பன்னாட்டு சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணை விலைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஒட்டி அன்றாடம் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது, இந்திய நடுவண் அரசு. இதைப் பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல அடிக்கடி பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அல்லலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விட்ட பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களை அதிகம் பாதித்து உள்ளது. இவர்களைப் பற்றி அரசு சிறிதும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக, இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது நிதி அமைச்சகம். வேண்டுமானால் மாநிலங்கள் தங்கள் வாட் வரியை குறைக்கலாம் என்று கூறி நழுவிக் கொண்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் திரு. ரவிச்சந்திரன் கூறும்போது,
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.
இது எங்களை மட்டும் பாதிக்கக் கூடியது இல்லை. நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கக் கூடியது ஆகும். எண்ணெய் விலையேற்றம் என்பது பெரிய கார்ப்பரேட்களின் லாபத்துக்குத்தான் வழி திறந்து விடுகிறது. விலையை நிர்மாணிக்கும் பொறுப்பை தானே வைத்து இருப்பதற்கு பதில் தினமும் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களை அனுமதித்தது மிகப் பெரிய தவறாக நாங்கள் நினைக்கிறோம். இதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.
இன்றும் போராடுகிறோம்.
இந்த விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
வேளாண்மைக்குத் தேவையான இடு பொருட்கள் அனைத்தும் லாரிகளில்தான் கொண்டு செல்லப் படுகின்றன. பெட்ரோல், டீசல் உயர்வு, ஜிஎஸ்டி வரி போன்றவை காரணமாக லாரிகளின் வாடகை உயர்கிறது. இதனால் வேளாண்மைக்கு தேவைப்படும் உரம் போன்றவற்றின் விலை உயர்கிறது. விளைந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் லாரிகள்தான் பயன்படுகின்றன. ஏற்கெனவே கடுமையான நெருக்கடியில் இருக்கும் உழவர்கள் இதனால் இன்னும் சிக்கலுக்குள் தள்ளப் படுகிறார்கள்.
காய்கறிகளின் விலையும், மற்ற பொருள்களின் விலையும் உயர்ந்து மக்களின் பொருளாதாரத்தை கண்ணுக்குத் தெரியாமல் சீரழிக்கிறது.
விவசாயத்துக்கு அடுத்த படியாக தரை வழிப் போக்குவரத்து தான் இந்திய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கிறது. மத்தியஅரசின் கொள்கைகள் சரக்கு போக்குவரத்து தொழிலுக்கு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.
ஆண்டுக்கு நான்கு லட்சம் கனரக வாகனங்கள் தயாரிக்கப் படுகின்றன. அவற்றுக்கான அனைத்து வகையான வரிகளையும் பெற்றுக் கொள்கிறது அரசு. ஆனால் அந்த வாகனங்கள் செல்வதற்குரிய கட்ட மைப்பை போதுமான அளவுக்கு ஏற்படுத்துவதில்லை. தவிர ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் தேவையற்ற கெடுபிடிகள். இதனாலும் போதுமான ஓட்டுநர்கள் கிடைக்காமல் லாரித் தொழில் திண்டாடுகிறது.’’ என்கிறார், திரு. ரவிச்சந்திரன்.
– வினவு