பதநீரை ஏற்றுமதி செய்யும் மெக்சிகோ

ந்தியாவிலுள்ள 6 கோடி பனைமரங்களில் 4 கோடி தமிழகத்தில் இருக் கின்றன. 1979 – 80-ஆம் ஆண்டில் ஒரு கோடி பனங் கொட்டைகள் மாநிலம் முழுவதும் பெருவழிச்சாலை ஓரங்களிலும், பஞ்சாயத்து சாலை                      ஓரங்களிலும் நட ஏற்பாடு செய்யப்பட்டு நடப்பட்டன. 30 ஆண்டுகள் முயற்சி செய்து பனைத்தொழிலில் பல முன்னேற்றங்கள் கண்ட தமிழ்நாடு அரசு பனை மரத்தை ‘தமிழகத்தின் தேசிய மரமாக’ அறிவித்தது.

பனையிலிருந்து கிடைக்கும் உண்ணும் பொருட்கள், உண்ணா பொருட்கள் இவற்றைக் கொண்டு பற்பல புருசுகள், பைகள் செய்யும் விஞ்ஞான முறைகள் அறிவிக்கப்பட்டன.
செயல்படுத்த பல செயல்முறைகள் எடுக்கப்பட்டன. என்றாலும் பனைத்தொழிலில் முன்னேற்றம் குறைந்தது. இந்த நிலக்கு காரணம் என்ன என்பதை கூர்ந்து கவனிப்போம்.

1111990-க்குப் பிறகு பனைத் தொழில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. நெடுகவே சாதிப் பிரிவை முக்கியப்படுத்தி நடத்திய அரசியல் பின்னணி, பனைத் தொழில் வல்லுநர்களை சமுதாயத்தில் மதிப்பு இல்லாதவர்களாய் மாற்றிப்போட்டது.

தொழில் செய்தவர்களே தங்கள் குடும்பங்களில் எவரும் தொடர்ந்து இந்தத் தொழிலை செய்வதை விரும்பவில்லை. இதைக்குறித்த பல தெளிவுகள் நாஞ்சில் நடராசன் அவர்களின் ‘தமிழர் வரலாற்றில் வேணாடு – மண்ணின் மைந்தர்களும் தமிழும்’ என்னும் ஆய்வு நூலின் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இன்று காலங்களின் மாற்றத்தினால், தேவைகளில் மாறுதல்கள் வந்துள்ளன. செய்யப்படும் எந்த தொழிலும் விஞ்ஞான அறிவைக் கொண்டு விருத்தி செய்யப்பட வேண்டியவை.

பனையின் பலனைக் கொண்டு பல பொருட்கள் செய்தாலும், அதன் மூலப்பொருளை பெற்றுத் தருகின்ற திறன் இல்லாமற் போகின்ற நிலை உருவாகி இருக்கிறது. பதநீரை மரத்தில் எறி தயார் செய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் அருகிவிட்டனர்.
காரணங்கள் பல.

மனிதனின் பொதுவான உடல் வலிமை குன்றிப் போயிருக்கிறது. உணவு பழக்க வழக்கங்களில் பல மாறுதல்கள். எல்லாவற்றிலும் அதிகமாக பாதிப்பது சமுதாயத்தில் பனைமரம் ஏறி தொழில் செய்பவர்களின் மரியாதை மிகவும் தாழ்த்தப்பட்டதுதான்.

மற்ற முக்கிய காரணங்கள்:

பனைமரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முறைப்படி பயிரிடப்படாதது. விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் மற்ற பயிர்களுக்கு இருப்பதுபோல (தென்னை, நெல், கரும்பு…) பனைமரத்திற்கு இல்லை. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பெறும் வழி முறைகள் கண்டடையப்பட வேண்டும்.

இரண்டாவது சவால், மரத்தில் ஏறி பனம் பாளையை பக்குவப்படுத்தி (இடுக்கி) பதநீர் எடுப்பதும், மரத்தை ஒழுங்குபடுத்துவதுமாகும். இதற்கு கடினமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, எளிய முறையில் பயன்படுத்தப்படும், பாதுகாப்பான தொழில் நுட்பம் நிறைந்த ஏணிகள் உருவாக்கப்பட வேண்டும்.

இது நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த விசயத்தில் முன்னோடியாக இன்று திகழ்வது மெக்சிகோ நாடு.
1950-களில் மெக்சிகோவிலிருந்து இந்தியாவுக்கு வந்த அறிஞர் குழு, இங்குள்ள பனைமரம், தொழில் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதை விஞ்ஞான அடிப்படையில் விரிவுபடுத்தி இன்று அந்நாட்டு அந்நிய செலாவணியில் 30% வருமானத்தை பதநீர் ஏற்றுமதியினால் பெறுகின்றனர். நம்மால் ஏன் இதை சாதிக்க முடியாது?

அரசு இதற்கேற்றபடி திட்டமிட்டு செயல்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் தமிழ் நாட்டின் பொருளாதார நிலை பிரமிக்கதக்க அளவுக்கு உயரும்.

மெக்சிகோ மக்கள் கையாளும் முறையை நம் தாவரவியல் விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் மூன்றிலிருந்து ஆறு மாதம் வரை மெக்சிகோவிற்கு அனுப்பி நேரடியாக செய்முறைகளை கவனித்து நம் அரசுக்கு விளக்கி இங்கும் அதை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கி தாமதமின்றி செயல்பட வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம் பகுதிகளில் 15-20 ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி அதில் பனை பண்ணைகளைத் தொடங்க வேண்டும்.

முதலில் ஏதேனும் ஒரு பண்ணையோடு ஆய்வுக் கூடமும், அதன் ஆய்வுக்கான வசதிகளும் செய்து, தகுதி வாய்ந்த மெக்சிகன் செய்முறைகளை நேரடியாக கண்டு புரிந்துகொண்ட விஞ்ஞானிகள் அதில் அமர்த்தப்பட வேண்டும்.

ஆய்வுகள் நம் சூழலுக்கு ஏற்றாற்போல் மேம்படுத்தப்பட்டு, சிறந்த கருவிகள், ஏணிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

பிரஞ்சு நாடு அதன் சமன் இல்லாத நிலப்பகுதிகளைக் கூட அதற்கேற்ற திராட்சை தோட்டங்களாக்கி உலகம் முழுவதற்கும் நல்ல தரம் உள்ள திராட்சை ரசத்தை ஏற்றுமதி செய்து, தங்கள் அன்னிய செலாவணியின் தேவைகளை சரிக்கட்டுவது போல திட்டமிட்டு செயல்படுவதினால் பனைமரத்தைக் கொண்டு நம் பொருளாதார நிலையை முன்னேற்ற முடியும்.

– பேராசிரியர் மாணிக்கராஜ்
(9840597746)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here