வளர்தொழில், ஜூன் 2018

சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் ‘வானமே எல்லை’. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது. சின்ன அளவில் வணிகம் செய்பவர்களில் இருந்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்கள் வரை ‘வானமே எல்லை’ நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் நடத்தி வருபவர், தொகுப்பாளர் திருமிகு. அப்சரா.

வானமே எல்லை நிகழ்ச்சி பற்றி அப்சரா கூறும்போது -“நான் இதழியல் துறையில் எம். ஏ., பட்டம் பெற்று இருக்கிறேன். படித்து முடித்ததும் ஊடகத் துறையிலேயே வேலை தேடினேன். நான் திருநங்கை என்ற காரணத்தால் வேலை தேடும் நேரங்களில் தயக்கங்களை சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.

நான் வாழ்க்கையில் பல இடர்களைத் தாண்டி வந்ததால், வெற்றியாளர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சுவையான கதைகளைக் கேட்பதில் ஆர்வம் இருந்தது. இயல்பிலேயே எனக்கு கதை சொல்வது மிகவும் பிடிக்கும். அதிலும், மக்களுக்கு பயன் உள்ள கதைகளைக் கூறுவது எனக்கு இன்னும் பிடிக்கும். ஜெயா தொலைக்காட்சிக்கு வேலை தேடிப் போன போது அதன் தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) திரு. விவேக் ஜெயராமனின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரு புது நிகழ்ச்சி பற்றி சிந்தித்த போது ”வானமே எல்லை’ நிகழ்ச்சி உருப்பெற்றது. நானும் அவரும் நிறைய ஆலோசனைகளை மேற் கொண்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

இயல்பாக, பெண்கள் தொழில் முனைவைப் பொறுத்த வரை மக்கள் இடையே ஒரு பொதுப்புத்தி நிலை இருக்கிறது. அது, சில இடர்களை சந்தித்ததும் அவர்கள் பின்வாங்கி விடுவார்கள், தாக்கு பிடிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. ஆண்களை விட பெண் களுக்குத்தான் அதிகமான மன வலிமை மற்றும் உடல் வலிமை இருக்கிறது. அவர்களால், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியும். வீட்டுச் சூழல் மற்றும் வெளியே உள்ள சூழல் என பலவற்றையும் சமாளிக்கும் திறமை மற்றும் மனவலிமை பெண்களுக்கு உண்டு. அதனால், பெண்களின் வெற்றியைக் கொண்டாடுவதே எங்கள் நிகழ்ச்சியின் குறிக்கோள்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல பெண் தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக் கதைகளை என்னால் கேட்க முடிந்தது. அதில் சிலவற்றைக் குறிப்பாக சொல்லலாம். திருமதி. கலைச்செல்வி, பதினைந்து வயதில் திருமணமாகி அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். மிகவும் வறுமை. இக்கட்டான நிலையில் வாழ்க்கை. பின்னர் அருகில் இருந்த ஒரு பினாயில் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தனது கைக் குழந்தையுடன் வீடு வீடாகச் சென்று, பினாயில் விற்றார். இப்போது அவர் தானாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, பினாயில் தயாரித்து விற்கிறார். தற்போது சுமார் நானூறு நிறுவனங் களின் தூய்மைப் பணிக்காக பினாயிலை விற்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். பலர் இவரிடம் பினாயிலை வாங்கி, வீடுகளுக்கும், அலுவலகங் களுக்கும் விற்பனையும் செய்கிறார்கள்.

அடுத்ததாக, மதுரையைச் சேர்ந்த திருமதி. ஜோஸ்பின். அவரது மகள் மற்றும் கணவர் இருவருமே புற்றுநோய் தாக்குதலால் இறந்து விடுகின்றனர். தனது ஒன்பது வயது மகன் மட்டுமே உடன் இருந்தார். மனம் வெறுத்துப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு நூலகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது, தேனீக்கள் வளர்ப்பைப் பற்றிப் படித்து இருக்கிறார். பின்னர் தன் வீட்டிலேயே தேனீக்கள் வளர்க்கத் தொடங்கி தற்போது நான்கு ஏக்கர் அளவில் பண்ணை வைத்து தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய தேனீக்கள் பண்ணை இவருடையதுதான். மேலும் பல மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்.

இத்தகைய வெற்றிக் கதைகளுக்குப் பின்னால், தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அவற்றை அவர்கள் கடந்து வந்த பாதையையும் கேட்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். வானமே எல்லை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாகவே ஆகி விட்டார்கள். அவர்களிடம் காணும் பல திறமைகள் என்னையும் மெருகேற்றிக் கொள்ள பயன்படுகின்றன. அவற்றில் சில – மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.

ஒரு ஆண் தொழில் செய்வதற்கும் ஒரு பெண் தொழில் செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்பல. ஒரு ஆண் என்பவர் தன் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு அதில் வெற்றி பெற முடியும். ஆனால், ஒரு பெண் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்பம், குழந்தைகளையும் அன்புடன் கவனிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு குடும்பம் அவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டியது மிகத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய வாழ்விணையரின் கனிவு இன்றி அமையாதது ஆகும்.

அவ்வாறு குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வீரியமாக உழைத்து ஒரு பெண் வெற்றி கொள்ள வேண்டும். இவ்வளவு சுமைகளைச் சுமந்து கொண்டு ஒரு பெண் தனது தொழிலில் பெறும் வெற்றி என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தொலைக்காட்சி நேயர்களின் மனதில் பெண் தொழில் முனைவோரை பாராட்டும் மன நிலையை எங்கள் நிகழ்ச்சி உருவாக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண் தொழில் முனை வோரின் குடும்பத்தினர், நிகழ்ச்சிக்குப் பிறகு, இவர்களுக்கு கனிவுடன் உதவத் தொடங்கியதையும் அந்த பெண் தொழில் முனைவோர் எங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், பல பெண் தொழில் முனைவோர், அவர்களின் தொழில் முனைவிற்குப் பெரிய தடையாக முதலீடு இருப்பதாக கூறினர். மேலும் அதே துறையில் இருக்கும் மற்ற ஆண் தொழில் முனைவோரின் போட்டி களையும் சமாளிக்க வேண்டியிருப் பதாகவும் கூறுகின்றனர். முதலீட்டிற்காக வங்கிக் கடன், சட்ட ரீதியான நிறுவனப் பதிவுகள் போன்றவற்றிற்கும் சிரமப் பட்டதாகக் கூறி இருக்கின்றனர்.
எனது பார்வையில், பெண்கள் பணத்தை சேமிக்க வேண்டும். அது அவர்களது தொழில் முனைவிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு பல தொழில்களை பல கோணங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அதில் அனைத்துமே சிறந்த தொழில்கள்தான்.

நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்த பிறகு, அவரது இடத்திற்கே எங்களது குழுவுடன் சென்று, அவர்கள் தொழில் மற்றும் அவர்களின் சுற்றுப்புறம், அவர்களின் மனநிலை என அனைத்தையும் பதிவு செய்து சேகரிப் போம். பின்னர் அதை எங்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர்களைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக ஒளிபரப்பு செய்கிறோம்.

மேலும், நாங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பி விண்ணப்பிப் பவர்களில் இருந்து, மிகவும் கவனத்துடன் நிகழ்ச்சியில் பங்கு பெற ஏற்றவர்களை தேர்வு செய்கிறோம். குறிப்பாக வணிகப் பின்புலம் இல்லாத, வீடும் நாடும் உதவாத நிலையிலும் வெற்றி பெறும் பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம். நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது பார்வையாளர்களாக பங்கு பெறுபவர் களையும் கவனத்துடன் தேர்வு செய்கி றோம். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களைத்தான் பார்வையாளர்களாக தேர்வு செய்கி றோம். அவர்கள் அந்த வெற்றியாளர் களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கின்றனர். இவர்கள் கருத்து களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பெண் தொழில் முனைவோர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக எங்கள் நிகழ்ச்சி இருக்கிறது” என்றார், அப்சரா.

– உஷா சிவலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here