பணியாளர்களிடம் ஆலோசனை கேளுங்கள்; புதிய சிந்தனைகள் கிடைக்கும்

செலவுகளைக் கட்டுப்படுத்த வெளியாட்களிடம் ஆலோசனை கேட்பதை விட, அத்தொழிலில் இருக்கும் சீனியர்களின், புத்திசாலி ஊழியர்களின் சொல்லைக் கேட்பதில் லாபம் அதிகம். தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் பணியாற்றுவோர் தம் நிறுவனம் என்னென்ன செலவுகளை மேற்கொள்கிறது என்பது குறித்து தெளிவாக அறிந்திருப்பர். அவர்களை அழைத்து செலவுகளை குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கேட்கலாம். நல்ல ஆலோசனை சொல்பவருக்கு வெகுமதியும் வழங்கலாம். 

பாட்டிலில் விற்கப்பட்டு வரும் குளிர்பானங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக பெட் பாட்டிலில் அடைக்கும் யோசனையைக் கூறியது ஒரு சாதாரண தொழிலாளிதான். இதனால் பாட்டிலைத் திரும்ப எடுத்துச் செல்லும் செலவு, நிறுவனத்திற்கு குறைந்தது. மேலும் பெட் பாட்டிலை தனியாக தயாரித்து விற்றதால் லாபமும் கூடியது. 

வட்ட வடிவில் இருக்கும் மாத்திரையை டியூப் வடிவிற்கு மாற்றியதும் ஒரு சாதாரண பணியாளரின் சிந்தனைதான். இப்படி மாற்றியதால் மாத்திரைகள் உடைந்து வீணாவது குறைந்தது. 

இட்லி விற்பனையில் விற்காமல் போன  இட்லியால் ஏற்பட்ட இழப்பை எப்படி ஈடு கட்டுவது என்று சிந்தித்ததனால், இன்று இட்லிக்கு பதிலாக இட்லி மாவையே விற்கும் தொழில் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. இட்லிக்கடை போட்டாலும் ஒரு இடத்தில் தான் வியாபாரம் செய்ய முடியும். ஆனால் இட்லி மாவையே விற்றால் அது நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதால் நகரம் முழுக்க விற்பனை செய்யும் வாய்ப்புகளும் தோன்றின. 

இந்தச் சிந்தனைகள் எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு ஏற்பட்டதல்ல. அத்தொழிலிலேயே உழன்று ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கும் பணியாளர்களின் சிந்தனையில் உதித்தவையே. உங்கள் நிறுவனத்திலும் ஊழியர்களை நீங்கள் சிந்திக்கச் செய்தால் செலவுகள் குறையும். புதிய தொழில் வாய்ப்புகளும் பெருகும். 

வெகுமதிகள் மூலம் ஊழியர்களை ஊக்குவிக்கலாம்! 

எந்தச் சிக்கலுக்கும் நேர்மறை, எதிர்மறை என இரண்டு வகையான தீர்வுகள் உண்டு. ஒரு தொழிற்சாலையில் பல தொழிலாளிகள் தொடர்ந்து தாமதமாக வந்து கொண்டிருந்தனர். நிர்வாகமோ ஊழியர்களின் காலதாமதத்தை கட்டுப்படுத்த முடியாமல் நாள்தோறும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. 

 ‘மூன்று நாள் தாமதமாக வந்தால் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும், தொடர்ந்து தாமதமாக வருவோர் பொது மேலாளரைச் சந்தித்து உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தாமதமாக வந்தால் மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும்.’ என்றெல்லாம் ஊழியர்களுக்கு சட்டம் விதித்தது. ஆனாலும்  பலனேதும் இல்லை. 

இந்தச் சிக்கலை எப்படித் தீர்த்திருக்க வேண்டும்…? 

மற்றொரு நிர்வாகம் செய்த வேலையைப் பாருங்கள். நாள்தோறும் முதலில் வரும் தொழிலாளிக்கு மாதம் ரூ.1,000 வெகுமதிஇரண்டாவதாக வருபவர்களுக்கு ரூ.500;   மூன்றாவதாக வருவதற்கு ரூ.300 என வெகுமதிகளை அறிவித்ததுதாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் அபதாரம்.  

கரும்பு தின்னக் கூலி என்றால் கேட்கவா வேண்டும்? தொழிலாளர்கள் மத்தியில் நிறுவனத்திற்கு தாமதமின்றி வரும் கலாச்சாரம் தோன்றத் தொடங்கியது. நன்றாக வேலை செய்பவரைத் தட்டிக் கொடுத்தும் தவறு செய்பவரை குட்டியும் வேலை வாங்கிய திட்டம் நல்ல பலன ளித்தது. 

ஒரு மாதம் முழுவதும் விடுப்பே எடுக்காமல் வருபவருக்கு ரூ.1,000  என்ற மற்றொரு சலுகையையும் அதே நிர்வாகம் அறிவித்தது. மாதந்தோறும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுக்கலாம் என்ற நிலை இருந்த போதிலும்கூட வெகுமதிக்கு ஆசைப்பட்டு தொழிலாளிகள் விடுப்பிற்கு விடுப்பு விட்டனர். 

சிந்தித்துப் பாருங்கள். சுமார் 100 தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு இடத்தில் இது போன்ற சலுகையால் நிர்வாகத்திற்கு ஓரளவு கூடுதல் செலவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், பணியாளர்களின் கூடுதல் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டால் இந்தச் செலவு மிகக் குறைவே! 

பணியாளர்கள் செலவுகளை நிர்ணயுங்கள்! 

ஊழியர்களோ, அதிகாரிகளோ வெளியூருக்கு பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கான பயணச் செலவுகளை நிர்வாகமே ஏற்றுக் கொள்வது வழக்கம். பொதுவாக போக்குவரத்து செலவுகளில் எந்த வரம்பையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியாது. ஆனால், தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளுக்கு தோராயமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிட்டால் நிறுவனத்துக்கும் செலவு அதிகமாகாது. பணியாற்றுவோருக்கும்  பணத்தை மிச்சம் பிடித்து, சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும். 

எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியர் வெளியூர் செல்லும்போது அவருக்கு பிடித்த ஏதேனும் ஒரு ஓட்டலில் தங்கி, அவர் விருப்பப்பட்ட உணவுகளையெல்லாம் சாப்பிட்டு நிறுவனத்திற்கு செலவுகளை அதிகப்படுத்தக் கூடும். அந்தச்  செலவு நாளொன்றுக்கு ரூ.2000 ஆகவும் இருக்கலாம். ரூ.4000 ஆகவும் இருக்கலாம்அவர் எவ்வளவு செலவழிப்பார் என்பது தெரியாமல் இருப்பதைவிட, நிர்வாகமே முன்வந்து நாளொன்றுக்கு ரூ.2,500 எனக் கொடுத்துவிட்டால், அவர் தம்முடைய சொந்தக்காரர் வீட்டில் கூட தங்கிக்கொண்டு காசை மிச்சப்படுத்துவார். இது நிறுவனத்திற்கும் கூடுதல் செலவைத் தவிர்க்கும். 

இப்படி எல்லாச் செலவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து விட்டால் செலவு கட்டுக்கடங்காமல் போவது கட்டுப்படுத்தப்படும். 

                                                          –இராம்குமார் சிங்காரம், நிதிஆலோசகர்

ramkumar singaram

இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தால் தன்னம்பிக்கை தானே வரும்!

அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும்; மூட நம்பிக்கைகளில் இருந்து, கடவுள் நம்பிக்கையில் இருந்து சக மனிதர்கள் விடுபட வேண்டும் என்று நினைப்பதும் அதற்கான கருத்துகளை எடுத்து உரைப்பதும் எல்லோரும் திராவிடர் கழகத்தில் சேர்ந்து விடுவார்கள் என்பதற்காக அல்ல. இந்த கொள்கைகளால் நாம் அடையும் பயன்களை மற்றவர்களும் அடைய வேண்டுமே என்ற ஆசைதான். ‘எல்லோரும் இன்புற்றிருக்க..’ என்ற அடிப்படைதான்.
ஜோசியம், ஜாதகம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று அஞ்சும் இனம் புரியாத அச்சம் நம்மை விட்டு அகன்றுவிடும். ராகுகாலம், எமகண்டம் என்று குறிப்பிட்ட நேரங்களை புறக்கணித்து அந்த நேரங்களை வீணாக்கும் அச்சமும் போய்விடும். பூனை குறுக்கே போனால் பயந்து நிற்பது, ஒற்றைப் பார்ப்பான் வந்தால் சகுனம் சரி இல்லை, விதவைகள் எதிரில் வந்து விட்டார்களே என்று நினைத்து பயணத்தை ஒத்தி வைப்பது போன்ற சகுனத்துக்கு பயப்படும் நிலைமையும் மாறி விடும்.
வாஸ்து நம்பிக்கை இல்லாவிட்டால் வீட்டை அறிவியல் சார்ந்து வசதியாக கட்டிக் கொள்ளும் இயல்பு வந்து விடும். வாஸ்து ஜோசியர் சொன்னார் என்று கட்டிய வீட்டை இடித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஐயரை அழைத்து பூமி பூஜை என்று அவருக்கு தட்சணை என்று செலவு செய்ய வேண்டியது இல்லை. கிரகப்பிரவேசம் என்று மீண்டும் நமது சுயமரியாதையை இழந்து ஐயரை அழைத்து யாகம் வளர்த்து ஆயிரக் கணக்கில் தட்சணை செலவு செய்ய வேண்டியது இல்லை. திருஷ்டிப் பரிகாரம் என்று அசிங்கமான பொம்மையை கட்டி வைக்க வேண்டி இருக்காது. தொழில் முனைவோராக இருந்தால் இந்த திசை நோக்கி அமர்ந்தால்தான் அதிர்ஷ்டம் வரும் என்று மேஜையை கண்டபடி மாற்றிக் கொண்டிருக்கும் தேவை எழாது.
கடைக்காரர்கள் திருஷ்டிப் பூசனிக்காய் கட்டுவது, அசிங்கமான படத்தை தொங்க விடுவது,  சாலையில் தேங்காயை உடைத்து வீணாக்குவது, சூடம் கொளுத்துவது போன்றவை இருக்காது.
திருமணம் போன்ற விழாக்களை நம் வசதிக்கேற்ற நாளில், அனைவரின் வசதிக்கேற்ற நேரத்தில் நடத்திக் கொள்ளும் துணிவு வந்து விடும். விடியற்காலை 5.30 க்குத்தான் நல்ல நேரம் என்று தாங்களும் கஷ்டப்பட்டு, உறவினர் நண்பர்களையும் தொல்லைப்படுத்த வேண்டிய தேவை எழாது. நேரத்தை ஐயர்தான் குறித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டிய தேவையும் வராது. மணமக்கள் தேர்விலும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று நல்ல பொருத்தமான துணையை நிராகரிக்க வேண்டி இருக்காது.
அனைத்துக்கும் கடவுள்தான் காரணம் என்று நம்பியும், கடவுள் என்ற ஒன்று இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா என்று நம்ப முடியாமலும் தவிக்க வேண்டியது இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களை அதன் போக்கில்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் வந்து விடும். பரிகாரங்கள் என்ற பெயரில் செய்யப்படும் வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டு விடும்.
மிகவும் முதன்மையாக மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கு பயன்படுத்தும் சூனியம் வைப்பது, எடுப்பது போன்றவற்றை நம்பி ஏமாற மாட்டீர்கள். பேய்கள், பிசாசுகள், ஆவிகள் மீதான நம்பிக்கை அகன்று விடும். எந்த இருட்டும் உங்களை அச்சப்படுத்தாது.
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டால் முயற்சிகள் மீது முழு நம்பிக்கை வரும். முயற்சிகள்தான் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும்.
அறிவியல் மனப்பான்மை வந்து விட்டால் அறிவு வளர்ச்சிக்கு உதவும் நூல்களை படிக்கத் தொடங்குவீர்கள். யூடியூபில் அறிஞர்களின், வல்லுநர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து கேட்பீர்கள். சமத்துவ எண்ணம் ஓங்கும். பார்ப்பனர்கள் நம்மை விட மேல்ஜாதி என்று நினைப்பது மனதில் இருந்து நீங்கும். எல்லோரும் சமம் என்ற மனித நேயம் மனதில் பொங்கும். அடுத்தவர் வளர்ச்சி பொறாமை உணரச்சியைத் தராது. அதற்கு பதில் மகிழ்ச்சியைத் தரும்.
– இப்போது சொல்லுங்கள், தங்களைப் போன்றே பிறரும் இப்படி சுதந்திரமான மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்று நினைப்பதும், செயல்படுவதும் கூட மனித நேயம் சார்ந்ததுதானே!                                                         

ரகசிய பட்டியலில் கல்வி? அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு

0

”மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றது. அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எவ்வளவோ போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது கல்வி எந்த பட்டியலில் இருக்கிறது என்பது தெரியாமல் அது ரகசிய பட்டியலில்தான் இருக்கிறது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை கண்டித்து உள்ளார். இது பற்றி சென்னையில் அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் அன்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசும்போது,

”கல்வித் துறை அரசியல் செய்வதற்கான துறை அல்ல; அடுத்த உலகத்தை உருவாக்கும் மாணவச் செல்வங்களை வளர்த்து எடுக்கும் துறையாகத்தான் இருக்கிறது. கல்வி தொடர்பாக எந்த ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்றாலும் அதில் கல்வியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேசியக் கல்விக் கொள்கை குழுவில் ஒரே ஒரு கல்வியாளர்தான் இருந்தார். மற்ற அனைவரும் அதிகாரிகள்தான். நம்முடைய கண்ணைக் கட்டி ஏமாற்றி உள்ளே நுழைகிறார்கள்.

மேலும் தேசிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு இட ஒதுக்கீடு பற்றியும் பேசப்படவில்லை. இது எந்த அளவுக்கு ஏமாற்றும் வேலை? கண்மூடித்தனமாக நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை. நியாயத்தைத்தான் பேசுகிறோம்.

எது தேவையோ அதை தூக்கி எறிந்து விட்டு, மாணவர்களை சமூக நீதிக்கு எதிரான வேறொரு வழியில் கொண்டு செல்லும் முயற்சியைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் நாம் ஏமாந்து விடக்கூடாது. நம்முடைய முதல் அமைச்சர் எந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான் கொண்டுவர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதன்படிதான் தமிழ்நாடு கல்வித் துறை செயல்பட்டுவருகிறது” என்றார்.

இதழ்களுக்கு நூலக ஆணை – சீர் படுத்த வேண்டி தீர்மானங்கள்

0

பொது நூலகங்களுக்கு இதழ்கள் வாங்குவது குறித்து அண்மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தேர்வு செய்த இதழ்கள் பட்டியலில் ஏற்கெனவே வாங்கப்பட்டுக் கொண்டு இருந்த பல இதழ்கள் விடுபட்டு இருந்தன. இதற்கான காரணங்கள் தெளிவாக்கப்படவில்லை. தமிழ் நாடு பொது நூலகத்துறையிடம் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லை. இதுவரை நூலக ஆணைகளை வழங்கிக்கொண்டு இருந்த மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் விடை சொல்லத்தெரியவில்லை.

இது தொடர்பாக கடந்த 12-04-2022 அன்று சென்னை, பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-

தீர்மானம் – 1                                                                                                  இதுவரை இருந்த விதிமுறைகளில், நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு, இந்த முறை நூலகங்களுக்கு இதழ்களை வாங்குவதை பரிந்துரைப்பதற்கு என்று ஒரு குழு அமைக்கப்பட்ட உடன் பெரும் எதிர்பார்ப்பு பத்திரிகை பதிப்பாளர்களிடையே எழுந்தது. ஆனால் அந்தக்குழு பரிந்துரைத்த இதழ்களின் பட்டியலில் வழக்கமாக நூலகங்களுக்கு வாங்கப்பட்டுக் கொண்டு இருந்த நிறைய இதழ்கள் இடம் பெறவில்லை. அவை ஏன் இடம்பெறவில்லை என்பதற்கான தெளிவான விளக்கங்களையும் பெற முடியவில்லை. எனவே நூலகங்களுக்கு இதழ்களை வாங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை நூலகத்துறை வழங்க வேண்டும்.

தீர்மானம் – 2
நூலகங்களுக்கு இதழ்களை வாங்குவதற்கான தெளிவான விதிமுறைகள் தெரிவிக்கப்படவில்லை. இதழ்களிடம் இருந்து முறையாக விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஏற்கெனவே இருந்த விதிமுறைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று செயல்பாடுகள் நடைபெற்று உள்ளன. அனைவரிடமும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் இதழ்களை கேட்ட நூலகத்துறை அவ்வாறு வழங்காத, பல ஆண்டுகளுக்கு முன் நின்று போன இதழ்கள் எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டன என்று கேட்டபோது, ”அவர்கள் கடைசியாக வெளியிட்ட பல ஆண்டுகளுக்கு முந்தைய இதழ்களின் அடிப்படையில் நூலக ஆணை வழங்கப்பட்டது” என்று உயர் அதிகாரியிடம் இருந்து பதில் பெறப்பட்டது. மற்ற இதழ்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவும் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதற்கு எதிரானது. எனவே இது தொடர்பான தெளிவான விதிமுறைகள் இல்லாமல் அவர்கள் விரும்பியபடி செயல்பட்டதை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் – 3
இந்தியாவிலேயே மலையாளத்தில்தான் நிறைய இதழ்கள் வெளிவருகின்றன என்று பெருமையாக பேசப்படுகிறது. அதைப் போல தமிழிலும் நிறைய இதழ்கள் வருவது பெருமைக்கு உரிய ஒன்றுதான். தமிழ் வளர்ச்சிக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற தமிழ் இதழ்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. பத்திரிகைகள் நடத்துவது என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல. அதில் சமுதாய வளர்ச்சியும் பின்னிப் பிணைந்து இருக்கிறது. பெரும்பாலும் சமுதாய நோக்கம் உள்ளவர்களே பத்திரிகைப் பணிக்கு வருகிறார்கள். அல்லது பத்திரிகைகள் நடத்துவதற்கு முனைகிறார்கள். பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர் என்று போற்றப்படும் தினத்தந்தி நிறுவனர், மேனாள் அமைச்சர் மறைந்த சி. பா. ஆதித்தனார் அவர்கள், ”பத்திரிகை நடத்துவது என்பது நெருப்பாற்றில் நீந்துவது போல..” என்று சொல்லி இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். இந்த முதன்மையான செய்தியை நூலகத் துறை சார்ந்த அதிகாரிகள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 4
குழுவில் இடம் பெற்று இருந்தவர்களில் ஒருவரான திரு. சமஸ் எந்த அடிப்படை நாகரிகமும் இல்லாமல், தானே எல்லா இதழ்களையும் தேர்வு செய்ததைப் போலவும், தேர்வு செய்த இதழ்களைத் தவிர மற்றவை குப்பைகள் என்பது போலவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அதை வெளியிட்ட சேனலையும் கண்டிக்கிறோம். செய்தித்தாள் காகிதம் (நியூஸ் பிரின்ட்) பற்றிய புரிதல் அறவே இல்லாமல் சாணிப் பேப்பரில் அடிக்கிறார்கள் என்று அவர் கூறி இருப்பதையும் கண்டிக்கிறோம். சந்தையில் வெளிநாட்டு செய்தித்தாள் காகிதம் மற்றும் உள்ளூர் மில்களில் தயாரிக்கப்படும் செய்தித்தாள் காகிதம் மட்டுமே கிடைக்கின்றன. சாணியில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை உலகில் எங்குமே இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் செய்தித்தாள் காகிதத்தை சாணிப்பேப்பர் என்று கூறி அவமானப்படுத்தி இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தீர்மானம் – 5
எப்போதும் இல்லாத அதிசயமாக தேர்வு செய்யப்பட்ட இதழ்களின் பதிப்பாளர்களிடம் பேரம் பேசுவதற்கு என்று ‘நெகோஷியேஷன் குழு’ அமைக்கப்பட்டது பொருத்தம் அற்றதாக இருக்கிறது. இப்படி பேரம் பேசும் முறையைக் கைவிட வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 6
விளம்பரங்கள் இல்லாமல் பத்திரிகைகளை நடத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. விளம்பர வருமானம் இல்லாமல் நின்று போன இதழ்கள் ஏராளம். விளம்பர வருமானம் வருவதன் காரணமாகவே தி இந்துவும். தினத்தந்தியும் தங்களது செய்தித் தாள்களை இவ்வளவு குறைவான விலைக்கு வாசகர்களுக்கு கொடுக்க முடிகிறது. எனவே, ”நீங்கள் விளம்பர வருமானத்துக்காகவே பத்திரிகை நடத்துகிறீர்கள்..” என்பது போல பதிப்பாளர்களிடம் கேட்கும் அதிகாரிகள், ஒரு பத்திரிகை எப்படி நடத்தப்படுகிறது, பெரிய பத்திரிகைகளுக்கு மற்றும் சின்ன பத்திரிகைகளுக்கு உள்ள வாய்ப்புகள், சிரமங்களை புரிந்து கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சிறு இதழ்களுக்கும் அரசு விளம்பரங்களை வழங்க வேண்டும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டையும் பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் – 7
திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே இடம் பெற்ற இதழ்களின் அட்டையில் அரசின் தொழில் துறை தொடர்பான அதிகாரிகளின், தொழில் முனைவோரின், தொழில் அதிபர்களின், தன்னம்பிக்கை ஊட்டுபவர்களின், சாதனை செய்த பெண்களின் படங்கள் இடம் பெற்றது துறை சார்ந்த இதழ்களின் வளர்ச்சியால்தான். துறை சார்ந்த இதழ்களே தொழில் முனைவைத் தூண்டுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்த துறை சார்ந்த செய்திகளை தமிழில் கிடைக்கச் செய்கின்றன. துறை சார்ந்த எழுத்தாளர்களை உருவாக்குகின்றன என்பதை நூலக அதிகாரிகள் புரிந்து கொண்டு துறை சார்ந்த இதழ்களுக்கு கூடுதல் இடம் வழங்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 8
இலக்கிய இதழ்களில் கூட பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு நிறைய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கிய, தமிழை செழுமைப்படுத்திய பல இதழ்கள் விடுபட்டு உள்ளன என்பதையும் இந்த பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் – 9
பத்திரிகை நடத்துவது என்பது வெறும் தொழில் அல்ல. வெறும் தொழில் மட்டுமே என்றால் பத்திரிகைகளுக்கு ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்ற இடம் கிடைத்து இருக்காது. எனவே இது வெறும் தொழில் அல்ல என்பதை நூலகத் துறை அதிகாரிகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 10
குழுவினர் தேர்வு செய்த அல்லது அவர்களிடம் கையொப்பம் பெற்ற பட்டியலில் இடம் பெறாத, நீண்ட காலமாக தமிழை, தமிழர்களை வளர்க்கும் இதழ்கள் நிறைய உள்ளன. காய்தல் உவத்தல் இல்லாமல் ஆராயும் குழு இவற்றை ஆராய்ந்தால் உண்மை தெரியும் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது. அவற்றின் பயனை வாசகர்கள் அடையும் வகையில் மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து அவற்றுக்கும் நூலக ஆணை வழங்க வேண்டும் என்றும பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 11
ஒரு இதழ் நடத்த வேண்டுமானால் ஆஃபிஸ் ஆஃப் ரெஜிஸ்ட்ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் ஃபார் இந்தியா (ஆர்என்ஐ) வில் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இருந்த விதிமுறைகள் படி ஆர்என்ஐ பதிவு இருந்த இதழ்களுக்கு மட்டுமே நூலக ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஆர்என்ஐ பதிவு இல்லாத இதழ்களுக்கும் நூலக ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதே போல ஆர்என்ஐ இல்லாத இதழ்களுக்கும் எதிர்காலத்தில் நூலக ஆணைகள் வழங்கப்படுமா என்பதையும் நூலகத்துறை தெளிவு படுத்த வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 12
மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக ஒன்றிய அரசின் அஞ்சல் துறை சலுகைக்கட்டணம் நிர்ணயித்து அஞ்சல் வாயிலாக குறைந்த கட்டணத்தில் இதழ்களை அனுப்புவதற்கு உதவுகிறது. இந்த சலுகைக் கட்டண அனுமதியைப் பெற தற்போது ஆர்என்ஐ பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவைப்படுகிறது. முந்தைய காலக் கட்டங்களில் நீதிமன்ற உறுதிமொழிச் சான்றிதழ் (டிக்ளரேஷன்) அடிப்படையிலேயே அஞ்சல் கட்டண சலுகை வழங்கப்பட்டது. தற்போது ஆர்என்ஐ இல்லாத இதழ்களுக்கும் நூலக ஆணை வழங்கப்பட்டு இருப்பதால், இவர்களுக்கும் நீதிமன்ற உறுதிச் சான்றிதழ் அடிப்படையில் சலுகைக் கட்டண அனுமதியை அஞ்சல் துறை அதிகாரிகளை அணுகி வாங்கித்தர முயற்சிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டுகிறது.
தீர்மானம் – 13
”யோஜனா என்ற இதழை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கிறார்கள், ஆர்என்ஐ இல்லாதவர்கள் இப்படி பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கலாமே” என்று ஒரு பொறுப்பான அதிகாரி ஆலோசனை கூறினார். யோஜனா, ஒன்றிய அரசால் நடத்தப்படும் இதழ். அவர்கள் அரசின் பணத்தை செலவு செய்து அனுப்புகிறார்கள். தனிப்பட்ட இதழ்களை கூடுதலான பதிவு அஞ்சல் கட்டணம் செலுத்தி அனுப்புவது இதழ்களுக்கு கட்டுப்படியாகாது என்பதை நூலகத்துறை அதிகாரிகளுக்கு பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் – 14
தமிழில் எத்தனை இதழ்கள் வந்தாலும் அவை தமிழையும், தமிழர்களையும் உயர்த்தும் பணியில் தங்கள் பங்களிப்பைச் செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவிப்பதோடு, அரசின் பல்வேறு திட்டங்களையும், நல்ல பணிகளையும் மக்களிடையே எடுத்துச் செல்வதில் எங்கள் சங்க உறுப்பினர்களின் இதழ்கள் நிச்சயம் முனைப்பாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் – 15
ஏப்ரல் தொடங்கி வரும் நிதியாண்டில் (22-23) தேர்வு பெற்ற இதழ்களை நூலகங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை, தேர்வு செய்யப்பட்ட இதழ்களுக்கான நூலக ஆணைகளும், அனுப்ப வேண்டிய நூலகங்களின் பட்டியலும் வழங்கப்படவில்லை. இதனால் பத்திரிகை வெளியீட்டாளர்கள் மட்டுமின்றி வாசகர்களும் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் அஞ்சல்துறை அனுமதித்து உள்ள தேதிக்குள் இதழ்களை அஞ்சலிடவில்லை என்றால், சலுகைக் கட்டணத்தில் இதழ்களை அனுப்ப முடியாது. பன்மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தினால்தான் அனுப்ப முடியும். எனவே நூலக ஆணையையும், நூலக முகவரிகளையும் விரைவில் தந்து உதவுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் – 16
மேலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு உள்ள பத்திரிகைகளுக்கு வரிசைக்கிரம அடிப்படையில் ஆணை வழங்க வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்தப்படி வாங்கினால் கடைசியில் இடம்பெற்று உள்ள இதழ்கள் நூலகங்களுக்கு வாங்கப்படாமலே போய்விட வாய்ப்பு உள்ளது. எனவே வரிசைக்கிரமப்படி வாங்க வேண்டும் என்பதற்கு பதில் தேர்வு பெற்ற அனைத்து இதழ்களையும் வாங்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து நூலகங்களுக்கு வாங்கப்பட்ட சிக்கல் இல்லாத இதழ்களையும் மறுபரிசீலனை செய்து அவற்றையும் நூலகங்களுக்கு வாங்க முயற்சிக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு வேண்டுகிறது.

சிந்தனையில் தெளிவு எப்போது இருக்கும்?

ஏன் தன்னைப் பற்றிய அலசல், தெளிந்த அறிவு தேவை? நமது மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைவதே தன்னை அறிதல்தான்.

உங்கள் திறமைகள் என்ன? எண்ணிப் பாருங்கள். சிலர் தங்கள் குறைகளைப் பற்றியே அதிகம் சிந்திப்பார்கள். ஆனால், அதற்கு மாறாக எனக்குத் தன்னம்பிக்கை உண்டு; என்னால் நன்கு செயல்பட முடியும்; நான் நிறைய திறமைகள் உள்ளவன் என்று அடிக்கடி எண்ணுவது ஒரு நல்ல பழக்கம்.

குறிக்கோள் இருக்கிறதா? உங்கள் குறிக்கோள் என்ன என்பதில் தெளிவாக இருக்கிறீர்களா? பலரிடம் இந்த கேள்வியைக் கேட்கும்போது விடை சொல்ல திணறுவதைப் பார்க்க முடியும். நான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். நான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்றால் எதில் பெரிய ஆள் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். தெளிவான குறிக்கோள்களை அமைத்துக் கொண்ட பின், இக்குறிக்கோள்களை அடைய நம்மிடம் திறமை இருக்கிறதா, நம்மிடம் உள்ள குறைகள் இக்குறிக்கோள்களை அடைய தடையாக இருக்குமா, நம்முடைய குடும்பத்திடம் இருந்து எந்த ஆளவுக்கு உதவிகள் கிடைக்கும் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மன எழுச்சி உங்களிடம் என்னென்ன மன எழுச்சிகள், குறிப்பாக எதிர்மறை மன எழுச்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா? எடுத்துக்காட்டாக சிலருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரும். பதட்டம், தவிப்பு, பொறாமை வரும். இதைப் போன்ற மன எழுச்சிகள் எப்போது, எந்த அளவு என்று எண்ணிப் பார்ப்பது மிகத்தேவை. மன எழுச்சி வருவதே தவறு என்று சொல்ல முடியாது. அதை எப்படி வெளிக்காட்டுகிறோம் என்பதில்தான் நமது திறமை இருக்கிறது. மன எழுச்சிகளை நெறிப்படுத்தி நேர்மறையான மன எழுச்சிகளை உரிய வகையில் வெளிப்படுத்துவதுதான் ஆளுமை வளர்ச்சிக்கு அடையாளம். மன எழுச்சிகளின் தாக்கம் இல்லாமல் சிந்திக்கும்போதுதான் சிந்தனையில் தெளிவு இருக்கும்.

சரியான மனப்பான்மை எல்லா மதங்களில் உள்ளவர்களிலும் எல்லா விதமான குணங்களும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஜாதி மனநிலை உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஜாதியில் பிறந்து விட்டதாலேயே நான் உயர்ந்தவன் என்று எண்ணும் மனப்போக்கு உள்ளவர்களை, குறிப்பாக பிராமணர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. முற்போக்காக சிந்திக்கும் பிராமணர்கள் இந்த மனநிலையில் இருந்து மாறுபட்டு இருப்பதைப் பார்க்க முடியும். ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடேயே தாழ்வு மனப்பான்மை இருப்பதைப் பார்க்க முடியும். உயர்வு மனப்பான்மையும் தவறு; தாழ்வு மனப்பான்மையும் தவறு. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைப் படித்தால் இந்த மனச் சிக்கலில் இருந்து விடுபட்டு விடலாம்.

சரியான சிந்தனை தெளிவான, ஆக்கப்பூர்வமான, தர்க்கரீதியான சிந்தனை இருப்பவரால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். ஒரு மனிதரின் தவறான முடிவால் அவரது குடும்பமும், ஒரு நாட்டுத் தலைவரின் தவறான முடிவால் அந்த நாடும் துன்புறுவதை நாளும் காண்கிறோம்.

– சோஃபியா

 

 

சில்லரை வணிகம் இப்படித்தான் வளர்ந்தது!

0

தமிழ் நாட்டின் சில்லரை வணிகம் என்பது தெற்கு மாவட்ட மக்களால் செழுமைப் படுத்தப்பட்ட ஒன்று. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் இந்த பணி தொடங்கியது. இதற்கு அவர்கள் பெரிய முதலீட்டை நம்பவில்லை. தங்கள் உழைப்பை யும், சிக்கனமான வாழ்க்கையை மட்டுமே நம்பினார்கள்.

தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு சிலர் முதலில் சென்னைக்கு வருவார்கள். கையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு மளிகைக் கடை அல்லது விறகுக் கடை அல்லது பாத்திரக் கடை போடுவார்கள். அதை விடவும் குறைவான பணம் வைத்து இருப்பவர்கள் ஒரு காய்கறிக் கடையைத் தொடங்குவார்கள். தங்களுக்கான சோற்றை தாங்களே பொங்கிக் கொள்வார்கள். வியாபாரம் கொஞ்சம் சூடு பிடித்ததும் ஊரில் இருந்து மனைவியை வர வைத்துக் கொள்வார்கள். பிறகு இருவருமாக சேர்ந்து கடையை நடத்துவார்கள். கடை விற்பனை அதிகரிக்கும்.

வேலைக்கு இன்னொரு ஆள் தேவைப்படும் காலம் உருவாகும். தங்கள் உறவினர்களில் இருந்து ஒரு இளைஞரை வர வைப்பார்கள். அவர் எல்லா வேலைகளையும் எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் செய்வார். காலையில் கடையைத் திறப்பது முதல், இரவு கடை மூடும் வரை உற்சாகமாக வேலை பார்ப்பார். முதலாளி வீட்டில் இருந்தே சாப்பாடு வந்து விடும். கடையின் ஒரு பகுதியிலேயே படுத்துக் கொள்வார். சில ஆண்டுகளில் தொழில் நன்கு பழகி விடும்.

அவருக்கு திருமணம் நடக்கும் காலம் வரும்போது, அதுவரை அவர் கணக்கில் சேர்ந்த பணத்தைக் கொண்டு அவருக்கு ஒரு கடையை முதலாளியே தொடங்கிக் கொடுப்பார். அல்லது அந்த வேலை பார்த்தவருக்கே தனியாக கடை போட வேண்டும் என்ற விருப்பம் வந்தாலும், அதற்கு முதலாளியும் ஒத்துழைப்பு கொடுப்பார்.
இதனாலேயே இன்றும் சில்லரை விற்பனைக் கடைகள் நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு மாவட்ட மக்களாகவே இருக்கிறார்கள்.

முதலில் சென்னை நோக்கி மட்டுமே வந்தவர்கள், பின்னர் கோவை, மும்பை, டெல்லிக்கும் செல்லத் தொடங்கி இதே முறையில் அங்கும் வளர்ந்தார்கள். மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்க வில்லை. சென்ற சில மாதங்களிலேயே தங்கள் வியாபாரத்துக்குத் தேவையான அளவுக்கு இந்தி பேசப் பழகிக் கொண்டார்கள்.
நான்கைந்து ஆண்டுகளில் குறிப்பிட்ட தொகை சேர்ந்த உடன் அதை வைத்து தங்கள் பட்ஜெட்டுக்குள் ஒரு சொந்த வீட்டை வாங்கி விடுவார்கள்
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தோன்றிய புதுமையாக சிந்தித்த சிலர், புதிய முறைகளை அறிமுகப்படுத்தினார்கள்.

அவர்களில் ஒருவரான திரு. செல்வரத்தினம், ‘கடையில் பொருட்களை குவித்து வைப்பேன்; மற்ற கடைகளை விட விலை குறைவாக இருக்கும்; வாடிக்கையாளர்களே தங்களுக்குத் தேவையான பொருள்களை தேர்வு செய்து பில் கவுன்டரில் பணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம்’ என்னும் முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை தியாகராய நகர், அரங்கநாதன் தெருவில் அறிமுகப்படுத்தினார். பெரிய வரவேற்பு கிடைத்தது. கூட்டம் குவிந்தது. கடை மிகவும் பெரிதாக வளர்ந்தது. அதுவரை இந்த மாதிரியான ‘ஷாப்பிங் அனுபவம்’ மிகையான வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒரு சில இடங்களிலேயே கிடைத்து வந்தது.
திரு. கிஷோர் பியானி என்ற வடநாட்டு வணிகர் இந்த கடைக்கு தொடர்ந்து வந்து ஆய்வு செய்து, இதைப் போலவே பிக் பசார் என்ற வணிக மையத்தை தொடங்கினார். இதை அவர் தான் எழுதிய ‘இட் ஹேப்பண்ட் இன் இந்தியா’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அடுத்த கட்ட வளர்ச்சியாக இத்தகைய பெரிய கடைகள் சென்னையின், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப் பட்டன.
இத்தகைய முயற்சிகளைப் பார்த்த வேறு மாவட்ட மக்களும், நாமும் ஏன் இப்படி வணிக முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று எண்ணியதன் விளைவு, இப்போது எல்லா மாவட்ட மக்களையும் சில்லரை வணிகத்தில் பார்க்க முடிகிறது. இருப்பினும் தெற்கு மாவட்ட மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்.

பெரிய அளவில் தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட மாற்றம் இன்று சில்லரை வணிகத்தை வேறு லெவலுக்கு உயர்த்தி இருக்கிறது. தொழில் நுட்பம் நிறைய வேலைகளை எளிதாக்கித் தந்து இருக்கிறது. பில் போடும், கணக்கை பராமரிக்கும் வேலைகளை கணினி எளிதாக்கி இருக்கிறது. கண்காணிப்பு பணிகளை சிசிடிவி எளிதாக்கி இருக்கிறது.

கடைகள் வடிவமைப்பு என்பது இன்றைக்கு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தங்கள் கடை சிறிதோ, பெரிதோ அவற்றை எப்படி இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டப்படுகிறது.
சாதாரணமாக குறைந்த முதலீட்டில் வணிகம் தொடங்கிய பலரிடம், இப்போது பெரிய அளவுக்கு வணிகங்களில் ஈடுபடும் அளவுக்கு முதலீடு இருப்பதால் அவர்கள் இப்போது பெரிதாக கடைகளை விரிவாக்குவது பற்றி சிந்தித்து வருகிறார்கள்.
தமிழர்களின் ரீடெய்ல் பிசினஸ் தொடர்ந்து கார்ப்பரேட்களுக்கு சவால் விடும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
– க. ஜெயகிருஷ்ணன்

கடனும், திண்டாட்டமும்

கடன் வாங்கிய இவர்கள் ஏன் திண்டாடினார்கள்?
தங்கள் வணிக வளர்ச்சிக்காக கடன் வாங்கி தொழில் செய்து வந்த தொழில் முனைவோர் சிலர் கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் திண்டாடிய போது, அவர்கள் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தேன். அப்போது சில காரணங்களை கண்டறிய முடிந்தது.

அவை,
கடைகளுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்யும் ஒரு வியாபாரி .மிகக் கடின உழைப்பாளி. எங்கள் நிறுவனத்தில் எழுபது லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.அவரை அணுகிய போது, பொருளை சப்ளை செய்து விட்டு கடைக்காரர்களிடம் சரியாக வசூலிக்கத் தெரியாமல் கோட்டை விட்டது தெரிய வந்தது. இந்த எண்ணெய் வியாபாரி ஏமாற்றப் பட்டிருந்தார்

ஒரு வணிக நிறுவனத்தில் வியாபாரம் நன்கு நடைபெற்றது. ஆனால் அவரால் லாபம் ஈட்ட முடியவில்லை. அது பற்றி ஆராய்ந்த போது, அவர் கணக்கு – வழக்கு பார்க்காத வியாபாரி என்பது தெரிய வந்தது. வருவாய் வந்தது, அதைவிட அங்கு செலவு கூடுதாலாக இருந்தது. மீண்டு வர முடியாத கடனுக்குள் இருந்தார். வரவு-செலவை பார்த்து செயல்படாததால் வந்த வினை.

ஒரு பல் மருத்துவர் நிறைய கடன் வாங்கி நவீன கருவிகள் போட்டு பல் மருத்துவ கிளினிக் தொடங்கினார். நோயாளிகள் வரவில்லை. கடனுக்காக மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இப்போது கிளினிக்கை மூடிவிட்டு மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போகிறார். கடனை எப்படி அடைப்பாரோ? இவரிடம் சரியான திட்டமிடல் இல்லை.

ஒரு பிரபல கண்மருத்துவர் தன் சக்திக்கு மீறி ஏகப்பட்ட கடன் வாங்கியதால் குடும்ப நிம்மதியை இழந்தார். கடன்காரர்களுக்கு அஞ்சி மனைவி பிரிந்து தனியாக போனார். கடன்தொல்லையால் மருத்துவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தொழில் திறனையும் இழந்து விட்டார். ஒரு வழியாக கடன் சிக்கலில் இருந்து அவரை வெளியே கொண்டு வந்தோம்.
வணிக வளர்ச்சிக்கு கடன் அவசியம். ஆனால், கண்டிப்பாக திருப்பிச் செலுத்தும் திறன் அறிந்தே கடன் வாங்க வேண்டும்.
– நிதியியல் வல்லுநர் திரு. ஆ. சிவசங்கர்

சென்ட் விற்பனைத் தொழிலில் சம்பாதிப்பவர்கள்

கொஞ்சம் பேர்கள் வாங்கினாலும் போதும்!
தொழில் தொடங்குவதற்கு இது மட்டும்தான் ஃபார்முலா என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறுதலாக சிந்திப்பவர்கள், புதிது புதிதாகச் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து விட்டோம்; நாம் எதற்கு பொருளீட்ட வேண்டும் என்று இத்தகைய குடும்பத்தில் பிறந்த புதிய தலைமுறையினர் நினைப்பதாகத் தெரியவில்லை. முதலீட்டுக்கு பணம் ஒரு பொருட்டு இல்லை எனும்போது, துணிச்சலாக முடிவெடுக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளாக உலோகம் சார்ந்த பொருள்கள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தைச் சார்ந்த திரு. ஷிஷிர் மேத்தா (Shishir Mehta), தொடங்கியது விலை அதிகம் உள்ள சென்ட் விற்பனைத் தொழில். ஏதாவது மாறுதலான தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டும் எண்ணிய இவர் கண்டு பிடித்தது, பர்ஃப்யூம்கள் விற்பனை.
பொதுவாகவே ப,ர்ஃப்யூம் பயன்படுத்தும் வழக்கம் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, முன்பெல்லாம் முஸ்லீம்கள்தான் அதிகமாக சென்ட் பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதனாலேயே இன்றைக்கும் பொதுவாக சென்ட்கள் விற்பனைக் கடைகளை அவர்களே அதிக அளவில் நடத்தி வருகிறார்கள். அண்மைக் காலமாக மணமூட்டும் திரவங்களை அனைவருமே பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இதனால் இதன் சந்தையும் பெரிதாகி விட்டது. அழகழகான பாட்டில்களில், விதம்விதமான நறுமணங்களுடன் உலகம் முழுவதும் பெரிய சந்தையைப் பிடித்து உள்ளது. இன்றைக்கு சற்று பெரிய மளிகைக் கடைகளில் கூட இத்தகைய நறுமணத் திரவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரங்களில் உள்ள மால்களில் இதற்கென தனிக் கடைகளே போடப்பட்டு உள்ளன.

நறுமண திரவங்களை விரும்பிப் பயன்படுத்தும் திரு. ஷிஷிர் மேத்தா, தனது பர்ஃப்யூம் கடை மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கூடுதலாக லாபம் வரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தீவிரமாக சிந்தித்து, அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ள பணக்காரர்களை மட்டுமே குறி வைத்து தனது தனது சென்டிடோ (Scentido) விற்பனையகத்தை அமைத்தார். ஆயிரம் சதுர அடியில் அழகான இன்டீரியருடன் அமைக்கப்பட்ட கடையில், ஏழாயிரம் ரூபாயில் தொடங்கி இரண்டரை லட்ச ரூபாய் வரை விலை உள்ள பர்ஃப்யூம் பாட்டில்களை அடுக்கினார்.

இப்படி விலை கூடிய நறுமண திரவங்களை விற்பனை செய்வதில் இவரை முந்திக் கொண்ட வேறு நிறுவனங்களும் இருக்கின்றன. அல்லி மட்டான் கிரியேஷன், 2004-ல் அகல்யா மட்டான் என்பவரால் தொடங்கப்பட்டது. 2015- ல் பர்ப்யூம் லைப்ரரி தொடங்கப்பட்டது. அதைத் தொடரந்து பாம்பே பர்ஃப்யூமரி 2016-ல் தொடங்கப்பட்டது.
பர்ஃப்யூம் துறையில் நல்ல அனுபவம் பெற்ற திருமதி. ஜான்வி டேமரான் நந்தன் எனபவரால் தொடங்கப்பட்ட பர்ஃப்யூம் லைப்ரரி பற்றி அவர் கூறும்போது, எங்கள் நிறுவனம் உலகிற்கு கிடைத்தற்கு அரிய கிராஸ்மித், மேரி கிரீன்வெல் போன்ற நறுமணங்களை அளிக்கிறோம் என்கிறார்.
இதே போல திரு. மனன் காந்தி என்பவரின் பாம்பே பர்ஃப்யூமரி, சாய் மஸ்க், மதுரை டாக்கீஸ், காலிகட் போன்ற நறுமணங்களை வழங்குகிறது.
இந்த சந்தை நுகர்பொருள் சந்தை போன்ற பெரிய சந்தை இல்லையென்றாலும், இந்த சந்தையின் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நறுமணங்களின் மீது ஆர்வம் காட்டுபவர்கள் என்பதால், விற்பனை அதிகரிக்கிறது.

ஷிஷிர் மேத்தா, உலகம் முழுவதும் சுற்றி, எங்கெங்கே மாறுதலான நறுமண திரவங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை நேரடியாக இவரே கொள்முதல் செய்கிறார். ”எங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான். இருப்பினும் அவர்களின் தொடர் தேடல் எங்கள் வணிகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது.” என்கிறார், இவர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இந்த அளவுக்கு உச்ச விலை வைத்து விற்பனை செய்யக்கூடிய பர்ஃப்யூம் கடைகளை அவ்வளவாக பார்க்க இயலவில்லை. வழக்கமான கடைகளில் ஒன்றிரண்டு அதிக விலை உள்ள பர்ஃப்யூம்களை பார்க்க முடிகிறது.
– நேர்மன்

 

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும் திரு. அகமது மீரான்

மணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர்,
இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்!
புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அகமது மீரான்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்.
19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருந்தபோது
தொலைபேசித் துறையில் ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார்.
180 ரூபாய் மாதச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
வெற்றி மீதுள்ள ஆசையின் விளைவாக, சரியான பாதையை நோக்கிப் பயணித்தார்.
வேலையை விட்டு விலகினார்…
ஒரு டிராவல் ஏஜென்சி தொடங்கினார்.
பின்னர் புரபசனல் கொரியர்ஸ் என்ற நிறுவனத்தை 7 பேருடன் இணைந்து 1987-ம் ஆண்டு தொடங்கினார்.
“கூடுதல் தொழில் வாய்ப்புகள் குறித்து தேடத் தொடங்கினேன்.
என் நண்பர்களிடம் சொல்லி வைத்தேன்.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு நண்பர், கொச்சியில் இருந்து செயல்படும் கொரியர் நிறுவனமான கோஸ்ட் கொரியர் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த கொரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சென்னையில் ஒரு ஏஜென்ட் நியமிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.
“சென்னையில் அவர்களுக்கு ஏற்கனவே சில வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
இந்தத் தொழில் வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
இதற்காக இரண்டு ஊழியர்களை நியமித்தேன். மொத்த வருவாயில் இருந்து 15 சதவிகிதம் கமிஷனாகப் பெற்றேன்.
1985-ம் ஆண்டுக்கு மத்தியில் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டபோது, எங்கள் மாத வருவாய் 1,500 ரூபாயாக இருந்தது. ஆனால், ஒன்றரை வருடத்துக்குள் 10 மடங்கு அதிகமாக 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உயர்ந்தது,.
வணிக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.
கொரியர் சேவைக்கு இந்தியாவில் அது தொடக்க நிலைதான். வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர்கள் பெற்றேன் என்கிறார்.
இந்தியன் வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பெரிய வாடிக்கையாளர்களுக்கு அவரே நேரில் சென்று கொரியர் டெலிவரி செய்தார். அவருடைய வாடிக்கையாளர்களிடம் மும்பை போன்ற நகரங்களில் இருந்து முந்தைய நாள் கொடுக்கப்பட்ட ஆவணங்களை மறுநாள் டெலிவரி செய்ய முடிவதைச் சுட்டிக் காட்டுவார்.
“நான் பஜாஜ் எம்.80 பைக் வைத்திருந்தேன். ஆரம்ப காலகட்டங்களில் அதில்தான் தினமும் கொரியர் பாக்கெட்களை கொடுக்கவும், வாங்கவும் விமானநிலையம் செல்வேன்,” என்று நினைவு கூறுகிறார் மீரான். இப்போது அவர் ஒரு சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார். அதில்தான் அவர் பயணிக்கிறார்.
1986-ம் ஆண்டில், கொச்சியில் சில மாற்றங்கள் நடந்தன. எனவே, பல்வேறு நகரங்களில் இருந்த கோஸ்ட் கொரியர் நிறுவன ஏஜென்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த மீரான் உட்பட 8 பேர் அதில் இருந்து விலகினர். அவர்கள் ஒன்றிணைந்து கோஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஒரு புதிய கொரியர் நிறுவனத்தைத் தொடங்கினர்.
பின்னர், சட்டப்பிரச்னை காரணமாக 1987-ம் ஆண்டு புரபஷனல் கொரியர்ஸ் என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் முகவர்கள் நியமிக்கப்பட்டனர். தொழில் விரிவாக்கம் பெற்றது.
தற்போது மீரான், அதன் சென்னை உரிமையாளராக
தானே வணிகத்தைக் கவனித்துக் கொள்கின்றார்.
அவரிடம் 2,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
90 கிளைகளுடன், இப்போதைய ஆண்டு வரவுசெலவு 100 கோடி ரூபாயாக இருக்கின்றது.
“ஒவ்வொரு மாதமும்,
ஊழியர்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் தருகின்றோம்.
எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளேன் என்ற வகையில் இது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி…மனநிறைவு அளிக்கிறது.
இன்றைக்கு 9000 கிளைகள் இருக்கின்றன. தமிழகத்தில் புரபஷனல் என்ற பிராண்ட்டின் கீழ் 8,000 பேர் பணியாற்றுகின்றனர்.
மீரான், கல்வித்துறையிலும் கால் பதித்திருக்கிறார். சென்னையில் யுனிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் சி.பி.எஸ்.இ பள்ளியைத் தொடங்கினார். இப்போது அந்தப் பள்ளியில் 2,400 பேர் படிக்கின்றனர்.
– அருணகிரி, சங்கரன்கோயில்
May be an image of 1 person, standing and road

நிபுணர் குழுவில் சி்த்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களையும் சேர்க்க வேண்டும்!

0

தடுப்பூசி தொடர்பான அரசின் வற்புறுத்தல்கள் கவலை அளிக்கின்றன. இது ஒரு அவசர பயன்பாட்டுக்கான பரிசோதனைக் கட்ட தடுப்பூசிதான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை போட்டாலும் நோய் வரும். முகக் கவசம் அணிய வேண்டும். பின் விளைவுகளுக்கு மருந்துக் கம்பெனியும் பொறுப்பு ஏற்காது. அரசும் பொறுப்பு ஏற்காது என்ற நிலையில் அந்த தடுப்பூசிகள் மீது அரசுகளுக்கே முழு நம்பிக்கை இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. போட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவது சட்டத்துக்கும் புறம்பானது; மனித உரிமைக்கும் எதிரானது. ஊக்கப்படுத்துவது வேறு; கட்டாயப்படுத்துவது என்பது வேறு. அரசு இந்த வகையில் தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களாகவே விரும்பி போட்டுக் கொள்ளச் செய்யலாமே தவிர போட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளக் கூடாது. தனக்கு நோய்த் தடுப்பாற்றல் இருக்கிறது என்று தெரிந்து வைத்து இருப்பவர் தனக்கு ஊசி தேவை இல்லை என்று நினைத்தால் அதில் என்ன தவறு?
தொடுவதன் மூலம் பரவாது என்று ஐசிஎம்ஆர் அறிவித்த பிறகும் அதை கவனத்தில் கொள்ளாமல் வெளியிடும் அறிவிப்புகள் பொருத்தமற்றவையாக உள்ளன. இந்த வகையில் அரசு மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நிபுணர் குழுவில் அலோபதி நிபுணர்களுடன், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ நிபுணர்களையும் அமர வைக்க வேண்டும். அவர்கள் ஆலோசனைகளையும் செவிமடுக்க வேண்டும்.
– நேர்மன்