புத்தர் கற்றுத் தந்த வாழ்வியல்

மகந்தர் என்னும் பெயர் உடைய துறவி ஒருவர் இமயமலைப் பகுதியில் ஒரு ஆசிரமம் அமைத்துத் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரும் அவர்தம் சீடர்களும் மீனையோ, இறைச்சியையோ,                           பறவையின் தசைகளையோ உணவாக உண்பதில்லை.

அரிசி, கம்பு, அவரை, பட்டாணி முதலிய தானியங்களையும், மரங்கள் கொடிகளில் விளையும் பழங்களையும், உண்ணத் தகுந்த இலைகளையும், கிழங்கு வகைகளையுமே உணவாகக் கொள்வார்கள்.

ஆண்டுதோறும் அவர்கள் தம் ஆசிரமத்தை விட்டுக் கீழிறங்கி மலை அடிவாரங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் செல்வார்கள். அக்கிராமங்களில் உள்ள மக்களும் அவர்களை நன்மதிப்புடன் வரவேற்று நன்கு உபசரித்து, உப்பு, புளி முதலிய பொருட்களை மிகுதியாக அளிப்பர்.

ஒரு சமயம் புனிதர் புத்தர், தம் சீடர்களுடன் அக்கிராமப் பகுதிகளுக்குச் சென்றார். அவர்களிடம் தர்மத்தைப் போதித்தார். புனிதர் புத்தரின் நல் உரைகளைக் கேட்ட அக்கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், புனிதர் புத்தரைப் பின்பற்றுவோராயினர்.
ஆமகந்தரும் அவர்தம் சீடர்களும் வழக்கம் போல அந்த ஆண்டும், கிராம மக்களிடம் வந்தனர். ஆனால் கிராம மக்கள் வழக்கப்படியான ஆர்வம் காட்டவில்லை. புனிதர் புத்தரும் அவர்தம் சீடர்களும் அக்கிராமத்திற்கு வந்திருந்ததையும் புனிதர் புத்தரின் வாய்ச் சொற்களால் தம் உரைகளைக் கேட்டு, அக்கிராமத்தினர் புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர்களானார்கள் என்பதையும் ஆமகந்தர் அறிந்தார்.

மேலும் புனிதர் புத்தர் மீனையும், இறைச்சி உண்ணுதலையும் தடை செய்யவில்லை என்பதை அறிந்த ஆமகந்தர் மிகவும் ஏமாற்றமடைந்தார். இதை உறுதி செய்து கொள்ள விரும்பி புனிதர் புத்தர் தங்கியிருந்த ஜேத வனத்திற்குச் சென்றார்.
புனிதர் புத்தரைக் கண்டு வணங்கி, அவரிடம் பின்வருமாறு கூறினார்.

“மேன்மையாளரே! நாங்கள் தானியங்கள், பழங்கள், பருப்புகள், கொட்டைகள், கனிச்சுளைகள், தண்டுகள், கீரைகள் போன்ற சரியான வழியில் பெறப்பட்ட உணவுகளையே உண்கிறோம். ஒரு மனிதனின் குண நடத்தையில் நல்லியல்பை ஏற்படுத்தும் இவ்வகை உணவுகளே நல்வாழ்வை என்றும் உறுதி செய்வன. இதற்கு மாறாக, மீனும், இறைச்சியும்,. பறவைகளின் தசையும் ஒரு மனிதனின் குண நடத்தையில் தீய இயல்பை ஏற்படுத்தித் தீயவனாக்குகிறது. ஆனால் அறிவு ஒளி எய்திய புத்தராகிய தாங்கள் மீன், இறைச்சி முதலிய உணவுகளைத் தடை செய்யவில்லை என்று அறிகிறேன். இது குறித்துத் தங்களின் கருத்தறிய விழைகிறேன்”.

இதற்கு புனிதர் புத்தர் இவ்வாறு கூறலானார்.

“இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர்களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று”

“இவ்வுலகில் கடுமையானவராய், நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காத வராய், புறங்கூறுபவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

 “இவ்வுலகில் தீயொழுக்கம் உடையவராய், தம் தொழிலில் ஏமாற்றுக்காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக் காரராய், பிறரை இகழச்சியாய் நினைப் பவராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

“இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர்பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப் பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.
“இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல் களில் ஈடுபடுவோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

“இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று”.

“எவரொருவர் மீனையும், இறைச்சியையும் உண்பவராய் இருந்தும், நல்லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடையவராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறுவோராய், நன்நெறியில் நிலைப்போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை”.

“எவரொருவர் பற்றுகள் நிறைந்தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற்றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குறறச் செயல்களில் தொடர்புடையோராய், புலன்களை வெல்ல முடியாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீயபெயர் பெறுவோராய், தீயநெறியில் நிலைப்போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப்பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப்பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல்லோராக கருதப்படுவது இல்லை”.

“மீனையும், இறைச்சியையும் உண்ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித்தலும், உரோம உடை உடுத்தலும், யாகத்தீ வளர்த்தலும் போன்ற இவையெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப்படுத்தி விடாது”.

“தீமைகளை உருவாக்குவது தீயசெயல்களே அன்றி மீனையோ, இறைச்சியையோ உண்பதனால் அன்று”.
“உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்டவற்றாலும் களங்கப்படுவது இல்லை”.

“புனிதர் புத்தரின் போதனைகளிலிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன்னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க, புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர்களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.

-‘புத்தர் இவ்வாறு கூறினர்’ நூலில் இருந்து
(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு). மொழியாக்கம் : திருமகன்

விலை ரூ.75. வெளியீடு: அறம்பதிப்பகம், 3 கண்ணன் நகர் முதல் தெரு, மதுரவாயில், சென்னை – 95. (9962276969)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here