கடலூரில் அமைக்கப்பட்டு வரும், ஆண்டொன்றிற்கு 6 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ரசாயனப் பொருள் தொழிற்சாலை நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி தற்போது திவாலாகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகார்ஜுனா உரத்தொழிற்சாலை என்ற தனியார் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) இணைந்து தொடங்கப்பட்ட நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையின் கட்டுமானப்பணி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ரூபாய் 3800 கோடி முதலீட்டில், 2012ம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டு, இது வரை 58 சதவீதம் கட்டுமானப்பணி அளவுக்கே முடிக்கப்பட்டு உள்ளது.
நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையானது நாப்தா, எல். பி. ஜி. போன்ற பல அடிப்படை வேதிப் பொருட்களை தயாரிப்பதற்காக அமைக்கப்படுகிறது. நாப்தா, எல். பி. ஜி. ஆகியவற்றை மூலப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக தேவையுள்ள பல வேதித் தொழிற்சாலைகளை துவங்கலாம். இதனால் தமிழகத்தை மேலும் தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றுவதுடன் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
கடந்த உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் நடந்த போது, அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை, மேலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அடிப்படை திட்டமாக (anchor project) பெருமையுடன் அறிவித்தார். இந்த ஆலையை மேலும் ஊக்குவிப்பதற்காக சில சலுகைகளையும் அளித்தார்.
கட்டுமானப் பணியை முடிப்பதில் பல ஆண்டுகள் காலதாமதம் ஆனதால், முதலீட்டு தொகையின் தேவை ரூபாய் 15,000 கோடி அளவிற்கு கூடியது. பல முயற்சிகளுக்கு பின்னும் தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய இயலாததால், ஆலையின் கட்டுமானப்பணி மேலும் தொடர முடியாமல் முடங்கியது. வேறு எந்த நிறுவனமாவது இந்த திட்டத்தை ஏற்று கட்டுமானப் பணியை முடித்து உற்பத்தியை தொடங்கி ஆலையை இயக்க முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
இத்தகைய முயற்சி கைகூடாததால், தற்போது நடைமுறையில் உள்ள திவாலா சட்டப்படி (Insolvency and bankruptcy code) சிக்கல்களுக்கு தீர்வுகாண ஒரு தனி அதிகாரி (Resolution Professional) நியமிக்கப்பட்டார்.
நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரியை ஏற்று நடத்த வருமாறு நிறுவனங்களுக்கு விளம்பரம் மூலம் தனி அதிகாரி அழைப்பு விடுத்த போது, நான்கு நிறுவனங்கள் முன் வந்தன. இவற்றில், மத்திய அரசை சார்ந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அடங்கும்.
நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையை ஒப்படைக்க, ரூபாய் 1450 கோடி தொகை (bit amount) தரப்பட வேண்டும் என்று இந்த ஆலையின் எதிர்காலத்தை தீர்மானிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரி விதிமுறை வகுத்தார்.
ஆனால், இந்த ஆலைக்கு தற்போது ரூபாய் 8000 கோடி அளவு கடன் உள்ளதாலும், கட்டுமானப் பணியை முடிக்க மேலும் பல கோடி ரூபாய் தேவைப்படுவதாலும், இந்த ஆலையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டும் ஈவுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 1450 கோடி தர எந்த நிறுவனமும் தயாராக இல்லை.
இதனைக் காட்டிலும் குறைவான தொகை செலுத்த நான்கு நிறுவனங்கள் முன் வந்தன. இந்த நிலையில், தனி அதிகாரி ஆலை திவாலாகி விட்டதாக அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பினால் யாருக்கும் லாபமில்லை. தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் திட்டத்தை இழக்க நேரிட்டு உள்ளது.
பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வழி வகுத்து, தமிழ்நாட்டில் மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய வாய்ப்பை தமிழ்நாடு கைவிடக் கூடாது. திவாலாகி விட்டதாக அறிவித்த தனி அதிகாரி ஆலையை மீண்டும் தொடங்க, ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளை குறித்து ஆலோசிக்கவில்லை என்பது வருத்தம் ஏற்படுத்தும் நிலை.
திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ள ஆலையில் உள்ள எந்திரங்கள், கருவிகள் மற்ற தளவாடச் சாமான்கள் ஏலத்தில் விற்கப்படும். ஏலத்தில் அடிமட்டமான விலைக்குதான் போகும். இந்த ஆலையில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் மிகச் சிறிய தொகையே கிடைக்கக் கூடு;ம்.
நிர்ணயிக்கபட்ட தொகையைத்தான் செலுத்த வேண்டும் என்று கூறாமல் தொகை செலுத்த முன் வந்தவர்களில், அதிகமான தொகையை செலுத்தும் நிறுவனத்திற்கு ஆலையை ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது இந்த ஆலையை சில பிரிவுகளாக இயங்கக் கூடியதாக மாற்றி அவற்றை நடத்துவதற்கு விண்ணப்பங்களை கோரி இருக்கலாம். சில பிரிவுகளாக மாற்றும்போது முதலீடு தொகை தனிப்பட்ட பிரிவுகளுக்கு குறைவாக இருக்கும் என்பதால் பல நிறுவனங்கள் முன் வந்திருக்கக் கூடும்.
இந்த நிலையில், தமிழக அரசு, நல்ல முறையில் ஆலையின் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியை தொடங்க ஆக்கபூர்வமான அணுகு முறையை கடைப்பிடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனம் இந்த ஆலையின் முதலீட்டாளராக பங்கேற்று உள்ளது என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழக அரசுக்கும், நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போல் தமிழக அரசு வாளாவிருப்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?
கடலூரில் அமைக்கப்பட்டு வந்த நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலை 2000 ஏக்கர் பரப்பளவில் எல்லா விதமான சுற்றுப்புறச்சூழல் அனுமதிகளையும் பெற்று உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலை திவாலாகி மூடப்படும் நிலையை குறித்து தங்களது கவலையை தெரிவிக்காதது ஏன் என்று புரியவில்லை, அல்லது இத்தகைய தொழில் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லையா? திவாலாகும் நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குறித்து தமிழ் நாட்டில் யாருக்கும் அக்கறை இல்லையா?
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் பணம் மக்களின் வரிப்பணம் என்பதையும், இந்த திட்டத்தை திவாலாக விடுவதால், மக்கள் கடும் உழைப்பினால் கிடைக்கும் வரிப்பணமும் வீணாகிறது என்பதையும், அரசும், அதிகாரிகளும் உணர்ந்து இந்த ஆலை செயல்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
– என். எஸ். வெங்கட்ராமன், வேதியியல் தொழில்கள் ஆலோசகர்