Latest Posts

அம்பானியின் பார்வையில், பணம் என்பது பக்க விளைவு!

- Advertisement -

ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் விளம்பர நிறுவனமாக இருந்த “முத்ரா” நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், திரு. ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. 1980களில் இருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை கவனித்ததன் மூலம், தான் உணர்ந்த அவருடைய இயல்புகளை “திருபாயிசம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்:

புதுதில்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விமல் ஆடைகளின் அறிமுகத்திற்காக “ஃபேஷன் ஷோ” ஒன்றினை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. அரங்கம் நிரம்பி வழிந்ததில் அதிகம் பேர் வெளியே காத்திருக்க நேர்ந்தது. பொறுமை இழந்த வாடிக்கையாளர்கள் பெருங்கூச்சல் எழுப்ப குழப்பம் ஏற்பட்டது. மேலாளர்களும் இரண்டாம் நிலை நிர்வாகிகளும் வாசலுக்கு விரைந்த போது, திருபாய் அம்பானி முதல் ஆளாகக் களமிறங்கி, கூட்டத்தை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தார்.

முத்ரா நிறுவனத்திற்கு எதிராக வதந்திகள் கிளம்பிய நேரமது. அதன் தலைமை நிர்வாகி ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, தானே முயன்று சிக்கல்களைத் தீர்க்க முயன்று கொண்டிருந்தார். குழு நிறுவனங்களின் தலைவர் அம்பானியிடம் அது குறித்துப் பேசவில்லை. அவரும் கேட்கவில்லை. சிக்கல்கள் உச்சத்தில் இருந்த பொழுதுகளில், அம்பானியே அவரை அழைத்து தான் தலையிட வேண்டியிருக்குமா என்று மென்மையாக விசாரித்தார். தேவைப்பட்டால் உதவத் தலைமை தயாராக இருக்கிறது என்ற உணர்வே கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்தது.

நிறுவன ஊழியர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி, தான் செய்த உதவிகள் வெளியே தெரியக்கூடாது என்பதில் திருபாய் அம்பானி கவனமாக இருப்பார். அறப்பணிகளை வெளியே தெரியாமல் செய்தார்.

“முடியாது” “சாத்தியமில்லை” என்பதெல்லாம் மனத் தடைகளே தவிர உண்மையான தடைகள் அல்ல என்பார் அம்பானி. ஒன்று சிரமம் என்று தெரிந்துவிட்டால் இரவும் பகலும் அது குறித்தே சிந்தித்து தீவிரமாய் உழைத்து அவற்றை நனவாக்கினார் அம்பானி. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவுமே பகல் கனவு இல்லை, எல்லாமே பலிக்கும் கனவுதான் என்பது அம்பானியின் நம்பிக்கை.

ஒருவரை நம்பி நியமித்து விட்டால் அவரது போக்கில் முடிவுகள் எடுக்கவும் செயல்படுத்தவும் அனுமதித்தது அம்பானியின் தனித் தன்மைகளில் ஒன்று.
திருபாய் அம்பானிக்குப் பிடித்தமான கோட்பாடு “கூடு தாண்டுதல்”. “ஒவ்வொரு மனிதரும் ஒரு கூட்டுக்குள்தான் பிறக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு கூட்டையும் உடைத்துக் கொண்டு போக வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது” என்பாராம் அவர்.
அடுத்த கட்டம் நோக்கி நகரும் போது நமக்கு மட்டுமின்றி நம்முடன் இருப்பவர்களுக்கும் நிறைய நன்மைகள் நடக்கின்றன என்பது அம்பானியின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.

நிறுவனத்தில் உள்ளவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டே நடந்து போக வேண்டிய நேரங்களில், அவர்களின் தோளில் கைபோட்டுத் தோழமையுடன் அரவணைத்துச் செல்வதைப் பழக்கமாகக் கொண்டு இருந்தார். தங்கள் நிறுவனத்தின் தலைவர் தம்மைச் சமமாக நடத்துகிறார், நேசிக்கிறார் எனும் உணர்வை பணியாளர்கள் பெற்றனர்.

தன்னுடைய துறை எதிர்காலத்தில் எப்படி வளரும் என்ற துல்லியமான மதிப்பீடு அம்பானியின் அரிய திறமைகளில் ஒன்று.
பணம் என்பது பக்க விளைவு என்பதை அம்பானி உறுதியாக நம்பினார். ஆதாயங்களைத் தாண்டிய இலட்சியங்களை நோக்கி செயல்படும் போது பணம் குவிவது ஒரு பக்க விளைவு என்பாராம் அவர்.

– எஸ். வேலாயுதம்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news