சென்னை புரசைவாக்கத்தில், கிரிக்கெட் மட்டை, கால்பந்து உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்யும் “சில்ட்ரன்ஸ் பேரடைஸ்” கடை நடத்தி வருகிறார் திரு. முகமது ஜமீல். ‘ஸ்போர்ட்ஸ் கடை பாய்’ என்றால் அந்தப் பகுதியில் அறியாதவர்கள் இருக்க முடியாது. தொழில் ஈடுபாடு, வாடிக்கையாளர்களுடன் அவர் வைத்து இருக்கும் இணக்கமான உறவு போன்ற பண்புகள் அவரை வெற்றியாளராக ஆக்கி உள்ளன.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக வணிகத்தில் தாம் கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து:
“தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பட்டிக்குப் பேர் போன உடன்குடி எனது சொந்த ஊர். அருகே திசையன்விளையில் இருந்த பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்குப் போகவில்லை. என் 16-வது வயதில் சென்னைக்கு வந்தேன். அது 1967 -ம் ஆண்டு.
அண்ணா சாலையில் அப்போது பிரபலமாக இருந்த புகாரி பேன்சி ஸ்டோரில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு கிடைத்த சம்பளத்தில் என் செலவையும் பார்த்துக் கொண்டு மிச்சம் பிடித்து ஊருக்கும் அனுப்புவேன். பதிமூன்று ஆண்டுகள் அந்தக் கடையில் பணியாற்றினேன். வணிகத்தில் இப்போது பெற்ற வெற்றிக்கு அந்தக் கடையில் கிடைத்த அனுபவங்கள்தான் மூலக் காரணம்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்த
பெரிய டீலர்களிடம் ஆர்டர் கொடுத்து விளையாட்டுப் பொருட்களை வர வைத்தேன்.
என் மீது நம்பிக்கை வைத்து அவர்களும் அனுப்பினார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கில் நான் பணத்தை போட்டு விடுவேன். மிகவும் கால அவகாசம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த வணிக பரிமாற்றத்தை நான் சிறப்பாகப் பயன்
படுத்திக் கொண்டேன்.
என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையுடன் “சில்ட்ரன்ஸ் பேரடைஸ்” என்ற பெயரில் ஒரு ஃபேன்சி ஸ்டோரை புரசைவாக்கத்தில் 1980 -ஆம் ஆண்டில் தொடங்கினேன். எனக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் ஈடுபாடு இருந்தது. குறிப்பாக கிரிக்கெட்டை மிகவும் ரசிப்பேன். முக்கியமான போட்டிகள் நடக்கும்போது என் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். எனவே கடையின் ஒரு பகுதியில் கிரிக்கெட் மட்டைகள் உட்பட பல்வேறு விளையாட்டுப் பொருட்களை வைத்து இருந்தேன். தொடக்கத்தில் வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்தது. பொறுமையாக இரு! காலம் மாறும் என்று நண்பர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.
ஒரு நெருங்கிய நண்பர் என்னிடம், விளையாட்டுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் கடையாக உன் கடையை ஏன் மாற்றக் கூடாது? என்று கேட்டார். அவர் ஆலோசனை எனக்கு சரியாகப்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்த பெரிய டீலர்களிடம் ஆர்டர் கொடுத்து விளையாட்டுப் பொருட்களை வர வைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்து அவர்களும் அனுப்பினார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கில் நான் பணத்தை போட்டு விடுவேன். மிகவும் கால அவகாசம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த வணிக பரிமாற்றத்தை நான் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
அந்த நேரத்தில் அண்ணா சாலையில் மட்டும்தான் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. அதுவும் நான்கு கடைகள் மட்டும்தான். இரவு ஏழு மணிக்கு எல்லாம் அவை மூடப்பட்டுவிடும். அண்ணா சாலைக்கு வெளியே சென்னையில் செயல்பட்ட ஒரே கடை என்னுடையதுதான். இரவு 7 மணிக்கு பிறகு விளையாட்டுப் பொருட்களை வாங்க விரும்புவோர் என்னிடம் வர துவங்கினர். அனைத்து விளையாட்டுப் பொருட்களும் என்னிடம் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.
என் கடையில் இல்லாத ஒரு புதுவித விளையாட்டுப் பொருளை யாராவது கேட்டால், அவர்களிடம் முன்பணம் கொஞ்சம் பெற்றுக் கொண்டு விரைவில் எப்படியாவது அந்த பொருளை கொடுத்து விடுவேன். இதனால் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் மிகுந்த நம்பிக்கையுடன் என் கடைக்கு வந்தனர்.
விளையாட்டுப் பிரியன் என்பதால் சென்னைக்கு வருகை தரும் பிரபல விளையாட்டு வீரர்களை சந்தித்து அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு இருந்தது. இப்படி எடுத்த படங்களை கடையில் மாட்டினேன். ஆல்பங்களில் சேர்த்தேன். இவற்றைப் பார்ப்பதற்காகவே பல வாடிக்கையாளர்கள் வருகை தந்தனர்.
என் மகன் அக்பர் அலி. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்ததும், ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் கடைக்கு வருவார். நாளடைவில் வேலையை விட சொந்தத் தொழிலில் ஈடுபடுவதை விரும்பினார். எனவே, சென்னை அண்ணா நகரிலும் “சில்ட்ரன்ஸ் பேரடைஸ்” -ன் இரண்டாவது கடையைத் தொடங்கினோம். அக்கடையை கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் சிறப்பாக கவனித்து வருகிறார்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பூப்பந்து மட்டை தயாரிக்கும் ஒரு சிறந்த நிறுவனத்தின் டீலராகவும் உள்ளோம்” என்றார், திரு. முகமது ஜமீல்
– ம. வி. ராஜதுரை