LATEST ARTICLES

அசைக்க முடியாத ‘ஆவின்’ பிராண்ட்!

0
ஆவின் – வதந்தி பரப்பும் விஷமிகள்
‘ஆவின் விற்பனை படுத்துவிட்டது’ ‘ஆவினுக்கு மூடுவிழா’ என்று விஷமிகள் வதந்தி பரப்புகின்றனர்.
ஆவின் பிராண்ட் தமிழ்நாட்டின் பெருமிதம்.
ஆவின் பல லட்சம் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் வழங்கும் காமதேனு. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத குறைவான விலையில் நுகர்வோருக்கு பால் வழங்கும் ஒரே நிறுவனம்.
அண்ணாமலையின் ‘குஜராத்’ பாசம்
ஓர் ஆண்டுக்கு முன் ‘நந்தினி’ பால் பிராண்டை அழித்து குஜராத்தின் ‘அமுல்’ பால் பிராண்டை கர்நாடகாவில் திணிக்க முயன்றது கர்நாடக பா.ஜ.க. ‘கன்னட பெருமிதம்’ மிக்க கர்நாடக மக்கள் கர்நாடக பா.ஜ.க ஆட்சிக்கு பால் ஊற்றிவிட்டார்கள்.
தமிழ்நாட்டின் விவசாய கூட்டுறவுகளிலும் குஜராத் அமுல் நிறுவனம் ஆக்கிரமிப்பதை தமிழ்நாட்டு முதல்வர் தட்டிக்கேட்டார். ஒன்றிய கூட்டுறவு அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியதை ‘தப்பான முகவரிக்கு கடிதம் எழுதுகிறார்’ என்று பொய் பரப்பியவர் அண்ணாமலை. இப்போது, ஆவினுக்கு எதிராக கடைந்தெடுத்த பொய்களை
பரப்பி வருகிறார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பால்’ என்று பேசும் அண்ணாமலை & கோ வின் ‘குஜராத்’ பாசத்துக்கு தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் மரண அடி கொடுப்பார்கள்.
சீமானின் கார்ப்பரேட் பாசம்
ஆவின் பாலில் யூரியாவையும் பிளீச்சிங் பவுடரையும் கலப்பதாக வதந்தி பரப்பும் சீமான் கார்ப்பரேட் பால் கம்பெனிகளுக்கு ‘நெருக்கமானவர்’ என்பதால்தான் இப்படி வதந்தி பரப்புகிறார் என்று தமிழக பால் உற்பத்தியாளர்கள் கழுவி ஊற்றுகினறனர்.
புத்தெழுச்சி பெறும் ஆவின்
ஆவின் பால் தட்டுப்பாடு என்ற மிகப்பெரிய சவாலை சமாளித்து கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் சீரான பால் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சராசரி 3.5 சதம் கொழுப்புச் சத்து என்பது இயல்பாகவே பசுவின் பாலில் உள்ள சத்து என்பதால், 3.5 சதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் பாலை அறிமுகம் செய்து பிரபலமாக்குகிறது ஆவின். வைட்டமின் A மற்றும் D சத்துக்கள் சேர்த்து உடல் நலத்துக்கு உகந்ததாக டிலைட் பால் விநியோகிக்கப் படுகிறது. பால் விற்பனையிலும் பால் பொருட்கள் விற்பனையிலும் சாதனை படைத்துவருகிறது ஆவின்.
இது பொறுக்காமல் அலறுகிறது ஒரு வீணர் கூட்டம். இதே பாலை மற்ற நிறுவனங்கள் 12 ரூபாய் அதிக விலைக்கு விற்பது குறித்து இவர்கள் வாய் திறப்பதில்லை.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது பற்றியோ விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது பற்றியோ மூச்சு விடுவதில்லை. ஒரு லட்சம் கறவை மாடுகளை குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி பால் கொள்முதலை அதிகரிக்க செய்யப்படும் முயற்சிபற்றி பேசுவதில்லை. ஆவின் பற்றி வதந்தி பரப்பும் விஷமிகளை தமிழ்நாட்டு மக்கள்
விரட்டியடிக்க வேண்டும்.
ஆவின் பிராண்ட் தமிழ்நாட்டின் பெருமிதம்.
– சுசி. திருஞானம், புன்னகை
May be an image of 1 person and text that says 'aavin ஆவின் தமிழ்நாட்டின் பெருமிதம்.!'
All reactions:
Guna, Tamil and 6 others

மெக்காலே – பழமைவாதக் கல்வியின் பகைவன் – நூல் அறிமுகம்

0
நானும் அத்தகையதொரு மூடநம்பிக்கைக்குள் மூழ்கிக் கிடந்தவன்தான். என்னமோ இந்த மெக்காலே வந்துதான் நம்ம கல்விமுறையே பாழாய்ப் போன மாதிரி… ஆனால் மெக்காலே மட்டும் இந்தக் கல்வி முறையை கொண்டுவராமல் போயிருந்தால் எந்த ஊர்ல…. எந்தத் தெருவுல திருவோட்டுடன் திரிந்திருப்பேன் என்பது அந்த வெள்ளையர்களுக்கே வெளிச்சம். அதனை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டிட வந்திருக்கிறது ஒரு புத்தகம். அதுதான் : ”மெக்காலே – பழமைவாதக் கல்வியின் பகைவன்.” நண்பர் இரா. சுப்பிரமணி எழுதியது. . சரி…. இந்த ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் நமது கல்விக்கூடங்கள் எந்த லட்சணத்தில் இருந்தன என ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகள் விளங்கும் நமக்கு. அன்று கல்வி கற்க வேண்டும் என்றால்….ஒன்று :வேத பாடசாலைகள். அல்லது குருகுலப் பள்ளிகள். முதலாவதின் பக்கம் நாம் மழைக்குக்கூட ஒதுங்க முடியாது. இரண்டாவது வகைப் ”பள்ளிகள்” எந்த லட்சணத்தில் இருந்தன என்பதற்கு சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்தி வந்த குருகுலமே சாட்சி. மாணவர்கள் உணவு உண்ணும் இடத்தில் கூட… அவாளுக்குத் தனிப் பந்தி… இவாளுக்குத் தனிப் பந்தி…. என அநீதியாய் நடத்தப்பட்ட அந்த குருகுலத்திற்கு எதிராக எழுந்ததுதான் சேரன்மாதேவி குருகுல போராட்டம். மிகச்சரியாக 99 ஆண்டுகள் முன்பு நடந்த அந்த போராட்ட வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையில் குருகுலப் பள்ளிகள் என்பது என்ன? அவை யாருக்கானவை? என்பது. நாட்டு விடுதலைக்காக முன்நின்று ”போராடிய” வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலப் பள்ளியே இந்த யோக்யதையில் இருந்தது என்றால் மற்ற குருகுலப் பள்ளிகள் எந்த கதியில் இயங்கியிருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்னர் என்றால்….? வணிகனாய் வேடமிட்டு வந்த வெள்ளையன் நம்மை வளைத்த கதையையும் அதனால் பட்டபாடுகளையும் நாம் ஏற்கெனவே பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்.அதையும் தாண்டி அவர்கள் கொண்டு வந்த சிற்சில சீர்திருத்தங்களையும்அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் மறந்து விட்டு ஆங்கிலேயர்களைக் கணித்து விட முடியாது. . ”சதி” தொடங்கி “சாரதா” சட்டம் வரையிலும் அவர்களால் உண்டான மாற்றங்களையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தமிழகத்தில் பெரும்பாலானோர் தொடாத இந்தப் பக்கத்தைத் தோண்டி துருவி ஆய்ந்து எடுத்து நமக்கு அளித்திருக்கிறார் பெரியார் பல்கலைக் கழகப் பேராசிரியரான நம் நண்பர். ”யார் இந்த மெக்காலே தெரியுமா… இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும்… எண்ணத்தால் வெள்ளையர்களாகவும் நம்மை மாற்றி வெறும் குமாஸ்தாக்களாக உருமாற்ற கொண்டு வந்த திட்டம்தான் இந்த மெக்காலே கல்வித் திட்டம்….” என்று மெக்காலேவின் முதல் பகுதியை மட்டும் உருமாற்றி “நீட்”டிமுழங்குவார்கள்…. ஆனால்… “இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டுப் பெயரீட்டு முறைகளில் இருந்து அறிவியல் சொற்களைக் கடன் பெற்று நாம் இந்த மக்களுக்கு வழங்குவோம். அது அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும் ஊர்தியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு செலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்.” என்கிற மெக்காலேவின் பிற்பகுதியை இருட்டடிப்பு செய்து விடுவார்கள். இந்தக் கல்வி முறை ஆபத்தானது என்று இங்கு மட்டுமல்ல…. பிரிட்டன் மண்ணிலும் எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ”ஆங்கிலத்தையும்…. அதன் மூலம் அறிவியலையும்… தொழில் நுட்பங்களையும்…. இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுப்பது என்பது நமக்கே நாம் வைத்துக் கொள்ளும் ஆப்பு” என்று அங்கிருந்தோரும்…. “கண்டவனெல்லாம் படிக்க வந்துட்டா நம்மவா கதி என்னாகிறது?” என்று இங்கிருந்தோரும் ஒருசேர எதிர்த்ததுதான் மெக்காலே கல்வித் திட்டம். ”நாம் இதனை நியாயமாகவும், பொறுமையோடும் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செயல்படுத்தினால் மகிழ்ச்சியான நல்லதொரு மாற்றத்தை நம்மால் காணமுடியும். அந்த மாற்றம் நமக்கான பயன்களை அளிக்கக் கூடியதாகவும் ஆதாயம் தரக்கூடியதாகவும் இருக்கும்” என்று மெக்காலேவுக்கு முன்பு… 1793 ஆம் ஆண்டே ஆங்கிலேய அரசுக்கு அறிக்கை அளிக்கிறார் சார்லஸ் கிராண்ட். மெக்காலேவின் இக்கல்வித் திட்டத்தை ராஜாராம் மோகன்ராய் உட்பட பலர் வரவேற்றதையும்….இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கத்தில் மெக்காலேவின் பங்களிப்பினையும்…இக்கல்வித்திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்தியாவிலும் பிரிட்டனிலும் ஒலித்த குரல்கள் குறித்தும்… எண்ணற்ற தகவல்களைச் சொல்கிறது : சாளரம் வெளியீடாக வந்திருக்கும் “மெக்காலே (பழமைவாதக் கல்வியின் பகைவன்)” என்கிற இந்நூல். நம்மிடம் மட்டுமல்ல நம் நண்பர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணம் இது. இந்த புத்தகத்துக்காக நீங்க போட்டுத் தாக்க வேண்டிய எண் : 8248338118 May be an image of 1 person and text that says 'மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன் இரா. சுப்பிரமணி' – எழிற்கோ பாமரன் சண்முகசுந்தரம்

அனைத்து இந்து ஜாதிகளுக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை! வெற்றியை நோக்கி சட்டப் போராட்டம்!

0
“அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் திட்டம் இந்தியா காணாத மாபெரும் புரட்சித் திட்டம்” என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் ஆகியவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளன. இது குறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தலைவர் வா.ரங்கநாதன் தமது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தில் ஒரு மாபெரும் புரட்சியைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிகழ்த்தியுள்ளது. 1969இல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து,பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித்து கலைஞர் சட்டம் இயற்றினார். அதனை எதிர்த்து சேஷம்மாள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். 1972இல் சேஷம்மாள் தீர்ப்பு வந்தாலும், ஆகமத்தை மீறக்கூடாது என்றும் தீர்ப்பில் சொன்னதால், அர்ச்சகர் நியமனம் செய்ய இயலவில்லை. கலைஞர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியதால் தி.மு. கழகம் 2006- ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 23.5.2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும் திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் ஜாதி பாகுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். மாணவர்கள் ஆகமம், வேதம், மந்திரம் கற்று தீட்சை பெற்றனர். மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் தடை வாங்கினர். 2009ல் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளையும், இந்து மத அமைப்புகள் சார்ந்த கட்சிகளையும் சந்தித்து எங்களின் சிக்கல்களைக் கூறினோம். எங்களுடைய வழக்குக்காக தெருமுனைகளிலும், பேருந்து நிலையங்களிலும், கடை வீதிகளிலும், சாலைகளிலும், அனைத்து இடங்களிலும் வசூல் செய்தும், கருவறையில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்கான பட்டினிப் போராட்டம், சாலை மறியல், கருவறையில் நுழையும் போராட்டம் போன்ற அனைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டும், தற்போது வரை எங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல இடையூறுகளைக் கடந்து, ஆகமக் கோயில்களில் முறையாகத் தமிழ் முறைப்படி, சமஸ்கிருத, வேத மந்திரங்களும் முறைப்படி கற்று தீட்சை பெற்றோம். இன்று ஆகமக் கோயில்களில் பூஜை செய்வதற்கான தகுதியோடு நாங்கள் இருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் நியமனம் நடைபெறவில்லை. 2021-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்ற நூறாவது நாளில், அனைத்து இந்துக்களையும் ஆகமக் கோயில்கள் உள்ளிட்ட பல தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்தார். பெண் ஓதுவாரையும் நியமித்தார். இதனை எதிர்த்தும், அர்ச்சகர் விதிகளை எதிர்த்தும் 30-க்கும் மேலான வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 26.03.2022 முதல் இன்று வரை தமிழ்நாடு முதலமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் இதற்குத் தீர்வு காணும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், தற்போது பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் மாதந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. கருவறையில் தீண்டாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள், பல எதிர்ப்புகளும் தடைகளும் செய்து வருகின்றனர். இதுதான் ஸநாதனம். அந்த வழக்குகள் இந்து சமய அறநிலையத்துறையால் முறியடிக்கப்பட்ட நிலையில், திருச்சி வயலூர் முருகன் கோவில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்ட மத உட்பிரிவினரைத் தவிர மற்றவர்களை ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க முடியாது எனச் சொல்லி அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்தார். அதற்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு தடையாணை பெறப்பட்டுள்ளது. இச்சூழலில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர், குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை, சென்ற வாரம் முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். தற்போது நடப்பு கல்வியாண்டு 2023 – 2024 ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவற்றில் 11 மாணவிகள் சிறீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பயின்று வருகின்றனர். அர்ச்சகர் நியமனங்களி லும், அர்ச்சகர் பயிற்சிகளிலும் பாலின சமத்துவத்தை உருவாக்க “கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குச் செல்லலாம்” எனத் தமிழ்நாட்டு பெண்களைப் போற்றும் வகையில், திருக்கோயில்களில் பாலின பாகுபாடின்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பணி நியமனத்திற்குத் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் போராட்டத்தில், கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், இதுவரையிலான கோரிக்கை என்பது, அனைத்து இந்துக்களும், அதாவது அனைத்து ஆண்களும் அர்ச்சகராக வேண்டும் என்பதுதான். தற்போது நிகழ்ந்துள்ள மாபெரும் புரட்சி என்னவென்றால் அர்ச்சகர் நியமனத்தில் பாலின பேதமும் தகர்க்கப்பட்டுள்ளது என்பதே. 3 மாணவிகள் மாபெரும் கனவோடு அர்ச்சகர் படிப்பை முடித்துள்ளனர். அடுத்து அர்ச்சகர்களாக நியமனம் பெறக் காத்திருக்கிறார்கள். பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மாபெரும் சமத்துவப் புரட்சியாக நிலைத்து நிற்கும். ஆனால் ஆலயங்களில் சமத்துவத்தை விரும்பாத, ஏற்கனவே கோயில்களைத் தங்களின் சொந்த சொத்தாகக் கருதும் பார்ப்பன அர்ச்சகர்கள், இந்த மாபெரும் சமத்துவப் புரட்சியை ஏற்கவில்லை. கோயில்கள் மீதான தங்கள் அதிகாரம் பறிபோகும் எனக் கருதிப் பதறி, உடனே மதுரை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும், அர்ச்சகர் படிப்பு முடித்துள்ளோருக்கு கோயில்களில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வழக்குகள் கொடுத்துள்ளனர். இந்த வழக்குகளை முறியடிக்க இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. எல்லோரும் இந்துக்கள், எல்லா இந்துக்களும் சமம், ஸநாதன தர்மம் எல்லா இந்துக்களையும் சமமாக கருதுகிறது என்றெல்லாம் பேசும் ஆர்எஸ்எஸ், பாஜக, விசுவ இந்து பரிசத், சங் பரிவார் அமைப்பினர், குறிப்பாக மோடி, அமித்ஷா, அண்ணாமலை போன்றோர் ஆலயங்களில் அனைத்து இந்துக்களும், குறிப்பாக இந்து பெண்களும் அர்ச்சகராவதற்கு என்றாவது பேசியுள்ளார்களா? தமிழ்நாட்டில் மதுரை, திருவரங்கம், திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பெரிய கோயில்களில் இன்று வரை தமிழர்கள், குறிப்பாகக் கவுண்டர், தேவர், வன்னியர், செட்டியார், நாடார், கோனார், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட எவரும் அர்ச்சகராக முடியவில்லை என்ற நிலை, சுதந்திரம் பெற்று அரசியல் சட்டம் வந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் நீடிப்பது அவமானகரமானது. இந்து பெரும்பான்மை மக்களின் நலனுக்காக இட ஒதுக்கீடு முதல் கோயில் அர்ச்சகர் வரையிலான திட்டங்களைச் செயல்படுத்தி வருவது திராவிட இயக்கங்கள் தான். குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஆலயங்களில், ஜாதி, பாலின சமத்துவத்திற்கு அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவ சமுதாயத்திற்காக, குறிப்பாக அரசியல் சட்டத்தில் பிரிவு 25 2(தீ)யின் அடிப்படையில் இந்து சமய மத நிறுவனங்களை எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.’ -இவ்வாறு அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். தேவதாசி, உடன்கட்டை, பால்ய விவாகம் வரிசையில் பட்டனப்பிரவேசம்!” - அர்ச்சகர்  பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் குமுறல்! | nakkheeran

தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பின்னால் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகள்!

வெற்றியின் வெளிச்சங்கள் அந்த அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. ஒளிர்ந்து கொண்டிருந்த கோயம்பேடு வெளி வளாகச் சாலையில் ஓரம் கட்டி நின்ற பேருந்தில் இருந்து நானும், எனது சென்னை நண்பரும் கீழே இறங்கினோம். நாங்கள் ஏறிய ஆட்டோ அம்பத்தூர் எஸ்டேட்டை நோக்கி மேற்காக பறந்து செல்லத் தொடங்கியது. சாலை எங்கும் வெறிச் சோடி இருந்தாலும் வெளிச்சம் மட்டும் குறையவேயில்லை. முப்பது அடிக்கு ஒரு மின் கம்பம் வீதம் துரத்திக் கொண்டே வந்து, தனது வெளிச்ச ரேகைகளை வழியெங்கும் விசிறியடித்துக் கொண்டிருந்ததது. “அட..டா! எத்தனை வெளிச்சம்? என சற்று வாய் விட்டே மகிழ்ந்த என்னை அப்படியே ஏற- இறங்கப் பார்த்த என் சென்னை நண்பர், சற்று ரிலாக்சாக பேசத் தொடங்கினார். “மும்பய் நகரம் பெற்றிருக்கும் அதே 24 மணி நேர சுறுசுறுப்பை நமது சென்னை மாநகரமும் இன்றைக்குப் பெற்றுள்ளது. இது ஒரு மாநகரத்தின் வளர்ச்சி. ஏன் ? இது நமது தமிழ் கூட்டத்தின் வளர்ச்சி”- என சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டே போனார். அவரது பேச்சு அப்படியே படிப்படியாக முன்னேறிச் சென்று பல கிளைகளாகப் பிரிந்தது. ஆம் நண்பர்களே….! இன்றைக்கு கொட்டிக் கிடக்கும் வெளிச்சம் என்பது, வெறும் விளக்கு வெளிச்சம் மட்டுமல்ல. மாறாக, இந்த வெளிச்சம், தொலைநோக்குப் பார்வை கொண்ட திராவிடத்தின் வெளிச்சம். தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்ட தன்னிகரற்ற வெளிச்சம். சென்னை – திருபெரும்புதூர் என்றாலே, அங்கு நிறுவப்பட்டு உள்ள “செயின்ட் கோபைன்”- என்ற தென் கொரிய நாட்டு கண்ணாடித் தொழிற்சாலை நினைவுக்கு வரும். இதற்குப் பின்பு, அதே திருபெரும்புதூருக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையில் கொரியன் நாட்டு “ஹூண்டாய்”- கார் கம்பெனி. இது 1996- ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த பின்பு, இந்த மண்ணில் நடந்த மிகப் பெரிய ஆட்டோ மொபைல் – தொழிற் புரட்சி வியப்பை உருவாக்கிய ஒன்று ஆகும். இந்த ஒரே ஒரு ஆட்டோ மொபைல் நிறுவனம் இங்கே வந்த பிறகு அதனைச் சார்ந்து சுமார் 400 துணை நிறுவனங்கள், ஹூண்டாய் மோட்டார்சுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கத் தொடங்கி விட்டன. ஹூனண்டாய் மோட்டார்ஸ் பத்துக்கும் மேற்பட்ட கார் வகைகளை இங்கே தயாரித்து உலகின் 87 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. உற்பத்தியை ஆரம்பித்த முதல் பத்து ஆண்டுகளில் பத்து லட்சம் கார்களை தயாரித்த நிறுவனம், இன்றைக்கு 31 நொடிகளுக்கு ஒரு காரை தயாரித்து வருகிறது. இத்தனை விரைவான மாற்றங்கள் எங்கிருந்து தொடங்கியது ……? அன்றைய தி.மு.க. அரசு தனது தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த அனுபவங்களை வைத்தும், தமிழ் நாட்டின் வலிமையான உள் கட்டமைப்பு வசதிகளை முன் வைத்தும் ஒரே ஒரு கொரியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த நிறுவனம் உள்ளே வந்த நேரத்தில் நிலவிய சர்வதேச சந்தைப் பெருக்கத்தால், அதன் உற்பத்தி முழு வீச்சினை எட்டியது. இதனால், வேலை வாய்ப்புகள் பல்கிப் பெருகியதுடன், துணைத் தொழில்களும் வேர் பிடித்துக் கொண்டன. இது மிகப் பெரிய பொருளாதார சுழற்சியையும், நம் தேசத்திற்கு கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியையும் பெருக்கின. அத்துடன் பிற போட்டி நிறுவனங்களும் தானாகவே உள்ளே வந்தன. அப்புறம் என்ன ? இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் இடத்தில் இருந்த மராட்டிய மாநிலத்தை கீழே இறக்கி விட்டு, அந்த முதல் இடத்தை தமிழ்நாடு கைப்பற்றிக் கொண்டது. மாறி வரும் சர்வ தேச சந்தைகளின் போக்குகள். அதற்கு பொருத்தமான முடிவுகளை எடுக்கும் மாநில அரசு. அந்த முடிவுகளை ஆதரிக்கும் ஒன்றிய அரசு. வெளி நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அகச் சூழல்கள்- என இந்த அத்தனை காரணிகளையும் “திராவிட மாடல்”- என்ற வெற்றிச் சூத்திரம் ஒரே நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தி வைத்தது. என் மனதிற்குள் இந்த செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும் போதே, நாங்கள் பயணித்து வந்த ஆட்டோ தனது இலக்கை வந்தடைந்திருந்தது. கீழே இறங்கிய என்னை, எதிரே இருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு அன்புடன் வரவேற்றது. “எடிட்டர் சார்!. இது தான் நம்ம அலுவலகம் மற்றும் வீடு எல்லாம். உங்கள் களப்பணிகள் முடியும் வரைக்கும் தாங்கள் இங்கே தங்கிக் கொள்ளலாம். இதில் தடையேதுமில்லை”- என கூறிய நம் சென்னை நண்பர், கீழ் தளத்தில் காத்திருந்த லிப்ட் ஐ நோக்கி நடந்தார். நானும் அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். வந்த வேகத்தில் அப்படியே குளித்து ரெடியாகி இன்றைய களப் பணிக்கு தயாரான என்னிடம் நண்பர் தன்னுடைய பைக் சாவியையும், பெட்ரோ கார்டையும் என் கையில் திணித்து விட்டு, புறப்பட்டார். அதே வேகத்தில் லிப்ட்டில் ஏறி கீழிறங்கி வந்து பார்க்கிங்கில் உள்ள பைக்கை எடுத்து கொண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பின் இரும்பு கேட்டைக் கடந்து வெளியேறி முதன்மைச் சாலையை வந்தடைந்தேன். புத்துணர்ச்சியோடு விரைந்து கொண்டிருக்கும் சென்னை வாசிகளை மனதிற்குள் ரசித்தபடியே அம்பத்தூர் தொழில் பேட்டை என்ற மிகப் பெரிய பெயர் பலகையின் கீழே வந்து நின்றேன். அந்தப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை எல்லாம் வரிக்கு வரி படித்தேன். 1950- களின் பிற் பகுதியில் போடப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின்படி, இந்தியாவெங்கும் பல்வேறு வகையான தொழில் பேட்டைகள் தொடங்கப்பட்ட போது, தமிழ்நாட்டுக்கு முதலில் கிண்டி தொழிற் பேட்டையும் பிறகு அம்பத்தூர் தொழிற் பேட்டையும் கிடைத்தன. அம்பத்தூர் எஸ்டேட் -டூ – வில்லிவாக்கம் சிட்கோ நகர் – ஒரு அரைமணி ஓட்டம். தொழிற்பேட்டையின் பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு பொறுப்பு அதிகாரியின் அலுவலக அறைக்குள் சென்றேன். உள்ளே நுழைந்த மாத்திரத்தில்……, “வாங்க சார்! நீங்க அனுப்பிய மெயில் பார்த்தேன். மீடியாக்காரங்க எல்லாம் சிட்க்கோவுக்கு கண்டிப்பாக நேரில் வாங்க. வந்து இங்கே என்னதான் நடக்கிதென்று உன்னிப்பாக பார்த்து எழுதுங்க.” அவர் காட்டிய இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டிருக்கும் போதே இரண்டு நபர்கள் அந்த அறைக்குள் வந்தார்கள். “ஏம்பா… நீங்க ரெண்டு பேரும் வெல்டர்கள் தானே?. “ஆமாங்க சார்” “அந்த ஏ- த்ரீ பிளாக்ளே மதீனா கிரில்ஸ்- க்கு ரெண்டு வெல்டர் எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். கூடவே ரெண்டு ஃபிட்டர் இருந்தாலும் கூட்டிட்டுப் போங்க”- என அவர்களைப் பார்த்து கட்டளையாக கூறி விட்டு அந்த இரண்டு லேபர்களின் விபரங்களை பதிவு ஏட்டில் பதிந்து கொண்டார். அடுத்து இரண்டு நபர்கள் வந்தார்கள். “உங்களுக்கு என்னப்பா! லோடு தானே?. அந்த ஈ- சிக்ஸ் பிளாக் சூப்பர் பர்னிச்சர்லே ஒரு நான்கு நடை அளவுக்கு ஸ்கூல் பர்னிச்சர் லோடு ரெடியாக உள்ளது. அந்த ஓனர்ட்டே விபரம் சொல்லி சரக்குகளை லோடு செஞ்சுக்கங்க! ” “சரிங்க சார்!” “ஏப்பா…. உங்களது ஏய்ச்சர் வண்டிதானே?. எங்கே வண்டி நம்பரை சொல்லு”- என விபரங்களை கேட்டு வாங்கிக் கொண்டு, அவர்களை அனுப்பி வைத்து விட்டு அடுத்து காத்துக் கொண்டிருந்த இளைஞரை உள்ளே அழைத்தார். “வணக்கம் சார்! எஸ்.எஸ்.ஐ. மோகன் சார் அனுப்பினார்”. “வாங்க தம்பி! உங்களது பேப்பர்ஸ் எல்லாம் ரெடியாகிருச்சு. உள்ளே சைட்- டை நேர்லே போய் பாருங்க. இந்த வாரத்திலேயே ஃபேப்ரிகேஷன் வேலையை தொடங்கி விடலாம். நீங்க ஆரம்பிக்கிற டெய்லரிங் யூனிட்டிற்கு தேவையான “ரா மெட்டீரியல்”-ஐ சரியான ரேட்லே சிட்கோ- வே வாங்கித் தரும். அது போல, உங்கள் ப்ரொடக்‌ஷன் பொருளை சரியான சந்தையில் மார்க்கெட்டிங் செய்தும் தரும். அதற்கு என தனியாக ஒரு மார்க்கெட்டிங் டீமே சிட்கோ-வில் வைத்து உள்ளோம். அதே போல, ஆண், பெண் டெய்லர்களும் நம்ம கைவசம் உள்ளார்கள். வணிக ரீதியாக எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்”. “ரொம்ப தேங்கஸ் சார்!. எல்லா விபரங்களையும் மோகன் சார் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார். நம்ம தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த உதவிகளும், இப்படியான தனிப்பட்ட அரிதான உதவிகளும் என்னைப் போன்ற வளரிளம் தொழில் முனைவோர்களுக்கு உற்சாகம் தரும்தாதானே சார்.”- என அந்த பட்டதாரி இளைஞன் மன நெகிழ்வுடன் பேசினான். “தமிழ்நாடு முழுக்க 120 சின்னச் சின்ன “சிட்கோ” சக்கரங்கள் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது தம்பி”- என கூறிய படியே சிரித்து என்னை வழியனுப்பி வைத்தார் – அந்த பொறுப்பு அதிகாரி. (இன்னும் வரும்)

– அஷ்கர் அலி, பள்ளப்பட்டி

வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் சோதிடம்

அறிவியல் பார்வை அற்றவர்கள் சில பல்கலைக்கழகங்களில் சோதிடக் கலையை ஒரு பாடமாகச் சேர்த்துள்ளார்கள். அனைத்துப் பல்கலைகழகங்களிலும், கல்லூரிகளிலும் இதை பாடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு முறை பேசும் போது, ”நான் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு வானத்திலுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்நாட்டின் குழந்தைகளின் கண்களைப் பார்த்தால் போதும். அவர்கள் கண்களில் மகிழ்ச்சியும், பிரகாசமும் நிறைந்திருந்தால் அது இந்நாட்டின் வளமான எதிர்காலத்தைக் காட்டும். மாறாக அவர்கள் கண்களில் அழுகையும், சோகமும் நிறைந்திருந்தால் நாட்டின் எதிர்காலம் வெறுமை நிறைந்ததாக இருக்கும்” என்றார். ”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மேன்மையடைந்திருப்பதற்கும், தாழ்ந்த நிலையில் இருப்பதற்கும் அவனது செயல்களே காரணம் என்றார். ஆனால், பெரும்பாலானவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. உயர்ந்தால் அதற்கு காரணம் ‘தான்’ என்றும், தாழ்வு வரும் போது இச்சமுதாயமும் காரணம் என்றும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்  வழக்கமுமே அதிகமுள்ளது. பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற சோதிடர்கள் பெருகும் போது, மக்களை ஏமாற்றும் கூட்டம் தான் அதிகரிக்கும்.  பல்கலைகழகங்களில் உள்ள படிப்புகளெல்லாம் பல்லாண்டு காலமாக ஆராய்ந்து அவற்றின் உண்மைகளின் அடிப்படையிலும், சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு அது பயன்படும் என்பதைப் பொருத்தும் பாடங்களும், பாடத்திட்டங்களும் வகுக்கப்படுகின்றன. சோதிடக் கலை பயின்றவர்கள் எப்பிரிவில் சேர்க்கப்படுவர்? கலை அறிவியல் பயின்றவர்களா? தொழில் நுட்பக் கல்வி பயின்றவர்களா?  சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த சோதிடர்களை நம்பி உள்ளதையும் தொலைத்து விடுபவர்கள் நிறைய உண்டு. பல இளம்பெண்கள் இதற்கு இரையாகிறார்கள். வங்கிகளை எடுத்துக் கொள்வோம். இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வாரக்கடனாக உள்ளது. ஆனால், இப்போது அனைத்து வங்கிகளிலும் நிறையப் பணம் இருக்கிறது. ஆனால், அந்தப் பணத்தை இலாபகரமான தொழில்களின் முதலீடு செய்ய வகை தெரியாமல் தவிக்கிறார்கள் வங்கியாளர்கள். இந்தச் சிக்கல் ஒரு புறமிருக்க வங்கிகளின் நிர்வாகங்கள் அதிகாரிகள், அலுவலர்களின் பங்கு (Accountability) என்ற ஒன்றைப் புகுத்தியிருக்கிறார்கள். கொடுத்த கடன் வரவில்லை என்றால் வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் பங்கு அதிலென்ன என்று ஆராய்கிறார்கள். ஊழியர்களின் தவறு தான் கொடுத்த பணம் வராமைக்குக் காரணம் என்றறிந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் பதவி நீக்கம், தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மனதில் கொண்டும், கடன் கொடுப்பதற்கான முடிவை எடுப்பதற்கு காலதாமதம் செய்கிறார்கள் அல்லது முடிவெடுப்பதே இல்லை. அறிவுப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதிலேயே இப்படி என்றால், சோதிடரை வைத்துக் கொண்டு பணம் கொடுப்பதற்கு முடிவெடுக்கும் முன் முதலில் வங்கியிலிருக்கும் சோதிடருக்கல்லவா கோப்புகளை அனுப்பி அவருடைய ஆருடத்தைக் கேட்டறிவார்கள். அவர் சொல்வது தான் இறுதி முடிவாக இருக்கும். கொடுக்கலாமென்றால் கொடுப்பார்கள், இல்லையென்றால் கிடைக்காது. சோதிடர் சொல்லி கொடுத்த கடன் திரும்ப வந்து விடும் என்பது என்ன நிச்சயம்?. மனித சமுதாயம் இன்று அனுபவித்து வரும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் சோதிடம் பார்த்திருந்தால் கிடைத்திருக்குமா? மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் சோதிடம் பார்த்திருந்தால் இன்று நாம் எதை அனுபவிப்போம்? இன்று தொலைக்காட்சிப் பெட்டி ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் அமர்ந்து கொண்டு உலகின் மூலை முடுக்குகளில் நடப்பவைகளை எல்லாம் தெரியப்படுத்துகிறது. தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் சோதிடம் பார்த்திருந்தால் தொலைக்காட்சி வந்திருக்குமா? ‘ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது ஞற்றுபவர்’ என்று உழைப்பின் பெருமையைச் சொன்னார் வள்ளுவர். முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் சிலர் கால நேரம் பார்க்காமல் உழைப்பிலேயே கவனம் கொண்டு முன்னேறுகிறார்கள். கொஞ்சம் வசதி சேர்ந்தவுடன் போதுமென்ற மனமும், மெத்தனப் போக்கும் நுழைந்து விடுகிறது, முன்னேற்றம் தடைப்படுகிறது. சோதிடர்களையும், சாமியார்களையும் தேடி அலைகிறார்கள். இவர்களின் பலவீனத்தை அவர்கள் முதலாக்கிக் கொள்கிறார்கள். சென்னை சரவணபவன் ஹோட்டல் முதலாளி மணமான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் மேலும் வாழ்வில் முன்னேறலாம் என்ற சோதிடனின் பேச்சைக் கேட்டார், அனைத்து புகழையும் இழந்தார். நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட்டு முடிவு எய்தினார். ஆட்சியிலுள்ளோரும், பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளோரும், தொழில் அதிபர்களும் சோதிடர்களை நம்பத் தொடங்கினால் சமுதாயத்தையே பாதிக்கும், பொருளாதார வளர்ச்சி குன்றும், தொழில் வளர்ச்சி அற்றுப் போகும். இதனால் சோதிடர்களைத் தள்ளி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழிலும், நாடும் வளரும். உயர்நிலையை அடையும். இதற்கு நல்ல சான்று, இன்று வளர்ந்திருக்கும் நாடுகள் தான், சோதிடத்தைப் ‘பார்த்தவன் வென்றதில்லை; வென்றவன் பார்த்ததில்லை’ என்ற முதுமொழியை என்றும் நம் நினைவிற் கொள்ள வேண்டும். ஆ.கருணாகரன், கொச்சி  

எப்பொழுதுமே இலக்கு என்பது இயலக் கூடியதாக இருக்க வேண்டும். வட்ட நிலாவை கைக்குள் அடக்க முனையும் கனவாக அது இருக்கக்கூடாது. எது தன்னம்பிக்கை? எது அசட்டுத் துணிச்சல்?

”என்னால் முடிந்ததை முடியும் என்று நினைக்க வேண்டும். முடியாததை முடியாது என்று நினைக்க வேண்டும். இவ்வாறு நினைப்பது முதல்படியாகும். அடுத்து இதை உணர வேண்டும். உணர்ந்த பிறகு அனுபவப்பட வேண்டும் இப்படியாக என்னை நான் உணர்ந்து கொள்ளும்போது, அறிந்து கொள்ளும்போது தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. எனது முடிவுகள் தெளிவாக இருக்கும்பொழுது செயல்கள் தீர்க்கமாக இருக்கும். செயல்களின் விளைவுகள், கிடைக்கக்கூடிய பயன்கள் எதிர்பார்த்தபடி அமையும். முடியும் என்று நம்புவதை எப்படி தன்னம்பிக்கை என்கிறோமோ, அதேபோன்று என்னால் செய்ய முடியாததை, நான் சரியாக உணர்ந்திருந்தால், தெரிந்திருந்தால் அதுவும் தன்னம்பிக்கைதான். முடிந்ததை முடியும் என்றும், முடியாததை முடியாது என்றும் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை வளரவளர துணிச்சல் அதிகமாகிறது. இலக்கும் செயலும் ஒத்துப்போகும் எனில் அதை வெற்றி என்று கூறுகிறோம். தன்னம்பிக்கை, துணிச்சல், தைரியம் மூன்றும் ஒன்று சேரும்பொழுது எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகிறது. இதற்கு மாறாக, என்னால் முடியாததை முடியும் என நினைத்து செயல்படும்பொழுது எடுத்த செயலை முடிக்க முடியாமற் போய் விடுகிறது.  இலக்கை அடையாமல் போகும் பொழுது தோல்வி அடைந்ததாகச் சொல்லுகிறோம். இந்தத் தோல்வியால் தைரியம் குறைந்து, தன்னம்பிக்கை வீழ்ந்து விடுகிறது. துணிச்சல் போய்விடுகிறது. துவண்டு விடுகிறோம். வாழ்க்கையில் வேறுபாடுகள், விதிவிலக்குகள் எப்பொழுதும் உண்டு. இந்த வேறுபாடுகள், விதி விலக்குகள் எதார்த்தமானதாக, இயல்பானதாக, பெரும்பான்மையானதாக மாற முடியாது. இவை எல்லாம் எதார்த்தத்தில் சராசரி மற்றும் இயல்பாக நடக்கக் கூடியவைதாம். ஆனால் இவற்றைக் கூர்ந்து கவனித்தால், நிதானம் அடிப்படையாகப் பற்றி ப‍ரவி இருக்கும். என்றோ ஒருநாள், எப்பொழுதோ ஒரு தடவை, யாருக்கோ நடப்பதை வைத்துக் கொண்டு, என்னால் ஏன் முடியாது. ஏன் சாத்தியமில்லை என்று கருதி ஒருமுறை முயன்றால் அதற்குப் பெயர் முயற்சி. இதன் முடிவுகள் எதிர்பாராததாக, வேறுபாடாக இருப்பினும் கூட ‘பார்த்துவிடலாம்’ என அடுத்தடுத்து முயற்சித்தால்… அதற்குப் பெயர்தான் அசட்டுத் துணிச்சல். உள்ளதை உள்ளவாறே தன்னால் ‘முடியாது’ என்றாலும்- அவ்வாறே உணர்வது கோழைத்தனம் அல்ல. குழப்பம் அல்ல, பின்னடைவு அல்ல. அசட்டு என்றாலே அடிப்படை இல்லாதது, ஒழுங்கு இல்லாதது, அறியாமையுடனானது, அர்த்தமற்றது என்று பொருள்படும். ஒருவருடைய துணிச்சல் அசட்டுத்தனமாக இருந்தாலும் இதே பொருள்தான். இந்த அசட்டுத் துணிச்சல் என்றாவது ஒருநாள் பயனளிக்கும். அதுவும் கூட அசட்டுத் தனமாகவே இருக்கும். எனவே அசட்டுத் துணிச்சலை நம்பி அடியெடுத்து வைப்பது வெற்றிக்கு வழிவகுக்காது. யாராக இருந்தாலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் நம்பிக்கை மற்றும் உறுதி, தைரியம் போய்விடும். எனவே, தன்னம்பிக்கையோடு இருப்பது மிகச் சிறந்தது. துணிச்சலோடு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அசட்டுத் துணிச்சல் ஆபத்தானது. தன்னால் இதைச் செய்ய முடியாது என்று தெரிந்து கொள்வது தோல்வி அல்ல. தனக்கு இது இயலாது என்று அறிந்து கொள்வது தன்னம்பிக்கைக் குறைவு அல்ல, அதைத் தெளிவு என்கிறோம். தன்னால் இதைச் செய்யமுடியாது என்று தெரிந்து கொள்வது தோல்வி அல்ல. தனக்கு இது இயலாது என்று அறிந்து கொள்வது தன்னம்பிக்கைக் குறைவு அல்ல, அதைத் தெளிவு என்கிறோம். இதனால் ஒரு முறைதான் தோற்கலாம். அந்தத் தோல்வியை சரியாக ஆராய்ந்து பார்த்து இதை ‘நம்மால் செய்ய முடியும்’ என்று தெரிந்து கொள்வதைத்தான் அறிவு என்கிறோம். இதைப் பெற வேண்டும். வாழ்க்கையில் மேலே போகிறோமோ இல்லையோ கீழே போகாமல் இருப்பதே மிக முக்கியமானதாகும். நாம் குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிட்டால் சும்மா இருக்கப் போவதில்லை. அடுத்த இலக்கை நோக்கி முன்னேறப் போகிறோம். இப்படியே இலக்கு என்பது அடுத்தடுத்ததாக போகிறது. இதற்குப் பெயர் தான் படிப்படியாக முன்னேறுதல். எப்பொழுதுமே இலக்கு என்பது இயலக்கூடியதாக இருக்க வேண்டும். வட்ட நிலாவை கைக்குள் அடக்க முனையும் கனவாக அது இருக்கக்கூடாது. அப்பொழுது தான் தன்னம்பிக்கை வளர வாய்ப்பு இருக்கும். அது தான் வெற்றிக்கு உறுதியான, தெளிவான, தீர்க்கமான வழியமைத்துக் கொடுக்கும்’ என்கிறார் டாக்டர் மா.திருநாவுக்க‍ரசு.

இளம்பூரணன்.

     

தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் பலவித பொருட்கள்..

உலக தேங்காய் உற்பத்தியில் 75 விழுக்காடு இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இலங்கையிலிருந்து  கிடைக்கிறது. இந்தியாவின் 18 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 19.1 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1500 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 60 விழுக்காடு சமையலுக்கும், வீட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. தென்னையிலிருந்து பதனீர், கற்கண்டு, வெல்லம் கிடைக்கின்றது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெயைத் தவிர தேங்காய்ப் பால், தேங்காய்ப் பால் பொடி, உலர்த்திய தேங்காய்ப்பூ, தேங்காய் பாற்குழைவு, தென்னை இளநீர், தேங்காய் நீர், தேங்காய் சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை பயிரிடுதல், தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் பலவித உணவுப் பொருட்கள், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், தொடர்புடைய தொழிற்சாலை இவற்றில் சுமார் 10 மில்லியன் ஆட்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. தேங்காய் எண்ணெய் மொத்த தேங்காய் உற்பத்தியில் 33 விழுக்காடு ஆலைக் கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. புதிய கொப்பரைத் தேங்காயில் 45-50 விழுக்காடு ஈரப்பதம் இருக்கும். ஒரு மெட்ரிக் டன் கொப்பரைக்கு 7000 தேங்காய்கள் தேவைப்படும். முற்றிய கொப்பரையில் 65-70 விழுக்காடு எண்ணெய் இருக்கும். ஒரு டன் கொப்பரையிலிருந்து சுமார் 645 கிலோ தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் 40 விழுக்காடு சமையலுக்கும், 50 விழுக்காடு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கும், 10 விழுக்காடு பல்வேறு தொழில்களுக்கும் பயன்படுகின்றன. தேங்காய் எண்ணெயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட தேங்காய் எண்ணெய், மருந்துகள் சேர்க்கப்பட்ட வாசனை கூந்தல் எண்ணெய் Perfumed Hair Oil), சரும தைலம் தயாரிக்கலாம். தாவர எண்ணெய்களில், தேங்காய் எண்ணெயில் மட்டுமே அதிகளவில் (13.5 விழுக்காடு) கிளிசரின் உள்ளது. ஃபேட்டி அமிலம் (Fatty acid) ஆல்கஹால், கிளிசரின், லாரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களையும் தேங்காய் எண்ணெயிலிருந்து தயாரிக்கலாம். எண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் புண்ணாக்கு நல்ல பயனுள்ளது. தேங்காய் புண்ணாக்கு கலந்த தீவனத்தை, கோழிகள், கால்நடைகள் விரும்பி உண்ணும். தேங்காய்ப்பூ உலர்த்திய தேங்காய்ப் பூவில் ஈரப்பதம் 3 விழுக்காடு, கொழுப்புச் சத்து 65 விழுக்காடு, லாரிக் அமிலம் 0.3 விழுக்காடு, இதர திடப் பொருட்கள் 32 விழுக்காடு இருக்கும். மிட்டாய்கள், கேக் வகைகள், பிஸ்கட்டுகள் போன்ற தின்பண்டங்கள் செய்வதற்கு தேங்காய்ப்பூ பயன்படுகிறது. உலர்த்திய தேங்காய்ப்பூ தயாரிக்கும் பல சிறிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் உள்ளன. சுமார் பத்தாயிரம் முற்றிய தேங்காய்களிலிருந்து ஒரு டன் தேங்காய்ப்பூ தயாரிக்கப்படுகிறது. உலர்த்திய தேங்காய்ப்பூவிற்கு உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல கிராக்கி உள்ளது. தேங்காயை உடைத்து உடனே பயன்படுத்துவதை விட உலர்த்திய தேங்காய்ப்பூவை பயன்படுத்துவது எளிது. உணவுப் பண்டங்கள், இனிப்பு வகை தயாரிப்பாளர்கள் உலர்ந்த தேங்காய்ப்பூவிற்கு வண்ணம் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் 50க்கும் அதிகமான தேங்காய்ப்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 2500 டன் உலர்த்திய தேங்காய்ப்பூ தயாரிக்கின்றன. பாக்கெட்டுகளில் கிடைக்கும் தயார் நிலை உலர்ந்த தேங்காய்ப்பூவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தேங்காய்ப்பால் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளில் தேங்காய்ப் பால் சேர்ப்பதால், உணவில் சுவையும், மணமும், ஊட்டச்சத்தும் கூடுகின்றது. தேங்காயிலுள்ள புரதம், கொலஸ்டிராலைக் குறைக்கும் குணம் உள்ளதென ஆராய்ச்சி கூறுகின்றது. சமையலில் தேங்காயை அப்படியே அரைத்து விழுதாக பயன்படுத்துவதால் சத்துக்கள் விரயமாகிறது. தேங்காயைப் பாலை உடனடியாக பயன்படுத்திடவிட வேண்டும். இல்லையேல் தேங்காய்ப்பால் விரைவில் கெட்டுவிடும். தேங்காய்ப்பாலில் 56.3 விழுக்காடு ஈரப்பதம், 4.1 விழுக்காடு புரதம், 33.4 விழுக்காடு கொழுப்பு, 5 விழுக்காடு கார்போஹைட்ரேட் மற்றும் 1.2 விழுக்காடு சாம்பல் சத்துள்ளது. பால் எடுத்த பின் உள்ள சக்கையில், 35 விழுக்காடு எண்ணெய் இருக்கும். நவீன முறையில் சிரமமின்றி தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் தேங்காய்ப்பால் சுத்தமாக இருக்கும். சக்கை வழியாக விரயமாகும் எண்ணெயின் அளவும் மிகவும் குறைவு. தேங்காய்ப்பால் எடுத்தபின்பு கிடைக்கும் சக்கையைக் கொண்டு சட்னிப் பொடி தயாரிக்கலாம். செறிவூட்டப்பட்ட தேங்காய்ப்பால் குழைவில் 30-40 விழுக்காடு கொழுப்புச் சத்து இருக்கும். ஆசிய பசிபிக் தென்னை சமுதாய (APCC) நிர்ணய அளவுப்படி, 20 விழுக்காட்டிற்கும் அதிகமான கொழுப்புச் சத்து இருந்தால், அது தேங்காய்ப்பால் குழைவு என்றும் ஐந்து முதல் 20 விழுக்காடு வரை இருந்தால், அது தேங்காய்ப்பால் எனப்படுகிறது. தேங்காய்ப்பால் பொடி (மாவு) பதனப்படுத்தப்பட்ட உலர்த்தப்பட்ட தேங்காய்ப் பால் பொடி நிலையில்  உள்ள பால் பொடி (மாவு) ஆகும். நிர்ணயிக்கப்பட்ட ஓராண்டுக் காலம் வரை இவை கெடாமல் இருக்கும். இவை  கெட்டுப் போகாமல் இருக்க Dehydration என்ற உலரச் செய்தல்  மூலம் நீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொடியை தேவையான போது எளிதில் நீரில் கரைத்து, தேங்காய்ப்பாலாக  பயன்படுத்தலாம். பனிக்குழைவு (Ice Cream) தயாரிக்க, பசும்பாலுக்கு பதிலாக 80 விழுக்காடு வரை தேங்காய்ப்பாலை பயன்படுத்துவதால், 30 விழுக்காடு வரை செலவு குறைவதாக கேரளா வேளாண் பல்கலைக்கழக பால்வளத்துறை அறிவிக்கின்றது. இந்த தேங்காய்ப் பால் பொடிக்கு உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல கிராக்கி உள்ளது. இளநீர் முற்றிய  தேங்காய் விற்பறைறய விட, இளநீர் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. பல இடங்களில் தென்னந்தோப்பு உரிமையாளர்கள் தோப்பிலுள்ள தென்னை மரங்களை அப்படியே இளநீருக்காக குத்தகைக்கு பேசி விடுகின்றனர். உற்பத்தி செய்யப்படுவதில் 80 விழுக்காட்டிற்கும் மேல் இளநீராகவே மேற்கு வங்காள மக்கள் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இளநீராக பயன்படுத்துவது 25 -40 விழுக்காடுதான். இளநீர் ஓர் இன்சுவை மிக்க சுகாதாரமான பானம். ஊட்டச்சத்து மிகுந்தது. பல மருத்துவ பண்புகள் கொண்டது. நோயாளிகளுக்கு சலைன், குளுக்கோஸ் போன்று அல்லோபதி மருத்துவர்கள் ஊசி மூலம் புதிய இளநீரை நோயாளிகளின் உடலில் செலுத்த சிபாரிசு செய்கின்றனர். பறித்த இளநீர்க்காயிலிருந்து இளநீரை பருகுவதையே மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் இளநீர்க் காய்களை குலை குலையாக வைத்து, எல்லா பருவங்களிலும் குறிப்பாக கோடையில் அதிகமாகவும், நல்ல முறையில் விற்பனை செய்கின்றனர். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பதனப்படுத்தப்பட்ட இளநீருக்கும், இவ்விதமான வரவேற்பு கிடைக்குமென வரும்காலத்தில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இளநீர்க் காய்களிலிருந்த் கிடைக்கும் வழுக்கையைப் பயன்படுத்தி தேங்காய் ஜாம் தயாரிக்க வணிக ரீதியில் தொழில்நுட்பம் உள்ளதாக கேரளா தென்னை வளர்ச்சி வாரியம் (CDB) தெரிவிக்கின்றது. தேங்காய் நீர் கோயில்கள், கொப்பரை தயாரிப்புக் கூடங்கள், உலர்த்திய தேங்காய்ப்பூ, தொழிற்கூடங்களிலிருந்து வெளியேற்றப்படும் தேங்காய் நீரை வீணாக்காமல் வினிகர் (Vinegar) மற்றும் உணவு ஈஸ்டு தயயாரிக்கலாம். முற்றிய தேங்காயிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து உண்பதற்கேற்ப ஜெல்லி (Nata-De-coco) மற்றும் மது ரசம் தயாரிக்கலாம். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏடு எடுக்கப்பட்ட பாலிலிருந்து, நேட்டா-டி-கோக்கோ தயாரிக்கப்படுகின்றது. ஒரு குடிசைத் தொழிலாக, ஒவ்வொரு மகளிரும் வீட்டிலேயே இதை தயாரித்து, கவர்ச்சியான பாலித்தீன் பைகளில் போட்டு விற்பனை செய்யலாம். தேங்காய் பனிப்பந்து ஏழுமாத இளநீர்க்காயிலிருந்து தயாரிக்கப்படும் இனிய பானத்தோடு கூடியது தான், பனிப்பந்து தேங்காய். சுமார் எட்டாவது மாதத்தில் இளநீர் பனிப்பந்தில் அதிகளவில் புரதமும், சர்க்கரைச் சத்தும், மிகக் குறைந்த அளவில் கொழுப்பும் காணப்படும். தேங்காயின் நார் மட்டையை உறித்த பின், இளநீர்க் காயை அறுக்கும் எந்திரம் மூலம் சிரட்டையை மட்டும் பக்குவமாக அறுத்து அகற்றவும். பின்பு இளநீருள்ள முழுத் தேங்காயில் துளையிட்டு, பனிக்குழைவு கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம். அல்லது இளநீரை அருந்திய பின், அதில் பனிக்குழைவை (Ice cream) நிரப்பியும், அல்லது சர்பத் பானம் செய்தும் சாப்பிடலாம். தேங்காய் சிப்ஸ் தேங்காய் சிப்ஸ் தயாரிக்கும் முறை கேரளாவில் காசர்கோடு மத்திய தோட்டப்பயிர் ஆராய்ச்சி நிலைய (CPCRI) அறிவியலார்களால் உண்டாக்கப்பட்டது. இனிப்பு மற்றும் காரமிட்ட சிப்ஸ் தயாரித்து உள்ளூர் கடைகளில் விற்று லாபமடையலாம். பதனீர் தென்னையிலிருந்தும் பதனீர் இறக்கப்படுகிறது. இதிலிருந்து பனங்கற்கண்டு,  வெல்லம் தயாரித்து விற்கப்படுகின்றது. தென்னங்கள்ளில் இருந்து வினிகர் (Vinegar) தயாரிக்கின்றனர். வேர் வாடல் நோய் என்ற தஞ்சாவூர் சாடல் நோய் தாக்கப்பட்ட தென்னை மரத்திலிருந்து பதனீர் இறக்குவதால் அந்த தென்னை மரத்தில் வாடல் நோயின் தீவிரம் குறைவதாக தென்னை நோயியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.

முனைவர் எஸ்.சதக்கத்துல்லா

 

வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சாதிப்பது இப்படித்தான்!

நான் வளைகுடா நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பில் (design) சீனியர் லெவலில் வேலை செய்கிறேன்.
என் உயர் அதிகாரி ஒரு பாகிஸ்தான் நாட்டவர். அவர் என்னிடம் கேட்டார் “எப்படி தமிழர்கள் பெரும்பாலானோர், தொழில்நுட்ப துறையில் மற்ற இந்தியர்களை காட்டிலும் முன்னணியில் இருக்கிறீர்கள்?” என்று.
பின்பு ஒரு மணி நேரம் அவருக்கு தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களைவிட தனித்து நிற்கிறது என்று விளக்கினேன்.
உலகளவில் ஆயில் & கேஸ் துறைக்கு தேவையான, HDPE பைப் தயாரிக்கும் இரண்டே நிறுவனங்களில் ஒன்று ஒமானில் உள்ளது (NOV Fiberspar), மற்றொன்று சென்னையில் உள்ளது (Future Pipes). இரண்டுமே பன்னாட்டு நிறுவனங்கள்.
பெட்ரோலிய துறைக்கு தேவையான Centrifugal Pump தயாரிக்கும் பெரு நிறுவனங்களில் ஒன்று கோவையில் உள்ளது (Flowserv), ஒன்று சென்னையில் உள்ளது (Ruhrpumpen). இவை இல்லாமல் ஒன்று ஜப்பானில் (Ebara), மற்றொன்று தென் கொரியாவில் (ITT Goulds) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான வால்வ் தயாரிக்கும் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் சென்னையிலும் ( L&T முன்பு AUDCO Valves, எமர்சன்), கோவையிலும் (Velan,Circor,Flowserv,KSB,GE) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான U Stamp vessels தயாரிக்கும் நிறுவனங்களில் இந்தியா அளவில் 15 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ளது என, பெட்ரோலிய செறிவில்லாத தமிழகத்தில் பெட்ரோலியம் சார்ந்து இத்தனை நிறுவனங்கள் வந்த்து எப்படி என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதபட வேண்டும்.
இது அல்லாது தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் EPC (Engineering, Procurement and Construction) நிறுவனங்கள் (Technip, Saipem, Foster Wheeler, SNC Lavalin, Wood) எல்லாம் எப்படி வந்தது என்று அறியப்பட வேண்டும்.
வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய துறையில் தமிழர்கள் சாதிப்பதற்கு தமிழகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் ஒரு காரணம்.
நாடு கடந்து வாழும் ஒவ்வொரு முதல் தலைமுறை பட்டதாரியின் வளர்ச்சியின் பாதையை, நூல் பிடித்து கொண்டே போனால் அது திருவாரூரில் இருந்து தொடங்கியதாக இருக்கும்.
-ஆன்டனி பிரபாகர்

சீன உருளைக் கிழங்கு எனப்படும் சிறுகிழங்கு சாகுபடி

0
தண்ணீர் வசதி அதிகமாகவும், நிலம் ஈரத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கக்கூடிய குளிர்காலங்களில் மட்டுமே சிறுகிழங்கு பயிரிட்டு வந்தனர். இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்து அறுவடை செய்வதால் தை மாதத்தில் மட்டுமே சிறுகிழங்கு கிடைக்கும். அதே நேரத்தில் சிறுகிழங்கை விரும்பி உண்ணும் மக்களின் எண்ணிக்கை கூடி விட்டதால், உழவர்கள் தண்ணீர் செழிப்பான இடங்களில் மற்ற காலங்களிலும் சிறுகிழங்கு பயிரிடத் தொடங்கினர். இந்த மூன்று மாதகாலப் பயிரான சிறுகிழங்கு சாகுபடி உழவர்களுக்கு கணிசமான இலாபத்தை ஈட்டித்தரும் என்று சிறுகிழங்கு பயிரிடும் உழவர்கள் கூறுகின்றனர். பயிர் செய்யும் முறை புதிதாக பயிர் செய்ய விரும்பும் உழவர்கள் சென்று செழுமையான நூறு கிழங்குகளை வாங்க வேண்டும். அல்லது உரக்கிடங்குகடை மற்றும் விதைப்பண்ணைகளிலும் வாங்கிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நிலத்தில் ஒரு சிறிய பகுதியில், கட்டியில்லாமல் உழுது சமப்படுத்த வேண்டும். சமப்படுத்திய நிலத்தில்; மண் முழுவதும் நனையும் அளவுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும், அதன்பின்பு வாங்கி வந்த கிழங்குகளை நடவு (பதியம்) செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குப் பின், நடவு செய்த கிழங்கு முளைத்து ; கொடியாக படர்ந்திருக்கும். அந்தக் கொடிகளை அறுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யலாம். சிறுகிழங்கு ஏக்கர் கணக்கில் சாகுபடி  செய்யும் உழவர்கள், முதலில் நிலத்தை நன்றாக உழுது, கட்டியில்லாமல் சமப்படுத்த வேண்டும். அதன் பின்பு பட்டம் போட்டு பாத்திகள் கட்ட வேண்டும். கட்டிய பாத்தி நிரம்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு, துண்டு துண்டாக நறுக்கிய சிறுகிழங்கு கொடியை; நெல் நாற்று நடுவது போல் நடவு செய்ய வேண்டும். ஏற்கனவே சிறுகிழங்கு பயிரிடும் உழவர்கள் அறுவடை செய்யும் காலங்களில் தம்முடைய தேவைக்கேற்ப கொடிகளை அறுத்து வைத்துக் கொள்வார்கள். சிறு கிழங்கு பயிரை, நோய் தாக்காத பயிர் என்றும் சொல்லலாம். ஆனால், வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். மூன்று மாதம் ஆனவுடன் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும்போது, களைக்கொத்தி உதவியுடன் கிழங்குகளை தோண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 3 டன் கிழங்கிலிருந்து 4 டன் கிழங்குகள் கிடைக்கும். இந்த சிறுகிழங்கை இரண்டு வழிகளில் சந்தைப்படுத்தலாம். ஒரு ஏக்கர் கிழங்கையும் மொத்தமாகத் தோண்டி எடுத்து விற்பனை செய்வது ஒரு வழி. மற்றொன்று வாரத்திற்கு ஒரு முறை தேவையான அளவு கிழங்குகளைத் தோண்டி எடுத்து விற்பனை செய்வது. இந்த இரண்டாவது முறை, உழவர்களுக்கு அதிக இலாபம் தரக்கூடியது. தோண்டி எடுத்த கிழங்குகளை அதிக நாட்களுக்கு அப்படியே வைத்திருந்தால் எடை குறைந்துவிடும் என்பதால், வணிகர்கள் ஏக்கர் கணக்கில் மொத்தமாக எடுத்துக் கொண்டு வரக்கூடிய கிழங்குகளின் விலையை மிகக்குறைத்துக் கேட்பார்கள். இதனால் சிறுகிழங்கை நிலத்திலேயே இருப்பு வைத்தால் எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்பதால், இருப்பு வைத்து வாரத்திற்கு ஒருமுறை தேவையான அளவு தோண்டி எடுத்து விற்கிறோம் என முன்னணி உழவர்கள் கூறுகின்றனர். சிறுகிழங்கு குறுகிய காலப்பயிர் என்பதால் தண்ணீர் செழிப்பான இடங்களில் பயிரிட்டு நல்ல இலாபம் பெறலாம்.

-இ.கலைச்செல்வி

 

ஐந்து ‘எம்’களை முன்னிலைப்படுத்தும் ஜப்பானிய ”ஜென்பா கான்ரி”!

0
எந்தவொரு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலையும் தொழிலாளர்கள், எந்திரங்களைக் கொண்ட அடித்தளத்தை நன்றாக அமைக்காத பட்சத்தில் அதன்மேல் கட்டப்படும் எந்தவொரு விரிவாக்கமும் சிறப்பாக இயங்க இயலாது. தொழிலாளர்கள், எந்திரங்கள், செய்முறைகளைக் கொண்ட இந்த அடித்தளப் பணியைச் சார்ந்து தான் உற்பத்தித் பொருள்களின் ‘த‍ரம்’ (Quality Circle) அமைந்திருக்கிறது. இந்தத் த‍ரத்திற்கான முழுப் பொறுப்பையும் அடித்தளமே ஏற்கச் செய்கின்றது ஜென்பா. ஜப்பானியர்களின் வளர்ச்சிக்கு அடிப்படையான பல்வேறு உத்திகளில் முதன்மையானவற்றில் இதுவும் ஒன்றாகும். ‘ஜென்பா’ என்ற ஜப்பானியச் சொல்லுக்கு ‘அசல் இடம்’ என்று பொருள்படும். சந்தையில் கோலாச்சும் நிறுவனம் முதல், எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்தப் பொருளை உற்பத்தி செய்யக்கூடிய உண்மையான இடமாகும். சாதாரண இரும்பாகவோ, காப்பராகவோ, அலுமினியமாகவோ இருக்கக் கூடிய ஒன்றை எந்திரங்களாக, கருவிகளாக மின்சாரம் கடத்தும் ஒயர்களாக மதிப்பூட்டப்பட்டு சந்தைக்கு, சமூகத்திற்கு அனுப்பும் உண்மையான உற்பத்தி இடமாகும். இதையே ஜப்பானிய மொழியில் ‘ஜென்பா’ என்பர். கான்ரி (Kanri) என்பது நிர்வகித்தல் அல்லது மேலாண்மை செய்தல் என்று பொருள்படும். அதாவது ஜென்பா கான்ரி என்பதற்கு உற்பத்தியாகக் கூடிய உண்மையான இடத்தை, பணிமனையை (workshop) மேலாண்மை செய்தல் என்று பொருள்படும். ஜென்பா கான்ரியின் செயல்முறை ஜென்பா கான்ரி – உற்பத்திக்கான செய்முறைகளை (Production Operations) மேலாண்மை செய்வதற்கும், உற்பத்தியை விரைவாக முடித்துக் கொடுத்தலை நடைமுறைப்படுத்துவதுமாகும். ஜென்பா கான்ரி மேலாண்மை நுட்பம் என்ற வகையில் என்ற வகையில் ஐந்து அம்சங்களை நிர்வகிக்கிறது. (இதை ஆங்கிலத்தில்Five ‘M’ என்பர்) 1.மனித ஆற்றல் (Man Power) 2.எந்திரங்கள் (Machines) 3. பொருட்கள் (Materials) 4. செய்முறைகள் (Methods) 5. அளவீடுகள் (Measurements) இவை ஒவ்வொன்றுக்கும் ஜென்பா கான்ரி ஏராளமான நெறிமுறைகளைக் (Standard) கொடுக்கிறது. எதை? எப்படி? எப்பொழுது? யார்? செய்து முடிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் வகையில் அமைத்துக் கொடுக்கிறது. ஜென்பா கான்ரி, பிடிசிஏ (PDCA) முறையோடு நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கிறது. (திட்டமிடுதல் (Plan)_ செயல்படுத்தல் (Do) _ சோதனையிடல் (Check) _ நடைமுறைப்படுத்துதல் (Action) _என்ற வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருப்பது தான் பிடிசிஏ). ஜென்பா கான்ரியை நடைமுறைப்படுத்தத் தொடங்கியவுடன் தரத்தை உயர்த்த என்ன? எப்படி? எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். அதை அடைய அறிந்தவற்றில் சிறந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும். மெட்டீரியல் (சரக்கு)  மேலாண்மை சிறந்ததாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதற்காக கடைபிடிக்கும் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் உறுதியானதாக இருக்க வேண்டும். முன்னேற்றுவதற்கான முயற்சியில் தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை செயல்படுத்திப் பார்க்க சுதந்திரமாக அனுமதிக்கலாம். ஜென்பா கான்ரிக்கான எடுத்துக்காட்டு பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம், ஒன்று, நீர்ம கட்டுப்பாட்டு மெக்கானிசம் (Fluid Control Machanism) ஒன்றைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில், உள்நாட்டுப் போட்டியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தனர். இதனால் குறிப்பிட்ட அந்த நிறுவனம் இந்தப் போட்டியை சமாளிக்கும் வகையில் தயாராக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியது. இதற்காக எதைச் செய்வது? என்ன மாற்றத்தை ஏற்படுத்துவது? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. ஜென்பா கான்ரியின் ஐந்து ‘எம்’ களிலும் ஆராய்ந்தனர். பணிமனையின் அமைப்பு, உற்பத்திக்கான செய்முறை, இவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வழிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு ஆராயப்பட்டன. இறுதியாக மெசினிங் மற்றும் அசெம்பிளிங் பகுதிகளின் மீது தங்களின் கவனத்தைக் குவித்தனர். எந்திரத்தின் அமைப்பு மற்றும் செய்முறை மாற்றியமைக்கப்பட்டது. அந்த எந்திரத்தை இயக்கும் ஆப்பரேட்டர் அதை இயக்குவதற்காக அந்த எந்திரத்தை சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். அதுவும் மாற்றியமைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டது. விளைவு வியப்படையும் அளவுக்கு தரமான உற்பத்தி கிடைத்தது. பின்பு, இரண்டு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிமனை முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியில் அசெம்பிளிங் சிஸ்டத்தை மாற்றியமைக்கும் முடிவுக்கு வந்தனர். இதனால் தரம் உயர்ந்தது. பணிமனைக்கென ஆகிக் கொண்டிருந்த 17 ஆயிரம் டாலர் செலவில், 10 ஆயிரம் டாலர் மிச்சமாகியது. உற்பத்தித் திறனும் 160 விழுக்காடு உயர்ந்தது. ஜென்பா கான்ரியின் பயன்கள் தரம், விலை, உற்பத்திக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொருளை அனுப்புவது (Delivery), உற்பத்தித் திறன் இவை குறித்தும், இவற்றை மேம்படுத்துவது குறித்தும் தொழிலாளர்கள் அறிந்து வைத்திருப்பர். தொழிலாளர்களிடம் தங்கள் பணியில் ‘சொந்த வழியில் சிறப்பாகச் செயல்படுவது’ என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும். பணிமனையில் எந்தவொரு மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படாமல் நிலையாக இருக்குமேயானால் கேள்விக்கு உள்ளாக்கப்படும், உள்ளாக்கப்பட வேண்டும். எந்தவொரு எந்திரமோ, கருவியோ கவனமாக பரிசீலிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்படாத நிலையில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது. நிறுவனத்தின் அடித்தளம் பலத்தோடும், கால ஓட்டத்திற்கேற்ப  மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பதோடு, தரமாக, விலை குறைவாக கொடுக்க முடிந்தால்தான் சந்தைப்படுத்துதலில் வெற்றியை சாதிக்க முடியும். இதற்கு துணை நிற்பதும், ஜப்பானியர்கள் உலகச் சந்தையை தாண்டிக் குதிக்க தூண்டுகோலாக இருந்ததுமான ஜென்பா கான்ரி எந்தவொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும். தடைகள் அனைத்தும் கண்டறிந்து களையப்பட்டு உயர முடியும்.

– இளம்பூரணன்