தொழில் வாரிசுகளாக மகள்கள்

இன்று பெரும்பாலான உலக நாடுகளில், அவற்றின் பொருளாதாரம், வணிக நடவடிக்கை, வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகப் பெரும் பங்கு வகிப்பவை – தனி ஆட்களால் தொடங்கி நடத்தப்பட்டு…., பெரு வணிகமாக மாறியுள்ள, குடும்பத் தொழில் நிறுவனங்கள்தான்.

இன்று உலக அளவில் வெற்றிகரமாக நடக்கும் பல தொழில்களில், ஒரு குடும்ப நிர்வாகத்தின் கீழ்வரும் தொழில்களின் அளவு 80 சதவீதம் வரை என்கிறது, இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறை போராசிரியர் முனைவர் அனில் கோத்தாரியின் ஆராய்ச்சி.

உலக அளவில் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும் என, இந்தியாவுக்கு வந்தால், இங்கே குடும்ப நிர்வாகத் தொழில் நிறுவனங்களின் அளவு, இன்னும் அதிகமாம். அதாவது, 95 சதவீதம் வரைகூட என்கிறார், பேராசிரியர் அனில் கோத்தாரி.

இவை – ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறை களால் தொடர்ந்து நிர்வகிக்கப் படும் தொழிலாக… அல்லது தொழில் குழுமங்களாக உள்ளன.

எனவே, ஒரு குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட பெரும் தொழில் குழுமமும், அதன் சொத்துகளும், நன்மதிப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் இன்றி, பல ஆயிரம் பேரின் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு… நாட்டின் வரி வருவாய்… நாட்டின் பிற வணிக நடவடிக்கையில் நேரடி மற்றும் மறைமுக பங்கு என்ற வகையிலும் கூட, குடும்பத் தொழில் நிறுவனங்களும், அதன் நிர்வாக வாரிசுகள் குறித்த கேள்விகளும் முதன்மை பெறுகின்றன.

இதில் ஒரு தலைமுறையின் காலம் முடிந்து, அடுத்த தலைமுறைக்கு நிர்வாகம் கை மாறும்போது – அதற்கு தலைமையேற்று, வழி நடத்தப் போவது அந்த குடும்பத்தின் – ஆணா… பெண்ணா…. என்பது இந்தியாவுக்கு மட்டுமான கேள்வி அல்ல. உலக நாடுகள் பலவற்றிலும் கூட, இன்று இது ஒரு விவாதப் பொருளாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் படிப்படியாக பெண்கள், அதாவது மகள்கள், வாரிசுகள் ஆக உருவெடுத்து சிறந்த நிர்வாகிகளாக விளங்குவதைக் காண முடிகிறது.

பல குடும்பங்களில் ஆண் வாரிசுகள், திட்டமிட்டே இதற்காக வளர்த்து எடுக்கப் படுகிறார்கள். வேறு சில குடும்பங்களில் – ஆண் வாரிசுகள் இல்லை என்றால், அந்த குடும்பத்தின் பெண் வாரிசுகளை இந்தப் பொறுப்புக்கு இப்போதெல்லாம் தயக்கம் இல்லாமல் தயார் செய்கிறார்கள். சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் எதிரொலியாகவே இதைப் பார்க்கலாம். மகள்களிடம் தொழில் தலைமையை ஒப்படைக்க தயக்கம் காட்டும் நிலை மாறி வருவது, பெண்களின் திறமை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதையே காட்டுகிறது.

பெரும்பாலான தந்தைகள், தங்களது மகள் தொழில் தலைமையேற்பதற்கு தகுதியானவர்தான் என்பதை உறுதியாக நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பெரிய நிறுவனங்களில் மட்டும் இல்லாமல், நடுத்தர – சிறு – குறு தொழில்களிலும் காண முடிகிறது.

‘பெண்’ என்பவள், குடும்ப நிர்வாகத்தின் தலைமை பொறுப்புக்கு தயாரானால் போதும் என்ற, பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்த எண்ணங்கள் இன்று பெருமளவில் உடைபட்டு வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில்…. குறிப்பாக – வணிகம் தொடர்பான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் வீச்சு அதிகரித்து, அதில் பெண்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கிய பிறகு, தொழில் நிர்வாகத்தில் உள்ள பல தந்தைகளின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு உள்ளது எனச் சொல்லலாம்.

பல தலைமுறைகளைக் கடந்து… வழி வழியாக வந்து கொண்டிருந்த தொடர் சிந்தனை என்ற வலையில் இருந்து விடுபட, பல்கலைக் கழகக் கல்வி முறையில் முறையான தொழில் நிர்வாகம் சார்ந்த பட்டப் படிப்புகள் உதவி உள்ளன. உலகமயமான பொருளாதார சூழலில் பரந்துபட்டு பார்க்கையில் – பழைய நிலை மாறிக் கொண்டு உள்ளது. இதற்கு பல எடுத்துக் காட்டுகளை இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; தமிழகத்தில் இருந்தும் கூட சொல்லலாம்.

7

திருமதி. மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தின் முன்னோடி தொழில் குழுமங்களில் ஒன்று – அமால்கமேஷன். அதை வலுவான தொழில் பேரரசாக மாற்றியவர் மறைந்த திரு. சிவசைலம். அவரது மூத்த மகள் – திருமதி. மல்லிகா சீனிவாசன். ஆண் வாரிசு இல்லை. டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் / டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு. வேணு சீனிவாசனை மணந்து கொண்ட இவர், 1986-ல் அமால்கமேஷன் குழுமத்தின் ஒரு நிறுவனமான டாஃபேயில் பொது மேலாளராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி, தனது தந்தைக்கு சற்றும் சளைக்காத வாரிசு என பெயர் பெற்றதுடன், இன்று டாஃபே நிறுவனத்தை, உலகப் புகழ் பெற்ற டிராக்டர் உற்பத்தி நிறுவனமான மாற்றி உள்ளார். அவரது தங்கை மறைந்த, திருமதி. ஜெயஸ்ரீ வெங்கட்ராமன், இக்குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஆம்கோ பேட்டரீஸ்-ல் பொறுப்பேற்று, அதை சிறப்பான நிலைக்கு உயர்த்தினார்.

6

திருமதி. ராஜஸ்ரீ பதி

கோவையின் குறிப்பிடத்தக்க தொழிலதிபர் திரு. ஜி வரதராஜ். இவரது ஒரே வாரிசு – மகள் ராஜஸ்ரீ. மகளின் மீதான அன்பால், தான் தொடங்கிய சர்க்கரை உற்பத்தி நிறுவனத்துக்கு மகளின் பெயரையே வைத்தார். அதுதான் இன்றைய ராஜஸ்ரீ சுகர்ஸ்.
யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தந்தை காலமானபோது, 1990ல் ராஜஸ்ரீ சுகர்ஸ் மேலாண் இயக்குநராக பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை மகளுக்கு. அதை திறம்பட செய்தார். அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதற்குமான சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பான சுகர் ஃபெடரேஷனின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். இதைத் தாண்டி, அவரது கணவர் திரு. பதி நிர்வாகத்தில் இருந்த நூற்பாலை உள்ளிட்ட பல தொழில்களின் முன்னேற்றத்தில், வளர்ச் சியில் ராஜஸ்ரீயின் நிர்வாகத் திறமைக்கும் பங்கு உள்ளது.

5

திருமதி. ஆரத்தி கிருஷ்ணா

டிவிஎஸ் குழுமத்தின் இன்னொரு முக்கிய நிறுவனம், சுந்தரம் ஃபாசனர்ஸ். உலகத் தரத்திலான போல்ட் மற்றும் நட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு, பல கட்டங்கள் முன்னேறி, இன்று தனக்கென தனி இடம் பெற்று உள்ள நிறுவனம். இந்த அளவுக்கு இதை உயர்த்தியதில் பெரும் பங்காற்றிய திரு. சுரேஷ் கிருஷ்ணா, அண்மையில் தனது நிர்வாகப் பொறுப்புகளை, தனது இரண்டாவது மகள் திருமதி. ஆரத்தி கிருஷ்ணாவிடம் ஒப்படைத்து உள்ளார்.

மறைந்த திரு. டி.வி.எஸ் சுந்தரம் ஐயங்காரின் நான்கு மகன்களில், கடைசி மகனான திரு. டி. எஸ். கிருஷ்ணாவின் மகன் திரு. சுரேஷ் கிருஷ்ணா. திரு. சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ப்ரீத்தி, ஆர்த்தி, அருந்ததி என்று மூன்று மகள்கள்.
படிப்பை முடித்த பின்னர், 1990 ஆம் ஆண்டு ஆரம்ப நிலை பணியாளராக சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார், ஆர்த்தி. சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிறுவனத்தில் தொழில் உத்திகள் பிரிவிற்கு மேலாளராக உயர்ந்தார். இந்த பிரிவில் சிறப்பாக பணி புரிந்ததால், 1998- ம் ஆண்டு, பொது மேலாளர் பதவி அவரை வந்தடைந்தது.

இந்தியாவில் அதிகம் ஊதியம் பெரும் பெண் நிர்வாக இயக்குநர்களில் திருமதி. ஆர்த்தி கிருஷ்ணா முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளார்.
புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவதில் அதிக முனைப்புடன் செயல்படுபவர்.

சீனாவில் தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்களில் சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டி.வி.ஸ் குழுமத்தில், சுந்தரம் ஃபாசனர்ஸ், ஏழு பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு அண்மையில்தான் திருமதி. ஆர்த்தியை புதிய மேலாண் இயக்குநராக ஏற்றுக் கொண்டது. அதேபோல, இவரது தங்கை திருமதி. அருந்ததி கிருஷ்ணா தற்போது இணை மேலாண் இயக்குநராக ஆக்கப்பட்டு உள்ளார். இது மட்டுமல்ல. டிவிஎஸ் குழுமத்தில், இன்னும் பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் குடும்ப வாரிசுகளாக பெண்கள் இடம் பிடித்து உள்ளனர். சான்றாக, சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் திருமதி. ப்ரீத்தி முத்தண்ணா, டிவிஎஸ் ஸ்ரீசக்ரா டயர்ஸ் மேலாண் இயக்குநராக திருமதி. ஷோபனா ராமச்சந்திரன் என பட்டியல் நீள்கிறது.

4

திருமதி. லட்சுமி வேணு

திருமதி. மல்லிகா சீனிவாசன் மற்றும் திரு. வேணு சீனிவாசன் தம்பதியின் மகளான திருமதி. லட்சுமி வேணு, தற்போது சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்.
தந்தை வழியில் இந்த பொறுப்பை ஏற்று முழு பங்காற்றி வரும் அதே வேளையில் தாய் வழி நிறுவனமான டாஃபேவிலும் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். அண்மையில் இவர், திரு. மகேஷ் கோஜிநேனியை மணந்தார். லட்சுமி பொறுப்பேற்ற பின் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் பன்னாட்டு வாடிக்கையாளர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

3

திருமதி. ரோஷ்னி நாடார்

ஐடி மற்றும் ஐடி சேவைத்துறையில் தனிக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் எச்.சி.எல் நிறுவனத்தின் திரு. சிவ் நாடார்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர் கணினித் துறையில் மிகப்பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். இப்போது கல்வித் துறையிலும் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான ரோஷ்னி நாடார், எச்சிஎல்லின் பல தொழில் நிர்வாகப் பணிகளிலும் பங்கு கொண்டு அவரின் தொழில் வாரிசாகவும் திகழ்கிறார். தன் தந்தையின் பல நிர்வாக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதாகத் தெரிவிக்கிறார்.

2

திருமதி. நிசாபா கோத்ரெஜ்

நூற்று இருபது ஆண்டுகள் பழமை வாய்ந்த கோத்ரெஜ் குழுத்தில் தற்போது தலைமைப் பொறுப்பில் உள்ள திரு. ஆதி கோத்ரெஜ்-ன் இரண்டாவது மகள் திருமதி. நிசாபா.
இவர், தற்போது கோத்ரெஜ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமதி. நிசாபா இந்த நிறுவனத்தின் பல முக்கிய முடிவுகளை எடுத்து, அதை தற்போதைய நிலைக்கு உயர்த்தியவர். கடந்த ஆண்டு திருமதி. நிசாபா, இந்நிறுவனத்தின் செயல் தலைவர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டு உள்ளார்.

1

திருமதி. சுலஜா ஃபெரோடியா மோட்வானி

வட இந்திய தொழில் நகரங்களில் ஒன்றான பூனாவின் முன்னணி தொழில் நிறுவனம் கைனடிக் எஞ்சினியரிங். ”லூனா’ என்ற பெயரில் ஓடிய சிறிய மொபெட் வகை இரு சக்கர வாகன உற்பத்தியில் தொடங்கிய இந்நிறுவனம், பின்னர் பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட பல வாகனங்களை அறிமுகப் படுத்தி வளர்ந்தது. இந்த வளர்ச்சியின் நாயகன் திரு. அருண் ஃபெரோடியா. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில், இவருக்குத் துணை நின்று அந்த நிறுவனத்துக்கு மேலும் வலு சேர்ந்தவர், அவரது ஒரே மகளான திருமதி. சுலஜா.

இதைப் போன்று மகள்களைத் தொழில் வாரிசுகளாக்கி மகிழும் அப்பாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் என்று இல்லாமல் சிறு தொழில் நிறுவனங்களிலும் இந்த போக்கை அண்மைக் காலமாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக மகள்கள் மட்டுமே உள்ள அப்பாக்கள், முந்தைய தலைமுறையைப் போல தயங்கிக் கொண்டு இருக்காமல் துணிச்சலான முடிவுகளை எடுத்து மகள்களை சிறந்த நிர்வாகிகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்தி வெற்றி பெற்று வருகிறார்கள்.

– ஆர். சந்திரன்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here