் எப்பவுமே படுசுத்தமாக புத்தம் புதுசாக பளிச் என்று இருக்கணும். கண்களுக்கு புதிதாகத் தெரிய வேண்டும்.

மக்களின் தேவைகள் ஆய்வில் எடுத்துக் கொண்டு அந்த ஆய்வின் முடிவுப்படி ஓட்டல்களை கட்டுகிறார்கள் (நாங்களும் அப்படியே). திருபெரும்புத்தூரில் ஹுண்டாய் கார் கம்பெனி உட்பட பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்ற காரணத்தால், மதுரவாயில் பக்கமாக நிறைய ஓட்டல்கள் வரத் தொடங்கிவிட்டன.

இப்போதெல்லாம் ஓட்டல் அறைகளை ஆன்லைனில் பதிவு பண்ணுவதால் அடையாள அட்டை விசாரிப்பு, ஆராய்ச்சி எல்லாம் ஆன்லைனிலேயே முடிந்துவிடுகின்றன. காத்திருக்கத் தேவை இல்லை. அந்த அளவுக்கு தொழில் நுட்பம் பயன்படுகிறது. விமானம் தரை இறங்கும் போதே, இங்கே ஓட்டல் பதிவு தேவைகளின் வேலை முடிந்துவிடும். நேரே வந்து தங்கி விட வேண்டியது தான்!

தங்கும் அறைகளை மூடவும், திறக்கவும் எலக்ட்ரானிக் கார்டு முறை உள்ளது. இந்த கார்டை கதவு முன் உள்ள லாக்கில் தொட்டால் போதும், லாக் திறந்து விடும். இதே கார்டை அறையில் உள்ள அதற்குரிய இடத்தில் வைத்தால் எல்லா விளக்குகளும் ஆன் ஆகி விடும். கார்டை எடுத்து விட்டு, நாம் வெளியில் செல்லும் போது விளக்குகள் தானாக அணைந்துவிடும். இதனால் மின் சக்தி சேமிக்கப்படுவதோடு, விருந்தினர்கள் வசதியாகவும், சுதந்திரமாகவும் தங்கிச் செல்ல இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.
போகும்போதும் ஆன்லைனிலேயே விமான டிக்கட்டுகளையும் எளிதாக வாங்க வசதி செய்து கொடுத்து இருக்கிறோம்.

புதிதாக சீ கிரீன் (Sea Green Vizag), தர்பார் ரெஸ்டாரெண்ட் அம்பிகா ஃப் ளேவர் ஆரம்பித்து இருக்கிறோம். ஏலுரு-விஜயவாடாவில் தொடங்கி இருக்கிறோம். நடுத்தர கட்டணத்தில் பயன்படுத்தும் பட்ஜெட் ஹால் வசதி செய்து கொடுத்து இருக்கிறோம்.
சேலம் இரயில்வே ஸ்டேஷனில் மல்ட்டி ஃபங்ஷனல் ஹால் திறக்கிறோம். இது ஒரு ரெயில்வே சார்ந்த திட்டம். தொடர்வண்டியில் உட்கார்ந்துக் கொண்டே, எங்க ரெஸ்டாரன்டுக்கு போன் பண்ணி பதிவு செய்துவிட்டால் போதும். வண்டி நிலையத்துக்குள் நுழைந்து நின்ற உடனேயே இட்லி, வடை, சட்னி, சாம்பார் எல்லாம் அந்தந்த பெட்டிக்கு உள்ளேயே உங்கள் இருக்கைக்கே வந்து விடும்.

தனியார் கம்பெனிகளுக்குப் போய் அங்கேயே உணவு வகைகளை பரிமாறுகிறோம். கல்லூரிகளுக்குப் போய், ஓட்டல் இண்டஸ்ட்ரி பற்றி பாடங்களைப் போதிக்கிறோம். ஓட்டல் பற்றி நிறைய விரிவுரைகள் தருகிறோம்.

SIHRA – South Indian Hotel and Restaurant Association. இதிலே நாங்கள் உறுப்பினர்! Federation of Hotels and Restaurant Association of India. இதிலும் உறுப்பினராக இருக்கிறோம்.

இந்த அமைப்புகளின் கூட்டங்களில் ஓட்டல் தொழில் பற்றி புதுப்புது ஐடியா சொல்வாங்க. அதன் படி எங்களை மேம்படுத்திக் கொள்கிறோம்.
இன்னொரு செய்தி யாராவது ஓட்டல் ஆரம்பித்துவிட்டு நடத்த முடியாமல் கஷ்டப்பட்டால் நாங்கள் போய், நிர்வாகத்தை நடத்த உதவி செய்வோம். இதற்கு பெயர், M.C. (Management Consultancy). அதற்கு உரிய கட்டணத்தை அவர்கள் எங்களுக்கு செலுத்த வேண்டும்.

நாங்கள் பிற ஓட்டல்களை நிர்வகித்து நடத்தித் தரவும் செய்கிறோம். அவர்கள் மேனேஜ்மென்ட் கட்டணம் தந்தால் போதும். ஒரு ஓட்டலைச் சுற்றி பல துணைத் தொழில்கள் கிளை விட்டு வளர்கின்றன.

பேருந்து, கார், போக்குவரத்து துறைக்கும் இலாபம். சுற்றுலாத் துறைக்கும் இதனால் பயன். அந்நிய செலவாணிக்கு உதவி; நம் நாட்டைப் பற்றி நிறைய விளம்பரம் செய்கிறோம்.

உலகப் பயணிகளின் உள்ளத்தைக் கவருவதால், நம் நாட்டின் மதிப்பு உயர்ந்து அவர்கள் இங்கே முதலீடு செய்ய வருகிறார்கள்” என்றார் திரு. காளத்திநாதன்.

திரு.காளத்திநாதன் ஓட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான மூன்றாண்டு பயிற்சி முடித்தவர். எம்பிஏ பட்டம் பெற்ற இவர் ஓட்டல் பணிகளுக்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளை ஆர்வத்தோடு பெற்றவர்.

உணவு தயாரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக அரசின் விதிமுறைகளை அத்துப்படியாக அறிந்தவர். இந்தத் துறையில் விரும்பி மன மகிழ்ச்சியுடன் பணிபுரிபவர்.

– சந்திப்பு:
முனைவர் மு.அ. எழிலன்

ஒரு சாதாரண ஊழியர், 3 அரிசி மண்டிகளின் உரிமையாளர் ஆனது எப்படி?

0

யிலை வட்டார அனைத்து வணிகர் சங்க செயலாளரும் இந்த வட்டாரத்தில் உள்ள மூன்று அரிசி மண்டிகளின் உரிமையாளருமான திரு.ஜி.ஆர். ஜெயச்சந்திரன் அவர்களுடன் நேர்காணல் நடத்துவதற்காக, சென்னை, மந்தைவெளியில் உள்ள அவருடைய அரிசி மண்டிக்குச் சென்றோம். அவர், தம் மண்டியில் இருந்து ஓர் அரிசி மூட்டையை தூக்கி வந்து ‘மொபெட்’ ஒன்றில் வைத்துக் கொண்டிருந்தார்.

‘‘ஐயா, வாடிக்கையாளர் ஒருவர் மிக அவசரமாகக் கேட்கிறார், கொடுத்துவிட்டு ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுகிறேன், இருக்கையில் அமருங்கள்’’ என்று நம்மிடம் கூறிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தார். சொன்னபடி, அடுத்த 5 நிமிடத்தில் திரும்பி வந்து கடையில் நம் முன்பு அமர்ந்தார். ‘‘பக்கத்தில் சென்றிருக்கும் கடை ஊழியர் களுக்கு இன்னும் சில ஆர்டர்கள் காத்திருக்கின்றன’’ என்று புன்முவலுடன் நம்மிடம் 11நலம் விசாரித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு அரிசி மண்டியில் ஊழியராக பணியாற்றியவர், இந்தக் குறுகிய காலத்தில் ‘கிடு கிடு’ வளர்ச்சியைப் பெற்றிருப்பதற்கு வாடிக்கையாளர் கூப்பிட்டவுடன் ஓடிச்சென்று அவர்கள் தேவையைப் நிறைவு செய்து கொடுப்பதுதான் என்று மனதுக்குள் நாம் நினைத்துக் கொண்டோம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை என்னுடைய சொந்த ஊர். சென்னைக்கு புறப்பட்டு வந்து, மயிலாப்பூரில் உள்ள மணி அரிசி மண்டியில் வேலைக்கு சேர்ந்தேன். இங்கு வந்தது, எனக்கு ஏற்பட்ட ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். கடை உரிமையாளர் திரு.சுப்பிரமணி அவர்கள் ஓர் அற்புதமான தொழில் அதிபர். தன்னிடம் பணிபுரியும் ஒவ்வொருவரின் திறமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அவருடைய அணுகு முறையால், அந்த அரிசி மண்டியில் விருப்பத்துடன் பணியாற்றினேன்.

வாடிக்கையாளர் வீட்டுக்கு அரிசி மூட்டைக் கொண்டு செல்வது, கணக்கு எழுதுவது, கல்லாப்பெட்டியில் அமர்ந்து காசாளர் வேலை பார்ப்பது போன்ற அனைத்துப் பணிகளையும் ஈடுபாட்டோடு செய்தேன். அந்த மண்டியின் வாடிக்கையாளர்களாக தொழிலாளர் குடும்பங்கள், அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளின் குடும்பங்கள் சில்லறை கடைக்காரர்கள் உள்பட சமுதாயத்தில் உள்ள பலதரப்பினரும் இருந்தனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. மாறுதலான குண இயல்புகள் கொண்ட வாடிக்கையாளர்களை சந்திக்க நேரிட்டது. இந்த நடைமுறை படிப்பினை என் தொழில் அறிவை வளர்த்துக் கொண்டிருந்தது.

என் ஆசான் திரு. சுப்பிரமணி அவர்களிடம் நான்கு அருமையான குணங்கள் உண்டு. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அணுகுமுறை, உழைப்பு, எளிமை, சிக்கனம். இவற்றை நான் உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தில் காலடி வைத்தேன்.

என்னை ஆதரித்து தொழில் கற்றுக் கொடுத்த ஆசான் திரு. சுப்பிரமணி அவர்களின் வாழ்த்துகளுடன், ராஜா அண்ணாமலைபுரம், காமராஜர் சாலையில் ‘ஜெயச்சந்திரன் அரிசி மண்டி’ என்கிற பெயரில் அரிசி மண்டியைத் தொடங்கினேன். நியாயமான விலை, சிறந்த சேவை’ இந்த இரண்டு கோட்பாடுகளையும் அடிப்படையாக வைத்திருந்தேன். தொலைபேசியில் கூப்பிட்டவுடன் அவர்கள் விரும்பிய அரிசியை சப்ளை செய்தோம். சில்லறை மற்றும் மொத்த விற்பனை இரண்டிலும் கவனம் செலுத்தினேன். என் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தனர்.

அரிசி சிறந்த முறையில் சப்ளை செய்யும் மொத்த வணிகர்களுடன் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் இருந்ததால் அவர்கள் என் வளர்ச்சிக்குக் கை கொடுத்து உதவினர். சில்லறையில் அரிசி விற்கும் சிறு வியாபாரிகள் எங்கள் கடையைத் தேடி வந்தனர். நீண்ட தொலைவில் இருந்தும் சில்லறை கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்தனர். இதையடுத்து, அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கினேன். வியாபார வளர்ச்சிக்கு ஏற்ப கடை ஊழியர்களின் எண்ணிக்கையையும் சீராக உயர்த்தினேன்.

மயிலாப்பூரில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்கள் சுமார் 2கி.மீ. பயணம் செய்து எங்கள் கடைக்கு வருவதாகத் தொடர்ந்து கூறி வந்தனர். அவர்கள் குறையைப் போக்கும் வகையில் மயிலாப்பூர் பவுடர்மில் தெருவில் அரிசி மண்டி தொடங்கினேன். இதேபோல, மொத்தமாக அரிசி வியாபாரம் செய்வதற்காக மயிலாப்பூர் பஜார் ரோட்டில் மேலும் ஒரு அரிசி மண்டியைக் கடந்த ஆண்டு தொடங்கினேன். மூன்று கடைகளுக்கும் தினமும் சென்று, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சேவை தொடர்ந்து சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக, ஏராளமான வணிகர்களிடம் ஏற்பட்ட நட்பின் விளைவாக, மயிலை வட்டார அனைத்து வணிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ஏற்க வேண்டியதாயிற்று. எங்கள் சங்கத் தலைவர் திரு. மாரித்தங்கமும் உழைப்பால் உச்சத்திற்கு வந்தவர். அவருடன் இணைந்து, வணிகர்களின் நலனுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இன்றைக்கு மதுவால் சமுதாய சீரழிவு பெரிய அளவில் ஏற்படுகிறது. எனவே, பூரண மதுவிலக்காக பல்வேறு சமூக இயக்கங்களுடன் இணைந்து குரல் கொடுத்து வருகிறோம்.

என் வாழ்க்கைத் துணைவி திருமதி. சுப்புலட்சுமியும் வணிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். எங்களுக்கு, தொடக்கப் பள்ளியில் பயிலும் இரண்டு குழந்தைகள் இருப்பதால், அவர்களை வளர்ப்பதில் தன் முழு நேரத்தையும் அவர் ஒதுக்குகிறார். அதே சமயத்தில், எங்கள் வணிக வளர்ச்சிக்கு முத்தான ஆலோசனைகளை வழங்கத் தவறுவதில்லை. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், ‘பெண்கள் உலகம்’ என்ற பெயரில் ஓர் வணிக வளாகத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

என்னிடம் வாடிக்கையாளர்களாக உள்ள சிலர் சிறுதானியங்களின் மகத்துவத்தைத் தெரிவித்து, அவற்றையும் விற்கும்படி கேட்டு வந்தனர். அவர்கள் கோரிக்கையைப் நிறைவு செய்யும் வகையில் மந்தைவெளியில் உள்ள எங்கள் அரிசி மண்டியில் சிறுதானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, தினை, சோளம், சாமை, குதிரைவாலி முதலானவற்றை விற்கத் தொடங்கியுள்ளேன். நல்ல ஊட்டச்சத்து கொண்ட இவற்றின் விற்னை சீராக அதிகரித்து வருகிறது. இதோடு, அனைத்துவகை அப்பளங்கள் மற்றும் கைக் குத்தல் அரிசியையும் விற்கிறோம்.

வருங்காலத்தில், இயற்கை மருத்துவமும், ரசாயன கலப்பு இல்லாத உணவுப் பொருட்களும் கோலோச்சி நிற்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்போது, சிறுதானிய உற்பத்தியும் விற்பனையும் வியக்க வைக்கும் வகையில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார் திரு. ஜி.ஆர். ஜெயச்சந்திரன்.

– ம.வி. ராஜதுரை

தேயிலை ஏற்றுமதி அதிகரிக்க அரசு எடுக்கும் முயற்சிகள்!

0

தேயிலையின் அளவை அதிகரிப்பதற்குப் பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட பணிகளின் பலனை இப்போது அறுவடை செய்யத்                                   தொடங்கி இருக்கிறோம். இந்தியத் தேயிலைகளுக்கான பன்னாட்டுச் சந்தை வெகு ஆர்வத்துடன் காத்திருக்கிறது.tea

இந்தியத் தேயிலையை வாங்கிக் கொள்ள விருப்பம் காட்டும் நாடுகளுள் முக்கியமான சந்தைகள் காஜக்ஸ்தான், ஈரான், அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியவை. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் 42 விழுக்காடு வரை இந்த நாடுகளுக்குத்தான் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் தேயிலைக்கு உள்நாட்டுத் தேவையே கணிசமாக இருக்கிறது. நம்முடன் ஏற்றுமதியில் போட்டிக்கு நிற்கும் நாடுகள் கென்யா மற்றும் துருக்கி ஆகும். மேலும் இலங்கை, சீனா போன்ற நாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் தேயிலையில் கணிசமான பகுதியை உள்நாட்டுத் தேவைகளைச் சமாளிக்கவே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் கென்யாவில் உள்நாட்டுப் பயன்பாடு சொற்பம்தான். ஆகவே அவர்களது உற்பத்தியில் 85 விழுக்காடு வரை ஏற்றுமதிக்காகவே ஒதுக்கப்படுகிறது.

ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மறு ஏற்றுமதிக்காகத் தேயிலையைத் தேர்ந்தெடுக்கவும் இணையம் வழியாகப் பல நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தரக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகள் தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.

“இந்தியத் தேயிலைகளின் மதிப்பை வெளிநாடுகளில் பிரபலமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”

தங்களது விற்பனைப் பெயரைப் பிரபலமாக்கும் ஏற்றுமதியாளர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்யவும் அரசு முன்வந்திருக்கிறது. இதில் ஊக்கத் தொகை உள்ளிட்ட பல சலுகைகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை ஒரு கிலோ சிப்பங்களில் அடைக்கப் பட்டிருக்க வேண்டும். ஏற்றுமதியாளரே அந்தத் தேயிலையின் பெயர் மற்றும் வணிகச் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமையாளராக இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகும்.

இலத்தீன் அமெரிக்கா, கரிபியத் தீவுப் பகுதிகள் போன்ற இடங்களுக்கும் இந்தியத் தேயிலை அதிக அளவில் தேவைப்படுகிறது. நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்தச் சந்தையைப் பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற சந்தைகளையும் வளைத்துப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-நியூட்டன்

மது வருமானத்தை மீட்டு எடுக்க அரசுக்கு உள்ள வேறு வழிகள்!

0

ந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு என்ற சென்னையை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடை முறைப்படுத்துவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.                    தமிழ் நாட்டில் வசிக்கும் பலரின் கருத்துகளை கேட்டறிந்து, அரசின் பல அறிவிப்புகளை ஆராய்ந்து, இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வறிக்கையின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

மது எதிர்ப்பாளர்களின் எண்ண ஓட்டங்கள்

தமிழக அரசே மது வியாபாரத்தை செய்ய தொடங்கியிருப்பதுதான் இந்த மது தமிழ்நாடு முழுவதிலும் தாண்டவம் ஆடுவதற்கு முக்கிய காரணம். அரசாங்கமே மது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால், மது அருந்துவது சட்ட விரோதமான செயலோ அல்லது தவறான செய்கையோ அல்ல என்று பலரும் எண்ண தொடங்கியுள்ளனர்.
ஆரோக்கியமான, நலம் தரும் சமுதாயத்தை பேணி காப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை. மதுவை விற்று வருமானத்தை கூட்ட முயலும்போது, அதன் கோரமான விளைவுகளைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாதபோது, அதனை நாட்டின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கமாக கருத முடியாது.

அரசாங்கம் கூறுவது என்ன?

மதுவிலக்கின் அவசியத்தை, தான் புரிந்து கொண்டுள்ளதாக கூறும் தமிழக அரசு, மதுவிலக்கை அமல்படுத்துத்தாதற்கு உள்ள சிக்கல்களை காரணம் காட்டுகிறது.
அரசு கூறும் முதன்மையான சிக்கல்கள் கீழ்வருமாறு :

மது விலக்கினை நடை முறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும். இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படும்.

மது விலக்கினை நடைமுறைப்படுத்தினால் அரசிற்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். இதனால், பல மக்கள் நல் வாழ்வு திட்டங்களை கைவிட வேண்டி இருக்கும்.

டாஸ்மாக் பற்றிய சில குறிப்புகள்

கள்ளச்சாராயத்தினை ஒழிக்க வேண்டியுள்ளது என்று காரணம் காட்டி, அன்றைய அதிமுக அரசு 1983ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தை அமைத்து சாராய வியாபாரத்தை தொடங்கியது.

2003ம் ஆண்டு தனியார் மிகையான லாபம் அடைவதாக கூறி, தமிழ் நாட்டில் முழு சாராய வியாபாரத்தையும் அ.தி.மு.க. அரசே ஏற்றது. இன்று சுமார் 6795 கடைகளும், சுமார் 27500 ஊழியர்களையும் கொண்டு, தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் டாஸ்மாக் நிறுவனம் வளர்ந்து, அரசிற்கு கூடுதல் நிதி ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

2015- 2016ம் ஆண்டில் தமிழக அரசிற்கு வரி மூலம் கிடைக்கக் கூடிய வருவாய் ரூபாய் 96800 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூபாய் 29672 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் வருமானம் மூன்றிற்கு ஒன்று என்றளவில் முக்கியப் பங்காக உள்ளது.

கள்ளச்சாராயத்தை குறித்து தமிழக அரசு எடுத்துக் கூறும் வாதம்

கள்ளச்சாராயத்தை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்ற அரசின் நம்பிக்கையின்மையை ஒப்புக்கொள்ள முடியாது.

 

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக ஆட்சியிலிருந்தபோது, தமிழ் நாடு முழுவதிலும் முழுமையான மதுவிலக்கு இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளச்சாராயம் இருந்தது என்பது உண்மை. ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

மதுவிலக்கை ஏற்படுத்த வழிமுறைகள்

கடந்த பல ஆண்டுகளில் தமிழக அரசின் டாஸ்மாக், லட்சக்கணக்கான மக்களை மது நோயாளிகள் ஆக மாற்றிவிட்டது. அவர்கள் அனைவரையும் மதுவின் பிடியிலிருந்து உடனே வெளி கொண்டு வருவது சாத்தியம் அல்ல. இதனை படிப்படியாகத்தான் செய்ய முடியும்.

மக்களுக்கு மது கிடைப்பதை அரிதாக செய்து, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி தீவிரமாக பரப்புரை செய்வதனால், மக்களை படிப்படியாக மதுவின் பிடியிலிருந்து மீட்க முடியும். இதனை மதுவிலக்கில் பெரிதும் நாட்டமுள்ள உறுதியான அரசாங்கத்தால் செய்ய முடியும்.

இன்றைய நிலையில் டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால், தமிழக அரசின் கருவூலம் காலியாகி விடும் என்பதே இயல்பான உண்மை. டாஸ்மாக் வருமானத்தை தவிர்த்து வேறு வகையில் தமிழக அரசின் வருமானத்தை ஈடு செய்ய முடியுமா என்று ஆலோசிக்கலாம்.

ஆனால், இன்றே அதிகமான வரி மக்களின் மீது சுமையாக உள்ளதால், ரூ.24, 000 கோடி அளவில் வரியை விதித்து டாஸ்மாக் கடையில் கிடைக்கும் வருமானத்தை ஈடு செய்வது இயலாத காரியம்.

இத்தகைய இக்கட்டான நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக 50 சதவீதம் மது வியாபாரத்தை குறைப்பதே ஒரே வழி. இது முடியக் கூடிய ஒன்றுதான்.

இலவசங்களை குறைக்க வேண்டும்

இன்று தமிழக அரசு மக்களுக்கு அளிக்கும் இலவசங்களை தேவையுள்ள இலவசங்கள், தேவையற்ற இலவசங்கள் என்று இரண்டாக பிரிக்கலாம்.

இலவச அரசி மற்றும் முதியோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கும் உதவி தொகையை நிறுத்தக்கூடாது.

அதே சமயத்தில், இலவச மடிக்கணினி, மிதிவண்டி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, தொலைக்காட்சி பெட்டி போன்ற இலவசங்கள் தவிர்க்க கூடியது. வோட்டு வங்கிக்காக அளிக்கப்படும் இந்த இலவசங்களை உடனே நிறுத்த வேண்டும்.

இத்தகைய இலவசங்களுக்காக இன்று ஆண்டொன்றிற்கு செலவிடும் தொகைக்கு சில சான்று கீழே தரப்பட்டு உள்ளன.

இலவச வேட்டி, புடவை – ரூ. 499 கோடி
இலவச மடி கணினி – ரூ. 1100 கோடி
இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் – ரூ. 2000 கோடி
திருமண உதவித் திட்டம் – ரூ. 750 கோடி

மேற்கூறிய இலவசங்களை நிறுத்தினால், தமிழக அரசிற்கு சுமார் ரூ.4800 கோடி மிச்சம் ஏற்படும்.

அரசு நிர்வாகத்தை சீர் படுத்தி, அரசு பணம் விரய மாவதை தவிர்த்தால், கட்டாயம் இன்றைய செலவில் 5 சதவீதம் குறைத்து, ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூபாய் 4800 கோடி வரை செலவை குறைக்க முடியும்.

12212

மொலாசஸ் (molasses), ஆல்கஹால் மூலப் பொருளாக கொண்டு தொழில் அமைப்புகள்

டாஸ்மாக் மூலம் மது வியாபாரத்தை பெரிதளவில் குறைப்பதால் கணிசமான அளவு சர்க்கரை ஆலையிலிருந்து வெளி வரும் மொலாசஸ், ஆல்கஹால் மூலப்பொருளாக கொண்டு பல முக்கியமான நல்ல லாபம் தரக்கூடிய தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைக்கலாம்.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 3,300,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. ஆண்டொன்றிற்கு சுமார் 220 லட்சம் டன் கரும்பு விளைகிறது. இவற்றிலிருந்து, சுமார் 9.9 லட்சம் டன் மொலாசஸ், மற்றும் 2,40,000 கிலோ லிட்டர் ஆல்கஹால் தயாரிக்க முடியும்.

மொலாசஸ், ஆல்கஹால் மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய பல ரசாயனப்பொருட்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை. இந்தியாவிலே பல பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சான்றுகள் அருகே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. மொலாசஸ், ஆல்கஹால் மூலப்பொருளாக கொண்டு தயாரிக்க கூடிய ரசாயனப் பொருட்களால் ரூபாய் 3000 கோடி வரை முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளிலிருந்து தமிழக அரசிற்கு ஆண்டொன்றிற்கு ரூபாய் 1000 கோடி வரி மூலம் வருமானம் கிடைக்கக் கூடும். 2016ம் ஆண்டு முடிவில் 50 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூடி டாஸ்மாக் விற்பனை அளவையும் 50 சதவீதம் குறைத்தால், தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த பலன் ஏற்படும். 2017ம் ஆண்டில் மது விலக்கை மேலும் தீவிரமாக அமல்படுத்தி மீதமுள்ள 50 சதவீதம் டாஸ்மாக் கடை களையும் மூட தமிழக அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

– என்.எஸ்.வெங்கட்ராமன்

பதநீரை ஏற்றுமதி செய்யும் மெக்சிகோ

0

ந்தியாவிலுள்ள 6 கோடி பனைமரங்களில் 4 கோடி தமிழகத்தில் இருக் கின்றன. 1979 – 80-ஆம் ஆண்டில் ஒரு கோடி பனங் கொட்டைகள் மாநிலம் முழுவதும் பெருவழிச்சாலை ஓரங்களிலும், பஞ்சாயத்து சாலை                      ஓரங்களிலும் நட ஏற்பாடு செய்யப்பட்டு நடப்பட்டன. 30 ஆண்டுகள் முயற்சி செய்து பனைத்தொழிலில் பல முன்னேற்றங்கள் கண்ட தமிழ்நாடு அரசு பனை மரத்தை ‘தமிழகத்தின் தேசிய மரமாக’ அறிவித்தது.

பனையிலிருந்து கிடைக்கும் உண்ணும் பொருட்கள், உண்ணா பொருட்கள் இவற்றைக் கொண்டு பற்பல புருசுகள், பைகள் செய்யும் விஞ்ஞான முறைகள் அறிவிக்கப்பட்டன.
செயல்படுத்த பல செயல்முறைகள் எடுக்கப்பட்டன. என்றாலும் பனைத்தொழிலில் முன்னேற்றம் குறைந்தது. இந்த நிலக்கு காரணம் என்ன என்பதை கூர்ந்து கவனிப்போம்.

1111990-க்குப் பிறகு பனைத் தொழில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. நெடுகவே சாதிப் பிரிவை முக்கியப்படுத்தி நடத்திய அரசியல் பின்னணி, பனைத் தொழில் வல்லுநர்களை சமுதாயத்தில் மதிப்பு இல்லாதவர்களாய் மாற்றிப்போட்டது.

தொழில் செய்தவர்களே தங்கள் குடும்பங்களில் எவரும் தொடர்ந்து இந்தத் தொழிலை செய்வதை விரும்பவில்லை. இதைக்குறித்த பல தெளிவுகள் நாஞ்சில் நடராசன் அவர்களின் ‘தமிழர் வரலாற்றில் வேணாடு – மண்ணின் மைந்தர்களும் தமிழும்’ என்னும் ஆய்வு நூலின் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இன்று காலங்களின் மாற்றத்தினால், தேவைகளில் மாறுதல்கள் வந்துள்ளன. செய்யப்படும் எந்த தொழிலும் விஞ்ஞான அறிவைக் கொண்டு விருத்தி செய்யப்பட வேண்டியவை.

பனையின் பலனைக் கொண்டு பல பொருட்கள் செய்தாலும், அதன் மூலப்பொருளை பெற்றுத் தருகின்ற திறன் இல்லாமற் போகின்ற நிலை உருவாகி இருக்கிறது. பதநீரை மரத்தில் எறி தயார் செய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் அருகிவிட்டனர்.
காரணங்கள் பல.

மனிதனின் பொதுவான உடல் வலிமை குன்றிப் போயிருக்கிறது. உணவு பழக்க வழக்கங்களில் பல மாறுதல்கள். எல்லாவற்றிலும் அதிகமாக பாதிப்பது சமுதாயத்தில் பனைமரம் ஏறி தொழில் செய்பவர்களின் மரியாதை மிகவும் தாழ்த்தப்பட்டதுதான்.

மற்ற முக்கிய காரணங்கள்:

பனைமரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முறைப்படி பயிரிடப்படாதது. விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் மற்ற பயிர்களுக்கு இருப்பதுபோல (தென்னை, நெல், கரும்பு…) பனைமரத்திற்கு இல்லை. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பெறும் வழி முறைகள் கண்டடையப்பட வேண்டும்.

இரண்டாவது சவால், மரத்தில் ஏறி பனம் பாளையை பக்குவப்படுத்தி (இடுக்கி) பதநீர் எடுப்பதும், மரத்தை ஒழுங்குபடுத்துவதுமாகும். இதற்கு கடினமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, எளிய முறையில் பயன்படுத்தப்படும், பாதுகாப்பான தொழில் நுட்பம் நிறைந்த ஏணிகள் உருவாக்கப்பட வேண்டும்.

இது நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த விசயத்தில் முன்னோடியாக இன்று திகழ்வது மெக்சிகோ நாடு.
1950-களில் மெக்சிகோவிலிருந்து இந்தியாவுக்கு வந்த அறிஞர் குழு, இங்குள்ள பனைமரம், தொழில் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதை விஞ்ஞான அடிப்படையில் விரிவுபடுத்தி இன்று அந்நாட்டு அந்நிய செலாவணியில் 30% வருமானத்தை பதநீர் ஏற்றுமதியினால் பெறுகின்றனர். நம்மால் ஏன் இதை சாதிக்க முடியாது?

அரசு இதற்கேற்றபடி திட்டமிட்டு செயல்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் தமிழ் நாட்டின் பொருளாதார நிலை பிரமிக்கதக்க அளவுக்கு உயரும்.

மெக்சிகோ மக்கள் கையாளும் முறையை நம் தாவரவியல் விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் மூன்றிலிருந்து ஆறு மாதம் வரை மெக்சிகோவிற்கு அனுப்பி நேரடியாக செய்முறைகளை கவனித்து நம் அரசுக்கு விளக்கி இங்கும் அதை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கி தாமதமின்றி செயல்பட வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம் பகுதிகளில் 15-20 ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி அதில் பனை பண்ணைகளைத் தொடங்க வேண்டும்.

முதலில் ஏதேனும் ஒரு பண்ணையோடு ஆய்வுக் கூடமும், அதன் ஆய்வுக்கான வசதிகளும் செய்து, தகுதி வாய்ந்த மெக்சிகன் செய்முறைகளை நேரடியாக கண்டு புரிந்துகொண்ட விஞ்ஞானிகள் அதில் அமர்த்தப்பட வேண்டும்.

ஆய்வுகள் நம் சூழலுக்கு ஏற்றாற்போல் மேம்படுத்தப்பட்டு, சிறந்த கருவிகள், ஏணிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

பிரஞ்சு நாடு அதன் சமன் இல்லாத நிலப்பகுதிகளைக் கூட அதற்கேற்ற திராட்சை தோட்டங்களாக்கி உலகம் முழுவதற்கும் நல்ல தரம் உள்ள திராட்சை ரசத்தை ஏற்றுமதி செய்து, தங்கள் அன்னிய செலாவணியின் தேவைகளை சரிக்கட்டுவது போல திட்டமிட்டு செயல்படுவதினால் பனைமரத்தைக் கொண்டு நம் பொருளாதார நிலையை முன்னேற்ற முடியும்.

– பேராசிரியர் மாணிக்கராஜ்
(9840597746)