கடல் தரும் தொழில் வாய்ப்புகள்

0

உலகில் மொத்த நிலப்பரப்பு இருபத்தெட்டு விழுக்காடுதான். மீதம் இருக்கும் எழுபத்திரெண்டு விழுக்காடு கடல் என்ற அளவீட்டினை நாம் நாட்டினர் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை.

இன்றைக்கு இருக்கும் இந்த நிலத்தில் நாம் பயிரிட்டு உணவினை உற்பத்தி செய்து வருகிறோம். இருக்கவும், தொழிலுக்குமான இடத்தைப் பயன்படுத்துகிறோம் என்றால் உலகின் மொத்த கடல் பரப்பில் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் என்பதை பற்றி சிந்திப்பவா்கள் வெகு சிலரே. அளவில்லாத ஒரு காரணியை குறிப்பிட ‘கடல் போல’ என சொல்கிறோம். இதிலிருந்தே கடலில் தொழில் வாய்ப்புகள் எவ்வளவு இருக்கும் என்பது நமக்கு புரிகிறது.

தற்போது இருபது லட்சத்திற்கும் மேலான உயிரினங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு dள்ளன. மேலும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் நமக்குத் தெரிந்த உணவு பொருட்கள் 0.1 விழுக்காடுதான். மீன், நண்டு, இறால் போன்றவை அதிலேயே அடங்கும். இன்னும் எத்தனையோ வகை உண்ணக்கூடியவைகளும் மற்றும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் கடலில் உள்ளன.

நம்மிடையே அறியப்படாத , இல்லை இல்லை, இது வரையில் யாரும் முயலாத கடல் சார்ந்த தொழில் வாய்ப்புகள் எத்தனையோ உள்ளன.

மீன் பிடிப்பு தவிர நிலத்தில் நாம் செய்வதைப் போல கடலிலும் சுற்றுலாத் தொழிலை வெகு சிறப்பாகச் செய‍்ய முடியும். அருகிலுள்ள இலட்சத் தீவுகள், அந்தமான், போன்றவற்றிற்கும் ஏன் கரையோர கடல் சுற்றுக்கும் நாம் அனுமதியைப் பெற்று படகுகளை இயக்கி பணம் சம்பாதிக்க முடியும். நமது கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பதை நாம் அறிவோம். கிழக்கிந்திய கடற்கரையின் நீளம் ஏழாயிரத்தை நூறு கிலோ மீட்டராகும். இதனை சுற்றுலாவிற்கு நாம் பயன்படுத்துவதில்லை மாறாக கேரளத்தினர் கடல் சுற்றுலா தொழிலை மேற்கொண்டு நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

மேலும், கடலில் நீச்சல் பயிற்சி, சர்ஃபிங் (Surfing) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற அலை சறுக்கு விளையாட்டு போன்றவற்றை நாம் கடற்கரையில் தொழிலாக செய்யலாம். சென்னையில் கோவளம் பகுதியில் கடல் சறுக்கு விளையாட்டுத் தொழிலை சிலர் நடத்தி வருகின்றனர்.

கடல் உணவுத் தொழிலானது நமது கடற்கரையைப் போல மிக நீளமான கூறுகளைக் கொண்டதாகும். மீன் பிடிக்கப் படகுகள் தேவை. அவற்றைத் தயாரிக்க ஒரு தொழில்.

அவற்றிற்கான மரங்கள் இங்கு கிடைக்காது, கேரளத்திலிருந்து எடுத்து வர வேண்டும். எனவே அந்த மரத்தை  இறக்குமதி செய்யும் தொழில், படகுகளுக்கான எஞ்சின் தயாரிக்கும் தொழில், அவற்றை பழுது நீக்கும் தொழில், படகுகளில் மின் அமைப்பை உருவாக்கும் தொழில், வலை பாதுகாப்பு கருவிகள், கயிறுகள் போன்றவற்றைத் தயாரிக்கவும், விற்கவுமான தொழில், மீன்களைப் பதப்படுத்த ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கும்  தொழில், பெரிய ஐஸ் பாறைகளை தூளாக்கும் எந்திரம் மற்றும் அதனை செய்யும் தொழில். மீனவர்களுக்கான தண்ணீர், உணவு போன்றவற்றிலுள்ள தொழில் வாய்ப்புகள் என மீனவர்களைச்  சுற்றிலும் இன்னும் எத்தனையோ தொழில் வாய்ப்புகள் உள்ளன.

கடலுணவு உற்பத்தியில், நம்மிடையே அதிகம் அறிமுகமில்லாத ஆனால் தற்போது விரைவில் செயல்படவுள்ள கடல் வேளாண்மை என்னும் தொழில் வாய்ப்பு நமக்கு மிகுந்த லாபத்தை அளிக்க கூடிய தொழில் வாய்ப்பாகும். கடலில் நமக்கு தேவையான இடத்தினை அரசிடம் அனுமதி பெற்று வலைகட்டி அதில் நாம் மீன் குஞ்சுகளை இட்டு வளர்த்து விற்கலாம். இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமியர்கள் இந்த தொழிலில் சிறப்பாக லாபம் ஈட்டி வருகின்றனர். இப்போது இந்தத் தொழில் தொடர்பான பயிற்சிகள் சென்னையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கடல் வேளாண்மையில் இருபது கிலோவிற்கும் மேல் வளர்கின்ற மீனை நாம் பெற முடியும். இந்த தொழிலுக்கு நமது அரசாங்கம் மானியமும் உள்ளது. நமது நாட்டிற்கு ஆண்டிற்கு சுமார் பதினைந்து கோடி வரையிலான அந்நியச் செலவாணி, தற்போது மீன் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றது. மேலும் அது உயர்ந்து கொண்டும் வருகிறது.

மேலும் நமக்குத் தெரிந்த மீன் வகைகளைத் தவிர்த்து பார்த்தோமேயானால் ஆளி, மட்டி, சங்கு மடக்கிரால், கடமா, ஜெல்லி மீன், சுறா பீலி, களி நண்டு போன்றவை வெளிநாடுகளில் பெரிய அளவிற்கு விலைபோகின்றன. ஆளி, மட்டி, சங்கு போன்றவற்றிலுள்ள சதை பகுதிகளை உண்ணும் வழக்கத்தினை நாம் கொண்டிருக்கவில்லை. அதனால் அவற்றின் அருமை நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அவை அதிக அளவில் விரும்பி உண்ணப்படுகின்றன. சங்கு கொல்கத்தாவில் அதிக அளவில் வாங்கப்படுகிறது. அதனைக் கொண்டு அலங்காரப் பொருட்கள், பரிசுப்  பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு உள் நாட்டிற்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியில் வெகு சிலரே இதனை செய்கின்றனர்.

இங்கு ‘சொரிமீன்’ என அறியப்படுகின்ற ஜெல்லி மீன் வெளிநாடுகளில் மதிப்புமிக்க உணவுப் பொருளைத் தயாரிக்க பயன்படுகிறது. மற்றும் சுறா பீலி எனப்படுகின்ற சுறா மீனின் துடுப்பு பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் சூப் விலை மதிப்பான உணவு வகைகளில் ஒன்றாகும். மடக்கிரால் என்னும் இரால் வகை பார்ப்பதற்கு கொஞ்சம் பெரியதாகவும், வால் பகுதி முன்புறமாக வளைந்தும் காணப்படும். அதில் செய்யப்பட்ட உணவு வியட்நாமில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.

நம்மிடையே பேய்க்கடமா என்று அழைக்கப்படும்  முள் இல்லாத மீனில் செம்புச்சத்து அதிகம் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும்  அந்நியச் செலவாணி  மிக அதிகம். முள் இல்லாத காரணத்தினால்  வெளிநாடுகளில் இதனைக் கொண்டு உயர்தர மீன் உணவுகளை உருவாக்கின்றனர். நமக்கு நன்னீரிலும், கடலிலும் கிடைக்கும் களி நண்டு mud crab) மிகுந்த ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஒரு நண்டு வகையாகும். அவை கிலோவிற்கு நானூரில் இருந்து ஐந்நூறு வரையில் விலை போகின்றது. இது தவிர வண்ண மீன்கள், அதற்கான பவழப்பாறைகள் பெரிய அளவுக்கு விலை போகின்றன.

பல வகையான உணவுப் பொருட்களைத் த‍யாரிக்க பயன்படும் கடல்பாசியை நாம் அதிகம் கண்டு கொள்வதில்லை. மொத்தம் பதினெட்டு வகையான கடல்பாசிகள் உள்ளன. இந்தியாவை தவிர மற்ற ஆசிய நாடுகளில் முக்கிய துணை உணவுப் பொருளாக இந்த கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள் உள்ளன.

அது தவிர மீன் பிஸ்கட், மீன் ஊறுகாய், மீன் கட்லெட் போன்று வெளிநாட்டவர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளை நமது மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி எளிதாகத் தயாரிக்க முடியும். மற்ற நாடுகளில், கடலுணவு மற்றும் கடலிலிருந்து பெறும் பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்வதில்லை. கடலுணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் வாய்ப்புகளில் தான் லாபம் அதிகம் ஈட்டப்படுகிறது.

அக்வா கல்சர் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகளில் ஒருவராக வியட்நாமிற்குச் சென்று அங்கு சிறப்பு பெற்றுவரும் கடல் உணவுத் தொழில்களை ஆராயும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வியட்நாம் மிக குறுகிய காலத்தில்  பொருளாதாரத்தில் உயர்ந்த ஒரு ஆசிய நாடாகும். அவ்வாறு அந்நாட்டின் பொருளாதாரம் உயர்ந்ததற்கு அங்குள்ள கடல் உணவுத் தொழில்களும் முக்கிய காரணம். கடலிலேயே மீன் வளர்ப்புத் தொழிலை செய்கிறார்கள்.

அங்குள்ள ஒரு மீன்  சந்தைக்கு நான் சென்ற போது அங்கே எந்த நாற்றமும் இல்லை. அவர்கள் கடலுணவுப் பொருட்களை முறையாக பதப்படுத்தியும் , உடனடியாக சமைப்பதற்கு  ஏற்ற வகையில் அவற்றை தரம் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களாகவும் தயாரித்து விற்கின்றனர். கழிவுகளை நீக்கி உரிய காற்று புகாத பைகளில் அடைத்து விற்கின்றனர். அங்கு கல்வியறிவு பெற்றவர்கள் கடல் உணவுத்தொழிலில் பெருமளவு இறங்கியுள்ளனர். ஆண்களை விட பெண்கள் தலைமையில் நடக்கும் இத்தொழில்கள் அங்கு ஏராளம்.

கடலுணவு சார்ந்த தொழில் வாய்ப்புகளைப் பற்றி படித்த இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் மரபுவழி திறனோடு தனது சந்ததிகளின் கல்வியறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடலில் தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இது மீனவர்களுக்கான தொழில் என நினைப்பதும் ‘மீன்காரன்’ என தாழ்வுப்படுத்துவதும் நம் நாட்டில் மட்டும் தானே தவிர மற்ற நாடுகளில் கடலை சார்ந்து தொழில் புரிபவர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்குகின்றனர். நவீன தொழில் நுட்ப அறிவைப் பெற்று மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதித் தரத்தில் உருவாக்கி வளர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பான தொழில் வாய்ப்புகளை நம்மவர்கள் அறிய முயல வேண்டும். இதற்கு உதவ, வழிகாட்ட பல அரசு அமைப்புகள் உள்ளன. MPEDA (Marine Products Exports Development Authority) என்னும் மத்திய அரசின் கடலுணவு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தை அணுகி கடல் சார்ந்த உணவு மற்றும் இதர கடல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலைத் தொடங்கவும், வளர்க்கவுமான தகவல்களையும், உதவிகளையும் பெறுவதற்கான வழிகாட்டல்களையும் பெறலாம். (CMFRI) Central Marine Fishers Reserch Institute)  என்று அழைக்கப்படும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தையும் அணுகலாம். இது போன்று அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களின் தமிழக கிளைகளைப் பயன்படுத்தி இங்கு கடல்  சார்ந்து அறிமுகமாகியுள்ள புதிய தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளையும், வழிகாட்டல்களையும் பெறலாம்.

– ‘கடலார்’ க.வேலாயுதம்.

 

 

 

 

இவற்றை நம்பாவிட்டால் தன்னம்பிக்கை தானே வரும்!

அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும்; மூட நம்பிக்கைகளில் இருந்து, கடவுள் நம்பிக்கையில் இருந்து சக மனிதர்கள் விடுபட வேண்டும் என்று நினைப்பதும் அதற்கான கருத்துகளை எடுத்து உரைப்பதும் எல்லோரும் திராவிடர் கழகத்தில் சேர்ந்து விடுவார்கள் என்பதற்காக அல்ல. இந்த கொள்கைகளால் நாம் அடையும் பயன்களை மற்றவர்களும் அடைய வேண்டுமே என்ற ஆசைதான். ‘எல்லோரும் இன்புற்றிருக்க..’ என்ற அடிப்படைதான்.
ஜோசியம், ஜாதகம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று அஞ்சும் இனம் புரியாத அச்சம் நம்மை விட்டு அகன்றுவிடும். ராகுகாலம், எமகண்டம் என்று குறிப்பிட்ட நேரங்களை புறக்கணித்து அந்த நேரங்களை வீணாக்கும் அச்சமும் போய்விடும். சகுனத்துக்கு பயப்படும் நிலைமையும் மாறிவிடும்.
வாஸ்து நம்பிக்கை இல்லாவிட்டால் வீட்டை அறிவியல் சார்ந்து வசதியாக கட்டிக் கொள்ளும் இயல்பு வந்து விடும். வாஸ்து ஜோசியர் சொன்னார் என்று கட்டிய வீட்டை இடித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தொழில் முனைவோராக இருந்தால் இந்த திசை நோக்கி அமர்ந்தால்தான் அதிர்ஷ்டம் வரும் என்று மேஜையை கண்டபடி மாற்றிக் கொண்டிருக்கும் தேவை எழாது.
கடைக்காரர்கள் திருஷ்டிப் பூசனிக்காய் கட்டுவது, அசிங்கமான படத்தை தொங்க விடுவது, அசிங்கமாக ஒரு வைக்கோல் பொம்மையைக் கட்டி வைப்பது, சாலையில் தேங்காயை உடைத்து வீணாக்குவது போன்றவை இருக்காது.
திருமணம் போன்ற விழாக்களை நம் வசதிக்கேற்ற நாளில், அனைவரின் வசதிக்கேற்ற நேரத்தில் நடத்திக் கொள்ளும் துணிவு வந்து விடும். விடியற்காலை 5.30 க்குத்தான் நல்ல நேரம் என்று தாங்களும் கஷ்டப்பட்டு, உறவினர் நண்பர்களையும் தொல்லைப்படுத்த வேண்டிய தேவை எழாது. நேரத்தை ஐயர்தான் குறித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டிய தேவையும் வராது. மணமக்கள் தேர்விலும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று நல்ல பொருத்தமான துணையை நிராகரிக்க வேண்டி இருக்காது.
அனைத்துக்கும் கடவுள்தான் காரணம் என்று நம்பியும், கடவுள் என்ற ஒன்று இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா என்று நம்ப முடியாமலும் தவிக்க வேண்டியது இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களை அதன் போக்கில்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் வந்து விடும். பரிகாரங்கள் என்ற பெயரில் செய்யப்படும் வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டு விடும்.
மிகவும் முதன்மையாக மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கு பயன்படுத்தும் சூனியம் வைப்பது, எடுப்பது போன்றவற்றை நம்பி ஏமாற மாட்டீர்கள். பேய், பிசாசு, ஆவி நம்பிக்கை எல்லாம் ஓடிவிடும். எந்த இருட்டிலும் அச்சம் இன்றி நடை போடுவீர்கள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டால் முயற்சிகள் மீது முழு நம்பிக்கை வரும். முயற்சிகள்தான் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும்.
அறிவியல் மனப்பான்மை வந்து விட்டால் அறிவு வளர்ச்சிக்கு உதவும் நூல்களை படிக்கத் தொடங்குவீர்கள். யூடியூபில் அறிஞர்களின், வல்லுநர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து கேட்பீர்கள். சமத்துவ எண்ணம் ஓங்கும். பார்ப்பனர்கள் நம்மை விட மேல்ஜாதி என்று நினைப்பது மனதில் இருந்து நீங்கும். எல்லோரும் சமம் என்ற மனித நேயம் மனதில் பொங்கும். அடுத்தவர் வளர்ச்சி பொறாமை உணரச்சியைத் தராது. அதற்கு பதில் மகிழ்ச்சியைத் தரும்.
– இப்போது சொல்லுங்கள், தங்களைப் போன்றே பிறரும் இப்படி சுதந்திரமான மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்று நினைப்பதும், செயல்படுவதும் கூட மனித நேயம் சார்ந்ததுதானே!                                                         – நேர்மன்

கம்பெனியாக (பிரைவேட் லிமிடெட், லிமிடெட்) பதிவு செய்வது தேவைதானா?

0

”தொழில், வியாபாரம் என எதைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் அதற்கொரு அமைப்பு வேண்டும். தொழிலைத் தொடங்கும் போது அதற்கான முதலீடு மற்றும் அனைத்துத் தேவைகளையும் தனிப்பட்ட ஒருவரே ஏற்பாடு செய்து தொடங்குவது என்பது இன்றைய சூழலுக்கு ஒத்துவராத ஒன்றும் கூட.

குடும்ப வணிகமாக நடத்திக் கொண்டிருந்தாலும் கூட பிள்ளைகள் வளர்ந்தவுடன் அவர்களையும் நிறுவனத்திற்குள் கொண்டு வர விரும்புகிறோம். அல்லது பல பேரிடம் கடன் வாங்குகிறோம். பலருடைய உதவி தேவைப்படுகிறது. இதனால் தொழிலைத் தொடங்கும்போதே கூட்டாண்மை (Partnership) நிறுவனமாகத் (firm) தொடங்குவது, சாதாரணமாக, இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொழில்முனைவோர்களும் பெரும்பாலும் கூட்டாண்மை நிறுவனமாகத்தான் தொடங்க விரும்புகிறார்கள். கார்ப்பரேட்களாக (Private Limited or Limited) பதிவு செய்து நடத்தலாமே என சிந்திப்பது இல்லை.

கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு கொண்டால், நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதாக நினைக்கிறோம். ஆண்டுக்காண்டு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும், கம்பெனித் துறையினருக்கு படிவங்கள் அனுப்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளைப் பற்றி அதிகப்படியாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால் கம்பெனியாக நிறுவுவதில் உள்ள நன்மைகள் பற்றி கவனத்தில் கொள்வதில்லை.

பங்கு நிறுவனங்களில் பங்குதாரர்களிடையே வேறுபாடுகள், பிணக்குகள் ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வது எளிதாக இல்லை. நீதிமன்றம் மூலம்தான் தீர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த வியாபாரத்தை நடத்த முடியாது. நீதிமன்றம் மூலம் தீர்க்க வேண்டுமானால் இடைக்காலத்தில் ரிசீவர் (Receiver) ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருக்கும். எந்தவொரு கூட்டாண்மை நிறுவனத்தையும் ஒரு நோட்டீஸ் மூலம் உடைத்து விட (dissolution) முடியும். இதனால் உடனடியாக கூட்டாளிகள் நிறுவனம் கலைக்கப்படுகிறது. பிறகு வியாபாரத்தை எப்படி தொடர்வது? என்பதே பெரிய சிக்கலாகி விடும்.

பல பங்குதாரர் இருக்கும் நிறுவனம் ஒன்றில் ஒரு பங்குதாரருக்கு வேறுபட்ட கருத்துத் தோன்றிவிட்டால் அந்தக் கூட்டாளிகள் நிறுவனத்தைக் கலைக்க முயல்வர். அப்படி நடந்தால் கடன் கொடுத்தவர்கள் உடனே திருப்பிக் கேட்பார்கள். இதனால் அந்த நிறுவனத்தை நடத்த முடியாமல் நொடித்துப் போவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கின்றன.

இதே சமயம் பிரைவேட் லிமிடெட் அல்லது லிமிடெட் பங்குநர்களிடையே மனவேறுபாடுகள் ஏற்பட்டால் கம்பெனிச் சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியும். முரண்பாடுள்ள பங்குநர் கம்பெனி சட்ட அலுவலர்கள் மூலம் தனது குறைகளை எடுத்துக் கூறினால், அதற்கான தீர்வைக் காணலாம்.

வங்கிகள் பெரும்பாலும் கம்பெனிகளுக்கு கடன் கொடுப்பதையே  விரும்புகின்றன. அதிகப்படியான கடன் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் கூட்டு நிறுவனங்களை கம்பெனியாக மாற்ற வேண்டிய கட்டுப்பாட்டை (Conditions) விதிக்கின்றன.

மேலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தொழிலில் நட்டம் ஏற்படும் போது, கடனைத் திருப்பி தர இயலாமல் போகலாம். அந்தத் தொழிலின் உரிமையாளராகவோ அல்லது அவர் கூட்டாண்மை நிறுவனத்தில் (firm)பங்குதாரராகவோ இருந்தால் நொடித்துப் போய்விடுகிறார்.  திவால் (இன்சால் வென்ட்) ஆகிறார். ஆனால் கம்பெனியின் பங்குநராக இருப்பின், கம்பெனி கடன்களுக்கு அவர் உறுதி (கேரண்டி) அளித்து இருந்தால் மட்டுமே தனிப்பட்ட முறையில் அவரைப் பாதிக்கும். மற்றபடி பாதிப்பில்லை. இந்த நிலையை வரையறுக்கப்பபட்ட பொறுப்பு (Limited Liability)  என்பர், இது கம்பெனிகளுக்குக் கிடைப்பது முக்கிய நன்மையாகும்.

இந்த கம்பெனிச் சட்ட நடைமுறைதான் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்ததாக பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால்,  வரையறுக்கப்பட்ட பொறுப்பு (Limited Liability) இருப்பதால், தொழிலில் இயற்கையாக உள்ள இடர்ப்பாடுகளை துணிவோடு சந்திக்க முடியும்.

ஆனால், நம் நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள் நினைப்பது போல் கம்பெனியில் பதிவுச் செய்வதால் வரக்கூடிய கட்டுப்பாடுகள், சட்டத் திட்டங்களை பெரிய தடையாகச் சொல்ல முடியாது.

ஒரு நிறுவனத்தின் உற்பத்தி நுணுக்கமோ, வணிக நுட்பமோ தான் ரகசியமாக இருக்க முடியும். மற்றதை எல்லாம் ரகசியமாக வைத்திருக்க வேண்டியதில்லை.  இந்த ரகசியத்தைப் பற்றிய கண்ணோட்டமே இன்றைக்கு மாறி வருகிறது. இதனால் கம்பெனியாக இருப்பதை பெரிய தடையாகவோ, கட்டுப்பாடாகவோ நினைக்க வேண்டியதில்லை.

பிரைவேட் லிமிடெட் அல்லது லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்ததால், பெரிய நிறுவனங்கள், பெரிய தொழில்கள் நம்நாட்டில் வளர்ந்து உயர்ந்திருப்பதற்கு நிறைய எடுத்துக்காட்டு சொல்ல  முடியும். அவர்களுடைய வளர்ச்சிக்கு கம்பெனியாகப் பதிவு செய்தது ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.

கம்பெனியாக செயல்படுவதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. கம்பெனியின் லாபத்திற்கு ஒரு தொழில் அதிபர் வரி கட்டுவதோடு பங்கு ஈவுக்கும் (டிவிடெண்ட்) வரி கட்ட வேண்டும். இதை அதிகப்படியான வரியாக எல்லோரும் கருதுகிறார்கள்.

தணிக்கை (ஆடிட்) செய்வது, ஆண்டுக்காண்டு படிவங்கள் அனுப்புவது, எவ்வளவு கடன் இருக்கிறது, அடமானம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கம்பெனித் துறைக்கு கொடுக்க வேண்டி இருப்பதை கடினமாக நினைப்பதை விட தொழிலின், நிறுவனத்தின் உண்மை நிலைமையை அறிந்து கொள்வதற்கும், அடுத்துச் செல்வதற்கான வழியை அவ்வப்போதே தீர்மானித்துக் கொள்வதற்கும் வாய்ப்பாக தொழில் முனைவோர் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொழில் செய்யும் பல பேர் கடன் வாங்கிக் கொண்டே செல்கிறார்கள். எவ்வளவு வாங்கினோம், எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்ற திட்டம் இருக்காது. பணம் நிறைய வந்துக் கொண்டே இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கேட்கும் வரை எதுவும் தெரியாது.

கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும் போது, அதை செலுத்த முடியாமல் திவால் (இன்சால்வென்ட்) ஆகி விடுவார்கள். இவை எல்லாம் சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கிறது. கம்பெனியில் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு குறைவு. தணிக்கை, ஆண்டறிக்கை, தெளிவாக அவ்வப்போது உண்மை நிலையை எடுத்துச் சொல்லி விடும்.

ஆனால், பெரிய கம்பெனிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு முடித்து கொடுத்தாக வேண்டும். அதை பத்திரிக்கைகளிலும் வெளியிட வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளால் அவை எல்லாம் பன்மடங்கு வ‍ளர்ச்சி அடைந்திருக்கின்றனவே தவிர ஒரு போதும் தேக்கமடைந்து விடவில்லை.

இப்படிக் கம்பெனியாகப் பதிவு செய்து நிர்வாகத்தை நடத்துவதை தொழில் முறை மேலாண்மை (Professionly Management)யில் நடத்துவதாகும். இதனால் தொழிலுக்கும், நிர்வாகத்திற்கும் அதிகப்படியான நன்மைகளும், வளர்ச்சிகளும் கிடைக்கின்றன. எந்தவொரு தொழிலும் வளர்ச்சி அடையும் போது தனிப்பட்ட ஒருவராக இருந்து தொடங்கும் தொழில் கூட்டுத் தொழிலாகிறது (firm), அது மேலும் விரிவடையும் போது கம்பெனியாக மாற வேண்டும். அது தொடக்கத்தில் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக இருக்கும்.

நாளடைவில் அதிக முதலீடு தேவைப்படும் போது பொது நிறுவனமாக (Public Limited Company) மாறுகிறது. இன்னும் விரிவடையும் போது அது லிஸ்டட் கம்பெனியாகிறது. பங்குச் சந்தையில் பங்குநர்கள் அதன் பங்குகளை எளிதாக வாங்குவதற்கும், கொடுப்பதற்கும் வசதியாகிறது. தொழில், வணிகம் இவற்றில் ஈடுபடும் ஒவ்வொரு தொழில் முனைவோரும் இந்த வளர்ச்சியைக் காண முயற்சிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, தொலைநோக்குக் கொண்ட எந்த தொழில் அதிபரும் தமது கொள்கையாகக் கொள்ள வேண்டிய, அவசியமான ஒன்றாகும்”.

– இராஜரத்தினம்.

 

இந்தியப் பெண்கள் மருத்துவம் படிக்க வித்தூன்றிய ஐடா ஸ்கடர்..!

0

நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். “அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்… உதவி வேணும் உடனே வாங்க” என்று பதறுகிறார்..!ஐடாவோ, “நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்” என்கிறார்.
“இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசுதான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை” என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக் கூற, “வேண்டாம்மா… நாங்கள் இஸ்லாமியர்கள்… எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது” என்று அவரும் சோகத்துடனே திரும்பி விடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள், ஐடா. மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப் படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
“என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்து விட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்” என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டர் ஆகிறார்..!
மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா Ida Scudder அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு மருத்துவ மனை தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது…!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.
மருத்துவமனை கட்டும் பணியை தொடங்குகிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒரு வழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவ மனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
அதுதான் ஆசியாவிலேயே தனிப் பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் “சிஎம்சி” மருத்துவமனை.
ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார்.
இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..! இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..! ”கிளிம்ப்சஸ் ஆஃப் மை லைஃப் அண்ட் ஒர்க் இன் இந்தியா” என்ற பெயரில் தன் வாழ்க்கை அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடாதான். எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா அன்னை தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. லட்சக் கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவியை செய்து கொண்டு இருக்கிறது. பதினான்கு வயது சிறுமியின் மன உறுதி ஒரு சிறந்த மருத்துவமனையை தமிழ்நாடு பெறக் காரணமாகி விட்டது.
– கருணாமூர்த்தி

இன்னொருவருக்கு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்கலாமா?

கடன் நிர்வாகம் 

கல்வி கற்க பள்ளிக்கும், உடலை நோயில் இருந்து பாதுகாக்க மருத்துவரிடமும், வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள வாகன பள்ளிக்கும் எதெல்லாம் நமக்கு தெரியாதோ அதை தெரிந்தவர்களிடம் சென்று அதை கற்றுக் கொள்கிறோம். 

பணம்-கடன்  தொடர்பான நிர்வாகம் கடைசிவரை  கற்றுக் கொள்வதும் இல்லை, நிதி ஆலோசகரிடம் கேட்பதும் இல்லை. அதனால் கடன் அளவு சேர்ந்து கொண்டே போகுமே தவிர கடைசி வரை கடனுக்காகவே  வாழவேண்டிய சூழல் வரும். இதற்கு எடுத்துக் காட்டு ஒன்றைபார்த்து விட்டு அடுத்து செல்வோம்.

பல நாடுகளில் உள்ள நடைமுறை என்பது வங்கிக்கு சென்று வீட்டு கடன் கேட்டால் வங்கி அதிகாரி உங்களை நிதி ஆலோசகரிடம்(Financial Advisor) இருந்து சான்றிதழ் வாங்கி வர சொல்லுவார். 

 நீதி ஆலோசகர் உங்கள் வருமானம், கடன் அளவு, சேமிப்பு, எதிர்காலத்தில் உயரும் வருமானம், குடும்ப சொத்து, பிள்ளைகள் படிப்பு, திருமண செலவு என்று அனைத்துவிதங்ளிலும் ஆராய்ந்து எதை எப்பொழுது செய்ய வேண்டும், எதை தள்ளிப்போட வேண்டும், எதை செய்ய வேண்டாம் என்று உங்களுடைய பொருளாதார நிலையை அறிக்கையாக கொடுப்பார். இந்த அறிக்கையில் நம் நிதி நிலைமை எப்படி உள்ளது என்று தெரியவரும். அதை பார்த்து  வங்கி கடன் கொடுப்பார்கள்.

இந்தியாவில் இதுவரை அப்படி எந்த நிதி விதிமுறையும் இல்லை. வீட்டு கடன் வேண்டுமென்றால் நேரடியாக வங்கியில் கேட்கலாம் அவர்கள் ஒரு நிதி ஆலோசகர் அளவுக்கு உங்கள் பொருளாதார நிலையை பார்க்கமாட்டார். வருமான உள்ளதா என்று பார்த்து வீட்டு கடன் கொடுப்பார். இப்படி கடன் ஒருவருக்கு கிடைப்பதால்  ஒருவரின் கடன் அளவு சேர்ந்து கொண்டே போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.  

ஒரு கடன் வாங்கிவிட்டால் போதும் அடுத்த சில வருடங்களில் கிரடிட் கார்ட் கடன், வாகன கடன், தனிநபர் கடன்(Personal Laon) என்று கூடி கொண்டே செல்லும். அப்படித்தான் இன்று சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலானோர் உள்ளனர்.

வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடத்திலேயே வீட்டு கடன் வாங்க தொடங்குகிறார்கள். இவர்கள கடன் வாங்க முயற்சி செய்யவில்லை என்றாலும் வங்கி தொடர்ந்து இவர்களை கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று நச்சரித்து  கொண்டே இருப்பார்கள்.  ஆக அடுத்த வருடமே வீட்டு கடன் வாங்கி விடுவார்கள். 

ஒரு கடன் என்பது குறுகிய-நடுத்தர காலம் கடனாக இருக்க வேண்டும். வீட்டு கடன் என்பது 15 வருடம், 20, 25 வருடம்  கடன் கட்டும் காலமாக இருக்கும். உங்கள்  வாழ்க்கை முழுவதும் கட்டிக் கொண்டு இருப்பபீர்கள். 

ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு கடன் வாங்கிய அடுத்து  ஆறு மாதம்  ஆர்வமாக கட்டுவோம். பிறகு   கட்டுவதில் தொய்வு ஏற்படும். காரணம்  இன்னும் பல ஆண்டுகள் கடன் கட்ட வேண்டும்  என்ற  எண்ணம் நம்  மூளையை சோர்வு அடைய வைக்கும்.  

கடன் கட்டும் காலம் குறுகிய காலமாக இருக்க வேண்டும். 5 அல்லது 7 ஆண்டுகள் இருந்தால் நல்லது. ஆனால் வீட்டு கடன் தொகை அதிகம் என்பதால் குறுகிய காலத்தில் கட்ட முடியாது. ஆனாலும் வீடு அனைவருக்கும் தேவை என்பதனால் இங்குதான் நாம் நிதி ஆலோசகர் ஆலோசனையை  பெற வேண்டும். அவர் உங்கள் நிதி நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து எப்பொழுது வீடு வாங்க வேண்டும் என்பதை தெரிவிப்பார். அவ்ருடைய ஆலோசனைப்படி செய்ய தொடங்கினால் பண சிக்கல் இல்லமால் கடனை கட்டி முடிக்கலாம். 

இன்றைய சூழலில் கடன் வாங்குவது எளிது. வீட்டு கடன் கொடுக்க வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. ஒரு வங்கி கடன் கொடுக்கவில்லை என்றால் நிதி நிறுவனங்கள்உங்களுக்கு  கடன் கொடுப்பார்கள். ஆனால்  வட்டி கொஞ்சம் உயர்வாக இருக்கும்.

பொதுத்துறை வங்கியைவிட தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள்  கடன் கொடுக்க ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் வீட்டிற்கே வந்து ஆவணங்களில் கையெழுத்து வாங்கி செல்வார்கள். நமக்கும் நம்முடைய  வேலைகளுக்கிடையே இது சுலபமாக இருக்கும். ஆனால் இவ்வளவு சுலபமாக கிடைக்கும் கடன் எப்படி செயல்படுகிறது என்று பார்க்க வேண்டும். 

பொதுத்துறை வங்கியில் தாமதமாகும் அதில் மாற்று கருத்துக்கள் இல்லை. ஆனால் உங்களால் ஒரு மாதம் கடன் தொகை கட்ட முடியவில்லை என்றால் அல்லது தாமதமாக கட்ட முடிந்தால் தனியார் வங்கி, நிதி நிறுவன ஊழியர்கள் தொடர் போன் செய்து பேசிக் கொண்டே இருப்பார்கள். 

அப்படியும் உங்களால் கட்ட  முடியாத நிலை இருந்தால் வீட்டுக்கு வர தொடங்குவார்கள். நமக்கு அது அசிங்கமாகி விடும். இன்னும் பல இடங்களில் சண்டை செய்வது, மிரட்டுவது நாம் கேள்விப்பட்டு இருப்போம்.  இது தவிர தாமதமாக கட்டியதற்கு அபராதம் செலுத்த வேண்டும். நிச்சயம் இவை கூடுதலாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆனால் பொதுத்துறை வங்கியில் கடன் வாங்க தாமதமானாலும் இந்த சிக்கல்கள் அதிகம் இருக்காது. வங்கி ஊழியர் பேசுவார், ஆனால் தனியார் வங்கியில் அதற்கென்று பணியில் இருப்பவர் பேசுவார். நாம் நேரிடையாக பொதுத்துறை வாங்கி மேலாளரை சந்தித்து பேச முடியும். தனியார் வங்கியில் அப்படி எந்த வங்கிக்கும் சென்று மேலாளரை சந்தித்து பேச முடியாது காரணம் அவர்களுக்கும் கடனுக்கும் சம்மந்தம் இருக்காது. 

ஒரு உணர்வுபூர்வமான உறவு முறை நமக்கு தனியார் வங்கிக்கும் இருக்காது. கடன் கொடுத்தவர், கடன் வசூலிப்பவர், நம்மிடம் பேசுபவர் எல்லோரும் வேறு வேறாக இருப்பார்கள். அதனால் முடிந்தளவு வீட்டு கடன் வாங்க பொதுத்துறை வங்கியில் வாங்க முயற்சி செய்யுங்கள். தாமதமானாலும் முயற்சி செய்யுங்கள்.

 மிக நீண்ட ஆண்டுகள் கட்ட கூடிய வீட்டு கடன்  என்பதால் நமக்கும் வங்கிக்கும் இணக்கமான உறவு முறை இருந்தால் நல்லது. சில முறை உங்களால் ஒரு மாதம் கட்ட முடியாத, தாமதமாக கட்ட முடிக்கிற கடன் தொகைக்கு பொதுத்துறை வங்கி மேலாளரை சந்தித்து பேசி நம் நிலைமையை சொல்லாம். என்றைக்கும் அப்படி தனியார் வாங்கி ஊழியர்களை சந்தித்து பேச முடியாது. பேசலாம் ஆனால் அந்த நபர்கள் மாறி கொண்டே இருப்பார்கள். அனைவரிடமும் மீண்டும் முதலில் இருந்து சொல்ல வேண்டும். 

கடன் வாங்கும் முன்பு ஒரு நிதி ஆலோசகரை சந்தித்து பேசுங்கள். குடும்ப மருத்துவர் என்பது போல் அவரை குடும்ப நிதி ஆலோசகர் என்று நினைக்க தொடங்குங்கள். தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள். 

பெரிய கடன் தொகை, மிக நீண்ட கடன் கட்டும் காலம் போன்றவற்றுக்கு பெரும்பாலும் பொத்துறை வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். அப்படி முடியவில்லையென்றால் தனியார் வங்கிக்கு செல்லுங்கள். ஆனால் நிதி நிறுவனக்ளுக்கு மட்டும் செல்லாதீர்கள் இங்கு  வட்டி மிக அதிகமாக இருக்கும்  வாழ்க்கை முழுவதும் கடன் கட்டவே சரியாக இருக்கும். 

இதே நிலையை தொழில் தொடங்கிய பெரும்பாலானோர் பல இடங்களில் கடனை வாங்கி விடுவார்கள். இன்னும் நண்பர்களுக்கும் வாங்கி கொடுப்பார்கள். 

கடன் சிக்கல்

ஒரு வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கியில் முத்ரா கடன் வாங்கும் முறைகளை கேட்டார். அவர் பெரிய தொழில் செய்பவர், நீண்ட அனுபவம் தொழிலில்  உண்டு. பல லட்சங்களில் வியாபாரம் செய்பவர். அவருக்கு எதற்கு முத்ரா கடன் என்று யோசித்தால் இவருடைய நண்பர் செய்யும் தொழிலுக்கு இவர் கடன் வாங்கி பல லட்சம் கொடுத்து உள்ளார். அந்த கடனை நண்பரால் திருப்பி செலுத்த முடியவில்லை. அதற்கு சரியான காரணம் இருந்தாலும் மாதம் வட்டி ஏறிக் கொண்டு போகும் என்பது உண்மை

முத்ரா கடன் சிறு தொழில் செய்பவர்களுக்கு குறிப்பாக தெரு ஓரமாக தொழில் செய்யும் மாவு விற்பவர், டீ கடை நடத்துபவர், செருப்பு தைப்பவர் இதுபோல் தொழில் செய்பவர்களுக்கு எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் கொடுக்க அரசு உருவாக்கிய கடன் திட்டம் ஆகும்.

இந்த கடன் திட்டத்தில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் முதல் அதிகபட்சம் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எடுத்தவுடன் நேரடியாக 10லட்சம் கடன் கொடுக்க மாட்டார்கள். ஐம்பதாயிரம் அல்லது 1 லட்சம் கொடுப்பார்கள் அதை எப்படி திருப்பி செலுத்துகிறீர்கள் என்று பார்த்து அடுத்து உயர்த்துவார்கள்..

ஒரு கட்டத்தில் இவர் தொழிலும் ஏற்றம் பெறவில்லை. நண்பருக்கு வாங்கிய கடனுக்கு இவர்தான் முழு பொறுப்பு. இவர் பெயரில்தான் வாங்கி கொடுத்து உள்ளார். கடன் தொகை பெரியது. மாதம் வட்டி இவர் கொடுத்து வருகிறார். எவ்வளவு நாள் அப்படி கொடுக்க முடியும். இப்பொழுது சிக்கலில் உள்ளார். 

நண்பர் நல்லவர் ஆனால் அவரிடம் பணம் இல்லையே. இவராலும் திருப்பி கொடுக்கும் அளவு தொழில் நடக்கவில்லை. இதற்குதான்  முத்ரா கடன் கேட்டார். உங்களுடைய கடன் அளவுக்கு எப்படி முத்ரா கடன் தொகை போதும் என்று கேட்டேன்?

பல நபர்கள் பெயரில் வாங்கலாம் என்று சொன்னார். அவரிடம் தெளிவாக சொன்னேன். அப்படி வாங்க முடியாது. சுலபமாக வங்கி கண்டுபிடித்துவிடுவார்கள். ஏன் நீங்கள் கணக்கு வைத்து உள்ள வங்கியில் முத்ரா கடன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன். 

அவர்  தனியார் வங்கியில் கணக்கு வைத்து உள்ளர்.  இதுவரை எந்த சிக்கலும்  வங்கிக்கும்-இவருக்கும் இல்லை. ஆனால் தனியார் வங்கி இவர் கேட்ட முத்ரா கடன் நாங்கள் கொடுப்பதில்லை என்று ஏதேதோ காரணகள் சொல்வதாக சொன்னார்.

கடைசியாக என்ன சொன்னார்கள் என்று கேட்டதற்கு நீங்கள் சரியாக ஆவணங்கள் கொடுத்தாலும் ஆவணம் சரியில்லை என்று திருப்பி கொடுத்து விடுவோம் என்று அந்த தனியார் வங்கி அதிகாரி சொன்னதாக சொன்னார். 

பல ஆண்டுகள் கணக்கு வைத்து எந்த சிக்கலும் இல்லாத வங்கியில் ஒரு முத்ரா கடன் வாங்கவே இவ்வளவு சிக்கல் இருக்கும்பொழுது எப்படி பல முத்ரா கடன் வாங்க முடியும் என்று கேட்டேன். அதுவும் முத்ரா கடன்  விளிம்புநிலை மக்கள் தொழிலை மேம்படுத்தும் கடன் திட்டம்.

இந்த சிக்கலுக்கு ஆணிவேரை பார்ப்போம்.பல வீடுகளில் இது போல் நடைபெற்று இருக்கும்.

கடன் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம். 

கடன் என்பது மிக கூர்மையான கத்தியை கையில் வைத்து இருப்பதற்கு சமம். நாம்தான் வைத்து உள்ளோம் என்றாலும் யாரவது அசக்கினாலும் அவை நம்மையும் பதம் பார்த்து விடும். இவருக்கு நடந்து உள்ளதும் இதுதான்.

நண்பர் கடன் கேட்டார் என்று தம் பெயரிலேயா வாங்கி கொடுப்பது?. சிறு கடன் என்றாலும் பரவாயில்லை. பல லட்சம் ரூபாய் கடன். கடன் நிர்வாகம் இல்லாத நிலையே இது காட்டுகிறது. 

இவர் இவ்வளவு ஆண்டுகள் கணக்கு வைத்து உள்ள வங்கி இவரின் அண்மைய கணக்கில் பண வரவு  இல்லாததால் இவருக்கு எப்படி கடன் கொடுப்பது என்று யோசித்து தள்ளிப் போட்டு வந்து உள்ளது.

ஒருவரிடம் தனிப்பட்ட பழக்கம், தொழில் உறவு என்பது முற்றிலும் வேறு வேறு ஆக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் தனிப்பட்ட பழக்கத்தை கொண்டு தொழிலிலும் அப்படியே செய்யல்படுவதின் விளைவு இது ஆகும்.

 தொழிலுக்கு கடன் வாங்கி கொடுக்க வேண்டுமென்றால் அவர் பெயரிலேயே வாங்கி கொடுத்து இருக்க வேண்டும். அப்படி நண்பர் பெயரில் வாங்க அணைத்து முயற்சியும் அவருக்காக நீங்கள் எடுக்கலாம். கடைசியாக உங்கள் பெயரில் தான் கடன் வாங்க முடியும் என்ற சூழல் உருவானால்  அந்த கடனை நண்பர் கட்ட முடியவில்லையென்றால் உங்களால் கட்டும் நிதி நிலைமை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நிச்சயம் இந்த செயலில் இருந்து விலகி விட வேண்டும். 

தொழில் என்றால் உணர்ச்சிக்கு இடம் கொடுக்க  கூடாது. பல லட்சங்கள் பரிமாறும் இடம் என்பதால் தொழில் முறையில்தான் செயல்பட வேண்டும். கடன் மேலாண்மை  தொழிலுக்கு மட்டுமே என்று நினைக்காதீர்கள் வீட்டுக்கும் கடன் மேலாண்மை உண்டு

-செழியன் ஜானகிராமன் 

 

 

அதைத் தடுக்க நீங்கள் யார்? என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!

0
May be an image of 1 person and monument

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஊடகர் கேட்கிறார்!

இது என் தனிப்பட்ட பதிவு, என் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.. யாருடைய தூண்டுதலோ, யாரோ சிலரின் நலனுக்காகவோ, யார் மனதையும் புண்படுத்தவோ இல்லை..!!

என் சமூகம் #பள்ளர் சமூகம், திடீர்னு தேவேந்திர குல வேளாளர்கள் எங்க இருந்து முளைச்சாங்கனு எனக்கு தெரியல.. அதுக்கு அவங்க என்ன ஆராய்ச்சிய வேணா ஆதாரமா காட்டட்டும்.. ஆனா, அதுக்கு முன்னாடி என் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு காட்டவும்..!!

1. நா என்னதான் SC இல்ல BC ன்னு சொன்னாலும், எங்க ஊர்ல உள்ள செட்டியாரோ, ஆசாரியோ, கள்ளரோ வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைக்க போறதில்ல..!! (மத்த நாளாச்சும் பக்கத்துல நின்னு பேசுவாங்க, ஆனா இந்த புரட்டாசி மாசம் வந்தா ஆச்சிங்க (செட்டியார்) எல்லாம் எங்க காத்து பட்டாலே தீட்டுங்கிற மாதிரி எங்களை பார்த்தாலே உள்ள எந்திரிச்சு போயிடுவாங்க..)

2. நா SC ல இருந்து BC க்கு promote ஆகிட்டேனு சொன்னதும் எந்த ஐயர்வாளும் கூப்பிட்டு அம்பாளுக்கு அபிஷேகம் பன்னு ஓய்ய்ய் னு சொல்ல போறதில்ல..!!

3. வருஷா வருஷம் பழனியம்மா (என் அம்மா) எங்க அப்பச்சியோட குல தெய்வ கோயிலுக்கு கூட்டி போகும்.. அங்க உள்ள பூசாரி ஒரு லிமிட் வரை தான் எங்களை அனுமதிப்பாரு.., அதுக்கு மேல வேற சாதி ஆளுக தான் போவாக.. அந்த பூசாரியும் நா BC ஆகிட்டேன் சாமினு சொன்னா வாம்மா தாயி வந்து கருப்பனுக்கு விபூதி வச்சுவிடுனு சொல்ல போறதில்ல..!! (ஆனா படையல் வைக்க கொண்டு போற பொருள்களையும், என் அம்மா சுளையா கொடுக்குற 500 ரூபா காசையும் பல்ல இளிச்சுட்டே வாங்கிப்பாரு..) (விராச்சிலை பக்கத்துல கலிங்கு கருப்பர்..)

4. என் உயிர்த் தோழியோட தாத்தா எனக்கு வைத்த “ஈன ஜாதி முண்டை” என்ற பட்டம் “வாம்மா BC ரோசி” னு மாற போறதில்ல..!!

5. எல்லாத்துக்கும் மேல SC ல இருந்து வேணா BC ஆகலாம்.. ஆனா ஒரு போதும் பள்ளத்தெரு BC தெரு ஆகாது ஓய்ய்..!!

#இட_ஒதுக்கீடு..!!

ஏன் இட ஒதுக்கீடுனா..?? நானும் பிராமின் பொண்ணான என் தோழியும் படித்த விதத்தில் உள்ள வேறுபாடு தான் காரணம்..

1. ஏழு மணி ஆனா ஆனந்தம் சீரியல்ல ஆரம்பிச்சு மெட்டி ஒலி வரைக்கும் பார்க்கிறதுக்காக, என்னை தெருலைட்டுக்கு படிக்க தொரத்தி விட்டதுக்கும், என் தோழி வீட்டுல அவ படிக்கிறதுக்காகவே அவங்க அம்மா கேபிள் கனெக்‌ஷன் கட் பன்னதுக்கும் உள்ள வேறுபாடு..!!

2. ஸ்கூல்ல வாத்தியார் ஒழுங்கா பாடம் நடத்தாததால டியூஷன் போகனும்னு சொன்னதுக்கு ‘அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல, வீட்ல இருந்து படி’ன்னு சொன்னதுக்கும், ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் தனித்தனி டியூஷன் அனுப்புன என் தோழியோட அம்மாவுக்கும் உள்ள வேறுபாடு..!!

3. என் வீட்டுல பழைய சோத்துக்கு தொட்டுக்க உப்புல போட்ட எலுமிச்சை.., சில நேரம் அதுவும் இருந்ததில்ல.. என் தோழியோட சாப்பாடே பாதாமும், மாதுளையும் தான் ..!!

இப்படி வளர்ப்புல உள்ள வித்தியாசம் நாங்க எடுத்த மார்க்குலயும் பிரதிபலிச்சது வாஸ்தவம்தானே..??

மிகப் பெரிய டவுட் என்னனா ஊர்ல பல பயலுக ஒழுங்கா படிக்காம பத்தாவது பெயிலாகி தான் சுத்திக்கிட்டு இருக்காய்ங்க.. யாருக்கு இட ஒதுக்கீடு கேட்குறீங்க..?? படிச்சுட்டு எத்தனை பேரு வேலை இல்லாம இருக்காங்கனு லிஸ்ட் இருக்கா..??

Scholarship வாங்கி படிச்சவங்களுக்கும், SC ஹாஸ்டல்ல ஃப்ரீயா stay பன்னவங்களுக்கும் தான் தெரியும் அதோட அருமை..!! Scholarshipஉம், free uniformஉம் இல்லனா என் அம்மா அஞ்சாவதுக்கும் மேல என்னை ஸ்கூல்லயே சேர்த்து இருக்காது.. அஞ்சாவுதுக்கும் மேல அஞ்சு பொட்டை புள்ளைகளை படிக்க வைக்கிறது சாதாரண விஷயமா..??

ஆக பெரும் டவுட் என்னனா, டாக்டர் ஐயா அவர்கள் எந்த கோட்டாவுல டாக்டர் சீட்டு வாங்குனாரு, அவர் மகனுக்கும் எவ்வளவு கட் ஆஃப் மார்க்குல படிச்சாரு இல்ல தனியார் கல்லூரியில் படிச்சாரானு தெளிவு படுத்துங்க ..!!

அதே மாதிரி பட்டியல் இனத்துல இருந்து வெளியேற விரும்புறவங்க எல்லாம், பட்டியல் இனமா இருந்தப்போ வாங்குன பட்டங்களையும், கவர்மெண்ட் வேலைகளையும் தூக்கி எறிஞ்சுட்டு பட்டியல் இனத்துல இருந்து வெளியேறி ஆண்ட பரம்பரையாக சாரி ஆள போகும் பரம்பரையாக வாழ வாழ்த்துக்கள்..!!

கடைசியாக ஒன்று, இத்தனை வருடத்தில் இல்லாத எழுச்சி அமித்ஷா மாநாடு நடத்தியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று முற்றிய நிலையில் இருக்கிறது.. வெளியேற விரும்பும் நீங்கள் தனித்தனியே மனு கொடுத்து வெளியேறுங்கள்..!! ஒட்டுமொத்த பள்ளர்களையும் நீங்கள் ஒன்றும் குத்தகைக்கு எடுக்கவில்லை..!!

சாதி,மதமற்ற ரோசியாக வாழ விரும்பிய என்னை #பள்ளர்_ரோசியாக பேச வைத்ததற்கு நன்றி..!!

எனக்கு கிடைக்கும் #இட_ஒதுக்கீட்டை தடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..??

இது என் உரிமை..!!

அதை தடுக்க நீங்கள் யார்..??

கடைசியாக பெரிய டாட்…!!

– ரோசி

அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று சொல்லி இரண்டு கோடிக்கும் மேல் பல நண்பர்களிடம் முதலீடாக வாங்கி, லீமென் பிரதர்ஸ் திவாலான நேரத்தில் முதலிட்டிருந்த மொத்த பணத்தையும் இழந்து, இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், முதலீட்டாளர்களை எதிர்கொள்ள பயந்து, தாராசுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து மடிந்தான் பங்குவர்த்தகத்தில் என்னுடன் வேலை செய்த என் நண்பன் ஒருவன்.
அண்மையில் இதே போல ஒரு லட்சம் முதலீட்டுக்கு பிரதிமாதம் பத்தாயிரம் மதிப்புள்ள தங்கக் காசு தருவதாகச் சொல்லி, சில பல கோடிகளை முதலீடாகப் பெற்று, ஒரு கட்டத்தில் லாபம் தர முடியாமல், தலைமறைவான நபரை அறிவேன். இவரிடம் என் உறவினர்களே முதலீடு செய்திருப்பதை பின்னாளில் அறிந்து அதிர்ந்தேன்.
இங்கே முகநூல் நண்பர் ஒருவரும் இதே போல லட்சத்திற்கு ஏழாயிரம் மாதாமாதம் தருவதாக என்னிடமே சொன்னார்.
‘வாய்ப்பே இல்லீங் சார்’ என்றேன்.
‘இல்ல.. கரெக்டா கொடுத்திட்டிருக்கோம். டெக்னிக்ஸ் இருக்கு.. கொடுக்கிற ஏழே கம்மி, இன்வெஸ்ட்மெண்ட் ஜாஸ்தி இருந்தா பத்து பர்சண்ட் கூட கொடுக்க முடியும்’ என்றார்.
எந்த இரட்டை அர்த்தமும் இல்லாமல் ‘நல்லா பண்ணுங்க சார்’ என்றேன்.
இந்த தினுசில் ஷேர் மார்க்கெட்டில், கமாடிட்டி மார்க்கெட்டில், கரன்ஸி மார்க்கெட்டில், எந்த விதமான டிரேடிங் தளத்தில் returns தருவதாகச் சொன்னால் அது பொய்யே. அதை நம்பாதீர்கள்.
இப்படிச் செய்பவர்கள் இரண்டு வகையானவர்கள்.
1. உண்மையிலேயே டிரேடிங்கில் இந்த அளவு ரிட்டர்னை எடுக்க முடியும் என்று நம்புபவர்கள்.
2. எடுக்க முடியாது, ஆனால் கணிசமாக பணம் சேர்ந்தவுடன் எங்காவது தப்பித்துவிடலாம் என்று முன் கூட்டியே திட்டமிட்டு வசூல் செய்பவர்கள்.
இரண்டாவது வகையினர் மிகப் பெரிய அளவில் இந்த பிஸினஸை pitch செய்வார்கள். மிகுந்த வெளிப்படையாக இல்லாவிட்டாலும் closed marketingல் தீவிரமாக ஈடுபடுவார்கள். உள்ளரங்க கூட்டம், நெட்வொர்க்கிங் செய்வார்கள்.
ஊரில் ஒரு பெரிய கை இருந்தால், நாலைந்து பேராக சேர்ந்து காரில் வந்து இறங்கி அவரை கேன்வாஸ் செய்வார்கள். இவர்களின் தோரணையைப் பார்த்தே கேள்வி கேட்காமல் முதலீடு செய்பவர்கள் உண்டு. என் மைத்துனரின் நண்பர் ஒருவர்.. இப்படியான ஒரு பந்தா பார்ட்டியிடம் முதலில் இரண்டு லட்சம் முதலீடு செய்து மூன்று மாதம் லாபம் சரியாக கணக்கில் சேர்ந்த உடனேயே.. நாலாவது மாதம் முப்பது லட்சத்தை அவரிடம் முதலீடு செய்திருக்கிறார்.
அடுத்த இரண்டு மாதங்களில் ஆள் ஓடிவிட்டார். நண்பருக்கு பைத்தியம் பிடிக்காத குறை. எவ்வளவு பெரிய ஏமாற்றம். வலி. துயரம். அதை முதலிட்டு இழந்தால் தான் உணரமுடியும்.
முதல் வகையினருக்கு நாளடைவில் அப்படியொன்றும் இந்தத் தொழிலில் சொல்லி வைத்து எடுக்க முடியாது என்று நிஜம் சுட ஆரம்பிக்கும். எப்படித் தப்பிப்பது என்று குழம்புவார்கள். இந்தச் சுழலில் இருந்து எப்படியாவது தப்பிவிட மாட்டோமோ என்று ஏங்குவார்கள், அதன் பொருட்டு மேலும் கூட அவர்கள் முதலீட்டை வாங்கி இழப்பை சரிகட்ட முயற்சி செய்வார்கள். திரும்பவும் அதளபாதாளத்தில் விழுவார்கள். தீர்க்கமுடியாத பிரச்சனை இல்லை, மீண்டு விடலாம் என்று திடமனதுடன் போராடுபவர்கள் மீள்வார்கள். அப்படியும் முதலீட்டாளர்கள் அடைந்த நஷ்டம் நஷ்டம் தான். அதை ரெகவரி செய்வது கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. நின்று போராட முடியாதவர்கள் அவமானம், மன அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்றுவிடுவார்கள். நானறிய பலர் மடிந்திருக்கின்றனர்.
முதல் பாராவில் ரயில் சக்கரத்தில் இறந்த என் நண்பனிடம் முதலீடு செய்ந்திருந்தவர் ”இப்படி செய்வான்னு தெரிஞ்சிருந்தா.. நான் பணத்தை திருப்பி கேட்டிருக்க மாட்டேனே..’ என்று உளமார அழுதார். ஆனால் யாரும் இறந்த பின் தான் இரங்குவார்கள்.
பங்கு வர்த்தகத்தில் ஆதாரமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
1. சொல்லி வைத்து இதில் லாபம் எடுக்கவேஏஏஏஏ முடியாது.
2. மருத்துவருக்கும் மாரடைப்பு வருவது போல, திருப்பதி பெருமாளே வந்து டிரேட் செய்தாலும் நஷ்டம் வரும்.
3. கற்றுக் கொள்ளாமல் இதைச் செய்யக் கூடாது. எனக்கு நேரமில்லை.. நீ பண்ணிக் கொடு என்று யாரிடமும் பணத்தைக் கொடுக்காதீர்கள். if u cant learn u cant earn.
4. அடுத்த முறை உங்களை யாராவது assured returns சொல்லி அணுகினால் இந்தப் பதிவு தான் உங்களுக்கு ஞாபகம் வர வேண்டும்.
‘பல பேர் அப்படி இருக்கலாம்… ஆனா நாங்க அப்படி இல்லை..’ என்று கடவுளே வந்து சொன்னாலும் நம்பாதீர்கள்.
முறையாக கற்றுக் கொண்டு, அசாத்தியமான ஒழுங்குடன், சிறிய சிறிய லாபமாக எடுத்து, பெரிய அளவில் செட்டில் ஆன நண்பர்களையும், நபர்களையும் தெரியும்.
ஒரு வெற்றிகரமான டிரேடரை பணம் உருவாக்குவதில்லை, காலம்!
– அசோக்ராஜ்

சிகரெட் பிடிப்பதை விட வேண்டுமா? இப்படி முயற்சித்துப் பாருங்கள்

0
சிகரட் பழக்கத்தை எப்படியாவது விட்டுத்தொலைக்கவேண்டும் எப்படி எப்படி என்று பலரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளாக சிகரட் விடுபடல் ஆலோசகராகவே ஆகிவிட்டேன். நானே பெரிய ஸ்மோக்கராக இருந்து அதை ப்ரேக் பண்ணினவன் என்கிற படியால் எனக்கு அத்தகுதி வந்துவிட்டது. என்னுடைய அனுபவத்திலல் இருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சொல்லிக் கொண்டட் இருந்ததை மொத்தமாக தொகுத்து இருக்கிறேன்.
1 – சிகரட் பழக்கத்தை எளிதில் கைவிட முடியும் என்கிற எண்ணத்தை மொதல்ல கை விடுங்கள். அது ஈசி இல்ல ப்ரோ. நிகோடின் நாம் நினைப்பதை விட கொடியவன். அதே அளவுக்கு சாதுர்யமானவன். நம்மை ஏமாற்றுவதில் கில்லாடி! ஒரு சிலர் ‘’நான்லாம் ஒருநாள்ல டக்குனு விட்டுட்டேன் அதுக்கு பிறகு தொடவே இல்லை’’ என்பார்கள். நாம் அந்த ஒரு சிலராக இருக்க வாய்ப்பு குறைவு. எல்லோராலும் அது முடியாது.
2 – தினமும் முன்னால பத்து இப்ப நாலு அப்படியே இரண்டு ஒன்னுனு கம்மி பண்ணப்போறேன் என்று சிலர் சொல்வதுண்டு. படிப்படியாக சிகரட் பழக்கத்தை குறைக்கவே முடியாது அப்படி குறைத்து அப்பழக்கத்தை கைவிடவும் முடியாது.
3 – நான் மைல்டான சிகரட் பயன்படுத்துகிறேன் எனக்கு பாதிப்பு குறைவு நினைச்சால் விட்டு விடுவேன் ஈசிதான் என்று நினைக்காதீர்கள். அதுவும் சாத்தியமில்லை. மைல்டான சிகரட் என்று ஒன்றே உலகத்தில் இல்லை. சிகரட் என்றாலே தாரும் நிகோடினும் ஹைட்ரஜன் சைனைடும் அம்மோனியாவும் இன்ன பிற விஷங்களும்தான். அளவு வேறுபடும் அவ்வளவுதான். பாதுகாப்பான அளவு என்பது சிகரட்டில் இல்லை!
4 – நிகோரெட் மாதிரி நிறுவனங்கள் நிகோடின் மாத்திரை பப்பிள் கம், உடலில் ஒட்டக் கூடிய பேட்ச்கள் எல்லாம் விற்கிறார்கள், அதை வைத்து சமாளித்து விட்டு விட முடியுமா என்றால் முடியாது. அதுவுமே ஒரு சிலருக்கு உதவும். VAPE என்கிற ஆவி அடிப்பான்கள் பயன்படுத்தினால் சிகரட் பழக்கத்தை நிறுத்த முடியுமா என்றால்… இந்தியாவில் வேப் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை பயன்படுத்தினாலும் கை விட முடியாது! வேப்புக்கு அடிமையாகி விடுவோம்!
5 – என்னதான் தீர்வு? ஒரே வழிதான் COLD TURKEY என்று மேற்கில் அழைக்கிறார்கள். குடி,புகை,ஹெராயின் மாதிரி போதைப் பழக்கங்கள் எதுவாக இருந்தாலும் அதை படிப்படியாக குறைத்து ஒருவரை மீட்பதை விட ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் கை விடச் செய்து விடுவதுதான் குளிர்வான்கோழி முறைமை. இதன் வெற்றி விகிதம் மிக மிக அதிகம். முதல் பாய்ன்ட்டில் அப்படி பொசுக்குனு விடுதல் எல்லோருக்கும் சாத்தியம் இல்லைனு சொன்னீங்களே என்று கேட்கலாம். தொடர்ந்து வாசிங்க!
6 – இந்த வான்கோழி முறைமைப்படி சிகரட்டை கை விடுவதை இந்த கட்டுரையை படித்தவுடன் உடனே வீறு கொண்டு எழுந்து போய் ‘போராடு வாளோடு சோழாசோழா’ என்று நாளைக்கு காலையிலேயே செய்யக் கூடாது. பலன் இருக்காது. பொறுமை பொறுமை பொறுமை. அதற்கு சில படிநிலைகள் உண்டு. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
7 – முதலில் ஒரு நல்ல நாளை சிகரட்டை விடுவதற்காக தீர்மானித்துக் கொள்ளுங்கள். என்னுடைய மகளின் பிறந்த நாளில் இருந்து இனி சிகரட் கிடையாது, என்னுடைய  காதலி பிறந்தநாள், திருமணநாள்,  இந்திய சுதந்திர நாள், அண்ணா பிறந்த நாள் என எப்போதும் நினைவில் இருக்கும்படி ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த நாளில் இருந்துதான் சிகரட்டை கை விடப் போகிறோம்.
8 – ஏன் சிகரட்டை கை விடப் போகிறீர்கள் என்பதற்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். ஆமாம் பேப்பர் பேனா வைத்துக் கொண்டு சுள்ளிக் காட்டு இதிகாசம் போல அதை பட்டியல் இடுங்கள். உங்களிடம் வலுவான காரணங்களே இல்லை என்றால் சிகரட்டை கை விட முடியாது. ஆண்மை குறைவு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் தொடங்கி காதலிக்கு முத்தமிட முடியவில்லை நெஞ்சம் பஞ்சர் ஆனது என எதுவும் இருக்கலாம்.
9 – ஒரு மின்னஞ்சலோ வாட்சாப் க்ரூப் தகவலோ தயார் செய்யுங்கள். உங்களுடைய நெருக்கமான வட்டத்தில் இருக்கிற நண்பர்கள், உறவினர்கள் எல்லாருக்கும் வருகிற டேஷ் டேஷ் நாளில் இருந்து நான் சிகரட் பழக்கத்தை விடப் போகிறேன். எனக்கு உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை என்பதை அறிவியுங்கள். சிலர் சிரிப்பார்கள் காமெடி பண்ணுவார்கள். நம்முடைய வீரப் பயணத்தில் வெற்றிப் பயணத்தில் இதெல்லாம் சகஜம். எல்லோருக்கும் அறிவித்து விடுங்கள். மீண்டும் தொடங்கினால் இந்த நாய்க வேற நம்மள நக்கலடிக்கும் என்கிற கடுப்பிலேயே சிகரட்டை தொட மாட்டோம்! இதுவும் மோட்டிவேஷன்தான்.
10 – அந்த நன்நாளுக்கு முன்பு வரை சிகரட்டை கை விட வேண்டாம். அது வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்து தீர்த்து விடுங்கள். உங்கள் ஆசை எல்லாம் தீரத்தீர அடியுங்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் வருகிற ஆவணி மாதம் ஐந்தாம் தேதி நிறைந்த பௌர்ணமியில் இருந்து நான் சந்திரமுகி மேல் சபதமெடுத்து இந்த சிகரட் எனும் சாத்தானை தொடப்போவது இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். நினைக்க மறந்தாலும் உங்கள் மனம் நினைக்கத் தவறாது!
11 – அந்த நாளில் இருந்து உங்களுடைய பயணம் தொடங்கி விடும். முதல் பதினைந்து நாட்கள் மிகமிக முக்கியமானது. சொல்லப் போனால் எளிதானதும் கூட. அதை எளிதில் கடந்து விடலாம். பார்க்கிறவர்களிடம் எல்லாம் சிகரட்டை விட்டு விட்டதை பெருமையாக பகிர்ந்து கொள்ளுங்கள்! சிகரட்டால் உண்டாகும் கேடுகளை சொல்லுங்கள். நீங்கள் சொல்வது மற்றவர்களுக்கு அல்ல உங்களுக்கு!
12 – சிகரட் பிடிக்கிற நண்பர்களோடு தற்காலிகமாக சேராதீர்கள், அவர்களை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இருந்து மூன்று மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யுங்கள். முன்பு சிகரட் பிடித்த பொட்டிக் கடைகள் பக்கம் போகாதீர்கள். பழைய பாக்கிகளை முன்பே செட்டில் பண்ணிவிடுங்கள்! எங்கெல்லாம் சிகரட் பிடித்துக் கொண்டடு இருந்தீர்களோ அதெல்லாம் தடைசெய்யப்பட்ட பகுதிகள். அந்த இடங்களுக்கு பக்கத்தில் போனாலும் சிகரட் Buddiesகள் பார்த்தாலோ தலையை திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள். சிகரட் பிடிக்கும் ஆர்வம் வந்தால் சுவிங்கம் மெல்லுவது, டீ குடிப்பது, கடலை மிட்டாய் தின்பது என எதையாவது கண்டு பிடித்து செய்யப் பழகுங்கள். நான் முதல் மூன்று மாதங்களுக்கு நிஜாம் பாக்கு வாங்கி மென்று கொண்டிருந்தேன்!
13 – பதினைந்து நாட்களை தாண்டி விட்டால் அடுத்த இலக்கு 45 நாட்கள்.
14 – சிகரட் பிடிப்பதற்கான தூண்டுதல் என்பது அதிகபட்சம் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள்தான் நம் மண்டைக்குள் இருக்கும். அந்த நிமிடங்களை கடக்க எதாவது வழிகளை யோசியுங்கள். பேஸ்புக்கில் யாரிடமாவது வம்பிழுங்கள். புத்தகம் இருந்தால் படியுங்கள். எதாவது ஒரு என்டர்டெயின்மென்ட் மனசுக்கு பிடித்த மாதிரி செய்வது உதவும்.
15 – 45 நாட்களை கடந்து விட்டால் அதற்கு பிறகு உங்களை யாராலும் தடுக்க முடியாது. இப்போது உங்கள் உடலில் பல மாற்றங்கள் வந்திருக்கும். நன்றாக பசிக்கும். தாகம் எடுக்கும். ஜீரணக் கோளாறுகள் சரியாகத் தொடங்கும். தூக்கம் வரும். உணவின் சுவை தெரிய ஆரம்பிக்கும். மூச்சு விடுதல் எளிதாக இருக்கும். எதாவது வாழ்க்கையில் உருப்படியாக பண்ணவேண்டும் என்று தோன்றும்.
16 – இந்த காலக் கட்டத்தில் எதாவது உடற்பயிற்சியை தொடங்கி விடுவது நல்லது.  உடலுக்கேற்ற படி எதாவது ஒன்றை தொடங்கி விடுங்கள். அது உங்கள் உடலை புத்துணர்வாக மாற்றும்.
17 – அடுத்த இலக்கு மூன்று மாதங்களை கடப்பது. மூன்று மாதங்கள் கடந்த பிறகு உங்களுக்கு சிகரட் பிடிக்கும் எண்ணம் 90 சதவீதம் முடிந்து விடும். இந்தக் காலக் கட்டத்தில் அவ்வப்போது எழும் சிகரட் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் எளிதில் கை விட்டு விடலாம். அதற்கு பிறகு காலத்திற்கும் நிகோடினோடு பிரேக் அப்தான்!
18 – சிகரட்டை விட்ட நாள் தொடங்கி சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு பஃப் அடித்தால்கூட ஆபத்து. எனவே ஒரு இழுப்பு கூட இழுத்துவிடாதீர்கள்!
19 – இதே காலக்கட்டத்தில் உணவு பழக்கத்திலும் கவனம் வைக்கவும். காரணம் அதிகமாக பசிக்கும் என்பதால் கண்டமேனிக்கு சாப்பிட்டு தொப்பை எடையெல்லாம் ஏற்றிக்கொள்வோம். எனவே கவனமாக சாப்பிடுங்கள். உடற்பயிற்சி பண்ணுங்கள்.
20 – எப்போதும் ஏன் சிகரட் பழக்கத்தை கைவிட நினைத்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எவ்வளவு சோகம் என்றாலும் துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் கூட சிகரட்டை மீண்டும் தொடாதீர்கள், உங்கள் முயற்சிகள் அத்தனையையும் வீணடித்துவிடும். நிகோடின் தந்திரமானவன், உங்களை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பத்திற்காக மூளையில் காத்திருப்பவன்! அவனை ஒருநாளும் உங்களை வீழ்த்தி விட அனுமதிக்காதீர்கள்.
21 – சரி தோற்று விட்டோம். மீண்டும் புகைப்பிடித்துவிட்டோம் என்ன செய்வது. பாய்ன்ட் ஆறில் இருந்து மீண்டும் தொடங்குங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் தொடங்குங்கள். ஆனால் முயற்சியை கைவிடாதீர்கள். நான் ஏழு முறை சிகரட் பழக்கத்தை கைவிட்டு எட்டாவது முறைதான் அதில் வென்றேன்! உங்களாலும் முடியும் ஆல் தி பெஸ்ட்!
– அதிஷா வினோத்

மனம் சோர்வாக இருக்கும் போது இவர்கள் என்ன செய்கிறார்கள்?

0
மன சோர்வில் இருந்து விடுபட
good bye to depression

மனம் சோர்வாக depressed feeling இருக்கும் போது என்ன செய்வீங்க? – இந்த கேள்வியை சிலரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த தங்கள் அனுபவங்கள் எல்லோருக்கும் பயன் உள்ளவையாக இருந்தன. அவற்றை இங்கே தொகுத்துத் தந்து இருக்கிறேன்.

சிலர், பயணப்படுவேன் என்று கூற இன்னும் சிலர்,வீட்டை விட்டு கிளம்பிடுவேன். முடியவில்லை என்றால் வேக நடை, தோட்ட வேலை என்கிறார்கள். இன்னும் சிலர் கூறியவை –
– உறவுகள் தரும் குடைச்சலில் ஸ்ட்ரெஸ் வரும். ரெண்டு நாள் தூக்கம் கெடும். அப்புறம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.
– வெறி பிடிச்ச மாதிரி குறுக்கே நெடுக்கே நடப்பேன்.
– சினிமா பார்ப்பேன் தூங்குவேன், ஊர் சுத்துவேன்.. இடத்தைவிட்டு தள்ளி போயிட்டு வருவேன் தெளிவாயிடும்..
– கூட்டமான இடம் செல்வது, கன்னா பின்னா என பொருட்கள் வாங்குவது,..
– கடற்கரைக்கு போயி தனியா உக்காந்திடுவேன்.இல்லேன்னா யாராவது நண்பர்கள் கிட்ட பொதுவா பேசுவேன்.
– தெருத்தெருவா சுற்றி புகைப்படம் எடுப்பேன்.
– வீட்டிலேயே இருக்க நேர்ந்தால் அதிகமா வேலை பார்ப்பேன். சுத்தம் செய்வது, ஷெல்ஃப் அடுக்குவது இப்படி. வேலை நாளா இருந்தால் பளிச்சென்று பிடித்த உடையணிந்து போய் அங்கேயும் அதிகமா வேகமா வேலை பார்ப்பேன்.
– பத்தாவதோ பன்னிரெண்டாவதோ படிக்கிறப்போ அப்பா திட்டினார்னா மனசு வெறுத்துப் போயி செட்டிநாடு ஓட்டல் போய் 7 பரோட்டா சாப்புடுவேன்.
– பேசாம நல்ல பாட்டு போடற பேருந்து ஒன்றில ஏறி எங்கேயாவது போய்ட்டு திரும்பி அதே மாதிரி நல்ல பாட்டு போடற பேருந்துல திரும்பி வருவேன்.
– பார்லர் போவேன்.
– எல்லா பணிகளையும் ஒதுக்கி விட்டு, ஒரு மணி நேரம் படுக்கை அறையில் ஒய்வுக்கு போய் விடுவேன்…
– ஒரு நல்ல பிரியாணி
– பேஸ்புக்ல ஆக்டிவ் ஆகிடுவேன். என்னையே மறக்குற அளவுக்கு எழுத ஆரம்பிச்சுடுவேன். பேஸ்புக்ல எல்லாருக்கும் கமென்ட் பண்ணுவேன்.வம்பிழுப்பேன்.
– நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு பஸ்ஸிலோ ட்ரெயினிலோ பாட்டு கேட்டுட்டு ஊரை சுத்திட்டு வருவேன்.
என்ன செஞ்சாலும் சரியாகாது…நம்ம சொல்வதை காது கொடுத்து கேட்கும் நபர் இருந்தால்..நிறைய பேசிட்டால் கொஞ்சம் பரவால்லாம இருக்கும்
– தனியா சாப்பிடுவேன்,தனியா தூங்குவேன்..
– நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்துவேன்.
– டீ கடைதான்
– வயிறு முட்ட சாப்பிடுவேன். தனியா Long walk போவேன்.
– விடாது படிப்பேன் பாட்டு கேட்பேன்.
– உடற்பயிற்சி, புடிச்ச வேலை, நல்ல உணவு, உறக்கம் உதவும்.
– நீண்ட தொலைவுக்க நடப்பேன். புத்தகங்கள் படிப்பேன்.
– புத்தக அலமாரியில உள்ள புத்தகங்களை எடுத்து தி௫ம்ப அடுக்குவேன்.
– ரொம்ப டென்ஷன் ஆனா திடீரென கிளம்பி எங்க போகுதுனு கூட தெரியாத பஸ்லில் ஏறி கொஞ்ச தூரம் போயிட்டு வருவேன், பட் கொஞ்சமா டென்ஷனா இருந்தா சாக்லேட் சாப்பிடுவேன் அல்லது நல்ல படம் பார்ப்பேன்.
– எழுதுவேன்.
– ஆபீசுக்கும் லீவு போட்டுட்டு எந்த வேலையும் செய்யாமல் குளிக்காமல் சாப்பிடாமல் என் ரூமிற்குள் கதைவச் சாத்திக்கிட்டு படுத்து கிடப்பேன்.
– வெளியே சென்று ஒரு பாணி பூரி சாப்பிட்டு வருவேன்
– யாருக்காவது ஃபோன் பண்ணி பொதுவான (மொக்கையான விஷயங்கள்) அல்லது காமெடியான விஷயங்களை பேசுவேன்,
– தாளில் புள்ளி வச்சுக் கோலம் போட ஆரம்பிச்சுடுவேன். சில நேரங்களில் 50, 60 கூட போட வேண்டி வரும்
– ரகார் சவாரி
– மேக்கப் பண்ணுவேன்
– டயட் விட்டு நல்லா சாப்பிடுவேன் ….…
– என் எழுத்துக்களின் தவறுகளை மீண்டும் அலசி பார்ப்பேன்.
– நல்ல ஹோட்டலுக்கு போய் புடிச்சத நல்லா சாப்பிவேன். ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பேன்.
– வீடு டீப் க்ளீன் பண்ணுவேன். நிறைய சாப்பிடுவேன்
– ஆறுதல் தரும் நட்புகள் கிட்ட பேசுவேன்.
– பச்சை பசேல் செடி கொடி உள்ள பூங்காக்களுக்கு அல்லது வயல்வெளிகளுக்கு போவேன். பறவைகள் சத்தம் கேட்டு மகிழ்வேன். அப்புறம் மனச் சோர்வாவது ஒன்றாவது.
– தனியா தியேட்டருக்கு அல்லது ஹோட்டலுக்கு போவேன்.. நல்ல இஞ்சி டீ ரோட்டு கடையில குடிப்பேன்.
– பிடித்த பாடல்கள் கேட்பேன். குழந்தைகளோடு விளையாடுவேன்.
– நடைப்பயிற்சி… திரைப்படம் பார்த்தல்… நண்பர்களுடன் உரையாடல்…
– பல நேரங்களில் சினிமா அல்லது பாடல்.. சில நேரங்களில் சிறுகதை..
– வடிவேல் காமெடி, யூடியூப் ல பார்ப்பேன். வாய்விட்டு சிரிப்பேன். மனசு லேசாகிடும்.
– நான் மிக தனிமையான மனிதர்களற்ற காடு மலைக்கு போய்விடுவேன்..
– சீர்காழி கோவிந்தராஜனின் தத்துவப் பாடல் கேட்பேன்.
– குழந்தைகளுக்கு கதை சொல்வேன், நாய்களுடன் விளையாடுவேன்
– சீரான வேகத்தில் நீண்ட தூரம் ஓடுவேன் அல்லது சைக்கிள் மிதிப்பேன். உடற்பயிற்சி செய்வேன்.
– அப்போ தான் நிறைய வேலைகள் செய்வேன்.எழுதுவது..வாசிப்பது..இசை கேட்பது..வீட்டுப் பணிகள் செய்வது..முக்கியமாக நன்றாக சாப்பிடுவது.ஒரு நல்ல தேநீர் பருகுவது..
– செடி வளர்ப்பு வேலைகளைப் பார்ப்பேன்.
– எத செஞ்சா எனக்கு பிடிக்குமோ அத செய்ய தொடங்குவேன்.
– ஜான்சிராணி

 

.

அறிவியலுக்கு புறம்பான ‘பூமி பூஜை’!

0
அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ – சடங்கு – வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை!
‘திராவிட மாடல்’ என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுகிறோம்.
கடந்த ஓராண்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியியின் தனித் தன்மையே மதச்சார்பின்மை என்னும் சிறப்பு உடையதாகும்.
அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும் போது ‘பூமி பூஜை’ என்ற சடங்கு, அதற்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வந்து, வடமொழி மந்திரம் ஓதச் சொல்வது, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அதற்கு வழிபாடு நடத்துவதுபோன்ற தோற்றம் – இவையெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் ‘செக்யூலர்’ (Secular) என்ற மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!
அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில், தி.மு.க. ஆட்சியில் இப்படி ஏதும் நடக்க அவர்கள் அனுமதித்தது கிடையாது.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார்   கேள்வி எழுப்பியது மிகவும் சரியானது மட்டுமல்ல; நியாயமும், தேவையானதும் சட்டப்படியானதுமாகும்.
காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அதனடிப் படையே ‘‘மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயகக் குடியரசு” என்பதாலும், அதனைக் காப்பாற்றுவதற்கே அப்பதவி என்பதுதானே உறுதிமொழியின் தத்துவம்?
அதுமட்டுமா?
அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு வலியுத்துவது என்ன?
நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துவதில் ‘‘அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்டுச் சிந்திக்கும் ஆற்றல், சீர்திருத்தம், மனிதாபிமானம் – இவற்றைப் பரப்புதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை” என்று வலியுறுத்துகிறது.
எனவே, அவர் எழுப்பிய கேள்வி நியாயமானது – தேவையானதும்கூட.
தி.மு.க. ஒரு தனித்தன்மையான அரசியல் கட்சி – அதன் சட்ட திட்டங்களில் முதன்மையாக பகுத்தறிவைப் பரப்புவது என்பதற்காக உள்ள அரசியல் கட்சி என்பது விளக்கமாகும்!
காங்கிரஸ் எம்.பி., ஒருவர், ‘‘அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; கார் வாங்கினால்கூட எலுமிச்சம் பழத்தை கார் டயருக்கடியில் வைத்து, புது காரை எடுப்பார்கள்” என்று கூறியிருப்பது பொருத்தமற்ற வாதம் ஆகும்.
தனிப்பட்ட நபர்களின் விருப்பு, நம்பிக்கைக்கு எதிரானதல்ல இந்தக் கோரிக்கை.
அரசு சார்பான பொது நிகழ்ச்சியை, மதச்சார்பின்மை என்ற கொள்கை உடைய ஆட்சியில் இப்படி நடத்தலாமா என்பதுதான் கேள்வி.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், உடனடியாக அரசு அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான கடவுள் படங்களும், அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பிய தையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.
நமது முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
அருள்கூர்ந்து அரசு சார்பான நிகழ்ச்சியில், இதுபோன்ற மதச் சடங்குகள், புரோகிதர்கள் வடமொழி மந்திரம் ஓதி நடத்தப்படுவது தவிர்க்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
காரணம், அரசு அனைவருக்கும் உரியது; அனைத்து மதம், மதம் சாராதவர்கள் அனைவருக்கும் உரியது. அத்துணை பேரையும் அழைக்கும் முறையும்கூட நடை முறை சாத்தியம் அல்ல; பொது நிகழ்ச்சிகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர்ப்பது, சனாதனத்திற்கு விடை கொடுத்து, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கையாகவே இருக்கும்.
மதவெறியை, மதக் கலவரங்களை திருவிழாக்களில் அதிகம் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஆபத்தான அமைப்புகள் அதில் கொடிகட்டி ஊடுருவுவதும் வேகமாக நடைபெறும் நிலையில், அரசு நிகழ்வுகளில் மதச்சடங்குகளைத் தவிர்ப்பது இன்றியமையாததாகும்.
இது குறித்து துணிவுடனும், கொள்கைத் தெளிவுடனும் ‘திராவிட மாடல்’ என்பது உண்மையான மதச்சார்பின் மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுவதுடன், அவரது உணர்வுகள் தனிப்பட்ட உணர்வல்ல – தி.மு.க.வில் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த உணர்வுக்கான அடையாளமே!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கவேண்டும்!
அவர்கள் வழியிலும் பிறழாத நமது முதலமைச்சர் அவர்கள், இதிலும் முன்வந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கக் கேட்டுக் கொள்கிறோம் – உரிமையுடன்!
– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
தகவல்: திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ணமூர்த்தி (விடுதலை 19.07.2022)