Latest Posts

நல்லவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

- Advertisement -

ஒரு மனிதரோடு இயல்பாகவும் இனிமையாகவும் பேசுவதற்கு முதலில் அவர் நமக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணுபவரா நீங்கள்? அவர் புதியவராகவோ, பிரபலமாகவோ இருந்தாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் நமக்கு பிடிக்காதவராக, நமது கருத்துகளை மறுதளிப்பவராக இல்லாமலாவது இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் இது உங்களுக்கான பகுதியே.

சிறு குழந்தையாக இருக்கும் போது அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்லத் தயங்கிய நாம்தான், பின்னாளில் குடும்ப உறுப்பினர்களோடும் பேசி சிரிக்கத் தொடங்கினோம். என்னுடைய பொருட்களை தம்பிக்கும் தங்கைக்கும் தரவே மாட்டேன் என்று அழுது அடம் பிடித்த நாம்தான், பின்னாட்களில் பள்ளி நண்பர்களோடு பகிர்ந்து உண்டு வாழ்ந்தோம். பிடிவாத குணம் படைத்தவர்களாக அறியப்பட்ட நாம்தான் கல்லூரி காலத்தில் விட்டுக் கொடுக்கக் கற்றுக் கொண்டோம்.

உப்பு இல்லை, உறைப்பு இல்லை என்று உண்ண மறுத்த நாம்தான் இன்று உணவின் மகத்துவத்தையும், சமையலின் இயல்பையும் புரிந்து கொண்டு செயலாற்றுகிறோம். இவ்வளவு ஏன், யார் சொல்லையும் கேட்காமல், எல்லோரையும் எடுத்தெறிந்து பேசிய நாம்தான் கால் கட்டு போட்ட பின்பு வேறொரு பின்புலத்தில் வாழ்ந்த இன்னொருவரோடு இணைந்து (முடிந்த வரையில் சண்டைகளைத் தவிர்த்து) வாழ்ந்து வருகிறோம்.

எந்த புதிய மனிதரும், கொள்கையும், பொருளும், பண்பாடும் நம் மனதுக்கு முதலில் தவறானதாகவே தெரியும். எந்த ஒன்றையும் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு இது நமக்கு உகந்ததா, இதெல்லாம் சரியா வருமா என்று தான் நம் மனம் சிந்திக்கும். அதன் வெளிப்பாடே இந்த தயக்கத்துக்கு காரணம்.
நம் வாழ்வில் ஒவ்வொரு படிநிலையிலும் நம் மனம் பக்குவப் பட்டுக் கொண்டே வருவதற்கு மேற்சொன்ன சான்றுகளே போதும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வெளி உலகம் பழகப் பழக நம் அறிவு விரிவு செய்யப்படுகிறது.

புதிய மனிதர்களை அணுகும் போதும், புதிய இடங்களுக்கு செல்லும் போதும், புதிய கலாச்சாரத்தை உணரும் போதும், புதிய புதிய புத்தகங்களை படிக்கும் போதும் எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஒரு மனிதன் அறிவு பெறுகிறான்.
புதிய மனிதர்களை ஏற்றுக் கொள்வதில் நமக்கு இருக்கும் தயக்கத்துக்கும் நாமே தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், தினமும் காலை எழுந்தது முதல், கண்ணில் படுகிற செய்தித் தாள்களிலும், பார்க்கும் தொலைக் காட்சியிலும், கேட்கும் வானொலியிலும், செல்பேசியிலும் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, வன்புணர்வு என்று குற்றச் செயல்களே நிறைந்து காணப்படுகின்றன.

ஏன் இவ்வுலகில் எந்த இடத்திலுமே நல்லது நடக்கவே இல்லையா? ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவவே இல்லையா? எப்போதும் போல இப்போதும் இந்த பூமியில் பூக்கள் மலர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்ல உள்ளம் கொண்டவர்கள் நலிந்தோர்க்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது கூட காமன் வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் தங்கம் வென்றிருக்கிறார்.

இப்படி நம்மை சுற்றி நடக்கும் நல்லவைகள் நம் பார்வையில் இருந்து விலகி இருக்கின்றனவா அல்லது நமக்கு காட்டப்படுவதே இல்லையா?
பரபரப்புக்காக ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டை நாம் முன்வைத்தால், நல்ல செய்திகளுக்கு மக்கள் முன்னுரிமை தருவதில்லை; நடிகையின் கால் சுளுக்கு போன்ற செய்திகளுக்கும், கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணி செய்திகளையும் தான் படிக்கிறார்கள். அதிலும் இம்மாதிரியான செய்திகளை படிப்பதை விட, அவற்றைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள்.

கூகுளில் தேடப்படும் செய்திகளில் அபத்தங்களே அதிகம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இயல்பாகவே தீமைகள் மட்டுமே நம்மை சுற்றி நடப்பதைப் போலவும், நல்லவர்களே இல்லை என்பது போலவும் ஒரு மாயை உருவாகி விட்டது. இயற்கையான சூழல், ஆரோக்கியமான உணவு, நல்ல மனிதர்கள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு சாத்தியமே இல்லை என்று நம்ப வைக்கப்படுகின்றோம்.

எது ஒன்றையும் சந்தேகத்தோடு பார்ப்பது, எந்த மனிதரையும் ஒரு குற்றவாளியை போல அணுகுவது என்ற நிலைக்கு நமது அடுத்த தலைமுறையை உருவாக்கி இருக்கிறோம். நாமும் அவ்வாறே இயங்குகிறோம். எல்லாவற்றுக்கும் கேள்வி எழுப்பு என்று அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்களே, என்று கேட்கிறீர்களா? கேள்வி எழுப்புவது என்பது சந்தேகமாகாது, அதை நன்கு புரிந்து கொள்ளவும் தெளிவு பெறுவதற்குமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முதலில் ஊடகங்களில் காட்டப்படுவது போல தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற கருத்தை அடியோடு விட்டு ஒழியுங்கள். பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

எல்லா காலத்திலும் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. எதுவுமே எழுதப்படாத ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சிறு கரும்புள்ளி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த தாளின் வெண்மை எவர் கண்களுக்கும் தெரியாது மாறாக அந்த சின்ன கரும்புள்ளியே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அவ்வாறே நம்மை சுற்றி நடக்கும் நன்மைகள் நமது கவனத்துக்கு வருவதில்லை அல்லது மனதில் நிலைத்து இடம் பெறுவது இல்லை. இதெல்லாம் ஒரு செய்தியா என்ற ரீதியில் அவற்றை கடந்து விடுகிறோம்.

நம்புங்கள், நம்மைச் சுற்றி நல்லவைகள்தான் ஏராளமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இன்னமும் நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள். முயற்சி செய்தால் நமது அடுத்த தலைமுறையும் நலமுடன் வாழ வழி செய்யலாம். நாம் நல்லவராக, பண்பாளராக இருக்கும் போது நம்மைப் போலதான் மற்றவரும் என்ற எண்ணம் இருந்தால் தான்; ஒரு புதிய மனிதரோடு இயல்பாக இனிமையாக பேச முடியும்.
அடுத்த முறை பேருந்துக்காக காத்திருக்க நேர்ந்தால் அருகில் இருக்கும் மனிதரோடு பேசுங்கள். இரயில் பயணங்களில் மடிக் கணினியில் மூழ்கி விடாமல் பக்கத்து சீட்டு பெரியவருடன் பேசுங்கள். அலுவலகமோ, வீடோ, காய்கறி சந்தையோ, கடைத் தெருவோ, கோயிலோ, காபி கடையோ எங்கு சென்றாலும் மனிதர்களை பாருங்கள், அவர்களோடு பேசுங்கள். தவறானவர் என்றால் விலகிக் கொள்ளுங்கள்.

உங்களைப் போல் அவரும் நல்லவராக இருந்து விட்டால்; அவரிடமும் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதிகள் இருந்தால். புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய புத்தகங்கள் அனைத்தும் நம்மை மேம்படுத்தும் என்று முதலில் நம்புங்கள். எவரையும் ஏரெடுத்தும் பாராமல் அலைபேசியில் விளையாடிக் கொண்டு இருக்கும் நமது அடுத்த தலைமுறைக்கு சான்றாக இருங்கள். பக்கத்து வீட்டாரின் பெயர் கூட தெரியாமல், முகநூலில் ஐந்தாயிரம் நண்பர்கள் இருந்து என்ன பயன்?. முடிந்த வரையில் தீமைகளை கவனித்தில் கொள்வதைப்போல சில நன்மைகளையும் கவனத்தில் கொண்டால், நம் மனம் பக்குவம் அடையும்.
– வளர்வோம்!

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news