நீட், இன்றைய டியூஷன் கலாச்சாரம்.
தமிழகத்தின் தொழில்துறை, அரசியல் போக்கு, சமூக அமைதி, இளைஞர்களின் திறன் என எந்த திசை திரும்பினாலும் சிக்கல்களுடன் சிக்கித் தவிக்கிறது, தமிழ் நாடு. அதே நேரத்தில் இவற்றுக்கான தீர்வுகள் நோக்கிய செயல்பாடுகளும் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரும், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வரும், தற்போது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மாற்றியமைக்க அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிப்பவருமான பேராசிரியர், முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம். வளர்தொழில் இதழுக்காக, அவருடனான சிறப்பு பேட்டியில் இருந்து….
”அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டியூஷன் சென்டர்களின் எண்ணிக்கை – ஒரு கலாச்சாரமாகவே உருவாகி வருவதாக உங்கள் மனக்குறையைத் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால், நீட் (NEET) போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய பின், மாணவர்களுக்கு வேறு வழிதான் என்ன?”
”இதற்கு தீர்வு, டியூஷன் சென்டர்கள் தான் என்பதை நான் ஏற்கவில்லை. உயர்கல்வி கற்பதற்காக மட்டுமே இன்று 32 விதமான வெவ்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது உருவாகியுள்ள டியூஷன் கலாச்சாரம்…. மற்றும் அவர்கள் வெளியிடும் விளம் பரங்கள் – ஒரு போலி பிம்பத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன.
அதிக பணம் செலவழித்து இந்த வகுப்புகளில் சேர முடியவில்லை என்ப தால், தாங்கள் தோற்று விடுவோம் என, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகிறது. தங்கள் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாமல் அவர்கள் சந்திக்கும் தேர்வில் சிறப்பான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்
இதுபோன்ற ஒரு கலாச்சாரம் அறிவில்.., அறிவியலில்…, தொழில் நுட்பத் தில் வளர்ந்த எந்த உலக நாடுகளிலும் இல்லை. பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பில் தொடங்கி, 12ம் வகுப்பு வரையான – அடிப்படைக் கல்வியில் அவர்களுக்கு சரியான பாடத்திட்டத் தைத் தந்து… புரிய வைத்துப் பாடம் நடத்தினால், நமது மாணவர்களால் எல்லா போட்டித் தேர்வுகளையும் வெற்றி கொள்ள முடியும், தற்போதைய டியூஷன் சென்டர்களின் உதவி இல்லாமலேயே.
இந்த கல்வியாண்டில், தமிழக பள்ளிகளில் நான்கு வெவ்வேறு வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மேலும் சில வகுப்பு களுக்கு என…. படிப்படியாக எல்லா வகுப்புகளுக்குமான பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் வருகின்றன.
இந்த பாடத் திட்ட மாற்றத்துக்கான குழுவுக்கு தலைமை ஏற்றதால் சொல்கி றேன், இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மத்திய அரசுப் பள்ளி பாடத் திட்டத்தை விட மேம்பட்டது. இதை எப்படி மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி தரும் திட்டமும் உள்ளது. அதனால், இவை நமது மாணவர்களை சரியாகச் சென்று சேரும் என நம்பு கிறோம். இந்த பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள், மிக எளிதாக எல்லா போட்டித் தேர்வுகளிலும் வெல்வார்கள். அதை இன்னும் சில ஆண்டுகளில் நாம் பார்க்க முடியும்.
”நுழைவுத் தேர்வுகள் என எதுவும் தேவையில்லை, +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற உங்களது பரிந்துரை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?”
”கடந்த பல ஆண்டுகளாக, நமது பள்ளிக் கூடங்களில்… குறிப்பாக, அதிக மதிப்பெண் பெற வைக்கும் வித்தை தெரிந்த பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையே மாறிவிட்டது. வினா வங்கி (Question Bank) என ஒன்றை வெளியிட்டு, இதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் எனச் சொல்லி விட்டு, அதில் மட்டுமே தேர்வு வைப்பதால், பல பள்ளிகளில் அதை மட்டும்தான் சொல்லித் தருகிறார்கள்.
அதோடு, +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. இதனால், +2 தேர்வில் 1200க்கு 1175 மதிப்பெண் பெற்று தேர்வானாலும், அந்த மாணவன்/ மாணவிக்கு அவர்களது பாடத்திட்டத் தில் உள்ள எது பற்றியும் ஆழமாகத் தெரிவதில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தற்போது புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை என்பதால்தான் அதற்கும் பொதுத் தேர்வு என்ற நிலை வந்து உள்ளது.
புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், இதில் மாணவர்கள் குறைந்த அளவாக எதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும், என் பதையும் பட்டியலிட்டு தருகிறார்கள். இவற்றை சிறப்பாக நடைமுறைப் படுத்தி னாலே, சோதித்து வந்தாலே, நல்ல விவரம் உள்ள, நம்பிக்கை தரும் மாணவர்களை உருவாக்க முடியும். காரணம், பாடத்திட்டத்தின் அடிப்படை யில் எங்கே, எப்படி கேள்வி கேட்டாலும், அதற்கு பதில் எழுத நம் மாணவர்கள் தயாராக இருப்பார்கள். இன்றைய டியூஷன் கலாச்சாரமும் தேவைப்படாது.”
தமிழ் மொழி வழிக் கல்வி, பொறியியல் நுழைவுத் தேர்வு.
”நமது மாநிலத்தில் பள்ளிக் கல்வி கற்பதில், தமிழ் மொழிக் கல்வி என்பதை பள்ளிக்கூடம் வரை என மாற்ற வேண்டுமா? அல்லது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது போல பட்டப்படிப்பு அளவிலும் தமிழ் மொழி வாயிலான கல்வி உதவும் என நினைக்கிறீர்களா?”
”என் கருத்தில் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தமிழ் மொழி வழிக் கல்விதான் சிறந்தது. அதிலும் தொடக்க அடிப்படைக் கல்வி, கட்டாயமாக தமிழ் மொழியில்தான் இருக்க வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
ஆனால், இன்றைக்கு உயர்கல்வியை தமிழ் மொழியில் கற்றுத்தர முடிய வில்லை. காரணம், பாடப் புத்தங்கள் போதுமான அளவு தமிழில் இல்லை. பெரும்பான்மையான உயர்கல்விப் பாடப் புத்தங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதோடு, உலக அளவில் – துறை சார்ந்த அறிஞர்கள், வல்லுநர்களின் அறிவைப் பெற நாம் ஆங்கிலத்தைத்தான் நாட வேண்டியுள்ளது.
இடையில் துறை சார்ந்த புத்தங்கள் சில, தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டன. பொறியியலைப் பொறுத்தவரை, பாலிடெக்னிக்குகளில்… ஏன், அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கூட சில படிப்புகள் தமிழில் முயற்சி செய்யப் பட்டன.
கணினி விற்பவர்கள், மற்ற பொருட்களை விற்பவர்கள் அவற்றுக்கான பயன்பாட்டு விளக்கத்தை தமிழில் தருவதில்லை. அப்படி இருந்தால், அனைவரும் அதைப் பயன்படுத்த பயிற்சி பெற முடியும். ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் எல்லாம் அந்தந்த நாட்டு மொழியில் விளக்கக் குறிப்பு இருந்தால்தான், எந்த ஒரு பொருளையும் விற்க அனுமதிக்கிறார்கள். அந்த நாடுகளில் தாய்மொழியை அறிவியல் பயன்பாட்டு மொழியாக வளர்க்க நடக்கும் முயற்சிகள் போல, இங்கே நடக்கவில்லை. அதனால், தமிழ்மொழிக் கல்வி, இங்கே தொடக்கக் கல்வியைத் தாண்ட இயலாத நிலையிலேயே உள்ளது.”
”திரு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட, பொறியியல் பட்டப் படிப்புக்கான மாநில அளவிலான நுழைவுத் தேர்வு உங்களது தலைமையிலான குழு பரிந்துரையால்தான் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தேசிய அளவிலான ஒதுக்கீடு என, பொறியியல் பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வருமோ என்ற அச்சம் நிலவுகிறதே?”
”தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்புக்காக நடந்த நுழைவுத் தேர்வை நிறுத்திய பரிந்துரையை அளிப்பதற்கு முன், விரிவான ஆய்வு நடந்தது. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை எடுத்து அலசினோம். அதில் கிராமப்புற பள்ளி மாணவர்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்கள்தான் நுழைவுத் தேர்வால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இது சரியான போக்கு அல்ல என்பதால்தான் நுழைவுத் தேர்வு தேவை இல்லை என்ற பரிந்துரையைச் செய்தோம். அதோடு, வேறு சில பரிந் துரைகளையும் அளித்திருந்தோம். அவை
1. +2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் பொறியியல் கல் லூரிகளில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
2. மேல்நிலைக் கல்வி, அதாவது +1, +2 என இரண்டு ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை மேம்படுத்தப்பட வேண்டும்.
3. தற்போதுள்ள முறை போல, Blue Print கேள்வித்தாள் முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்த முறை ஒரு தவறான வழிகாட்டலை அளித்து விட்டது. நமது கல்வித்தரம் மேம்படாததற்கு இதுவும் ஒரு காரணம். தற்போது அரசு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது. அது முழுமை அடையும் போது, இது போன்ற சிக்கல்கள் தீரும் என நம்புகிறேன்.”
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ஊழல்.
“பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம் கைமாறியதாக நீங்கள் சொல்லி வெளியானத் தகவலை, மாநில அமைச்சர் ஜெயக்குமார் மறுத்திருக்கிறாரே?”
நான் சொன்னத் தகவல் உண்மை. அது அண்ணா பல்கலைக்கழக
துணைவேந்தராக நியமனம் பெறுவதற்காக தரப்பட்ட பணம். அதை, அண்ணா
பல்கலைக்கழகத்தின் 500 உறுப்பு கல்லூரிகளிடம் இருந்து 10 லட்சம் வீதம் வசூல்
செய்து, மொத்தமாக கொடுத்து பதவியைப் பெற்றனர். அதில் நேரடியாக
தொடர்புடைய நபர்களே சொன்ன தகவல் இது. இது மட்டுமல்ல. மற்ற
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கவும் இதுதான்முறை
என்றாகிவிட்டது. என்ன…., தொகை கொஞ்சம் குறைவாக இருக்கும். எனக்கு
தெரிந்து கடைசியாக – நியாயமாகவும் தகுதி அடிப்படையிலும் நியமனம்
கோரிய நபர்…, துணை வேந்தர் பதவிக்கு பணம் தர முடியாது என்று சொல்லி
மறுத்தவர்…. விரைவிலேயே பல்கலைக்கழக மான்ய குழுவில் நல்ல
பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு அங்கே சென்றுவிட்டார். இடையில், என்னைத்
தொடர்பு கொண்ட ஒருவர், கொஞ்சம் தொகையைக் குறைத்துக் கொள்ளச்
சொல்லுங்கள்! என, தூது போகச் சொல்லி கேட்ட அனுபவமும் எனக்கு உண்டு –
நான் இந்த மாதிரி வேலையை ஆதரிக்காதவன் என்பது புரியாமலேயே!
“நீண்டகாலமாக தமிழகக் கல்வித் துறையுடன் தொடர்புள்ளவர் நீங்கள்.
துணைவேந்தர் பதவிகள் ஏலம் போகும் நிலை ஏற்பட்டது எப்போது
தொடங்கியதாக நினைக்கிறீர்கள்….?”
50 கோடி என்ற அளவை எட்டியது அண்மையில்தான். ஆனால், பல ஆண்டுகளாக
தமிழகத்தில் நிலவும் பரிதாப நிலை இது. அதிமுக ஆட்சி காலத்தில்தான் எனச்
சொல்வதற்கில்லை; கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த நேரத்திலேயே இந்த
வழக்கம் இருந்ததாகச் சொல்வேன். வட மாநில மூத்த அரசியல் தலைவர் ஒருவர்
வேந்தராக இருந்தபோது, துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு அவரது மகன்
லஞ்சம் கேட்டார் என்ற குற்றச்சாட்டு அப்போதே வந்ததுதான். அதோடு, கல்வி
தொடர்பான விஷயங்களுக்கு லஞ்சம் பெற்ற, மாநில அமைச்சர்கள் சிலரையும்
எனக்குத் தெரியும். ஆனால், அப்போதெல்லாம் இந்த தொகை சில கோடிகளில்
இருந்தது. இப்போது கூடிவிட்டது.
திறன் வளர்ச்சிப் பயிற்சி மையங்கள்.
”நடப்பு துணைவேந்தரின் பதவிக் காலம் ஆறு மாதங்கள் இருக்கும்போதே அடுத்தவரைத் தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறியிருந்தீர்கள். அது இப்போது சாத்தியமா…?”
”ஏன், சாத்தியமில்லை? இன்னும் சொல்லப் போனால், அது நான் புதிதாகச் சொன்ன கருத்து அல்ல. முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. பேரா. வா. செ. குழந்தைசாமி, துணை வேந்தராக இருந்த காலத்திலேயே, அமெரிக்காவில் பணியாற்றிய என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பொறுப்பை ஏற்க, தமிழகம் வர இயலுமா என்று கேட்டு, ஆள் தேடல் முன்ன தாகவே தொடங்கி விட்டது. அதனால் தான், அவர் ஓய்வு பெற்ற மறுநாள், நான் பதவியேற்க முடிந்தது. எனக்கு பின்னரும் அப்படியே தொடர்ந்தது. ஐஐடி போன்ற இடங்களில் இப்போதும் அப்படித்தான் நடக்கின்றன. ஆக, இது சாத்தியமில்லாத ஒன்றல்ல.
ஆனால், தற்போதைய முறையில் தேர்வு நடந்தால்தான், அவசரத்தைக் காரணம் காட்டி, வேகமாக விரட்டி வசூல் செய்ய வசதியாக உள்ளது என நினைக்கிறார்களோ என்னவோ!”
”பொறியியல் உள்ளிட்ட துறை களில் பட்டப்படிப்பு முடித்து வருபவர்களும் கூட, இன்று பணி செய்ய தகுதி அற்றவர்களாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளதே… இதற்கு தீர்வுதான் என்ன….?”
”சிக்கலுக்குக் காரணம் – முன்பே சொன்னதுதான். கேள்விக் கிடங்கு (Question Bank) என ஒன்றைத் தந்து, அதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் என்றால், மாணவர்களுக்கு அந்த வினாக்களுக்கு ஆன விடைகளைத் தவிர வேறு எதையும், யாரும் சொல்லித் தருவதில்லை. மற்ற எதுவும் தெரியாத மாணவன்/ மாணவி பொறியியல் கல்லூரியில் மட்டும் என்ன படித்து விடுவார்கள்?
இன்று இந்தியாவில் நான்காயிரத்து ஐநூறு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவுக்கு அவ்வளவு தேவையில்லை. தமிழகத்தில் ஐநூற்று ஐம்பது கல்லூரிகள் எதற்கு? நமது தேவைக்கு இருநூறு கல்லூரிகள் போதும். ஆண்டுதோறும் எண்பது ஆயிரம் பேர் பொறியாளர்களானால் போதும்.
தமிழகத்தின் புதிய பொறியியல் கல்லூரிகளில், முதல் கல்லூரி 1984-ல் தொடங்கியது. பின்னர் கண்மூடித் தனமாக, பணம் உள்ள யாருக்கும், கேட்ட அரசியல்வாதிகளுக்கெல்லாம் அனுமதி அளித்ததால்தான் இந்த நிலை. இவற்றில், தற்போது 20% தான் தகுதியானவை. மற்றவைகளில் எல்லாம், போதுமான, தகுதியான பேராசிரியர்கள், தேவையான பயிற்சிக் கூடம், நூலகம் என எதுவும் இல்லாதவை.
அண்ணா பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களுக்கு தனிப் பயிற்சி நடத்தப்படும் என, ‘அடையாறு டைம்ஸ்’ இதழில் விளம்பரம் வருகிறது. இது அவ மானம். மாணவர் சேர்க்கை போதுமான அளவு இல்லை என, அண்மைக் காலமாக பல கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. நல்லது, இன்னும் பலவும் மூடப்பட வேண்டும்.
ஆனால், கட்டிடங்கள் கட்டி தயாராக உள்ள இந்த இடங்களை வீணடிக்காமல், அவற்றைத் திறன் வளர்ச்சிப் பயிற்சி மையங்களாக மாற்றலாம். நாம் இப்போது சந்திப்பது போன்ற நிலையை சீனா ஐந்து ஆண்டுகளுக்கு முன் சந்தித்தது. அப்போது அவர்கள் கையாண்ட அணுகுமுறைதான், திறன் வளர்ச்சி பயிற்சி மையங்கள். இவை அங்கே நல்ல பயன் தந்து வருகின்றன. தற்போது பொறியியல் பட்டம் பெற்ற, ஆனால், வேலை செய்ய லாயக்கற்ற ஆட்களை உருவாக்குவதை விட, திறன் உள்ள ஆட்களை உருவாக்கினால், சொந்தமாக தொழில் செய்து வளர்வதோ, திறனுடன், பணிக்குச் செல்வதோ நடக்கும்.
பணி வாய்ப்புகளுக்கான பொதுத் தேர்வ, பல்கலைக் கழகங்கள்
”முன்பெல்லாம் தொழிற்கல்வி கற்ற பலர், UPSC எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் போன்ற பணித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வர். ஆனால், அதற்கும் கூட இப்போது தனி பயிற்சி வகுப்புகள் என்ற நிலை உள்ளதே…?”
”உயர்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு என்பது வேறு. பணி வாய்ப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பது வேறு. உயர்கல்விக்கான தேர்வில், எல்லாருக்கும் அடிப்படை பொதுவானது தான். ஆனால், ஐஏஎஸ் போன்ற தேர்வுகளில் அப்படியில்லை.
தொழிற்கல்வி என்று எடுத்துக் கொண்டாலே, அதில் ஏராளமான பாடப்பிரிவுகள். அவை தவிர, அறிவியல், கலை என மற்ற பட்டப் படிப்புகளையும் சேர்த்துப் பார்த்தால், மொத்த பாடப்பிரிவுகள் ஏராளம். அதோடு பொது அறிவு தொடர்பான எல்லாருக் கும் தேவைப்படும் பகுதியில் தயாரிப்பு என்பது வேறு. மேலும், இந்த பயிற்சி நிலையங்களில் பெரும்பாலும், ஆலோ சனைகள்தான் அதிகம் இருக்கும். எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கலாம்., அண்மைய நடப்புகள் என்ன, அவை குறித்து எங்கே அறியலாம் என்பது போல வழி காட்டுவதாகவே இவை அமையும். அதனால், உயர்கல்வி போட்டித் தேர்வுக்கான தனிப் பயிற்சியும், வேலை வாய்ப்புக்கான தனிப் பயிற்சியும் ஒன்றல்ல. அவற்றை ஒப்பிட முடியாது என நினைக்கிறேன்.
“தனிப்பட்ட பாடம் சார்ந்த பல்கலைக் கழகங்கள்” என இருப்பதற்கு எதிராக, அண்மையில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். நுட்பமான ஆய்வுகளுக்கு வழிவகுப்பது இதுபோன்ற பல்கலைக் கழகங்கள்தான் என்கிறார்களே, அவர்கள்….?”
”எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு பாடமும் தனித்திருக்க இயலாது. அதனுடன், தொடர்புள்ள மற்ற பாடங் களையும் சேர்த்துதான் மாணவர்கள் பயில வேண்டும். அப்படி இருந்தால்தான், சார்பு ஆய்வுகள் அதிகரிக்கும். இசை, உடற்பயிற்சி போன்றவற்றுக்காக தமிழ கத்தில் தனி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதையே நான் ஏற்கவில்லை.
ஆனால், பொறியியல் துறைக்கான தனி பல்கலைக் கழகம் என தொடங்கிய ஒன்றில் இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற பாடங்களைக் கூட நடத்த வேண்டிய தேவையில்லை எனவும், பொறியியல் பாடங்களை நடத்தவே நேரமில்லை எனவும் கூறுகின்றனர். அதை எப்படி எடுத்துக் கொள்வது? அடிப்படை அறிவியலும், கணிதமும் இல்லாமல் பொறியியலில் அடுத்த கட்டம் எப்படி சாத்தியம்? அதற்கு ஒரு பல்கலைக் கழகம் தேவையா? பொருளாதாரமும், சமூகவியலும் கூட ஒரு பொறியாளருக்கு தேவை என்பது என் கருத்து. ஒரு குறிப்பிட்ட பாடத்துக்காக – தனி கல்லூரி வேண்டு மானால் இருந்து விட்டு போகட்டும். ஆனால், ஒரு பல்கலைக் கழகம் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தால், அந்த பல்கலைக் கழகத்தில் என்ன முன்னேற்றம் இருக்க முடியும்?”
கல்வித் துறையில், தமிழகத்தின் எதிர்காலம்
‘‘ஐடி துறையில் தமிழ் மொழி குறித்த ஆர்வம் இப்போது எப்படி உள்ளது?”
”தற்போதைய நிலையில், அதில் எந்த பணியும், ஆய்வும், முயற்சியும் நடப்ப தாகத் தெரியவில்லை. அப்படியேதான் உள்ளது. பொதுவான முன்னேற்றம் ஏற்பட, தொடக்க நிலையில், பள்ளிக் கூடங்களில் கணினியில் தமிழைப் பயன்படுத்தச் சொல்லித் தர வேண்டும். அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்த வேண்டும். அண்மையில் கூட, கல்லூரி அளவில் நடக்கும் தமிழ்க் கணினி தொடர்பான ஆய்வுப் பணிக்கு துணை நிற்க, பரிசளிக்க. நான் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினேன். அப்படி இங்கொன்றும், அங்கொன்று மாக பணிகள் நடக்கின்றன”
”இனி வரும் தமிழகத்துக்கு, அதன் ஆட்சியாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் உங்களது செய்தி என்ன?”
”தற்போது தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பாடத் திட்டத்தில் செய்யப்பட்டு வரும் மாற்றம் மிக இன்றியமையாதது. சிபிஎஸ்சி பள்ளி களின் பாடத் திட்டத்தை விட, இந்த புதிய பாடத் திட்டம் மேம்பட்டது. அதனால், இந்த முயற்சி எல்லா வகுப்புகளுக்கும் செய்து முடிக்கப்பட்டு, சரியான அணுகு முறையோடு, தகுதியான ஆசிரியர்களால், பயிற்றுவிக்கப்படும் போது, பள்ளிக் கல்வியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என நம்புகிறேன். அதுதான் அடிப்படை என்பதால், அடுத்த பத்து ஆண்டுகளில் நமது மாணவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கிறேன். இதன் எதிரொலியாக மற்ற துறைகளிலும் நல்ல மாற்றம் வரும் என நம்புகிறேன். எனவே, கல்வித் துறையில், தமிழகத்தின் எதிர்காலம் பற்றி நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.”
பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களின் தொன்னூறாம் ஆண்டு பிறந்த நாள் விழா அண்மையில் (ஜூன், 16), சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. ஏராளமான புகழ் பெற்ற கல்வியா ளர்களும், நண்பர்களும், உறவினர்களும், கணித்தமிழ்ச் சங்க பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
– ஆர். சந்திரன்