பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம்!

திறன் வாய்ந்த மாணவர்களை உருவாக்க, கல்வித் துறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்! டாக்டர் மு. அனந்தகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி.

Back
Next

நீட், இன்றைய டியூஷன் கலாச்சாரம்.

தமிழகத்தின் தொழில்துறை, அரசியல் போக்கு, சமூக அமைதி, இளைஞர்களின் திறன் என எந்த திசை திரும்பினாலும் சிக்கல்களுடன் சிக்கித் தவிக்கிறது, தமிழ் நாடு. அதே நேரத்தில் இவற்றுக்கான தீர்வுகள் நோக்கிய செயல்பாடுகளும் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரும், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வரும், தற்போது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மாற்றியமைக்க அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிப்பவருமான பேராசிரியர், முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம். வளர்தொழில் இதழுக்காக, அவருடனான சிறப்பு பேட்டியில் இருந்து….

”அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டியூஷன் சென்டர்களின் எண்ணிக்கை – ஒரு கலாச்சாரமாகவே உருவாகி வருவதாக உங்கள் மனக்குறையைத் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால், நீட் (NEET) போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய பின், மாணவர்களுக்கு வேறு வழிதான் என்ன?”

”இதற்கு தீர்வு, டியூஷன் சென்டர்கள் தான் என்பதை நான் ஏற்கவில்லை. உயர்கல்வி கற்பதற்காக மட்டுமே இன்று 32 விதமான வெவ்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது உருவாகியுள்ள டியூஷன் கலாச்சாரம்…. மற்றும் அவர்கள் வெளியிடும் விளம் பரங்கள் – ஒரு போலி பிம்பத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன.

அதிக பணம் செலவழித்து இந்த வகுப்புகளில் சேர முடியவில்லை என்ப தால், தாங்கள் தோற்று விடுவோம் என, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகிறது. தங்கள் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாமல் அவர்கள் சந்திக்கும் தேர்வில் சிறப்பான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்

இதுபோன்ற ஒரு கலாச்சாரம் அறிவில்.., அறிவியலில்…, தொழில் நுட்பத் தில் வளர்ந்த எந்த உலக நாடுகளிலும் இல்லை. பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பில் தொடங்கி, 12ம் வகுப்பு வரையான – அடிப்படைக் கல்வியில் அவர்களுக்கு சரியான பாடத்திட்டத் தைத் தந்து… புரிய வைத்துப் பாடம் நடத்தினால், நமது மாணவர்களால் எல்லா போட்டித் தேர்வுகளையும் வெற்றி கொள்ள முடியும், தற்போதைய டியூஷன் சென்டர்களின் உதவி இல்லாமலேயே.

இந்த கல்வியாண்டில், தமிழக பள்ளிகளில் நான்கு வெவ்வேறு வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மேலும் சில வகுப்பு களுக்கு என…. படிப்படியாக எல்லா வகுப்புகளுக்குமான பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் வருகின்றன.

இந்த பாடத் திட்ட மாற்றத்துக்கான குழுவுக்கு தலைமை ஏற்றதால் சொல்கி றேன், இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மத்திய அரசுப் பள்ளி பாடத் திட்டத்தை விட மேம்பட்டது. இதை எப்படி மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி தரும் திட்டமும் உள்ளது. அதனால், இவை நமது மாணவர்களை சரியாகச் சென்று சேரும் என நம்பு கிறோம். இந்த பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள், மிக எளிதாக எல்லா போட்டித் தேர்வுகளிலும் வெல்வார்கள். அதை இன்னும் சில ஆண்டுகளில் நாம் பார்க்க முடியும்.

”நுழைவுத் தேர்வுகள் என எதுவும் தேவையில்லை, +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற உங்களது பரிந்துரை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?”

”கடந்த பல ஆண்டுகளாக, நமது பள்ளிக் கூடங்களில்… குறிப்பாக, அதிக மதிப்பெண் பெற வைக்கும் வித்தை தெரிந்த பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையே மாறிவிட்டது. வினா வங்கி (Question Bank) என ஒன்றை வெளியிட்டு, இதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் எனச் சொல்லி விட்டு, அதில் மட்டுமே தேர்வு வைப்பதால், பல பள்ளிகளில் அதை மட்டும்தான் சொல்லித் தருகிறார்கள்.

அதோடு, +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. இதனால், +2 தேர்வில் 1200க்கு 1175 மதிப்பெண் பெற்று தேர்வானாலும், அந்த மாணவன்/ மாணவிக்கு அவர்களது பாடத்திட்டத் தில் உள்ள எது பற்றியும் ஆழமாகத் தெரிவதில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தற்போது புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை என்பதால்தான் அதற்கும் பொதுத் தேர்வு என்ற நிலை வந்து உள்ளது.

புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், இதில் மாணவர்கள் குறைந்த அளவாக எதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும், என் பதையும் பட்டியலிட்டு தருகிறார்கள். இவற்றை சிறப்பாக நடைமுறைப் படுத்தி னாலே, சோதித்து வந்தாலே, நல்ல விவரம் உள்ள, நம்பிக்கை தரும் மாணவர்களை உருவாக்க முடியும். காரணம், பாடத்திட்டத்தின் அடிப்படை யில் எங்கே, எப்படி கேள்வி கேட்டாலும், அதற்கு பதில் எழுத நம் மாணவர்கள் தயாராக இருப்பார்கள். இன்றைய டியூஷன் கலாச்சாரமும் தேவைப்படாது.”

Back
Next

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here