எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை..
”என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை பெற்றவர். புதுச்சேரியில் அம்மா வீடு, அரவிந்தர் ஆசிரமம் அருகில் இரண்டு தெருக்கள் தள்ளி பெல்கோம் தெருவில். எனவே, புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில்தான், 1948 இல் நான் பிறந்தேன். இப்போது எனக்கு வயது 72.
நான் இங்கே சென்னை, கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். கலைஞர் வீட்டுக்கு அருகில்தான் சுற்றுவேன். அடுத்து பச்சையப்பன் கல்லூரியில் வணிகஇயல் படித்தேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து, எலைட் இலக்கியக் கழகம் நடத்தினோம். அங்கே ஆங்கிலத்தில்தான் கட்டுரைகள் வாசிப்போம்.
அப்போது மெயில் என்ற ஆங்கில நாளேடு சென்னையில் வெளியாகிக் கொண்டு இருந்தது. அங்கே வேலை செய்த ஒருவருடைய வீட்டில்தான், எங்களுடைய இலக்கியச் சந்திப்புகள் நடக்கும். அதைப்பற்றி அவர் மெயில் இதழில் எழுதுவார். எங்கள் பெயர்களை எல்லாம் எழுதுவார்.
நான் படித்தது எல்லாம் தமிழ் வழியில். ஆங்கில அறிவு தானாக வளர்ந்து கொண்டது. எங்கள் வீடு போயஸ் தோட்டத்தில் இருந்தது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில், அமெரிக்கன் சென்டர் அப்போதுதான் புதிதாகக் கட்டினார்கள். அங்கே ஒரு நூலகம் அமைத்தார்கள். முழுமையும் குளிர்பதனம் செய்து இருந்தார்கள்.
அந்த நூலகத்தில் என்னை ஒரு உறுப்பினராக அப்பா சேர்த்து விட்டார். ஒரு முறைக்கு 3 புத்தகங்கள் தருவார்கள். வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்ப் படிக்கலாம். அந்த நூலகத்தின் அமைப்பு, குளிர்பதன வசதிக்காக, நான் பகலில் பெரும்பாலான நேரங்கள் அங்கேயே உட்கார்ந்து படிப்பேன். வீட்டுக்கு 3 புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருவேன்.
பெரிய பெரிய ஆங்கிலப் புத்தகங்கள், ஆப்பிரிக்க இலக்கியங்கள் புரியாவிட்டாலும் அதை வாசித்தேன். அதற்காக, மொழிபெயர்க்கக் கற்றேன்.
அதாவது, முதலில் அதை நான் மொழிபெயர்ப்பேன். சொல் அகராதி வைத்து எழுதுவேன். பிறகு அதைத் தமிழில் ஒரு கட்டுரைபோல எழுதி, அதை வாசித்துப் புரிந்து கொள்வேன். அது எனக்கு எளிதாக இருந்தது. இப்படித்தான் மொழிபெயர்த்துப் படித்துக்கொண்டே இருந்தேன்.
எனது தந்தை ஒரு ஓவியர். டி.பி. ராய் சௌத்திரியிடம் பயிற்சி பெற்றவர். சில காலம் தனியாக இயங்கினார். சேவா சதன் போன்ற இடங்களில் வேலை செய்தார். எங்கள் வீட்டுக்கு ஓவியர்கள், இலக்கியவாதிகள்தான் வந்து போவார்கள். அவர்களோடு பேசிக்கொண்டே இருப்பதுதான் அப்பாவுக்கு வேலை.
இவர்கள் பேசுவதை எல்லாம் நான் கேட்டுக்கொண்டு இருப்பேன். இத்தகைய சூழலில்தான் வளர்ந்தேன். முதலில் நான் படங்கள் வரைந்து கொண்டு இருந்தேன். அப்படியே எழுதத் தொடங்கி விட்டேன். அந்த ஆர்வம் வளர்ந்தது. அதையே முதன்மையாகக் கைக்கொண்டு விட்டேன்.
என் தந்தை முருக வழிபாடு செய்பவர். நானும் அப்படித்தான். ஆனால், தீவிர மதவெறி கிடையாது. சாதி வேறுபாடுகள் பிடிக்காது. அது ஒன்றுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய தீமை. உலகில் வேறு எந்த மதத்திலும், இத்தகைய சாதி வேறுபாடுகள் இல்லை. அதை நான் ஏற்பது இல்லை. கண்டித்து எழுதி இருக்கின்றேன்.
இந்த நிலையில், இந்தியன் வங்கியில் சேர்ந்தேன். மராட்டிய மாநிலம் ஒளரங்காபாத் கிளையில் வேலை. அங்கே இரண்டு ஆண்டுகள் இருந்தேன். அருகில்தான் அஜந்தா,எல்லோரா இருக்கின்றது.வார விடுமுறைகளில் அங்கே போய்விடுவேன். நிறையப் படங்கள் வரைந்தேன்.பிறகு மும்பைக்கு மாறிச் சென்றேன்.
அவரது எழுத்துகளை வாசிக்கும்போதுதான், அவர் மிகப்பெரிய ஆளுமை என்பது புரிந்தது. ஆனால் அப்போதும்கூட, அவரை ஒரு சாதித் தலைவராகத்தான் ஆக்கி வைத்து இருந்தார்கள்.
வடாலா கிளையில் இரண்டு வேலை நேரம். காலை ஏழு மணி முதல் பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 வரை. எனவே, இடைப்பட்ட ஐந்து மணி வேலை கிடையாது.
ஆனால் நான் மின்தொடரி மாதச்சீட்டு எடுத்து வைத்து இருந்தேன். அந்த வேளையில், வி.டி. ஸ்டேசன் போவேன். அதற்கு எதிரேதான், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு அலுவலகம் இருக்கின்றது.ஒரு நாள் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டேன். ஆசிரியரைச் சந்திக்க வேண்டும் என்றேன். எம்.வி. காமத் என்ற ஆசிரியரை, மிக எளிதாகச் சந்திக்க முடிந்தது.
நீங்கள் வெளியிடுகின்ற இல்லஸ்ட்ரேடட் வீக்கி இதழில், வட இந்தியக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே எழுதுகின்றீர்கள். தென் இந்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதே இல்லை என்றேன்.
அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். பிறகு சொன்னார்:
தென் இந்தியக் கலைஞர்களுக்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் இல்லை; ஆனால், அவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதித் தர எங்களிடம் யாரும் இல்லை; ஏன், நீங்கள் எழுதிக்கொடுத்தாலும் நான் வெளியிடுகின்றேன் என்றார்.
அன்று இரவு முழுமையும் கண்விழித்து உட்கார்ந்து, சோழமண்டலம் கலைக் கிராமத்தைச் சேர்ந்த கே.எம். கோபால் என்பவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அவருடைய சில படங்கள் என்னிடம் இருந்தன.
அனைத்து இந்தியப் பதிப்பில் வெளியிட்டு விட்டார்கள்.
அப்படியே நான் தொடர்ந்து எழுதினேன். டைம்ஸ் ஆஃப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், பிளிட்ஸ் இதழ்களில் எழுதினேன்.
பிளிட்ஸ் ஆசிரியர் ஆர்.கே. கரஞ்சியாவை ஒரு நேர்காணல் எடுக்குமாறு, தமிழ்நாட்டில் உள்ள குங்குமம் வார இதழ்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்காக அவரைச் சந்தித்தேன். அவரை நேர்காணல் கண்டு எழுதினேன். குங்குமம் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது.
தமிழில் தொல்காப்பியர் மிகப்பெரிய அழகியல்வாதி. ஆனால், அவரை இலக்கணப் பண்டிதனாகவே மட்டுமே ஆக்கி வைத்து இருக்கின்றார்கள்.அவர் ஒரு மிகப்பெரிய ஈஸ்தடீசியன் என நம்மவர்கள் யாரும் எழுதவில்லை. ஐயப்ப பணிக்கர் என்ற மலையாள அறிஞர்தான் எழுதினார். தொல்காப்பியத்தின் திணைக் கோட்பாடை, ஒரு பெரிய அழகியல் கோட்பாடாக அவர் வரையறுக்கின்றார்.
தமிழ்நாட்டில் உள்ள பழங்காலக் கலைப்பொருட்களை அளவிடக்கூடிய ஒரு அழகியல் கோட்பாட்டை நாம் ஆக்கியாக வேண்டும். அதை நம்முடைய சாரத்தில் இருந்து ஆக்க வேண்டும். அதற்குப் பெயர், தமிழ் அழகியல். அப்படி ஒரு நூல் நான் எழுதினேன்.
அதை, தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி படித்துவிட்டு, இந்திரன் என்னுடைய பார்வையை நீங்கள் மாற்றி விட்டீர்கள் என்றார். அதை, இலங்கையில் பல்கலைக்கழகப் பாடப்புத்தமாக வைத்தார்.
அதன் அடிப்படையில், தமிழ் ஆர்ட் என்ற தலைப்பில், பாரிஸ் நகரில் நான் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தினேன்.
திருவடி மலர்கள் எனும் மரபுக் கவிதைகள் என்னுடைய முதல் புத்தகம். ஞானம்பாடி என்ற பெயரில் எழுதினேன். காரணம், நான் சிறுவனாக இருந்தபோது, அனைத்து இந்திய வானொலிக்கு, ஞானம்பாடி என்ற பெயரில் மெல்லிகசப் பாடல்கள் எழுதினேன். நான் கிட்டத்தட்ட 40 நூல்கள் எழுதி இருக்கின்றேன். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவின்போது, முதல்வர் கலைஞர் என்னை அழைத்தார்.
133 அதிகாரங்களுக்கு, 133 நவீன ஓவியர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையுங்கள் என்றார். 48 இலட்சம் ரூபாய் திட்டம் அது. நான்தான் கியூரேட்டர். அப்போது, நான் வங்கியில் வேலை செய்து கொண்டு இருந்தேன்.
நான் எழுதிய ஆய்வு நூல்களை இறையன்பு ஐ.ஏ.எஸ் வாசித்து இருக்கின்றார். அவர்தான் முதல்வரிடம் என் பெயரைப் பரிந்துரை செய்து இருக்கின்றார். அதன்படி, நான் 133 ஓவியர்களைக் கொண்டு ஓவியங்களை வரைந்து, கன்னியாகுமரியில் கண்காட்சி நடத்தினேன். கண்காட்சியைக் கலைஞர் திறந்து வைத்தபோது, நானும் உடன் இருந்தேன்.
காலை பத்து மணிக்கு கண்காட்சி திறப்பு விழாவின்போது, அதை மிக அழகாக எடுத்துச் சொன்னார். அவர் பேசியதைக் கேட்டு எனக்கு வியப்பாக இருந்தது. உடன் வந்த அனைவருக்குமே வியப்புதான். அப்படி ஒரு ஆற்றலாளர் கலைஞர்.
என் இயற்பெயர் இராஜேந்திரன். எனவே, டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்திரன் என்ற பெயரில் எழுதினேன். இப்போதும் அதே பெயரில் தொடர்கின்றேன். அப்பா பெயர் கஜேந்திரன். அம்மா பெயர் சிவசங்கரி. நான் இராஜேந்திரன்; தம்பி மகேந்திரன் என்பதால், இந்திரன் குடும்பம் என்ற பொருளில் பெயரை மாற்றிக் கொண்டேன். மும்பையில் இருந்தவரையிலும் நான் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வந்தேன்.
என் எழுத்துகளை நானே தட்டச்சு செய்கின்றேன்.
– அருணகிரி