ஒரு சாதாரண ஊழியர், 3 அரிசி மண்டிகளின் உரிமையாளர் ஆனது எப்படி?

யிலை வட்டார அனைத்து வணிகர் சங்க செயலாளரும் இந்த வட்டாரத்தில் உள்ள மூன்று அரிசி மண்டிகளின் உரிமையாளருமான திரு.ஜி.ஆர். ஜெயச்சந்திரன் அவர்களுடன் நேர்காணல் நடத்துவதற்காக, சென்னை, மந்தைவெளியில் உள்ள அவருடைய அரிசி மண்டிக்குச் சென்றோம். அவர், தம் மண்டியில் இருந்து ஓர் அரிசி மூட்டையை தூக்கி வந்து ‘மொபெட்’ ஒன்றில் வைத்துக் கொண்டிருந்தார்.

‘‘ஐயா, வாடிக்கையாளர் ஒருவர் மிக அவசரமாகக் கேட்கிறார், கொடுத்துவிட்டு ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுகிறேன், இருக்கையில் அமருங்கள்’’ என்று நம்மிடம் கூறிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தார். சொன்னபடி, அடுத்த 5 நிமிடத்தில் திரும்பி வந்து கடையில் நம் முன்பு அமர்ந்தார். ‘‘பக்கத்தில் சென்றிருக்கும் கடை ஊழியர் களுக்கு இன்னும் சில ஆர்டர்கள் காத்திருக்கின்றன’’ என்று புன்முவலுடன் நம்மிடம் 11நலம் விசாரித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு அரிசி மண்டியில் ஊழியராக பணியாற்றியவர், இந்தக் குறுகிய காலத்தில் ‘கிடு கிடு’ வளர்ச்சியைப் பெற்றிருப்பதற்கு வாடிக்கையாளர் கூப்பிட்டவுடன் ஓடிச்சென்று அவர்கள் தேவையைப் நிறைவு செய்து கொடுப்பதுதான் என்று மனதுக்குள் நாம் நினைத்துக் கொண்டோம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை என்னுடைய சொந்த ஊர். சென்னைக்கு புறப்பட்டு வந்து, மயிலாப்பூரில் உள்ள மணி அரிசி மண்டியில் வேலைக்கு சேர்ந்தேன். இங்கு வந்தது, எனக்கு ஏற்பட்ட ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். கடை உரிமையாளர் திரு.சுப்பிரமணி அவர்கள் ஓர் அற்புதமான தொழில் அதிபர். தன்னிடம் பணிபுரியும் ஒவ்வொருவரின் திறமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அவருடைய அணுகு முறையால், அந்த அரிசி மண்டியில் விருப்பத்துடன் பணியாற்றினேன்.

வாடிக்கையாளர் வீட்டுக்கு அரிசி மூட்டைக் கொண்டு செல்வது, கணக்கு எழுதுவது, கல்லாப்பெட்டியில் அமர்ந்து காசாளர் வேலை பார்ப்பது போன்ற அனைத்துப் பணிகளையும் ஈடுபாட்டோடு செய்தேன். அந்த மண்டியின் வாடிக்கையாளர்களாக தொழிலாளர் குடும்பங்கள், அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளின் குடும்பங்கள் சில்லறை கடைக்காரர்கள் உள்பட சமுதாயத்தில் உள்ள பலதரப்பினரும் இருந்தனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. மாறுதலான குண இயல்புகள் கொண்ட வாடிக்கையாளர்களை சந்திக்க நேரிட்டது. இந்த நடைமுறை படிப்பினை என் தொழில் அறிவை வளர்த்துக் கொண்டிருந்தது.

என் ஆசான் திரு. சுப்பிரமணி அவர்களிடம் நான்கு அருமையான குணங்கள் உண்டு. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அணுகுமுறை, உழைப்பு, எளிமை, சிக்கனம். இவற்றை நான் உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தில் காலடி வைத்தேன்.

என்னை ஆதரித்து தொழில் கற்றுக் கொடுத்த ஆசான் திரு. சுப்பிரமணி அவர்களின் வாழ்த்துகளுடன், ராஜா அண்ணாமலைபுரம், காமராஜர் சாலையில் ‘ஜெயச்சந்திரன் அரிசி மண்டி’ என்கிற பெயரில் அரிசி மண்டியைத் தொடங்கினேன். நியாயமான விலை, சிறந்த சேவை’ இந்த இரண்டு கோட்பாடுகளையும் அடிப்படையாக வைத்திருந்தேன். தொலைபேசியில் கூப்பிட்டவுடன் அவர்கள் விரும்பிய அரிசியை சப்ளை செய்தோம். சில்லறை மற்றும் மொத்த விற்பனை இரண்டிலும் கவனம் செலுத்தினேன். என் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தனர்.

அரிசி சிறந்த முறையில் சப்ளை செய்யும் மொத்த வணிகர்களுடன் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் இருந்ததால் அவர்கள் என் வளர்ச்சிக்குக் கை கொடுத்து உதவினர். சில்லறையில் அரிசி விற்கும் சிறு வியாபாரிகள் எங்கள் கடையைத் தேடி வந்தனர். நீண்ட தொலைவில் இருந்தும் சில்லறை கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்தனர். இதையடுத்து, அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கினேன். வியாபார வளர்ச்சிக்கு ஏற்ப கடை ஊழியர்களின் எண்ணிக்கையையும் சீராக உயர்த்தினேன்.

மயிலாப்பூரில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்கள் சுமார் 2கி.மீ. பயணம் செய்து எங்கள் கடைக்கு வருவதாகத் தொடர்ந்து கூறி வந்தனர். அவர்கள் குறையைப் போக்கும் வகையில் மயிலாப்பூர் பவுடர்மில் தெருவில் அரிசி மண்டி தொடங்கினேன். இதேபோல, மொத்தமாக அரிசி வியாபாரம் செய்வதற்காக மயிலாப்பூர் பஜார் ரோட்டில் மேலும் ஒரு அரிசி மண்டியைக் கடந்த ஆண்டு தொடங்கினேன். மூன்று கடைகளுக்கும் தினமும் சென்று, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சேவை தொடர்ந்து சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக, ஏராளமான வணிகர்களிடம் ஏற்பட்ட நட்பின் விளைவாக, மயிலை வட்டார அனைத்து வணிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ஏற்க வேண்டியதாயிற்று. எங்கள் சங்கத் தலைவர் திரு. மாரித்தங்கமும் உழைப்பால் உச்சத்திற்கு வந்தவர். அவருடன் இணைந்து, வணிகர்களின் நலனுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இன்றைக்கு மதுவால் சமுதாய சீரழிவு பெரிய அளவில் ஏற்படுகிறது. எனவே, பூரண மதுவிலக்காக பல்வேறு சமூக இயக்கங்களுடன் இணைந்து குரல் கொடுத்து வருகிறோம்.

என் வாழ்க்கைத் துணைவி திருமதி. சுப்புலட்சுமியும் வணிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். எங்களுக்கு, தொடக்கப் பள்ளியில் பயிலும் இரண்டு குழந்தைகள் இருப்பதால், அவர்களை வளர்ப்பதில் தன் முழு நேரத்தையும் அவர் ஒதுக்குகிறார். அதே சமயத்தில், எங்கள் வணிக வளர்ச்சிக்கு முத்தான ஆலோசனைகளை வழங்கத் தவறுவதில்லை. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், ‘பெண்கள் உலகம்’ என்ற பெயரில் ஓர் வணிக வளாகத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

என்னிடம் வாடிக்கையாளர்களாக உள்ள சிலர் சிறுதானியங்களின் மகத்துவத்தைத் தெரிவித்து, அவற்றையும் விற்கும்படி கேட்டு வந்தனர். அவர்கள் கோரிக்கையைப் நிறைவு செய்யும் வகையில் மந்தைவெளியில் உள்ள எங்கள் அரிசி மண்டியில் சிறுதானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, தினை, சோளம், சாமை, குதிரைவாலி முதலானவற்றை விற்கத் தொடங்கியுள்ளேன். நல்ல ஊட்டச்சத்து கொண்ட இவற்றின் விற்னை சீராக அதிகரித்து வருகிறது. இதோடு, அனைத்துவகை அப்பளங்கள் மற்றும் கைக் குத்தல் அரிசியையும் விற்கிறோம்.

வருங்காலத்தில், இயற்கை மருத்துவமும், ரசாயன கலப்பு இல்லாத உணவுப் பொருட்களும் கோலோச்சி நிற்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்போது, சிறுதானிய உற்பத்தியும் விற்பனையும் வியக்க வைக்கும் வகையில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார் திரு. ஜி.ஆர். ஜெயச்சந்திரன்.

– ம.வி. ராஜதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here