விடுதிகள் நிறைந்த சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் எந்த உணவகம் திறந்தாலும் விற்பனைக்கு குறைவு இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்கிறார், திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் அபிநயா உணவகம் நடத்தும் முனைவர். ஜோதிபாசு.
ஊடகத் துறையைச் சேர்ந்த இவர் எப்படி உணவகத் தொழிலுக்கு வந்தார்? அவரிடம் கேட்டபோது,
”தஞ்சை மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள பழுக்காடு எங்கள் சொந்த ஊர். உள்ளூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 2011-ல் பிளஸ் டூ முடித்தேன். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியல் பி. ஏ., தமிழ் படிக்க இடம் கிடைத்தது. படிக்கும் போதே அனைத் திந்திய வானொலியில் பகுதி நேர தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வானேன். படித்துக் கொண்டே அந்த பணியையும் செய்து கொண்டு இருந்தேன்.
பி. ஏ., முடித்த உடன் அதே கல்லூரியில் எம். ஏ., தமிழ் படிப்பில் சேர்ந்தேன். முது நிலை படித்துக் கொண்டு இருந்த போதே சூரியன் பண்பலை வானொலியில் தொகுப்பாளர் பணி கிடைத்தது.
மாநிலக் கல்லூரியில் எம். ஏ., பட்டம் பெற்றதும், அங்கேயே எனது முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து அந்த பட்டத்தையும் பெற்றேன்.
சூரியன் பண்பலையில் என் நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்டு வந்த ஒரு நேயர், உணவகத் தொழிலுக்கு உள்ள வாய்ப்புகளைப் பட்டியலிட்டு, அந்த தொழிலில் முனைப்புடன் ஈடுபட்டால் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்றார். எனக்கும் அது சரி எனப் பட்டது. இதைத் தொடர்ந்து அபிநயா உணவகத்தைத் திறந்தோம்.
வழக்கமான உணவுகளுடன் சிறு தானிய தோசை, பலவகை மூலிகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம். எங்கள் உணவகத்தின் சைவ கொத்து பரோட்டா வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தது. தொடக்கத்தில் காலை, மாலைகளில் மட்டும் சிற்றுண்டி வகைகளை வழங்கி வந்த நாங்கள், நாளடைவில் மதிய உணவு வகைகளான கலவை சாதம் (வெரைட்டி ரைஸ்), காய் தோய் அடிசில் (பிரிஞ்சி) போன்ற வற்றையும் வழங்கத் தொடங்கினோம்.
ஓட்டல் தொழிலில் இறங்கிய ஒரு ஆண்டில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டோம். நல்ல பொருளைக் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் என்பதுதான் அது.
முதல் ஓட்டல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் உணவகம் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதில் என் துணைவியார் திருமதி. சவீதா பேரார்வம் காட்டினார். எப்படி ஒரு நேயர் எனக்கு தொழில் ஆலோசனை கூறினாரோ, அதைப்போலவே திருமதி. உஷா அம்மையார் என்ற நேயரின் மகள்தான் திருமதி. சவீதா.
இயற்கை உணவுகள் மீதான பார்வை மக்களிடம் தற்போது அதிகம் காணப்படுவதால், புதிய உணவகத்தில் மைதா, டால்டா, அஜினமோட்டோ, சீனி இல்லாத உணவுகளை தயாரித்து வழங்கு வது என்று முடிவு செய்தோம். குளிர் சாதனப் பெட்டியும் கூடாது என்று முடிவு செய்தோம்.
இந்த முடிவுகளுடன், உழவன் இட்லியகத்தை கடந்த ஏப்ரல் மாதம் மயிலாப்பூர், காரணீஸ்வரர் கோயில் தெருவில் திறந்தோம்.
இங்கு வழக்கமான சிற்றுண்டிகளுடன் கொழுக்கட்டை, குழிப்பணியாரம், சிறுதானிய தோசை, மூலிகை தோசை, சப்பாத்தி சன்னா மசாலா, சம்பா ரவா கிச்சடி, தாளித்த இட்லி போன்ற வற்றையும் கொடுக்கிறோம். ளுணவ கத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் உழவன் என்ற பெயர் தங்களுக்குப் பிடித்திருப்பதாகக் கூறினர்.
தரம், சுவை, நியாயமான விலை – இந்த மூன்றும் எங்களது உறுதியான நிலைப்பாடு.
தற்போதும் ஊடகத்துடன் ஆன எனது உறவு தொடர்ந்து வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியின் சிரிப் பொலி தொலைக் காட்சியில் ‘சிந்தனை சிரிப்பு’ என்ற நிகழ்ச்சியை நாள்தோறும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை தொகுத்து வழங்கி வருகிறேன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது மூத்த மகள் கவின்மொழியையும், இளைய மகள் இலக்கணாவையும் நன்கு கவனித்துக் கொண்டு, தொழிலிலும் ஆர்வத்துடன் இருக்கிறார், எனது மனைவி. என்னுடைய தம்பி திரு. முத்துகிருஷ்ணனும் உணவகத் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்.” என்றார் முனைவர். ஜோதிபாசு. (9840511673)
– ம. வி. ராஜதுரை