ஐயர்கள் போல மற்றவர்களும் திருமண சடங்குகளை நடத்தி சம்பாதிக்கலாம்!

திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகளை எல்லா சாதிக்காரர்களும் நடத்தலாம், தமிழிலேயே நடத்தலாம் என்கிற புரிதல் அனைவரிடமும் பரவி வருகிறது. இந்த துறையில் அய்யர்கள் சம்பாதிப்பதைப் போலவே மற்றவர்களும் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பலரும் கருதி வருகிறார்கள். இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அனைத்து சாதியைச் சேர்ந்த பெரியவர்களும் விரும்புகிறார்கள்.

இவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் தலைவர் ஆக முனைவர். பொன்னவைக்கோ இருந்த போது, எஸ்ஆர்எம் பல்கலைக் கழக துணை வேந்தர் திரு. பாரிவேந்தர் துணையுடன் அனைத்து சாதியினருக்கும் அருட்சுனை ஞர் பயிற்சி வழங்கும் ஓராண்டு பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்தினார். இந்த படிப்பு கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்துடன், தெய்வத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படிப்பு பற்றியும், இதைப் படித்தவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும், தெய்வத் தமிழ் அறக் கட்டளையின் தலைமை அறங்காவலரும், ஆகம விதிகளை முழுமையாக அறிந்தவரும், இது தொடர்பாக நிறைய நூல்களை எழுதி விழிப்புணர்ச்சி ஊட்டி வருபவரும் ஆன திரு. சத்தியவேல் முருகனார் கூறிய போது,

”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததை ஒட்டி மிகப் பெரிய சட்டப் போராட்டங்களை நடத்தி, எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான ஒரு ஆண்டு பட்டயப் படிப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம்.

வாழ்வியல் சடங்குகள் என்பவை தமிழ்ச் சமூகத்தில் ஒன்றிவிட்டவையாக உள்ளன. ஆனால் இவற்றை செய்ய ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே பணம் கொடுத்து அழைக்கும் நிலை இருக்கிறது. அவர்களும் இத்தகைய சடங்குகளை யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் நடத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். இது சமுதாயத்தின் சமநிலைக்கு எதிரானது.

எந்த வித வாழ்வியல் சடங்குகளை செய்தாலும், கோயில்களில் செய்யும் குடமுழுக்கு ஆனாலும், அர்ச்சனை செய்தாலும் தமிழிலேயே செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பேசியும், நூல்கள் எழுதி வெளியிட்டும் செய்து வருகிறோம். தொடக்கத்தில் தமிழ் வழிபாட்டு மன்றம் என்பதை நிறுவி அதன் மூலம் மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தோம். பிறகு இதற்கு பல்கலைக்கழக அறிந்தேற்பு வேண்டும் என்பதை உணர்ந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன், தெய்வத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் “தமிழ் அருட்சுனைஞர்” என்ற ஒரு ஆண்டு பட்டயப் படிப்பை 2011 – ம் ஆண்டு தொடங்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை ஏழு குழாமிற்கு (பேட்ச்) படிப்பு முடிந்து, எட்டாவது குழுமத்திற்கான சேர்க்கை இந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்து, வகுப்புகள் ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வருக்கின்றன.

ஒரு ஆண்டு பயிற்சியில் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய எட்டு தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக பயிற்றுவிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நூறு மாணவர்கள் பயிற்சி முடித்து வருகிறார்கள். இதுவரை எழுநூறு மாணவர்கள் முழுமையாக பயிற்சி முடித்து உள்ளார்கள். பயிற்சி கொடுப்பது மட்டும் இல்லாமல், வாழ் வியல் சடங்குகளை நிகழ்த்தும் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி முறைகளையும் வழங்குகிறோம். பொது வாக அர்ச்சனை என்பது இப்போது ஆண்கள் மட்டுமே செய்வதாக உள்ளது. ஆனால் பழங்காலத்தில், தமிழக வழிபாட்டு முறையில் ஆண்கள், பெண்கள் இரு பாலரும் இணைந்தே அர்ச்சனை செய்து வந்து உள்ளனர். பிந்தைய காலக் கட்டத்தில்தான் ஆண்கள் மட்டுமே செய்யும் நிலை வந்து உள்ளது.

அருட்சுனைஞர் பயிற்சி வகுப்பில் ஆண், பெண் இருபாலரும், எந்த சாதியை சேர்ந்தவரும், வயது வரம்பு இல்லாமல் சேர்ந்து படித்து பட்டயம் பெறலாம். எட்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். படிப்பை முடித்து வருபவர்களை ஒருங்கிணைத்து www.archakar.com என்ற இணைய தளத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து விடுகிறோம்.

இதன் மூலம் எங்களை நேரடியாக திருமண நிகழ்ச்சி, கோவில் போன்றவற்றிற்க்கு அர்ச்சகர் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, பயிற்சி முடித்திருப்பவர்களை அனுப்பி வைக்கிறோம். மக்களும் நேரடியாக இந்த வலைத்தளத்திற்கு சென்று பயிற்சி முடித்த அர்ச்சகர்களை தங்கள் வீட்டில் நடக்கும் வாழ்வியல் சடங்குகளை நடத்தி வைக்க அழைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயிற்சி முடித்தவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நல்ல அனுபவமும், குடும்பங்களின் தொடர்புகளும் கிடைக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்தும் நிறைய தமிழர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு அர்ச்சகர் வேண்டும் என்று கேட்கிறார்கள். இவ்வாறு இலங்கை, மொரிசியஸ், தென்னாப் பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் கேட் பதைத் தொடர்ந்து, அந்த நாடுகளுக்கும் அர்ச்சகர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக் கிறார்கள். வெளிநாடு களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர் களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒரு புத்தாக்க பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கிறோம்.

அருட்சுனைஞர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பிலேயே இருந்து வருவார்கள். ஒரு மூத்த அர்ச்சகருடன் இரண்டு மாணவர்களை அனுப்பி வைப்பதால் மாணவர்களும் நேரடியாக கற்றுக் கொள்ள முடிகிறது. ஆண்டுதோறும் ஒரு மாநாடு நடத்தி அதன் மூலம் இவர்களை ஒருங்கிணைக்கிறோம்.

அனைத்து சாதியினரும் தமிழ் வழியில் சடங்குகள், வழிபாடுகள் செய்யலாம் என்பதை ஊடகங்கள் வழியாகவும், மாநாடுகள் மூலமாகவும் மக்களிடம் பரப்புரை மேற்கொள்கிறோம். இதனால் நிறையப் பேர்கள் தமிழ் வழி அர்ச்சகர்களை சாதிகளைப் பார்க்காமல் நாடி வருகிறார்கள்.

இலங்கையில் தமிழில் சடங்கு செய்வதை விரும்புவதால், அவர்கள் தமிழ் வழி அர்ச்சகர்களை நிறைய கேட்கிறார்கள். ஆண்டுதோறும் தமிழ் வழி அர்ச்சகர்கள் தேவை, உயர்ந்து வருவதால் இந்த பயிற்சியை முடித் தவர்கள் முழு நேர அர்ச்சகர்களாகி தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்.

அர்ச்சனை என்ற சொல் தமிழ்தான். முதலில் தமிழில்தான் அர்ச்சனைகள் நடைபெற்று வந்தன. பிறகு கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்தது போல வடமொழி நுழைந்த பின் அர்ச்சனை என்பது வடமொழிச் சொல் என்று நினைக்கும் நிலை உருவாகி விட்டது. அர்ச்சனை, சடங்குகள் செய்வதற்கான அனைத்து சொற்களும் தமிழில் இருக்கின்றன. புதிதாக எதையும் உருவாக்கத் தேவையில்லை. நம்முடைய தமிழ் மொழி அந்த அளவுக்கு வளமான மொழி.

ஒரு சாதிதான் என்று இல்லாமல் அனைத்து சாதியினருமே அர்ச்சனை செய்து உள்ளனர். காலப்போக்கில் அதில் செயற்கையாக மாற்றங்கள் ஏற்படுத் தப்பட்டன. சம உரிமைக்கு எதிரான இந்த மாற்றங்களை புறம்தள்ளி நம் உரிமையை மீட்டு எடுப்பதை அடிப்படையாகக் கொண்டு நாற்பதாயிரம் நூல்களைப் படித்து, முறைப்படி ஆகம விதிகளைக் கற்று, அவற்றை பயிற்சியின் மூலம் அனைத்து சாதியினரிடத்தும், ஆண், பெண் வேறுபாடில்லாமல் கொண்டு சேர்த்து வருகிறோம்.

சிறு கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகைய பூசாரிகளும் அர்ச்சகர் பயிற்சியில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

இன்று மக்களுக்கு தமிழ் வழி அர்ச்சனை விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், தமிழ் வழி அர்ச்சனைகள் இன்று நிறைய கோவில்களில் நடைபெறுகின்றன.

பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டயம் மட்டும் கொடுக்காமல் “செந்தமிழ் ஆகம அந்தணர்” என்ற பட்டத்தையும் கொடுக்கிறோம். எந்தெந்த சடங்குகளுக்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்பதை முறைப்படுத்தி சொல்கிறோம். சடங்குகளுக்கு தேவையான பொருட்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதனை வலைத் தளத்தில் தெளிவாக வெளியிட்டு இருக்கிறோம்.

அருட்சுனைஞர் பயிற்சியில் சேர்வ தற்கான விண்ணப்பங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. தமிழ் வழியில் சடங்குகள் செய்வது எப்படி என்பது குறித்த தெளிவான விளக்கங்களுடன் நூல்களும் வெளியிட்டு உள்ளோம்.

கனடாவில் இருந்து ஒருவர் என்னை அழைத்து இருந்தார். அவரிடம் நான் வந்து செல்ல நிறைய பயணச் செலவாகும். அதை விட நான் எழுதிய நூலைப் படித்து நீங்களே சடங்குகளைச் செய்யலாம் என்று ஆலோசனை சொன்னேன். அவரும் புத்தகம் படித்து சடங்குகளைச் செய்தார். இப்போது அவரே ஒரு ஆகம அந்தணர் ஆக இருந்து மற்றவர்கள் வீடுகளில் நடக்கும் வாழ்வியல் சடங்குகளையும் இவரே செய்து வருகிறார். திருமண சடங்குகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் www.dheivamurasu.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். என்றார், செந்தமிழ் ஆகம அந்தணர் திரு. சத்தியவேல் முருகனார்.

-செழியன். ஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here