ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

0

வணங்கள்(Certificates) தொலைந்தால், யாரை அணுகுவது..? என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? எவ்வளவு கட்டணம்? தொலைந்த ஆவணங்கள் கிடைக்க கால வரையறை மற்றும் நடைமுறை                                      ஆகியவற்றை அறிய…

இன்ஷூரன்ஸ் பாலிசி : பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரிச்சான்று, பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை, மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் முதலிய ஆவணங்கள் தர வேண்டும்.

ஆவணங்கள் தயாரிப்பு கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை : நகல் பாலிசி கோரும் விண்ணப்பக்கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும்.

இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும். அதை நிறைவு செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் : பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும். அவரிடம், மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது ஆகிய ஆவணங்கள் தர வேண்டும்.
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத் தேர்வு (+2) பட்டியல் ரூ.505 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்ததில் இருந்து 60 நாட்களில் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை : காவல் துறையில் புகார் அளித்து, ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கி, முன்பு படித்த பள்ளி / நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி, அதை நிறைவு செய்து தாசில்தாரிடம் கையொப்பம் வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்துடன் ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு தொடர்பான பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும் என்பது நடைமுறை.

ரேஷன் கார்டு : கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப் பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையரை அணுக வேண்டும். காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தர வேண்டும்.

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை : தொடர்புடைய அலுவலகர் இடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் நிறைவு செய்து தர வேண்டும். அவர்கள் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ் : மாவட்டப் போக்குவரத்து அதிகாரியை அணுகி, பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் முதலிய ஆவணங்கள் தர வேண்டும். கட்டணமாக ரூ.315 (இலகு ரக மற்றும் கனரக வாகனம்) அளிக்க வேண்டும். விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம் ஆகும்.

நடைமுறை : காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

பான் கார்டு : பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறையிலுள்ள வரை அணுக வேண்டும். பாஸ்போர்ட் அளவு படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள் போன்ற ஆவணங்களை அளித்து, கட்டணமாக அரசுக்குச் ரூ.96 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்தப் 45 நாட்களில் கிடைக்கும்.

நடைமுறை : பான் கார்டு கரக்ஷன் விண்ணப்பம் வாங்கி, அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்ட வேண்டும்.

கிரயப் பத்திரம்: பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும். காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். ஆவணக் கட்டணமாக 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். ஒரு சில நாட்களில் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை : கிரயப்பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு : தொடர்புள்ள வங்கியின் கிளை மேலாளரை அணுக வேண்டும். கணக்குத் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.100 அளிக்கப்பட வேண்டும் (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது 15 நாட்களில் நகல் கார்டு கிடைக்கப் பெறலாம்.

நடைமுறை : டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிமாற்றகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தொடர்புள்ள கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

பாஸ்போர்ட் : மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களை அணுக வேண்டும். காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம் முதலிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.4,000 செலுத்த வேண்டும். இந்தியாவில் தொலைத்திருந்தால் 35-லிருந்து 40 நாட்களுக்குள்ளும்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை : பாஸ் போர்ட் தொலைந்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து, கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத் தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற் கொண்டு பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரடிட் கார்டு : கிரடிட் கார்டு தொலைந்த உடன் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும். தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). 15 வேலை நாட்களுக்குள் முடித்துத் தருவார்கள்.

நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் அனுப்பி வைத்து விடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்

– வி.எஸ். சிவராமன்,
உதவி பேராசிரியர், மேலாண்மை துறை
ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் -8

சுற்றுலாவின் போது புதிய வணிகத் திட்டங்கள் கிடைக்கின்றன!

0

“என் தந்தையார் கயத்தாறு அல்ஹாஜ் அமீர் பாட்சா. அவர் தான் எனக்கு வாழ்க்கையில் மட்டும் அல்ல வணிகத்திலும் வழிகாட்டி. தாசில் தாரராக பணியாற்றி ஒய்வு பெற்ற அவர், வரவு செலவு கணக்கை தினமும் எழுதுவார். வருமானத்திற்குள் செலவு செய்து மிச்சம் பிடிப்பது எப்படி? என்பதை நான் பள்ளியில் படிக்கும்போதே அவரிடம் கற்றுக் கொண்டு விட்டேன் என்கிறார், ஏசியாஸ் எலக்ட்ரிகல்ஸ் திரு. தாஜ் முகமது.

இவர் சென்னை பெரியமேடு, நாராயண செட்டி தெருவில் ஏசியாஸ் எலக்ட்ரிகல்ஸ் சென்டர் என்ற நிறுவனத்தை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் 1980களில் ஒர் எலக்ட்ரிக் தொழிலாளியாக இருந்த இவர் இன்றைக்கு பெரு வணிகராக உயர்ந்து நிற்கிறார்.

தம்முடைய பசுமையான அனுபவங்களைப் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து,
“மதுரையில் இன்டர்மீடியட் முடித்து சென்னையில் உள்ள செங்கல்வராயன் பாலிடெக்னிக்கில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ பெற்றேன். படிப்பை முடித்ததும் சென்னையில் வசித்த என் அண்ணன் திரு. காசீம் முகமது அவர்கள் ஆதரவில், எண்ணூரில் உள்ள அசோக்லேலண்ட் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிப் பணியாளராக பணி புரிந்தேன்.
பள்ளியில் படிக்கும் போதே என் தந்தையாரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஆழமாக பதிந்து இருந்தன.

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டிருந்த அவர் நற்பண்புகளின் பெட்டகமாகத் திகழ்ந்தார். தாசில்தாரராக பணியாற்றிய அவர், 1966 -ல் வாங்கிய மாதச் சம்பளம் ரூ.250. எங்கள் பள்ளிக் கட்டணம், வீட்டு செலவு உட்பட அனைத்தும் போக அதில் மிச்சம் பிடித்து தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் தவறாமல் ஒரு தொகையை போட்டு விடுவார். என் தந்தையார் மாதா மாதம் எழுதி வைத்த வரவு செலவு குறிப்பேடுகளை புதையல் போல பாதுகாத்து வருகிறேன்.

அப்ரென்டிஸ் பணி முடிந்ததும் உறவினர்கள் நண்பர்கள் மூலம் கிடைத்த சிறு சிறு எலக்ட்ரிக்கல் தொடர்பான வேலைகளை செய்து வந்தேன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சில நிறுவனங்களில் இருந்தும் அவ்வப்போது அழைப்பு வரும். அந்த நிறுவனங்களில் இருந்து புதிய அனுபவங்கள் ஏராளமாக கிடைத்தன.
ஒரு முறை என் அக்கா பசரியா காசிம் சொன்ன ஒரு வேலையை முடித்துக் கொடுப்பதற்காக, குடும்ப நண்பர் திரு. பசீர் அகமது அவர்களின் இல்லத்திற்கு சென்றேன்.

அப்போது என்னைப் பற்றி விசாரித்த அவர் நீங்கள் டிப்ளமோ முடித்திருப்பதற்கு டெலி கம்யூனிகேஷன் துறையில் ஒப்பந்தப் பணி எடுத்து சொந்தமாக செய்யலாமே, என்றார். எனக்கு அது சரியாகப்பட்டது. உடனே அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.
இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனமாக உள்ள மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம், அப்போது இந்தியன் டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் இயங்கியது.
குமாரதாஸ் என்ற நண்பன் டிராப்ட்ஸ்மேன் ஆக அங்கு பணி புரிந்தார். அவரை அணுகி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

“ஒப்பந்தப் பணியில் கொஞ்சம் முன் அனுபவம் தேவை. நீ போய் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் சிறு சிறு ஒப்பந்தம் எடுத்து பணியாற்றிவிட்டு வா, என்று அவர் ஆலோசனை வழங்கினார். அங்கு ஒப்பந்ததாரர் ஆகும் நடைமுறை எளிது என்றார்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்த என் உறவினர் திரு. அப்துல் ஹக்கிம் எனக்கு ஊக்கம் அளித்து ஆலோசனைகள் வழங்கினார். அதன்படி, ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொண்டு சில மாதங்கள் அங்கு பணியாற்றினேன். தொடர்ந்து 1992-ல் ஏசியாஸ் எலக்ட்ரிக்கல் சென்டர் என்ற நிறுவனத்தை நிறுவினேன். அதே ஆண்டில் மத்திய அரசின் தொலை தொடர்பு துறையில் ஒப்பந்ததாரராகவும் பதிவு செய்தேன்.

எனக்கு கிடைத்த முதல் ஒப்பந்தப் பணி தாம்பரம் தொலைத் தொடர்பு இணைப்பக அலுவலகத்தில், காற்றை வெளியேற்றும் மின்விசிறி நிறுவுதல். ரூ.4995 க்கு எடுத்திருந்த அந்த ஒப்பந்தப் பணியை திறம்பட முடித்துக் கொடுத்து அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றேன். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகள் கிடைத்தன. சென்னை தொடங்கி கன்னியாகுமாரி வரை எந்த மாவட்டத்தில் ஒப்பந்தப் பணி கிடைத்தாலும் செய்தேன்.

அனுபவமும் இத்துறை சார்ந்த நட்பு வட்டாரமும் அதிகரித்தது. பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பணி செய்தேன். பணிக்கு ஏற்ப தொழில்நுட்ப வல்லுநர்களையும், வேலை ஆட்களையும் நியமித்துக் கொண்டேன்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் அமைத்துள்ள கோபுரங்கள் பலவற்றுக்கு நாங்கள்தான் இடிதாங்கி நிர்மானித்துக் கொடுத்து உள்ளோம். உயரமாக இருக்கும் கோபுரத்தின் மீது சிவப்பு விளக்கு அவசியம் பொருத்த வேண்டும். அந்த பணியையும் நாங்கள் தான் செய்வோம்.

2008-2010 கால கட்டங்களில் மிகப் பெரிய ஒப்பந்த வாய்ப்புகள் கிடைத்தன. வணிகத்தில் நல்ல வளர்ச்சியை எட்டினேன். 2011 க்கு பிறகு தனியார் நிறுவனங்களையும் நாடி ஒப்பந்தம் எடுக்கத் தொடங்கினேன். தற்போது பி.எஸ்.என்.எல் தவிர பிரபல தனியார் நிறுவனங்களும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் பட்டியலில் உள்ளன.

என் மனைவி திருமதி ஜெசிமா பானு எம்.ஏ, எம். எட் பட்டங்கள் பெற்றவர். அவருடைய தலைமையில் அல் அமீன் என்ற ஆரம்பப் பள்ளியை சமூக நோக்குடன் நடத்தி வருகிறோம். இதில் 240 குழந்தைகள் பயில்கின்றனர்.
என் இரு மகன்களையும் அவர்கள் விருப்பப்படி பயில வைத்தேன். மூத்த மகன் அமித்சுனகல் ஆர்க்கிடெக் முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்கிறார். இளைய மகன் முகமது ஃபயாஸ் சட்டம் படிக்கிறார்.

எனக்கு இப்போது வயது 56. ஆனால் இளமையில் எப்படி செயல்பட்டேனோ, அதே உற்சாகம் மற்றும் சுறுசுறுப்புடன் இயங்குகிறேன். இதற்கு காரணமும் என் தந்தைதான். அதிகாலை நடை பயிற்சி அவருடைய அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. 5 மணிக்கு எழும் நான் தினமும் ஒரு மணி நேரம் பூப்பந்து விளையாடுவேன். அடுத்த ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று முறையான உடற்பயிற்சியில் ஈடுபடுவேன்.

நான் கடைபிடிக்கும் நல்லப் பழக்கங்களில் “சுற்றுலாவும்” ஒன்று. ஆண்டுதோறும் குடும்பத்தோடு எதாவது ஒரு வெளிநாடு சென்று விடுவேன். இதுவரை ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இலங்கை, தாய்லாந்து, வளைகுடா நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறேன். சுற்றுலாவின்போது உடல்நலம் மற்றும் மன நலத்தோடு வணிகத்தை வளர்க்கும் புதிய திட்டங்களும் எனக்கு கிடைக்கின்றன.
அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நிரந்தர வேலை கிடைக்காதா? என்று ஏங்கியிருந்த காலம் ஒன்று உண்டு. நல்ல வேலையாக அந்த வேலை கிடைக்கவில்லை என்று அதே மனம் இப்போது நினைக்கிறது.

எந்தவொரு மனிதனால் கைக்கு வரும் பணத்தை சரிவர கையாள முடிகிறதோ, அந்த மனிதனால் வாழ்க்கையில் மட்டும் அல்ல வணிகத்திலும் வெற்றி பெற முடியும்” என்கிறார் திரு. தாஜ்முகமது.

– ம.வி. ராஜதுரை

என்னை வளர்த்த அந்த பதிமூன்று ஆண்டுகள்!

0

சென்னை புரசைவாக்கத்தில், கிரிக்கெட் மட்டை, கால்பந்து உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்யும் “சில்ட்ரன்ஸ் பேரடைஸ்” கடை நடத்தி வருகிறார் திரு. முகமது ஜமீல். ‘ஸ்போர்ட்ஸ் கடை பாய்’ என்றால் அந்தப் பகுதியில் அறியாதவர்கள் இருக்க முடியாது. தொழில் ஈடுபாடு, வாடிக்கையாளர்களுடன் அவர் வைத்து இருக்கும் இணக்கமான உறவு போன்ற பண்புகள் அவரை வெற்றியாளராக ஆக்கி உள்ளன.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வணிகத்தில் தாம் கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து:
“தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பட்டிக்குப் பேர் போன உடன்குடி எனது சொந்த ஊர். அருகே திசையன்விளையில் இருந்த பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்குப் போகவில்லை. என் 16-வது வயதில் சென்னைக்கு வந்தேன். அது 1967 -ம் ஆண்டு.

அண்ணா சாலையில் அப்போது பிரபலமாக இருந்த புகாரி பேன்சி ஸ்டோரில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு கிடைத்த சம்பளத்தில் என் செலவையும் பார்த்துக் கொண்டு மிச்சம் பிடித்து ஊருக்கும் அனுப்புவேன். பதிமூன்று ஆண்டுகள் அந்தக் கடையில் பணியாற்றினேன். வணிகத்தில் இப்போது பெற்ற வெற்றிக்கு அந்தக் கடையில் கிடைத்த அனுபவங்கள்தான் மூலக் காரணம்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்த
பெரிய டீலர்களிடம் ஆர்டர் கொடுத்து விளையாட்டுப் பொருட்களை வர வைத்தேன்.
என் மீது நம்பிக்கை வைத்து அவர்களும் அனுப்பினார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கில் நான் பணத்தை போட்டு விடுவேன். மிகவும் கால அவகாசம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த வணிக பரிமாற்றத்தை நான் சிறப்பாகப் பயன்
படுத்திக் கொண்டேன்.

என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையுடன் “சில்ட்ரன்ஸ் பேரடைஸ்” என்ற பெயரில் ஒரு ஃபேன்சி ஸ்டோரை புரசைவாக்கத்தில் 1980 -ஆம் ஆண்டில் தொடங்கினேன். எனக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் ஈடுபாடு இருந்தது. குறிப்பாக கிரிக்கெட்டை மிகவும் ரசிப்பேன். முக்கியமான போட்டிகள் நடக்கும்போது என் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். எனவே கடையின் ஒரு பகுதியில் கிரிக்கெட் மட்டைகள் உட்பட பல்வேறு விளையாட்டுப் பொருட்களை வைத்து இருந்தேன். தொடக்கத்தில் வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்தது. பொறுமையாக இரு! காலம் மாறும் என்று நண்பர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

ஒரு நெருங்கிய நண்பர் என்னிடம், விளையாட்டுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் கடையாக உன் கடையை ஏன் மாற்றக் கூடாது? என்று கேட்டார். அவர் ஆலோசனை எனக்கு சரியாகப்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்த பெரிய டீலர்களிடம் ஆர்டர் கொடுத்து விளையாட்டுப் பொருட்களை வர வைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்து அவர்களும் அனுப்பினார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கில் நான் பணத்தை போட்டு விடுவேன். மிகவும் கால அவகாசம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த வணிக பரிமாற்றத்தை நான் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

அந்த நேரத்தில் அண்ணா சாலையில் மட்டும்தான் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. அதுவும் நான்கு கடைகள் மட்டும்தான். இரவு ஏழு மணிக்கு எல்லாம் அவை மூடப்பட்டுவிடும். அண்ணா சாலைக்கு வெளியே சென்னையில் செயல்பட்ட ஒரே கடை என்னுடையதுதான். இரவு 7 மணிக்கு பிறகு விளையாட்டுப் பொருட்களை வாங்க விரும்புவோர் என்னிடம் வர துவங்கினர். அனைத்து விளையாட்டுப் பொருட்களும் என்னிடம் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

என் கடையில் இல்லாத ஒரு புதுவித விளையாட்டுப் பொருளை யாராவது கேட்டால், அவர்களிடம் முன்பணம் கொஞ்சம் பெற்றுக் கொண்டு விரைவில் எப்படியாவது அந்த பொருளை கொடுத்து விடுவேன். இதனால் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் மிகுந்த நம்பிக்கையுடன் என் கடைக்கு வந்தனர்.

விளையாட்டுப் பிரியன் என்பதால் சென்னைக்கு வருகை தரும் பிரபல விளையாட்டு வீரர்களை சந்தித்து அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு இருந்தது. இப்படி எடுத்த படங்களை கடையில் மாட்டினேன். ஆல்பங்களில் சேர்த்தேன். இவற்றைப் பார்ப்பதற்காகவே பல வாடிக்கையாளர்கள் வருகை தந்தனர்.
என் மகன் அக்பர் அலி. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்ததும், ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் கடைக்கு வருவார். நாளடைவில் வேலையை விட சொந்தத் தொழிலில் ஈடுபடுவதை விரும்பினார். எனவே, சென்னை அண்ணா நகரிலும் “சில்ட்ரன்ஸ் பேரடைஸ்” -ன் இரண்டாவது கடையைத் தொடங்கினோம். அக்கடையை கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் சிறப்பாக கவனித்து வருகிறார்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பூப்பந்து மட்டை தயாரிக்கும் ஒரு சிறந்த நிறுவனத்தின் டீலராகவும் உள்ளோம்” என்றார், திரு. முகமது ஜமீல்

– ம. வி. ராஜதுரை

ஆடியோ தொழிலில் முன்னோடி ஆனது எப்படி?

0

“அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உருவாகும் உலகத்தரம் வாய்ந்த ஆடியோ சாதனங்களுக்கு இணையாக நாங்களும் தயாரிக்கிறோம். அதே சமயம், வெளிநாட்டுக் கருவிகளின் விலையில் மூன்றில் ஒரு பாகமே எங்கள் பொருட்களின் விலை இருக்கும்” என்கிறார் டார்வின் டெக்னாஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜான்தங்கச்சன்.

இசை உலகில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் திரு. ஜான்தங்கச்சன் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. இசைக்கு உயிராகத் திகழும் ஆடியோ சாதனங்களின் நுட்பங்களை ஆய்ந்து அறிந்தவர் கடந்த முப்பது ஆண்டுகளாக இத்துறை தொடர்புடைய கருவிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். ‘ஹோம் தியேட்டர்’ அமைப்பு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.

ஆடியோ-வீடியோ துறையில் ஆர்வம் கொண்டவர்கள், இது தொடர்பாக வணிகத்தில் ஈடுபட்டு சாதிக்க விரும்புபவர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் இவர் கடந்து வந்த வெற்றிப்பாதையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம் வளர்தொழில் இதழுக்காக இவரை பேட்டி கண்டோம். நமக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து,
”என் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பூமாலை கிராமம். பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து எனக்கு பிடித்த எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பாடப் பிரிவில் டிப்ளமோ படித்தேன். என் தந்தையார் திரு. ஜான், ஒர் அற்புதமான ஆளுமை குணம் கொண்டவர். விவசாயியான அவர் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு புதுமை இருக்கும், ஒரு முழுமை இருக்கும்.

ஒரே வேலையை என் தந்தை உள்பட ஜந்து பேர் தனித்தனியாக செய்வார்கள். என் தந்தையார் முடிக்கும்போது அதில் ஒரு மாறுதல் தெரியும் அவசியம் ஏற்படின் பொதுப் பிரச்சனைகளிலும் அவர் இறங்குவார். என் தந்தையின் முனைப்புக்குப் பிறகுதான் எங்கள் கிராமத்திற்குள் அரசுப் பேருந்து வந்தது. பால் கூட்டுறவு மையம் செயல் படத்தொடங்கியது.

என்னுடன் பிறந்தவர்கள் ஜந்து சகோதரிகள் மூன்று சகோதரர்கள். பெரிய குடும்பம். குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொள்வார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் தந்தையாருடன் சேர்ந்து விவசாயத் தொழிலில் ஈடுபடுவேன். எந்த வேலையாக இருந்தாலும் அதை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற பாடத்தை அவரிடம் கற்றேன். எதையும் திறம்பட செய்ய வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டேன்.

என்னைப் போல என் அண்ணன் திரு. பேபி ஜானும் எலக்ட்ரானிக் படித்து இருந்தார் அது வானொலி, டேப்-ரெக்கார்டர் புழக்கத்தில் இருந்த காலம். என் அண்ணனுக்கு திருச்சூரில் இருந்த பிலிப்ஸ் நிறுவனத்திலும், எனக்கு மர்பி நிறுவனத்திலும் பழுது நீக்குபவர்களாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

பின் என் அண்ணன் நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் சர்வீஸ் சென்டர் வைத்து வீட்டில் இருந்தபடியே தொழில் செய்தார். நான் பணி முடித்து இரவில் அங்கு சென்று வேலை செய்வேன். பணித்திறனில் அண்ணனையும் முந்த வேண்டும் என்று முயற்சி செய்வேன்
எங்கள் இருவரின் திறன் திருச்சூரைத் தாண்டி பரவியது. உள்ளூர் சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்க முடியாமல் கைவிடப்பட்ட வானொலிப்பெட்டி, விசிஆர் மற்றும் ஆடியோ கருவிகள் எங்களிடம் வந்தன. இந்த வகையில் பல்வேறு சாதனங்களையும் பழுது நீக்கிக் கொடுத்தோம். உலகத்தரம் வாய்ந்த பல்வேறு வெளிநாட்டுக் கருவிகளின் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது காணக் கிடைத்தன. நள்ளிரவு தாண்டி விடியற் காலை மூன்று மணி வரை கூட அங்கு வேலை செய்த நாட்கள் பல.

தொலைக்காட்சி அறிமுகமான போது, அது தொடர்பான பயிற்சி வகுப்பில் சேர 1980 ல் சென்னை வந்தேன். திருவல்லிக்கேனியில் செயல்பட்ட அந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல நுட்பங்களை தெரிந்து கொண்டேன். என் அண்ணனின் நண்பரான திரு. ஜெய்சன் அண்ணாசாலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். சர்வீஸ் துறையில் எனக்கு இருந்த திறமையை அறிந்து கொண்ட அவர், ஆடியோ தொடர்புடைய டேப் ரெக்கார்டர், ஆம்ப்ளிஃபயர், ஸ்பீக்கர் முதலான கருவிகளை பழுது நீக்கிக் கொடுத்து பராமரிக்கும் மையத்தை உடனே தொடங்கு என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டையும் உடன் இருந்து செய்து கொடுத்தார்.
அண்ணாசாலையில் நூறு சதுர அடி கொண்ட கடையை மாத வாடகை ரூ 500 என்றவாறு பேசி முடித்து சர்வீஸ் சென்டரைத் தொடங்கினேன் திரு. ஜெய்சன், தொடர்ந்து அடுத்த கட்டமாக சர்வீஸ் சென்டர் திறப்பும் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 1990 ல் என் சர்வீஸ் சென்டரில் இருபது பேர் வேலை பார்த்தனர்.

வட மாநிலங்களில் இருந்து மட்டும் அல்ல அண்டை நாடுகளில் இருந்தும் அங்குள்ள சர்வீஸ் சென்டர்களில் கைவிடப்பட்ட ஆடியோ கருவிகள் எங்களைத் தேடி வந்தன. எங்கள் நிறுவனத்தின் புகழ் எல்லா திசைகளிலும் பரவியது.
ஆடியோ உலகம் ஒரு கடல் போன்றது. மேலைநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஒரு சில வகை ஆம்ப்ளிஃபயர் கருவிகள் கோடி ரூபாய்களில் விற்கப்படுகின்றன. மெக்கினடோஷ் (Macintosh), மார்க் லிவின்சன் (Mark Levinson), க்ரெல் (Krell) போன்ற மதிப்பு மிக்க வெளிநாட்டு தயாரிப்புகளை எங்களால் எளிதாக கையாள முடிந்த போது தோன்றிய எண்ணம்தான் மேக் இன் இந்தியா திட்டம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் ஏற்பட்ட இந்த பொறிதான் எங்கள் டார்வின் நிறுவனத்தின் செயல்பாடாக மாறியது.

இப்போது பல இந்திய நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை வாங்கி, அதில் தங்கள் நிறுவனப் பெயரைப் பொறித்து விற்பனை செய்கி றார்கள். ஆனால், எங்களுடைய படைப்புகள் முற்றிலும் இங்கு தயாரிக்கப்படுபவை.
தொழில்நுட்பத்தில் நாங்கள் மிகவும் வலுவாக இருப்பதால், எந்த வெளிநாடும் கொடுக்க முடியாத தரத்தை குறைந்த விலையில் கொடுக்கிறோம். சான்றுக்கு ரூ 15 லட்சம் ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் அமெரிக்க தயாரிப்பு ஒலி பெருக்கிக்கு ஈடான கருவியை ரூ. 5 லட்சம் விலையில் நாங்கள் கொடுக்கிறோம்.
இன்றைக்கு சீன தயாரிப்புகள் அனைத்துத் துறைகளிலும் ஆக்கிரமித்து நிற்கின்றன. ஆடியோ உலகமும் இதில் அடங்கும். ஆனால் தொழில்நுட்ப அடிப்படையில் வளர்ந்த நாங்கள், எங்களுக்கென்று ஒரு வாடிக்கையாளர் கட்டமைப்புடன் இருப்பதால் வணிகத்தில் உறுதியாக நிற்கிறோம்.

இசைப் பிரியனான நான், பூக்களையும், புத்தகங்களையும், பாடல்களையும் ரசித்து நேசிப்பவன். தினமும் மூன்று மணி நேரம் நூல் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவன் இன்றைக்கும் ஒரு மணி நேரம் புத்தகம் படிக்காமல் இருக்க முடியாது.

இசை உலகில் ஏற்படும் மாற்றத்தை உணரும் முதல்கட்ட ரசிகர்ளில் ஒருவனாக நான் இருப்பேன். நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. எனவேதான் நேற்றையை விட என்னால் இன்று வலுவாக இருக்க முடிகிறது. இத்துறையில் யாரையும் போட்டியாளராகக் கருதாமல் வளர்வதையே நான் விரும்புகிறேன்.

சில ஆண்டுக்குள் முன்பு இசைக்கான ஒர் ஆங்கில மாத இதழ் வெளி வந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. எனவே இசைப் பிரியர்கள் நூறுபேர்களை தேர்வு செய்து மாதம்தோறும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு என் செலவில் அந்த இதழை அனுப்பி வைத்தேன்.

இசைஞானி இளையராஜாவை சிறப்பிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இளையராஜா பங்கேற்ற அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து அனைத்துப் பணிகளையும் செய்தேன். இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட போது என் நிறுவனம் அமைந்து உள்ள தெரு முழுவதும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினேன்.

இவையெல்லாம் இயல்பாக நான் செய்தது. இசை மீதும் நம் இசைக் கலைஞர்கள் மீதும் இந்த மண்ணின் மீதும் கொண்ட பற்றின் வெளிப்பாடு. அதே நேரம் இந்த மண்ணும் இங்குள்ள வளங்களும் காப்பற்றப்பட வேண்டுமென்றால் நம் விவசாயமும் சிறு தொழில்களும் வளர வேண்டும் என்பதை நம் அறிவு சுட்டிக்காட்டுகிறது. இந்த சமூகப்பார்வையை இளைய தலைமுறை யிடம் சொல்லிப் புரிய வைக்கும் சமூகக் கடமையும் நமக்கு உண்டு. என் வெற்றிக்கு முதல் காரணம் என் தந்தையார் என்றால் அடுத்த காரணம் என் துணைவியார் திருமதி. லிசா தங்கச்சன் ஆவார். பொறுமையின் இலக்கணமான அவருடைய உறுதுணை எனக்கு வலுவான உதவி ஆகும்.

இன்றைக்கு ஆடியோ உலகில் உற்பத்தி, விற்பனை, சேவை ஆகிய மூன்று பிரிவுகளிலும் சிறந்த சேவை கொடுக்கிறோம். இந்த வகையில், எங்களுடைய டார்வின் டெக்னாலஜீஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ் & டெக்னாலஜீஸ் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இசை உலகிற்கும் வாடிக்கையாளர்களுக்கும் தங்களுடைய பங்களிப்பை ஆற்றி வருகின்றன.

இந்தியாவின் முதல் ஹோம் தியேட்டரை நிறுவிக் கொடுத்தவர்கள் நாங்கள். எனவே, இந்தத் துறையில் எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இன்றைக்கு அழகான பல அரங்குகளில் ஒலி பெருக்கி வசதி சீராக இருப்பது இல்லை. இதனால் பார்வையாளர்களுக்கு ஒலி தெளிவாகக் கேட்பது இல்லை. இது நுட்பமாக ஆய்ந்து செய்ய வேண்டிய பணி. நாங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள், இலக்கிய அரங்குகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சிறப்பான ஆடியோ வசதியை செய்து கொடுத்து பாராட்டுகள் பெற்றிருக்கிறோம்.

எந்த நாட்டுத் தயாரிப்புகளாக இருந்தாலும் எங்களால் சர்வீஸ் செய்து தர முடியும். தரமான எங்களுடைய தயாரிப்புகளை வாங்கி விற்பனை செய்ய விரும்புவோருக்கும் வாய்ப்பு தருகிறோம்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் நான் பார்த்து, படித்து, பயின்ற நுட்பங்களை இளைய தலைமுறைக்கு பகிர விரும்புகிறேன், நான் கற்றுக் கொண்டவற்றை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதை வாழ்நாள் பயனாகக் கருதுகிறேன்.” என்கிறார் திரு. ஜான் தங்கச்சன்

– ம.வி. ராஜதுரை

டீசல் விலை உயர்வு

0

பன்னாட்டு சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணை விலைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஒட்டி அன்றாடம் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது, இந்திய நடுவண் அரசு. இதைப் பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல அடிக்கடி பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அல்லலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விட்ட பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களை அதிகம் பாதித்து உள்ளது. இவர்களைப் பற்றி அரசு சிறிதும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக, இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது நிதி அமைச்சகம். வேண்டுமானால் மாநிலங்கள் தங்கள் வாட் வரியை குறைக்கலாம் என்று கூறி நழுவிக் கொண்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் திரு. ரவிச்சந்திரன் கூறும்போது,
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

இது எங்களை மட்டும் பாதிக்கக் கூடியது இல்லை. நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கக் கூடியது ஆகும். எண்ணெய் விலையேற்றம் என்பது பெரிய கார்ப்பரேட்களின் லாபத்துக்குத்தான் வழி திறந்து விடுகிறது. விலையை நிர்மாணிக்கும் பொறுப்பை தானே வைத்து இருப்பதற்கு பதில் தினமும் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களை அனுமதித்தது மிகப் பெரிய தவறாக நாங்கள் நினைக்கிறோம். இதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.

இன்றும் போராடுகிறோம்.
இந்த விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
வேளாண்மைக்குத் தேவையான இடு பொருட்கள் அனைத்தும் லாரிகளில்தான் கொண்டு செல்லப் படுகின்றன. பெட்ரோல், டீசல் உயர்வு, ஜிஎஸ்டி வரி போன்றவை காரணமாக லாரிகளின் வாடகை உயர்கிறது. இதனால் வேளாண்மைக்கு தேவைப்படும் உரம் போன்றவற்றின் விலை உயர்கிறது. விளைந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் லாரிகள்தான் பயன்படுகின்றன. ஏற்கெனவே கடுமையான நெருக்கடியில் இருக்கும் உழவர்கள் இதனால் இன்னும் சிக்கலுக்குள் தள்ளப் படுகிறார்கள்.

காய்கறிகளின் விலையும், மற்ற பொருள்களின் விலையும் உயர்ந்து மக்களின் பொருளாதாரத்தை கண்ணுக்குத் தெரியாமல் சீரழிக்கிறது.
விவசாயத்துக்கு அடுத்த படியாக தரை வழிப் போக்குவரத்து தான் இந்திய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கிறது. மத்தியஅரசின் கொள்கைகள் சரக்கு போக்குவரத்து தொழிலுக்கு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஆண்டுக்கு நான்கு லட்சம் கனரக வாகனங்கள் தயாரிக்கப் படுகின்றன. அவற்றுக்கான அனைத்து வகையான வரிகளையும் பெற்றுக் கொள்கிறது அரசு. ஆனால் அந்த வாகனங்கள் செல்வதற்குரிய கட்ட மைப்பை போதுமான அளவுக்கு ஏற்படுத்துவதில்லை. தவிர ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் தேவையற்ற கெடுபிடிகள். இதனாலும் போதுமான ஓட்டுநர்கள் கிடைக்காமல் லாரித் தொழில் திண்டாடுகிறது.’’ என்கிறார், திரு. ரவிச்சந்திரன்.
– வினவு

மகிழ்ச்சி அதிகரிக்கும், இவற்றைப் பின்பற்றினால்!

0

பிறப்பினால் வந்த பாதிப்புகளை எண்ணிக் கவலைப்படாமல், ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காகத் தொடர்ந்து முயலுங்கள். மூட நம்பிக்கைகளை விலக்கி அறிவார்ந்த வாழ்வை நடத்துங்கள்.
சாதித்து உயர்ந்த எளிய மனிதர்கள் பற்றிய நூல்களையும், தன் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் நூல்களையும் அதிகம் படியுங்கள்.

தாய்மொழியில் சிறப்பான அறிவும், ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றத் திறத்தையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ற சூழலில் பழகுங்கள்.
செயற்கை உணவுகளை அறவே விலக்கி, இயற்கையான பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். பரோட்டா, பிராய்லர் கோழியின் சுவைக்கு பதில் காய்கறி, மலிவான பழங்களை நிறைய உண்ணுங்கள். கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

மது, புகை, போதை தீய வழக்கங்களை அறவே விலக்குங்கள், விளையாட்டிற்கோ, உல்லாசத்திற்கோ கூட அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
பல்துறைச் செய்திகளையும், உலக அளவிலான செய்திகளையும் தினம் தினம் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.
பதட்டப்படாமல், வெறுப்பு கொள்ளாமல், சலிப்பு அடையாமல், எதையும் உறுதியோடு மனம் தளராமல் எதிர்கொள்ளுங்கள். அன்பாக, இனிமையாக அடுத்தவர் மீது அக்கறையோடு பழகுங்கள்! பொது நலனுக்கும் வாழ்வைச் செலவிடுங்கள்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கட்டாயம் உறங் குங்கள். மீதியுள்ள நேரத்தை திட்ட மிட்டு பிரித்துக் கொண்டு தவறாது அவற்றைச் செய்யுங்கள். நண்பர்களோடு மகிழ 2 மணி நேரம் ஒதுக்குங்கள். தனிமையை தவிருங்கள். நல்ல நண்பர்களை, உங்கள் முன்னேற்றத்தை விரும்பும் நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள்.
குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்வாக மனம் விட்டுப்பேசி பழக நேரம் ஒதுக்குங்கள். உங்களை விட சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்; முதியவர்கள் கூறுவதற்கு மதிப்பளியுங்கள்; சரியானவற்றைப் பின்பற்றுங்கள்.

வாழ்வில் சுமைகளைக் குறைத்து சுகங்களை அதிகப்படுத்துங்கள். அன்போடு, விட்டுக் கொடுத்து வாழுங்கள், வீண் பிடிவாதம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். அன்பும், பற்றும் யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவர்கள்தான் விட்டுக் கொடுப்பர்.
நடிகர்களுக்கு ரசிகனாக, கிரிக்கெட் அடிமையாக, அரசியல்வாதிகளின் எடுபிடியாக ஒருபோதும் ஆகாதீர்கள்.
மனக் கட்டுப்பாடும், திட்டமிட்ட செயலும், முயற்சியும் இருந்தால் இவை சாத்தியமே!
– மஞ்சை வசந்தன்

அம்பானியின் பார்வையில், பணம் என்பது பக்க விளைவு!

0

ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் விளம்பர நிறுவனமாக இருந்த “முத்ரா” நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், திரு. ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. 1980களில் இருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை கவனித்ததன் மூலம், தான் உணர்ந்த அவருடைய இயல்புகளை “திருபாயிசம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்:

புதுதில்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விமல் ஆடைகளின் அறிமுகத்திற்காக “ஃபேஷன் ஷோ” ஒன்றினை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. அரங்கம் நிரம்பி வழிந்ததில் அதிகம் பேர் வெளியே காத்திருக்க நேர்ந்தது. பொறுமை இழந்த வாடிக்கையாளர்கள் பெருங்கூச்சல் எழுப்ப குழப்பம் ஏற்பட்டது. மேலாளர்களும் இரண்டாம் நிலை நிர்வாகிகளும் வாசலுக்கு விரைந்த போது, திருபாய் அம்பானி முதல் ஆளாகக் களமிறங்கி, கூட்டத்தை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தார்.

முத்ரா நிறுவனத்திற்கு எதிராக வதந்திகள் கிளம்பிய நேரமது. அதன் தலைமை நிர்வாகி ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, தானே முயன்று சிக்கல்களைத் தீர்க்க முயன்று கொண்டிருந்தார். குழு நிறுவனங்களின் தலைவர் அம்பானியிடம் அது குறித்துப் பேசவில்லை. அவரும் கேட்கவில்லை. சிக்கல்கள் உச்சத்தில் இருந்த பொழுதுகளில், அம்பானியே அவரை அழைத்து தான் தலையிட வேண்டியிருக்குமா என்று மென்மையாக விசாரித்தார். தேவைப்பட்டால் உதவத் தலைமை தயாராக இருக்கிறது என்ற உணர்வே கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்தது.

நிறுவன ஊழியர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி, தான் செய்த உதவிகள் வெளியே தெரியக்கூடாது என்பதில் திருபாய் அம்பானி கவனமாக இருப்பார். அறப்பணிகளை வெளியே தெரியாமல் செய்தார்.

“முடியாது” “சாத்தியமில்லை” என்பதெல்லாம் மனத் தடைகளே தவிர உண்மையான தடைகள் அல்ல என்பார் அம்பானி. ஒன்று சிரமம் என்று தெரிந்துவிட்டால் இரவும் பகலும் அது குறித்தே சிந்தித்து தீவிரமாய் உழைத்து அவற்றை நனவாக்கினார் அம்பானி. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவுமே பகல் கனவு இல்லை, எல்லாமே பலிக்கும் கனவுதான் என்பது அம்பானியின் நம்பிக்கை.

ஒருவரை நம்பி நியமித்து விட்டால் அவரது போக்கில் முடிவுகள் எடுக்கவும் செயல்படுத்தவும் அனுமதித்தது அம்பானியின் தனித் தன்மைகளில் ஒன்று.
திருபாய் அம்பானிக்குப் பிடித்தமான கோட்பாடு “கூடு தாண்டுதல்”. “ஒவ்வொரு மனிதரும் ஒரு கூட்டுக்குள்தான் பிறக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு கூட்டையும் உடைத்துக் கொண்டு போக வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது” என்பாராம் அவர்.
அடுத்த கட்டம் நோக்கி நகரும் போது நமக்கு மட்டுமின்றி நம்முடன் இருப்பவர்களுக்கும் நிறைய நன்மைகள் நடக்கின்றன என்பது அம்பானியின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.

நிறுவனத்தில் உள்ளவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டே நடந்து போக வேண்டிய நேரங்களில், அவர்களின் தோளில் கைபோட்டுத் தோழமையுடன் அரவணைத்துச் செல்வதைப் பழக்கமாகக் கொண்டு இருந்தார். தங்கள் நிறுவனத்தின் தலைவர் தம்மைச் சமமாக நடத்துகிறார், நேசிக்கிறார் எனும் உணர்வை பணியாளர்கள் பெற்றனர்.

தன்னுடைய துறை எதிர்காலத்தில் எப்படி வளரும் என்ற துல்லியமான மதிப்பீடு அம்பானியின் அரிய திறமைகளில் ஒன்று.
பணம் என்பது பக்க விளைவு என்பதை அம்பானி உறுதியாக நம்பினார். ஆதாயங்களைத் தாண்டிய இலட்சியங்களை நோக்கி செயல்படும் போது பணம் குவிவது ஒரு பக்க விளைவு என்பாராம் அவர்.

– எஸ். வேலாயுதம்

நல்லவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

0

ஒரு மனிதரோடு இயல்பாகவும் இனிமையாகவும் பேசுவதற்கு முதலில் அவர் நமக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணுபவரா நீங்கள்? அவர் புதியவராகவோ, பிரபலமாகவோ இருந்தாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் நமக்கு பிடிக்காதவராக, நமது கருத்துகளை மறுதளிப்பவராக இல்லாமலாவது இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் இது உங்களுக்கான பகுதியே.

சிறு குழந்தையாக இருக்கும் போது அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்லத் தயங்கிய நாம்தான், பின்னாளில் குடும்ப உறுப்பினர்களோடும் பேசி சிரிக்கத் தொடங்கினோம். என்னுடைய பொருட்களை தம்பிக்கும் தங்கைக்கும் தரவே மாட்டேன் என்று அழுது அடம் பிடித்த நாம்தான், பின்னாட்களில் பள்ளி நண்பர்களோடு பகிர்ந்து உண்டு வாழ்ந்தோம். பிடிவாத குணம் படைத்தவர்களாக அறியப்பட்ட நாம்தான் கல்லூரி காலத்தில் விட்டுக் கொடுக்கக் கற்றுக் கொண்டோம்.

உப்பு இல்லை, உறைப்பு இல்லை என்று உண்ண மறுத்த நாம்தான் இன்று உணவின் மகத்துவத்தையும், சமையலின் இயல்பையும் புரிந்து கொண்டு செயலாற்றுகிறோம். இவ்வளவு ஏன், யார் சொல்லையும் கேட்காமல், எல்லோரையும் எடுத்தெறிந்து பேசிய நாம்தான் கால் கட்டு போட்ட பின்பு வேறொரு பின்புலத்தில் வாழ்ந்த இன்னொருவரோடு இணைந்து (முடிந்த வரையில் சண்டைகளைத் தவிர்த்து) வாழ்ந்து வருகிறோம்.

எந்த புதிய மனிதரும், கொள்கையும், பொருளும், பண்பாடும் நம் மனதுக்கு முதலில் தவறானதாகவே தெரியும். எந்த ஒன்றையும் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு இது நமக்கு உகந்ததா, இதெல்லாம் சரியா வருமா என்று தான் நம் மனம் சிந்திக்கும். அதன் வெளிப்பாடே இந்த தயக்கத்துக்கு காரணம்.
நம் வாழ்வில் ஒவ்வொரு படிநிலையிலும் நம் மனம் பக்குவப் பட்டுக் கொண்டே வருவதற்கு மேற்சொன்ன சான்றுகளே போதும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வெளி உலகம் பழகப் பழக நம் அறிவு விரிவு செய்யப்படுகிறது.

புதிய மனிதர்களை அணுகும் போதும், புதிய இடங்களுக்கு செல்லும் போதும், புதிய கலாச்சாரத்தை உணரும் போதும், புதிய புதிய புத்தகங்களை படிக்கும் போதும் எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஒரு மனிதன் அறிவு பெறுகிறான்.
புதிய மனிதர்களை ஏற்றுக் கொள்வதில் நமக்கு இருக்கும் தயக்கத்துக்கும் நாமே தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், தினமும் காலை எழுந்தது முதல், கண்ணில் படுகிற செய்தித் தாள்களிலும், பார்க்கும் தொலைக் காட்சியிலும், கேட்கும் வானொலியிலும், செல்பேசியிலும் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, வன்புணர்வு என்று குற்றச் செயல்களே நிறைந்து காணப்படுகின்றன.

ஏன் இவ்வுலகில் எந்த இடத்திலுமே நல்லது நடக்கவே இல்லையா? ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவவே இல்லையா? எப்போதும் போல இப்போதும் இந்த பூமியில் பூக்கள் மலர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்ல உள்ளம் கொண்டவர்கள் நலிந்தோர்க்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது கூட காமன் வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் தங்கம் வென்றிருக்கிறார்.

இப்படி நம்மை சுற்றி நடக்கும் நல்லவைகள் நம் பார்வையில் இருந்து விலகி இருக்கின்றனவா அல்லது நமக்கு காட்டப்படுவதே இல்லையா?
பரபரப்புக்காக ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டை நாம் முன்வைத்தால், நல்ல செய்திகளுக்கு மக்கள் முன்னுரிமை தருவதில்லை; நடிகையின் கால் சுளுக்கு போன்ற செய்திகளுக்கும், கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணி செய்திகளையும் தான் படிக்கிறார்கள். அதிலும் இம்மாதிரியான செய்திகளை படிப்பதை விட, அவற்றைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள்.

கூகுளில் தேடப்படும் செய்திகளில் அபத்தங்களே அதிகம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இயல்பாகவே தீமைகள் மட்டுமே நம்மை சுற்றி நடப்பதைப் போலவும், நல்லவர்களே இல்லை என்பது போலவும் ஒரு மாயை உருவாகி விட்டது. இயற்கையான சூழல், ஆரோக்கியமான உணவு, நல்ல மனிதர்கள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு சாத்தியமே இல்லை என்று நம்ப வைக்கப்படுகின்றோம்.

எது ஒன்றையும் சந்தேகத்தோடு பார்ப்பது, எந்த மனிதரையும் ஒரு குற்றவாளியை போல அணுகுவது என்ற நிலைக்கு நமது அடுத்த தலைமுறையை உருவாக்கி இருக்கிறோம். நாமும் அவ்வாறே இயங்குகிறோம். எல்லாவற்றுக்கும் கேள்வி எழுப்பு என்று அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்களே, என்று கேட்கிறீர்களா? கேள்வி எழுப்புவது என்பது சந்தேகமாகாது, அதை நன்கு புரிந்து கொள்ளவும் தெளிவு பெறுவதற்குமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முதலில் ஊடகங்களில் காட்டப்படுவது போல தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற கருத்தை அடியோடு விட்டு ஒழியுங்கள். பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

எல்லா காலத்திலும் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. எதுவுமே எழுதப்படாத ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சிறு கரும்புள்ளி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த தாளின் வெண்மை எவர் கண்களுக்கும் தெரியாது மாறாக அந்த சின்ன கரும்புள்ளியே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அவ்வாறே நம்மை சுற்றி நடக்கும் நன்மைகள் நமது கவனத்துக்கு வருவதில்லை அல்லது மனதில் நிலைத்து இடம் பெறுவது இல்லை. இதெல்லாம் ஒரு செய்தியா என்ற ரீதியில் அவற்றை கடந்து விடுகிறோம்.

நம்புங்கள், நம்மைச் சுற்றி நல்லவைகள்தான் ஏராளமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இன்னமும் நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள். முயற்சி செய்தால் நமது அடுத்த தலைமுறையும் நலமுடன் வாழ வழி செய்யலாம். நாம் நல்லவராக, பண்பாளராக இருக்கும் போது நம்மைப் போலதான் மற்றவரும் என்ற எண்ணம் இருந்தால் தான்; ஒரு புதிய மனிதரோடு இயல்பாக இனிமையாக பேச முடியும்.
அடுத்த முறை பேருந்துக்காக காத்திருக்க நேர்ந்தால் அருகில் இருக்கும் மனிதரோடு பேசுங்கள். இரயில் பயணங்களில் மடிக் கணினியில் மூழ்கி விடாமல் பக்கத்து சீட்டு பெரியவருடன் பேசுங்கள். அலுவலகமோ, வீடோ, காய்கறி சந்தையோ, கடைத் தெருவோ, கோயிலோ, காபி கடையோ எங்கு சென்றாலும் மனிதர்களை பாருங்கள், அவர்களோடு பேசுங்கள். தவறானவர் என்றால் விலகிக் கொள்ளுங்கள்.

உங்களைப் போல் அவரும் நல்லவராக இருந்து விட்டால்; அவரிடமும் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதிகள் இருந்தால். புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய புத்தகங்கள் அனைத்தும் நம்மை மேம்படுத்தும் என்று முதலில் நம்புங்கள். எவரையும் ஏரெடுத்தும் பாராமல் அலைபேசியில் விளையாடிக் கொண்டு இருக்கும் நமது அடுத்த தலைமுறைக்கு சான்றாக இருங்கள். பக்கத்து வீட்டாரின் பெயர் கூட தெரியாமல், முகநூலில் ஐந்தாயிரம் நண்பர்கள் இருந்து என்ன பயன்?. முடிந்த வரையில் தீமைகளை கவனித்தில் கொள்வதைப்போல சில நன்மைகளையும் கவனத்தில் கொண்டால், நம் மனம் பக்குவம் அடையும்.
– வளர்வோம்!

கடலூர், நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி: பாதி கட்டுமானத்தின் போதே திவாலா?

0

கடலூரில் அமைக்கப்பட்டு வரும், ஆண்டொன்றிற்கு 6 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ரசாயனப் பொருள் தொழிற்சாலை நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி தற்போது திவாலாகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகார்ஜுனா உரத்தொழிற்சாலை என்ற தனியார் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) இணைந்து தொடங்கப்பட்ட நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையின் கட்டுமானப்பணி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ரூபாய் 3800 கோடி முதலீட்டில், 2012ம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டு, இது வரை 58 சதவீதம் கட்டுமானப்பணி அளவுக்கே முடிக்கப்பட்டு உள்ளது.

நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையானது நாப்தா, எல். பி. ஜி. போன்ற பல அடிப்படை வேதிப் பொருட்களை தயாரிப்பதற்காக அமைக்கப்படுகிறது. நாப்தா, எல். பி. ஜி. ஆகியவற்றை மூலப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக தேவையுள்ள பல வேதித் தொழிற்சாலைகளை துவங்கலாம். இதனால் தமிழகத்தை மேலும் தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றுவதுடன் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

கடந்த உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் நடந்த போது, அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை, மேலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அடிப்படை திட்டமாக (anchor project) பெருமையுடன் அறிவித்தார். இந்த ஆலையை மேலும் ஊக்குவிப்பதற்காக சில சலுகைகளையும் அளித்தார்.

கட்டுமானப் பணியை முடிப்பதில் பல ஆண்டுகள் காலதாமதம் ஆனதால், முதலீட்டு தொகையின் தேவை ரூபாய் 15,000 கோடி அளவிற்கு கூடியது. பல முயற்சிகளுக்கு பின்னும் தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய இயலாததால், ஆலையின் கட்டுமானப்பணி மேலும் தொடர முடியாமல் முடங்கியது. வேறு எந்த நிறுவனமாவது இந்த திட்டத்தை ஏற்று கட்டுமானப் பணியை முடித்து உற்பத்தியை தொடங்கி ஆலையை இயக்க முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.

இத்தகைய முயற்சி கைகூடாததால், தற்போது நடைமுறையில் உள்ள திவாலா சட்டப்படி (Insolvency and bankruptcy code) சிக்கல்களுக்கு தீர்வுகாண ஒரு தனி அதிகாரி (Resolution Professional) நியமிக்கப்பட்டார்.
நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரியை ஏற்று நடத்த வருமாறு நிறுவனங்களுக்கு விளம்பரம் மூலம் தனி அதிகாரி அழைப்பு விடுத்த போது, நான்கு நிறுவனங்கள் முன் வந்தன. இவற்றில், மத்திய அரசை சார்ந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அடங்கும்.
நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையை ஒப்படைக்க, ரூபாய் 1450 கோடி தொகை (bit amount) தரப்பட வேண்டும் என்று இந்த ஆலையின் எதிர்காலத்தை தீர்மானிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரி விதிமுறை வகுத்தார்.
ஆனால், இந்த ஆலைக்கு தற்போது ரூபாய் 8000 கோடி அளவு கடன் உள்ளதாலும், கட்டுமானப் பணியை முடிக்க மேலும் பல கோடி ரூபாய் தேவைப்படுவதாலும், இந்த ஆலையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டும் ஈவுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 1450 கோடி தர எந்த நிறுவனமும் தயாராக இல்லை.
இதனைக் காட்டிலும் குறைவான தொகை செலுத்த நான்கு நிறுவனங்கள் முன் வந்தன. இந்த நிலையில், தனி அதிகாரி ஆலை திவாலாகி விட்டதாக அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பினால் யாருக்கும் லாபமில்லை. தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் திட்டத்தை இழக்க நேரிட்டு உள்ளது.

பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வழி வகுத்து, தமிழ்நாட்டில் மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய வாய்ப்பை தமிழ்நாடு கைவிடக் கூடாது. திவாலாகி விட்டதாக அறிவித்த தனி அதிகாரி ஆலையை மீண்டும் தொடங்க, ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளை குறித்து ஆலோசிக்கவில்லை என்பது வருத்தம் ஏற்படுத்தும் நிலை.

திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ள ஆலையில் உள்ள எந்திரங்கள், கருவிகள் மற்ற தளவாடச் சாமான்கள் ஏலத்தில் விற்கப்படும். ஏலத்தில் அடிமட்டமான விலைக்குதான் போகும். இந்த ஆலையில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் மிகச் சிறிய தொகையே கிடைக்கக் கூடு;ம்.

நிர்ணயிக்கபட்ட தொகையைத்தான் செலுத்த வேண்டும் என்று கூறாமல் தொகை செலுத்த முன் வந்தவர்களில், அதிகமான தொகையை செலுத்தும் நிறுவனத்திற்கு ஆலையை ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது இந்த ஆலையை சில பிரிவுகளாக இயங்கக் கூடியதாக மாற்றி அவற்றை நடத்துவதற்கு விண்ணப்பங்களை கோரி இருக்கலாம். சில பிரிவுகளாக மாற்றும்போது முதலீடு தொகை தனிப்பட்ட பிரிவுகளுக்கு குறைவாக இருக்கும் என்பதால் பல நிறுவனங்கள் முன் வந்திருக்கக் கூடும்.

இந்த நிலையில், தமிழக அரசு, நல்ல முறையில் ஆலையின் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியை தொடங்க ஆக்கபூர்வமான அணுகு முறையை கடைப்பிடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனம் இந்த ஆலையின் முதலீட்டாளராக பங்கேற்று உள்ளது என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழக அரசுக்கும், நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போல் தமிழக அரசு வாளாவிருப்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?

கடலூரில் அமைக்கப்பட்டு வந்த நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலை 2000 ஏக்கர் பரப்பளவில் எல்லா விதமான சுற்றுப்புறச்சூழல் அனுமதிகளையும் பெற்று உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலை திவாலாகி மூடப்படும் நிலையை குறித்து தங்களது கவலையை தெரிவிக்காதது ஏன் என்று புரியவில்லை, அல்லது இத்தகைய தொழில் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லையா? திவாலாகும் நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குறித்து தமிழ் நாட்டில் யாருக்கும் அக்கறை இல்லையா?

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் பணம் மக்களின் வரிப்பணம் என்பதையும், இந்த திட்டத்தை திவாலாக விடுவதால், மக்கள் கடும் உழைப்பினால் கிடைக்கும் வரிப்பணமும் வீணாகிறது என்பதையும், அரசும், அதிகாரிகளும் உணர்ந்து இந்த ஆலை செயல்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
– என். எஸ். வெங்கட்ராமன், வேதியியல் தொழில்கள் ஆலோசகர்

எல்இடி விளக்குகள் செய்ய பயிற்சி தரும் சங்கம்!

0

பணியாளர்களாக எந்த நிறுவனத்திலும் சேராத, மாதச் சம்பளம் என்று வாங்காமல், செய்யும் பணிகளுக்கு உரிய ஊதியம் அல்லது நாட்கூலி வாங்கும் பணியாளர்கள் உண்டு. கட்டுமானத் தொழிலாளர்கள், வெல்டர்கள், பெயின்டர்கள் போன்ற இத்தகைய பலவகையினர் பெயர், அமைப்பு சாரா பணியாளர்கள்.

உலகிலேயே அதிக மின் பணியாளர்களைக் கொண்டு உள்ள இனம் நம் தமிழ் இனம்தான். குறிப்பாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள்தான். பல்லாண்டு கால சிந்தனையின் விளைவாக கடந்த 2011-ஆம் ஆண்டில் சென்னை திரு.வி.க. பூங்காவில் இருந்து தொடங்கப்பட்டதுதான், ‘தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நலச்சங்கம்’.

மின் பணியாளர்களுக்கு எப்போதும் ஒரு சவால் உண்டு. அது, புதிய தொழில்நுட்பம், புதிய கருவிகள் எண்ணற்றவை விற்பனைக்கு நாளும் வந்து கொண்டே இருப்பதுதான். இவற்றைக் கையாளும் திறன், தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் அடிப்படை பொருளாதார உறுதி இவற்றை எல்லாம் யாரை அணுகிப் பெறுவது என்பது புரியாத ஒன்று. இந்த ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது, இந்த சங்கம்.

இச்சங்கம் பற்றி இதன் பொது செயளாலர் திரு. எம். ஜெ. நாகலிங்கம் கூறுகின்றார்,
“மின் பணியாளர், மின் உரிமம்(லைசன்ஸ்) பெற ஆலோசனையும், தொழில்நுட்பப் பயிற்சியும் எங்கள் சங்கத்தால் தரப்படுகிறது. அவ்வப்போது தெரியவரும் புதிய தொழில்நுட்பங்களையும் கையாளும் திறனையும், கருத்துக்களையும் வழங்கி வருகின்றோம். சான்றாக, நேர்விசை மின்விசிறிகள் அறிமுகமாகி உள்ளன. அவற்றை அறிமுகம் செய்கின்றோம்.

மேலும், “எல்இடி விளக்குகளை புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கின்றோம். ரூ.20,000 என்ற குறைந்த மூதலீட்டில் குறுந்தொழில் என்ற அளவில் விளக்குகளை உற்பத்தி செய்து முன்னேறலாம். இதற்கான மூலப்பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து பெற்றுத் தருகின்றோம்.

4,7,9,11 வாட்ஸ் அளவில் குண்டு பல்புகளை உற்பத்தி செய்யலாம். இதுபோல் குழல் விளக்குகளையும் விரைவில் உற்பத்தி செய்ய கற்பிக்க இருக்கிறோம். மேலும், சோலார் தகடுகளை அமைக்கும் பயிற்சிகளையும் தருகின்றோம். அறிமுகத் தொழில்நுட்பப் பயிற்சியும், அடிப்படைப் பயிற்சியும் கூட தரப்படுகின்றது”, என்றார் திரு. நாகலிங்கம் (9841382200, 9340006000).