Latest Posts

இந்தியப் பெண்கள் மருத்துவம் படிக்க வித்தூன்றிய ஐடா ஸ்கடர்..!

- Advertisement -

நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். “அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்… உதவி வேணும் உடனே வாங்க” என்று பதறுகிறார்..!ஐடாவோ, “நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்” என்கிறார்.
“இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசுதான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை” என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக் கூற, “வேண்டாம்மா… நாங்கள் இஸ்லாமியர்கள்… எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது” என்று அவரும் சோகத்துடனே திரும்பி விடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள், ஐடா. மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப் படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
“என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்து விட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்” என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டர் ஆகிறார்..!
மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா Ida Scudder அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு மருத்துவ மனை தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது…!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.
மருத்துவமனை கட்டும் பணியை தொடங்குகிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒரு வழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவ மனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
அதுதான் ஆசியாவிலேயே தனிப் பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் “சிஎம்சி” மருத்துவமனை.
ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார்.
இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..! இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..! ”கிளிம்ப்சஸ் ஆஃப் மை லைஃப் அண்ட் ஒர்க் இன் இந்தியா” என்ற பெயரில் தன் வாழ்க்கை அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடாதான். எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா அன்னை தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. லட்சக் கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவியை செய்து கொண்டு இருக்கிறது. பதினான்கு வயது சிறுமியின் மன உறுதி ஒரு சிறந்த மருத்துவமனையை தமிழ்நாடு பெறக் காரணமாகி விட்டது.
– கருணாமூர்த்தி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news