தேயிலை ஏற்றுமதி அதிகரிக்க அரசு எடுக்கும் முயற்சிகள்!

தேயிலையின் அளவை அதிகரிப்பதற்குப் பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட பணிகளின் பலனை இப்போது அறுவடை செய்யத்                                   தொடங்கி இருக்கிறோம். இந்தியத் தேயிலைகளுக்கான பன்னாட்டுச் சந்தை வெகு ஆர்வத்துடன் காத்திருக்கிறது.tea

இந்தியத் தேயிலையை வாங்கிக் கொள்ள விருப்பம் காட்டும் நாடுகளுள் முக்கியமான சந்தைகள் காஜக்ஸ்தான், ஈரான், அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியவை. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் 42 விழுக்காடு வரை இந்த நாடுகளுக்குத்தான் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் தேயிலைக்கு உள்நாட்டுத் தேவையே கணிசமாக இருக்கிறது. நம்முடன் ஏற்றுமதியில் போட்டிக்கு நிற்கும் நாடுகள் கென்யா மற்றும் துருக்கி ஆகும். மேலும் இலங்கை, சீனா போன்ற நாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் தேயிலையில் கணிசமான பகுதியை உள்நாட்டுத் தேவைகளைச் சமாளிக்கவே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் கென்யாவில் உள்நாட்டுப் பயன்பாடு சொற்பம்தான். ஆகவே அவர்களது உற்பத்தியில் 85 விழுக்காடு வரை ஏற்றுமதிக்காகவே ஒதுக்கப்படுகிறது.

ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மறு ஏற்றுமதிக்காகத் தேயிலையைத் தேர்ந்தெடுக்கவும் இணையம் வழியாகப் பல நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தரக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகள் தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.

“இந்தியத் தேயிலைகளின் மதிப்பை வெளிநாடுகளில் பிரபலமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”

தங்களது விற்பனைப் பெயரைப் பிரபலமாக்கும் ஏற்றுமதியாளர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்யவும் அரசு முன்வந்திருக்கிறது. இதில் ஊக்கத் தொகை உள்ளிட்ட பல சலுகைகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை ஒரு கிலோ சிப்பங்களில் அடைக்கப் பட்டிருக்க வேண்டும். ஏற்றுமதியாளரே அந்தத் தேயிலையின் பெயர் மற்றும் வணிகச் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமையாளராக இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகும்.

இலத்தீன் அமெரிக்கா, கரிபியத் தீவுப் பகுதிகள் போன்ற இடங்களுக்கும் இந்தியத் தேயிலை அதிக அளவில் தேவைப்படுகிறது. நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்தச் சந்தையைப் பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற சந்தைகளையும் வளைத்துப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-நியூட்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here