Latest Posts

சுற்றுலாவின் போது புதிய வணிகத் திட்டங்கள் கிடைக்கின்றன!

- Advertisement -

“என் தந்தையார் கயத்தாறு அல்ஹாஜ் அமீர் பாட்சா. அவர் தான் எனக்கு வாழ்க்கையில் மட்டும் அல்ல வணிகத்திலும் வழிகாட்டி. தாசில் தாரராக பணியாற்றி ஒய்வு பெற்ற அவர், வரவு செலவு கணக்கை தினமும் எழுதுவார். வருமானத்திற்குள் செலவு செய்து மிச்சம் பிடிப்பது எப்படி? என்பதை நான் பள்ளியில் படிக்கும்போதே அவரிடம் கற்றுக் கொண்டு விட்டேன் என்கிறார், ஏசியாஸ் எலக்ட்ரிகல்ஸ் திரு. தாஜ் முகமது.

இவர் சென்னை பெரியமேடு, நாராயண செட்டி தெருவில் ஏசியாஸ் எலக்ட்ரிகல்ஸ் சென்டர் என்ற நிறுவனத்தை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் 1980களில் ஒர் எலக்ட்ரிக் தொழிலாளியாக இருந்த இவர் இன்றைக்கு பெரு வணிகராக உயர்ந்து நிற்கிறார்.

தம்முடைய பசுமையான அனுபவங்களைப் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து,
“மதுரையில் இன்டர்மீடியட் முடித்து சென்னையில் உள்ள செங்கல்வராயன் பாலிடெக்னிக்கில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ பெற்றேன். படிப்பை முடித்ததும் சென்னையில் வசித்த என் அண்ணன் திரு. காசீம் முகமது அவர்கள் ஆதரவில், எண்ணூரில் உள்ள அசோக்லேலண்ட் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிப் பணியாளராக பணி புரிந்தேன்.
பள்ளியில் படிக்கும் போதே என் தந்தையாரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஆழமாக பதிந்து இருந்தன.

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டிருந்த அவர் நற்பண்புகளின் பெட்டகமாகத் திகழ்ந்தார். தாசில்தாரராக பணியாற்றிய அவர், 1966 -ல் வாங்கிய மாதச் சம்பளம் ரூ.250. எங்கள் பள்ளிக் கட்டணம், வீட்டு செலவு உட்பட அனைத்தும் போக அதில் மிச்சம் பிடித்து தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் தவறாமல் ஒரு தொகையை போட்டு விடுவார். என் தந்தையார் மாதா மாதம் எழுதி வைத்த வரவு செலவு குறிப்பேடுகளை புதையல் போல பாதுகாத்து வருகிறேன்.

அப்ரென்டிஸ் பணி முடிந்ததும் உறவினர்கள் நண்பர்கள் மூலம் கிடைத்த சிறு சிறு எலக்ட்ரிக்கல் தொடர்பான வேலைகளை செய்து வந்தேன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சில நிறுவனங்களில் இருந்தும் அவ்வப்போது அழைப்பு வரும். அந்த நிறுவனங்களில் இருந்து புதிய அனுபவங்கள் ஏராளமாக கிடைத்தன.
ஒரு முறை என் அக்கா பசரியா காசிம் சொன்ன ஒரு வேலையை முடித்துக் கொடுப்பதற்காக, குடும்ப நண்பர் திரு. பசீர் அகமது அவர்களின் இல்லத்திற்கு சென்றேன்.

அப்போது என்னைப் பற்றி விசாரித்த அவர் நீங்கள் டிப்ளமோ முடித்திருப்பதற்கு டெலி கம்யூனிகேஷன் துறையில் ஒப்பந்தப் பணி எடுத்து சொந்தமாக செய்யலாமே, என்றார். எனக்கு அது சரியாகப்பட்டது. உடனே அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.
இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனமாக உள்ள மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம், அப்போது இந்தியன் டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் இயங்கியது.
குமாரதாஸ் என்ற நண்பன் டிராப்ட்ஸ்மேன் ஆக அங்கு பணி புரிந்தார். அவரை அணுகி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

“ஒப்பந்தப் பணியில் கொஞ்சம் முன் அனுபவம் தேவை. நீ போய் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் சிறு சிறு ஒப்பந்தம் எடுத்து பணியாற்றிவிட்டு வா, என்று அவர் ஆலோசனை வழங்கினார். அங்கு ஒப்பந்ததாரர் ஆகும் நடைமுறை எளிது என்றார்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்த என் உறவினர் திரு. அப்துல் ஹக்கிம் எனக்கு ஊக்கம் அளித்து ஆலோசனைகள் வழங்கினார். அதன்படி, ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொண்டு சில மாதங்கள் அங்கு பணியாற்றினேன். தொடர்ந்து 1992-ல் ஏசியாஸ் எலக்ட்ரிக்கல் சென்டர் என்ற நிறுவனத்தை நிறுவினேன். அதே ஆண்டில் மத்திய அரசின் தொலை தொடர்பு துறையில் ஒப்பந்ததாரராகவும் பதிவு செய்தேன்.

எனக்கு கிடைத்த முதல் ஒப்பந்தப் பணி தாம்பரம் தொலைத் தொடர்பு இணைப்பக அலுவலகத்தில், காற்றை வெளியேற்றும் மின்விசிறி நிறுவுதல். ரூ.4995 க்கு எடுத்திருந்த அந்த ஒப்பந்தப் பணியை திறம்பட முடித்துக் கொடுத்து அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றேன். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகள் கிடைத்தன. சென்னை தொடங்கி கன்னியாகுமாரி வரை எந்த மாவட்டத்தில் ஒப்பந்தப் பணி கிடைத்தாலும் செய்தேன்.

அனுபவமும் இத்துறை சார்ந்த நட்பு வட்டாரமும் அதிகரித்தது. பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பணி செய்தேன். பணிக்கு ஏற்ப தொழில்நுட்ப வல்லுநர்களையும், வேலை ஆட்களையும் நியமித்துக் கொண்டேன்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் அமைத்துள்ள கோபுரங்கள் பலவற்றுக்கு நாங்கள்தான் இடிதாங்கி நிர்மானித்துக் கொடுத்து உள்ளோம். உயரமாக இருக்கும் கோபுரத்தின் மீது சிவப்பு விளக்கு அவசியம் பொருத்த வேண்டும். அந்த பணியையும் நாங்கள் தான் செய்வோம்.

2008-2010 கால கட்டங்களில் மிகப் பெரிய ஒப்பந்த வாய்ப்புகள் கிடைத்தன. வணிகத்தில் நல்ல வளர்ச்சியை எட்டினேன். 2011 க்கு பிறகு தனியார் நிறுவனங்களையும் நாடி ஒப்பந்தம் எடுக்கத் தொடங்கினேன். தற்போது பி.எஸ்.என்.எல் தவிர பிரபல தனியார் நிறுவனங்களும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் பட்டியலில் உள்ளன.

என் மனைவி திருமதி ஜெசிமா பானு எம்.ஏ, எம். எட் பட்டங்கள் பெற்றவர். அவருடைய தலைமையில் அல் அமீன் என்ற ஆரம்பப் பள்ளியை சமூக நோக்குடன் நடத்தி வருகிறோம். இதில் 240 குழந்தைகள் பயில்கின்றனர்.
என் இரு மகன்களையும் அவர்கள் விருப்பப்படி பயில வைத்தேன். மூத்த மகன் அமித்சுனகல் ஆர்க்கிடெக் முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்கிறார். இளைய மகன் முகமது ஃபயாஸ் சட்டம் படிக்கிறார்.

எனக்கு இப்போது வயது 56. ஆனால் இளமையில் எப்படி செயல்பட்டேனோ, அதே உற்சாகம் மற்றும் சுறுசுறுப்புடன் இயங்குகிறேன். இதற்கு காரணமும் என் தந்தைதான். அதிகாலை நடை பயிற்சி அவருடைய அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. 5 மணிக்கு எழும் நான் தினமும் ஒரு மணி நேரம் பூப்பந்து விளையாடுவேன். அடுத்த ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று முறையான உடற்பயிற்சியில் ஈடுபடுவேன்.

நான் கடைபிடிக்கும் நல்லப் பழக்கங்களில் “சுற்றுலாவும்” ஒன்று. ஆண்டுதோறும் குடும்பத்தோடு எதாவது ஒரு வெளிநாடு சென்று விடுவேன். இதுவரை ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இலங்கை, தாய்லாந்து, வளைகுடா நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறேன். சுற்றுலாவின்போது உடல்நலம் மற்றும் மன நலத்தோடு வணிகத்தை வளர்க்கும் புதிய திட்டங்களும் எனக்கு கிடைக்கின்றன.
அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நிரந்தர வேலை கிடைக்காதா? என்று ஏங்கியிருந்த காலம் ஒன்று உண்டு. நல்ல வேலையாக அந்த வேலை கிடைக்கவில்லை என்று அதே மனம் இப்போது நினைக்கிறது.

எந்தவொரு மனிதனால் கைக்கு வரும் பணத்தை சரிவர கையாள முடிகிறதோ, அந்த மனிதனால் வாழ்க்கையில் மட்டும் அல்ல வணிகத்திலும் வெற்றி பெற முடியும்” என்கிறார் திரு. தாஜ்முகமது.

– ம.வி. ராஜதுரை

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news