Latest Posts

சிறந்த உரையாடல் உருவாக்கும், நட்பு வலைப்பின்னல்!

- Advertisement -

நமக்கு தெரிந்த மனிதரை நினைவுகூறும் போது, அவரோடு நாம் நடத்திய உரையாடல்களை அசை போடுதல் ஒரு இனிமையான அனுபவம். கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்கும் இந்த பண்பு இயல்பான ஒன்று. முதல் முறை சந்தித்தபோது பேசியது, கடைசியாக பார்த்த போது கண்கலங்கி விடை பெற்றது என்று உரையாடல்களே அந்த உறவுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும்.

உரையாடல் என்பது ஒரு கருவி; அதனைக் கொண்டு ஒரு வேலையை எளிதில் முடிக்கலாம். உரையாடல் ஒரு பூங்கொத்து; அதைக் கொண்டு புதிய மனிதர்களை சொந்தமாக்கலாம். உரையாடல் ஒரு கூர்முனை கத்தியும் கூட; அதை வைத்து சமூகத்தின் அமைதியையும் கெடுக்கலாம். உரையாடல் ஒரு அருமருந்து; அதைக் கொண்டு காயங்களை ஆற்றலாம். உரையாடல் ஒரு ஒட்டுப்பசை; அதை வைத்து உலகெங்கும் பிரிந்து வாழும் உயிர்களையும் இணைக்கலாம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு (Man is a social animal) என்பார்கள். விலங்குகளைப் போல உண்டு, உறங்கி, இனவிருத்தி செய்வதோடு நின்று விடாமல், ஏற்றத்தாழ்வு மிக்க, வேறுபாடுகள் நிறைந்த இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழவும் அதன் பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும், மனிதனால் முடியும். ஆகவேதான் மனிதனை ஒரு சமூக விலங்கு என்கிறார்கள். விலங்குகளுக்கு இல்லாத சிறப்புகளுள் ஒன்று அவனது பேசும் திறன். அதனைக் கொண்டு பிறிதொரு மனிதனோடு உரையாட முடிகிறது. தனக்கான நட்பு வட்டத்தை தானே உருவாக்கவும், அதை விரிவு செய்யவும் முடிகிறது. நல்ல பேச்சுத் திறன் உள்ளவர்களுக்கு இயல்பாகவே நட்பு வட்டம் பெரிதாக இருப்பதை பார்க்க முடியும். நல்ல பேச்சுத் திறன் என்பது மணிக் கணக்காக சொற்பொழிவு ஆற்றும் திறமை அன்று. ஒருவரிடத்தில் நயம்பட, இனிமையாக, நேர்மையாக, பயன் உள்ளதாக பேசுவது.

நீங்கள் ஒரு மனிதரோடு நடத்தும் உரையாடல் என்பது அந்த நேரத்தில் நிகழும் ஒரு வினை மட்டுமல்ல; அந்த உரையாடலைப் பொறுத்து உங்கள் நட்பு வட்டம்/ தெரிந்தோர் எண்ணிக்கை /ஆதரவு ஆற்றல் அதிகரிக்கும் அல்லது குறையும். ஒருவரிடம் நயம்பட, இனிமையாக, நேர்மையாக, நேர்மறையாக, புத்துணர்வாக, பயன் உள்ளதாக பேசும் போது நமக்கும் அவருக்கும் இடையே கண்களுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டாகிறது.

அதுவே எதிர்மறையாக, விரோதமாக, அவதூறாக பேசும் போது அதே பிணைப்பு பலவீனப்பட்டு நாளடைவில் துண்டிக்கப்படுகிறது. உங்கள் நட்பு வட்டத்தின், தெரிந்தவர்களின், நலம் விரும்பிகளின், எதிரிகளின் எண்ணி க்கையை எண்ணிப் பார்த்து உங்கள் பேச்சு எப்படிப் பட்டதாக இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். உங்களுக்கான ஆதரவு ஆற்றல் குறைவானதாக இருக்குமானால், உங்கள் உரையாடலின் தரத்தை, இயல்பை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்யுங்கள்.

ஒரு உரையாடல் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். நன்மை தரும் நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி பல பிணைப்புகளை ஏற்படுத்தும். அவை ஊர் கடந்து, மொழி கடந்து, நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து பூமிப் பந்தில் ஒரு மாபெரும் வலையைப் போல பரவிக் கிடக்கும். அதுவே நமக்காக நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற நமது நட்பு வட்டம், ஆதரவு ஆற்றல், தெரிந்த மனிதர் குழு.இவை தனிமனித வாழ்வுக்கு மட்டுமானது அன்று. நமது கடைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இவ்வகையான ஒரு வலைப்பின்னல் இருக்கும்.

அந்த வலைப் பின்னலுக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி வலைப்பின்னல் இருக்கும். ஒரு வாடிக்கையாளரிடம் நாம் நடத்தும் இனிமையான உரையாடல் என்பது அந்த நேரத்தில் நமக்கு ஏற்படும் வணிகத்துக்கு மட்டும் அல்ல, நாம் பின்னிக் கொண்டிருக்கும் மாபெரும் நமது வலைப்பின்னலுக்கும் (ழிமீtஷ்ஷீக்ஷீளீ) அது நன்மை பயக்கும். அவரது, வலைப்பின்னலில் நாமும், நமது வலைப்பின்னலில் அவரும் இணைந்து கொள்கிறோம். ஒரு வாடிக்கையாளர் என்பவர் ஒரு தனி ஆள் அல்ல என்பதையும், அவரோடு நாம் நடத்தும் உரையாடல் நம்மை இன்னொரு குழுவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

கிராமத்து வீடுகளில் இன்றளவும் வெற்றிலை பாக்கு போடுவது வழக்கம். அதுவும் கும்பகோணம், மாயவரம் போன்ற காவிரி டெல்டா பகுதிகள் இன்னமும் வேளாண்மையை விடாப்பிடியாக வைத்திருப்பதால் அதன் இயல்பு மாறாமல் இப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் வெற்றிலைப் பெட்டியுடன் பெரியவர்களை பார்க்க முடியும். வீட்டின் திண்ணை யில் வந்து அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டே தெருவில் போகிற மனிதர்களிடம் பேசுவார்கள். தெரிந்தவர்கள் என்றால் அருகில் வரவைத்து, வெற்றிலை போடச் சொல்லி அடுத்த தெருவின் செய்திகளைப் பற்றி அறிவார்கள். அந்த ஊருக்கு புதிதாக யாராவது வந்தாலும், யார் நீங்கள்? யார் வீட்டு விருந்தாளி? என்று அலசி ஆராய்ந்து விடுவார்கள். அவர்கள் பேசுவதற்கு ஒரு காரணமும் தேவை இல்லை; ஒரு மனிதர் இருந்தால் போதும். தொலைத் தொடர்பு சாதனங்கள் ஏதுவும் அற்ற காலக் கட்டத்திலும் சிறப்புற செய்திப் பரிமாற்றங்கள் செய்து காட்டியவர்கள். இப்போதும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் ஊரின் நாட்டாமையாக இருந்த ஒரு பெரியவர், கொஞ்சம் கோபக்காரர். ஊரே அவரைக் கண்டால் பேசுவதற்கு சற்று தயங்கும். என் தந்தையை விட வயதில் பெரியவர். எனக்குத் தெரிந்து நல்ல மனிதர், அங்குள்ள மக்களுக்குள் சண்டை சச்சரவு, நிலத் தகராறு என்று எல்லாவற்றுக்கும் நியாயமான தீர்வு சொல்வார். ஐம்பது வயதைக் கடந்த பின்னும் மனைவியோடு சண்டைபோடும் பெரிய மீசைக்காரர். ஒரு நாள் நடந்த சண்டையில் அவர் மனைவி அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேற அப்போது திண்ணையில் வெற் றிலை போட்டுக் கொண்டு இருந்த எனது பாட்டி அவரை வழி மறித்து, நடந்தவற்றைக் கேட்டு, எங்கள் வீட்டிலேயே தங்க வைத்து விட்டார்.
மாலை நேரம் மீசையை முறுக்கிக் கொண்டு தெருவில் கோபமாக நடந்து போன நாட்டாமையை என் பாட்டி அருகில் அழைத்தார். அங்கே நடந்த உரையாடல் பின்வருமாறு-

பாட்டி: ஏ, நடராசா இங்க வா!

நாட்டாமை: ஏன் பெரிம்மா? (மாற்று சமூகம் என்றாலும் உறவுமுறை போலவே பழகுவார்கள்)

பாட்டி: வீட்ல சண்டையாமே, ஏன் என்னா?

நாட்டாமை: அவள அறுத்து விட்டுற வேண்டியதுதான். இனிமே சரிவராது (கோபமாக).

பாட்டி: எலே உனக்கு எதாவது அறிவு இருக்கா?

நாட்டாமை: ஆமா நீ என்னைய தான் குத்தம் சொல்லுவ. அவள கேக்கமாட்ட!

பாட்டி: கட்டுன பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிறியே. வெக்கமா இல்ல?

நாட்டாமை: அவ என்னா பண்ணா, தெரியுமா உனக்கு?

பாட்டி: எலே, அவ ஆயிரம் செஞ்சி இருக்கட்டும்; அதுக்காக அடிச்சிருவியா? ஊருக்கே நியாயம் சொல்ற.., காறித் துப்ப மாட்டாங்க?

நாட்டாமை: என்ன பண்ண சொல்ற, வேகம் வருதா இல்லையா?

பாட்டி: ஏ, முட்டாப் பயல என்னமோ நேத்து கல்யாணம் பண்ண மாதிரி பேசுற. மானங்கெட்ட பயல, நாலு புள்ள பெத்துமா சண்ட போடுவ?

நாட்டாமை: (மௌனமாக சிரித்துக் கொண்டே) இங்க தான் இருக்காளா?

பாட்டி: ஆமா, வருவா போ.

நாட்டாமை: சரி பெரிம்மா, வெத்தல குடு.

நான் சிறுவனாக இருக்கும் போது நடந்த நிகழ்வு இது. நாங்கள் கண்டு நடுங்கும், எங்கள் தந்தை கூட பேசுவதற்கு சற்று தயங்கும் ஒருவரை, நாங்கள் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்யும் எழுபது வயது பாட்டி ஒருவர் மிகவும் நேர்த்தியாக பேசி, குடும்ப சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும், ஊர் மக்கள் முன்னிலையில் கம்பீரமாக நிற்கும் நாட்டாமை அன்று என் பாட்டியின் வசவுகளை வாங்கிக் கொண்டு; தவறை உணர்ந்து கொண்டதும். வியப்பிலும் வியப்பு.

ஒருவேளை அவர் மனைவி அன்று அந்த ஊரில் இருந்து வெளியேறி இருந்தால், வறட்டு மதிப்புக்காக நாட்டாமை கடைசி வரை சமரசத்துக்கு வந்திருக்கவும் மாட்டார். அவர்களை மீண்டும் அழைத்து வரவும் ஒத்துக் கொண்டிருக்கவும் மாட்டார். ஆனால் அன்று நடந்த ஒரு சிறு உரையாடல் இந்த சிக்கல்களை எல்லாம் தவிர்த்தது.
தரமான உரையாடல் களால் மனிதர்கள் இடையே வலுவான பிணைப்புகளை உருவாக்க முடியும். அதைப் போலவே உடைந்து போன பிணைப்பு களை ஒட்ட வைக்கவும் முடியும். அதனால் தானோ என்னவோ இன்ற ளவும் தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் எல்லா நிகழ்வு களிலும் தவறாமல் தட்டில் வெற்றிலை-பாக்கு இடம் பெறுகிறது. உரையாடல்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆரோக்கியமான, நம்பிக்கையூட்டும், பயனுள்ள உரையாடல்கள் நிச்சயம் ஒரு நல்ல பிணைப்பை உருவாக்கும். அவ்வாறான பிணைப்புகளால் நமக்கு தெரிந்த மனிதர்கள்/நட்பு வட்டம்/ வாடிக்கையாளர்/ஆதரவு ஆற்றல் என்ற வலைப் பின்னல்கள் பலம் பெறும். புறக் கண்களுக்குப் புலப்படாத இவ்வாறான ஒரு தொடர்பு தொழில்முனைவோருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இன்றி அமையாத ஒன்று.

இப்படிப்பட்ட வலைப் பின்னல் சாத்தியமா, இவ்வாறான ஆதரவு ஆற்றல்களால் என்ன பயன்? என்று கேட்பவர் களுக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்களே, அது எப்படி?

வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைகிறதே, அது எப்படி?

இங்கு தமிழ்நாட்டில் அரசு நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் உள்ள அனில் அகர்வாலின் இல்லம் முற்றுகை இடப்படுகிறது, அது எப்படி? என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும், அமெரிக்கா வாழ் தமிழனுக்கும், இங்கிலாந்தில் ஸ்டெர் லைட்டுக்கு எதிராக போராடிய தோழர்களுக்கும் கண்களுக்கு புலப்படாத ஒரு பிணைப்பு இருப்பது புரியும்.

– வளர்வோம்!

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news