தமிழ்நாடு அரசு வெற்றி பெறட்டும்! மக்களைக் காப்பாற்றட்டும்!

0
208

தொழிற்சாலைகள் வேண்டும்தான்; தொழில்கள் வளர வேண்டும்தான். ஆனால், அவை நாட்டின் காற்றையும், தண்ணீரையும் மாசு படுத்தி, வாழும் மக்களின் உடல் நலனின் மீது போர் தொடுக்கும் வகையில் நிச்சயம் அமையக் கூடாது.

கண்ணுக்குத் தெரிந்து தூத்துக்குடியின் மண்ணையும், காற்றையும், நீரையும் கடுமையாக மாசு படுத்தி, மக்களின் உடல் நலனுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இயங்கிக் கொண்டு இருந்த ஸ்டெர்லைட்டுக்கு தமிழ்நாடு அரசு ‘சீல்’ வைத்து இருப்பது, மக்களுக்கு ஒரு அமைதியான மனநிலையைத் தற்காலிகமாகவாவது தந்து உள்ளது.

ஆயிரக்கணக்கான தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம், அந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த போராட்டக்காரர்களின் தியாகத்துக்கு கிடைத்த முடிவாக இந்த ‘சீல்’ அமைந்து உள்ளது.

பல மாநிலங்களும் விரட்டி அடித்த ஸ்டெர்லைட்டுக்கு தமிழ் நாட்டில் மட்டும் எப்படி இடம் கிடைத்து இருக்கும்?

முதன்மையான சில அரசியல் தலைவர்களின், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களின், பெரிய அதிகாரிகளின் செயல்பாடுகளில் புரிதல் உள்ள நமக்கு இதற்கான பதில் தெரியாமல் இல்லை.

வேதாந்தா போன்ற நிறுவனங்கள் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து உள்ள அளவற்ற நன்கொடைகள், வெறுமனே நன் கொடைகள் மட்டும் அல்ல! நாட்டை மாசு படுத்தி அவர்கள் இயக்கும் தொழிற்சாலைகளுக்கு, இவர்களால் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் தரப்படும் கோடிகள் அவை.

மக்களும் வேண்டாம் என்று போராடுகிறார்கள்;

தமிழ்நாடு அரசும் வேண்டாம் என்று ‘சீல்’ வைத்து விட்டது.

இனி தமிழ்நாடு அரசின் சட்ட வல்லுநர்கள், இந்த ஆலை இனி அறவே இயங்காமல் இருக்க, சட்டப்படி என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ந்து அத்தனை வழிமுறைகளையும், சட்டம் சார்ந்த அத்தனை செயல்பாடுகளையும் மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும். நீதி மன்றங்களும் மக்களை நோயாளிகளாக்கும் இந்த ஆலையை மூடிய தமிழ் நாட்டு அரசுக்கு ஆதரவாக இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

-ஆசிரியர் க.ஜெயகிருஷ்ணன்