மது வருமானத்தை மீட்டு எடுக்க அரசுக்கு உள்ள வேறு வழிகள்!

ந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு என்ற சென்னையை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடை முறைப்படுத்துவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.                    தமிழ் நாட்டில் வசிக்கும் பலரின் கருத்துகளை கேட்டறிந்து, அரசின் பல அறிவிப்புகளை ஆராய்ந்து, இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வறிக்கையின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

மது எதிர்ப்பாளர்களின் எண்ண ஓட்டங்கள்

தமிழக அரசே மது வியாபாரத்தை செய்ய தொடங்கியிருப்பதுதான் இந்த மது தமிழ்நாடு முழுவதிலும் தாண்டவம் ஆடுவதற்கு முக்கிய காரணம். அரசாங்கமே மது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால், மது அருந்துவது சட்ட விரோதமான செயலோ அல்லது தவறான செய்கையோ அல்ல என்று பலரும் எண்ண தொடங்கியுள்ளனர்.
ஆரோக்கியமான, நலம் தரும் சமுதாயத்தை பேணி காப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை. மதுவை விற்று வருமானத்தை கூட்ட முயலும்போது, அதன் கோரமான விளைவுகளைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாதபோது, அதனை நாட்டின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கமாக கருத முடியாது.

அரசாங்கம் கூறுவது என்ன?

மதுவிலக்கின் அவசியத்தை, தான் புரிந்து கொண்டுள்ளதாக கூறும் தமிழக அரசு, மதுவிலக்கை அமல்படுத்துத்தாதற்கு உள்ள சிக்கல்களை காரணம் காட்டுகிறது.
அரசு கூறும் முதன்மையான சிக்கல்கள் கீழ்வருமாறு :

மது விலக்கினை நடை முறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும். இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படும்.

மது விலக்கினை நடைமுறைப்படுத்தினால் அரசிற்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். இதனால், பல மக்கள் நல் வாழ்வு திட்டங்களை கைவிட வேண்டி இருக்கும்.

டாஸ்மாக் பற்றிய சில குறிப்புகள்

கள்ளச்சாராயத்தினை ஒழிக்க வேண்டியுள்ளது என்று காரணம் காட்டி, அன்றைய அதிமுக அரசு 1983ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தை அமைத்து சாராய வியாபாரத்தை தொடங்கியது.

2003ம் ஆண்டு தனியார் மிகையான லாபம் அடைவதாக கூறி, தமிழ் நாட்டில் முழு சாராய வியாபாரத்தையும் அ.தி.மு.க. அரசே ஏற்றது. இன்று சுமார் 6795 கடைகளும், சுமார் 27500 ஊழியர்களையும் கொண்டு, தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் டாஸ்மாக் நிறுவனம் வளர்ந்து, அரசிற்கு கூடுதல் நிதி ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

2015- 2016ம் ஆண்டில் தமிழக அரசிற்கு வரி மூலம் கிடைக்கக் கூடிய வருவாய் ரூபாய் 96800 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூபாய் 29672 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் வருமானம் மூன்றிற்கு ஒன்று என்றளவில் முக்கியப் பங்காக உள்ளது.

கள்ளச்சாராயத்தை குறித்து தமிழக அரசு எடுத்துக் கூறும் வாதம்

கள்ளச்சாராயத்தை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்ற அரசின் நம்பிக்கையின்மையை ஒப்புக்கொள்ள முடியாது.

 

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக ஆட்சியிலிருந்தபோது, தமிழ் நாடு முழுவதிலும் முழுமையான மதுவிலக்கு இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளச்சாராயம் இருந்தது என்பது உண்மை. ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

மதுவிலக்கை ஏற்படுத்த வழிமுறைகள்

கடந்த பல ஆண்டுகளில் தமிழக அரசின் டாஸ்மாக், லட்சக்கணக்கான மக்களை மது நோயாளிகள் ஆக மாற்றிவிட்டது. அவர்கள் அனைவரையும் மதுவின் பிடியிலிருந்து உடனே வெளி கொண்டு வருவது சாத்தியம் அல்ல. இதனை படிப்படியாகத்தான் செய்ய முடியும்.

மக்களுக்கு மது கிடைப்பதை அரிதாக செய்து, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி தீவிரமாக பரப்புரை செய்வதனால், மக்களை படிப்படியாக மதுவின் பிடியிலிருந்து மீட்க முடியும். இதனை மதுவிலக்கில் பெரிதும் நாட்டமுள்ள உறுதியான அரசாங்கத்தால் செய்ய முடியும்.

இன்றைய நிலையில் டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால், தமிழக அரசின் கருவூலம் காலியாகி விடும் என்பதே இயல்பான உண்மை. டாஸ்மாக் வருமானத்தை தவிர்த்து வேறு வகையில் தமிழக அரசின் வருமானத்தை ஈடு செய்ய முடியுமா என்று ஆலோசிக்கலாம்.

ஆனால், இன்றே அதிகமான வரி மக்களின் மீது சுமையாக உள்ளதால், ரூ.24, 000 கோடி அளவில் வரியை விதித்து டாஸ்மாக் கடையில் கிடைக்கும் வருமானத்தை ஈடு செய்வது இயலாத காரியம்.

இத்தகைய இக்கட்டான நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக 50 சதவீதம் மது வியாபாரத்தை குறைப்பதே ஒரே வழி. இது முடியக் கூடிய ஒன்றுதான்.

இலவசங்களை குறைக்க வேண்டும்

இன்று தமிழக அரசு மக்களுக்கு அளிக்கும் இலவசங்களை தேவையுள்ள இலவசங்கள், தேவையற்ற இலவசங்கள் என்று இரண்டாக பிரிக்கலாம்.

இலவச அரசி மற்றும் முதியோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கும் உதவி தொகையை நிறுத்தக்கூடாது.

அதே சமயத்தில், இலவச மடிக்கணினி, மிதிவண்டி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, தொலைக்காட்சி பெட்டி போன்ற இலவசங்கள் தவிர்க்க கூடியது. வோட்டு வங்கிக்காக அளிக்கப்படும் இந்த இலவசங்களை உடனே நிறுத்த வேண்டும்.

இத்தகைய இலவசங்களுக்காக இன்று ஆண்டொன்றிற்கு செலவிடும் தொகைக்கு சில சான்று கீழே தரப்பட்டு உள்ளன.

இலவச வேட்டி, புடவை – ரூ. 499 கோடி
இலவச மடி கணினி – ரூ. 1100 கோடி
இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் – ரூ. 2000 கோடி
திருமண உதவித் திட்டம் – ரூ. 750 கோடி

மேற்கூறிய இலவசங்களை நிறுத்தினால், தமிழக அரசிற்கு சுமார் ரூ.4800 கோடி மிச்சம் ஏற்படும்.

அரசு நிர்வாகத்தை சீர் படுத்தி, அரசு பணம் விரய மாவதை தவிர்த்தால், கட்டாயம் இன்றைய செலவில் 5 சதவீதம் குறைத்து, ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூபாய் 4800 கோடி வரை செலவை குறைக்க முடியும்.

12212

மொலாசஸ் (molasses), ஆல்கஹால் மூலப் பொருளாக கொண்டு தொழில் அமைப்புகள்

டாஸ்மாக் மூலம் மது வியாபாரத்தை பெரிதளவில் குறைப்பதால் கணிசமான அளவு சர்க்கரை ஆலையிலிருந்து வெளி வரும் மொலாசஸ், ஆல்கஹால் மூலப்பொருளாக கொண்டு பல முக்கியமான நல்ல லாபம் தரக்கூடிய தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைக்கலாம்.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 3,300,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. ஆண்டொன்றிற்கு சுமார் 220 லட்சம் டன் கரும்பு விளைகிறது. இவற்றிலிருந்து, சுமார் 9.9 லட்சம் டன் மொலாசஸ், மற்றும் 2,40,000 கிலோ லிட்டர் ஆல்கஹால் தயாரிக்க முடியும்.

மொலாசஸ், ஆல்கஹால் மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய பல ரசாயனப்பொருட்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை. இந்தியாவிலே பல பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சான்றுகள் அருகே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. மொலாசஸ், ஆல்கஹால் மூலப்பொருளாக கொண்டு தயாரிக்க கூடிய ரசாயனப் பொருட்களால் ரூபாய் 3000 கோடி வரை முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளிலிருந்து தமிழக அரசிற்கு ஆண்டொன்றிற்கு ரூபாய் 1000 கோடி வரி மூலம் வருமானம் கிடைக்கக் கூடும். 2016ம் ஆண்டு முடிவில் 50 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூடி டாஸ்மாக் விற்பனை அளவையும் 50 சதவீதம் குறைத்தால், தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த பலன் ஏற்படும். 2017ம் ஆண்டில் மது விலக்கை மேலும் தீவிரமாக அமல்படுத்தி மீதமுள்ள 50 சதவீதம் டாஸ்மாக் கடை களையும் மூட தமிழக அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

– என்.எஸ்.வெங்கட்ராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here