Latest Posts

இதழ்களுக்கு நூலக ஆணை – சீர் படுத்த வேண்டி தீர்மானங்கள்

- Advertisement -

பொது நூலகங்களுக்கு இதழ்கள் வாங்குவது குறித்து அண்மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தேர்வு செய்த இதழ்கள் பட்டியலில் ஏற்கெனவே வாங்கப்பட்டுக் கொண்டு இருந்த பல இதழ்கள் விடுபட்டு இருந்தன. இதற்கான காரணங்கள் தெளிவாக்கப்படவில்லை. தமிழ் நாடு பொது நூலகத்துறையிடம் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லை. இதுவரை நூலக ஆணைகளை வழங்கிக்கொண்டு இருந்த மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் விடை சொல்லத்தெரியவில்லை.

இது தொடர்பாக கடந்த 12-04-2022 அன்று சென்னை, பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-

தீர்மானம் – 1                                                                                                  இதுவரை இருந்த விதிமுறைகளில், நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு, இந்த முறை நூலகங்களுக்கு இதழ்களை வாங்குவதை பரிந்துரைப்பதற்கு என்று ஒரு குழு அமைக்கப்பட்ட உடன் பெரும் எதிர்பார்ப்பு பத்திரிகை பதிப்பாளர்களிடையே எழுந்தது. ஆனால் அந்தக்குழு பரிந்துரைத்த இதழ்களின் பட்டியலில் வழக்கமாக நூலகங்களுக்கு வாங்கப்பட்டுக் கொண்டு இருந்த நிறைய இதழ்கள் இடம் பெறவில்லை. அவை ஏன் இடம்பெறவில்லை என்பதற்கான தெளிவான விளக்கங்களையும் பெற முடியவில்லை. எனவே நூலகங்களுக்கு இதழ்களை வாங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை நூலகத்துறை வழங்க வேண்டும்.

தீர்மானம் – 2
நூலகங்களுக்கு இதழ்களை வாங்குவதற்கான தெளிவான விதிமுறைகள் தெரிவிக்கப்படவில்லை. இதழ்களிடம் இருந்து முறையாக விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஏற்கெனவே இருந்த விதிமுறைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று செயல்பாடுகள் நடைபெற்று உள்ளன. அனைவரிடமும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் இதழ்களை கேட்ட நூலகத்துறை அவ்வாறு வழங்காத, பல ஆண்டுகளுக்கு முன் நின்று போன இதழ்கள் எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டன என்று கேட்டபோது, ”அவர்கள் கடைசியாக வெளியிட்ட பல ஆண்டுகளுக்கு முந்தைய இதழ்களின் அடிப்படையில் நூலக ஆணை வழங்கப்பட்டது” என்று உயர் அதிகாரியிடம் இருந்து பதில் பெறப்பட்டது. மற்ற இதழ்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவும் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதற்கு எதிரானது. எனவே இது தொடர்பான தெளிவான விதிமுறைகள் இல்லாமல் அவர்கள் விரும்பியபடி செயல்பட்டதை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் – 3
இந்தியாவிலேயே மலையாளத்தில்தான் நிறைய இதழ்கள் வெளிவருகின்றன என்று பெருமையாக பேசப்படுகிறது. அதைப் போல தமிழிலும் நிறைய இதழ்கள் வருவது பெருமைக்கு உரிய ஒன்றுதான். தமிழ் வளர்ச்சிக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற தமிழ் இதழ்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. பத்திரிகைகள் நடத்துவது என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல. அதில் சமுதாய வளர்ச்சியும் பின்னிப் பிணைந்து இருக்கிறது. பெரும்பாலும் சமுதாய நோக்கம் உள்ளவர்களே பத்திரிகைப் பணிக்கு வருகிறார்கள். அல்லது பத்திரிகைகள் நடத்துவதற்கு முனைகிறார்கள். பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர் என்று போற்றப்படும் தினத்தந்தி நிறுவனர், மேனாள் அமைச்சர் மறைந்த சி. பா. ஆதித்தனார் அவர்கள், ”பத்திரிகை நடத்துவது என்பது நெருப்பாற்றில் நீந்துவது போல..” என்று சொல்லி இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். இந்த முதன்மையான செய்தியை நூலகத் துறை சார்ந்த அதிகாரிகள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 4
குழுவில் இடம் பெற்று இருந்தவர்களில் ஒருவரான திரு. சமஸ் எந்த அடிப்படை நாகரிகமும் இல்லாமல், தானே எல்லா இதழ்களையும் தேர்வு செய்ததைப் போலவும், தேர்வு செய்த இதழ்களைத் தவிர மற்றவை குப்பைகள் என்பது போலவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அதை வெளியிட்ட சேனலையும் கண்டிக்கிறோம். செய்தித்தாள் காகிதம் (நியூஸ் பிரின்ட்) பற்றிய புரிதல் அறவே இல்லாமல் சாணிப் பேப்பரில் அடிக்கிறார்கள் என்று அவர் கூறி இருப்பதையும் கண்டிக்கிறோம். சந்தையில் வெளிநாட்டு செய்தித்தாள் காகிதம் மற்றும் உள்ளூர் மில்களில் தயாரிக்கப்படும் செய்தித்தாள் காகிதம் மட்டுமே கிடைக்கின்றன. சாணியில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை உலகில் எங்குமே இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் செய்தித்தாள் காகிதத்தை சாணிப்பேப்பர் என்று கூறி அவமானப்படுத்தி இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தீர்மானம் – 5
எப்போதும் இல்லாத அதிசயமாக தேர்வு செய்யப்பட்ட இதழ்களின் பதிப்பாளர்களிடம் பேரம் பேசுவதற்கு என்று ‘நெகோஷியேஷன் குழு’ அமைக்கப்பட்டது பொருத்தம் அற்றதாக இருக்கிறது. இப்படி பேரம் பேசும் முறையைக் கைவிட வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 6
விளம்பரங்கள் இல்லாமல் பத்திரிகைகளை நடத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. விளம்பர வருமானம் இல்லாமல் நின்று போன இதழ்கள் ஏராளம். விளம்பர வருமானம் வருவதன் காரணமாகவே தி இந்துவும். தினத்தந்தியும் தங்களது செய்தித் தாள்களை இவ்வளவு குறைவான விலைக்கு வாசகர்களுக்கு கொடுக்க முடிகிறது. எனவே, ”நீங்கள் விளம்பர வருமானத்துக்காகவே பத்திரிகை நடத்துகிறீர்கள்..” என்பது போல பதிப்பாளர்களிடம் கேட்கும் அதிகாரிகள், ஒரு பத்திரிகை எப்படி நடத்தப்படுகிறது, பெரிய பத்திரிகைகளுக்கு மற்றும் சின்ன பத்திரிகைகளுக்கு உள்ள வாய்ப்புகள், சிரமங்களை புரிந்து கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சிறு இதழ்களுக்கும் அரசு விளம்பரங்களை வழங்க வேண்டும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டையும் பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் – 7
திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே இடம் பெற்ற இதழ்களின் அட்டையில் அரசின் தொழில் துறை தொடர்பான அதிகாரிகளின், தொழில் முனைவோரின், தொழில் அதிபர்களின், தன்னம்பிக்கை ஊட்டுபவர்களின், சாதனை செய்த பெண்களின் படங்கள் இடம் பெற்றது துறை சார்ந்த இதழ்களின் வளர்ச்சியால்தான். துறை சார்ந்த இதழ்களே தொழில் முனைவைத் தூண்டுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்த துறை சார்ந்த செய்திகளை தமிழில் கிடைக்கச் செய்கின்றன. துறை சார்ந்த எழுத்தாளர்களை உருவாக்குகின்றன என்பதை நூலக அதிகாரிகள் புரிந்து கொண்டு துறை சார்ந்த இதழ்களுக்கு கூடுதல் இடம் வழங்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 8
இலக்கிய இதழ்களில் கூட பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு நிறைய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கிய, தமிழை செழுமைப்படுத்திய பல இதழ்கள் விடுபட்டு உள்ளன என்பதையும் இந்த பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் – 9
பத்திரிகை நடத்துவது என்பது வெறும் தொழில் அல்ல. வெறும் தொழில் மட்டுமே என்றால் பத்திரிகைகளுக்கு ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்ற இடம் கிடைத்து இருக்காது. எனவே இது வெறும் தொழில் அல்ல என்பதை நூலகத் துறை அதிகாரிகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 10
குழுவினர் தேர்வு செய்த அல்லது அவர்களிடம் கையொப்பம் பெற்ற பட்டியலில் இடம் பெறாத, நீண்ட காலமாக தமிழை, தமிழர்களை வளர்க்கும் இதழ்கள் நிறைய உள்ளன. காய்தல் உவத்தல் இல்லாமல் ஆராயும் குழு இவற்றை ஆராய்ந்தால் உண்மை தெரியும் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது. அவற்றின் பயனை வாசகர்கள் அடையும் வகையில் மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து அவற்றுக்கும் நூலக ஆணை வழங்க வேண்டும் என்றும பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 11
ஒரு இதழ் நடத்த வேண்டுமானால் ஆஃபிஸ் ஆஃப் ரெஜிஸ்ட்ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் ஃபார் இந்தியா (ஆர்என்ஐ) வில் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இருந்த விதிமுறைகள் படி ஆர்என்ஐ பதிவு இருந்த இதழ்களுக்கு மட்டுமே நூலக ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஆர்என்ஐ பதிவு இல்லாத இதழ்களுக்கும் நூலக ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதே போல ஆர்என்ஐ இல்லாத இதழ்களுக்கும் எதிர்காலத்தில் நூலக ஆணைகள் வழங்கப்படுமா என்பதையும் நூலகத்துறை தெளிவு படுத்த வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 12
மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக ஒன்றிய அரசின் அஞ்சல் துறை சலுகைக்கட்டணம் நிர்ணயித்து அஞ்சல் வாயிலாக குறைந்த கட்டணத்தில் இதழ்களை அனுப்புவதற்கு உதவுகிறது. இந்த சலுகைக் கட்டண அனுமதியைப் பெற தற்போது ஆர்என்ஐ பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவைப்படுகிறது. முந்தைய காலக் கட்டங்களில் நீதிமன்ற உறுதிமொழிச் சான்றிதழ் (டிக்ளரேஷன்) அடிப்படையிலேயே அஞ்சல் கட்டண சலுகை வழங்கப்பட்டது. தற்போது ஆர்என்ஐ இல்லாத இதழ்களுக்கும் நூலக ஆணை வழங்கப்பட்டு இருப்பதால், இவர்களுக்கும் நீதிமன்ற உறுதிச் சான்றிதழ் அடிப்படையில் சலுகைக் கட்டண அனுமதியை அஞ்சல் துறை அதிகாரிகளை அணுகி வாங்கித்தர முயற்சிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டுகிறது.
தீர்மானம் – 13
”யோஜனா என்ற இதழை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கிறார்கள், ஆர்என்ஐ இல்லாதவர்கள் இப்படி பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கலாமே” என்று ஒரு பொறுப்பான அதிகாரி ஆலோசனை கூறினார். யோஜனா, ஒன்றிய அரசால் நடத்தப்படும் இதழ். அவர்கள் அரசின் பணத்தை செலவு செய்து அனுப்புகிறார்கள். தனிப்பட்ட இதழ்களை கூடுதலான பதிவு அஞ்சல் கட்டணம் செலுத்தி அனுப்புவது இதழ்களுக்கு கட்டுப்படியாகாது என்பதை நூலகத்துறை அதிகாரிகளுக்கு பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் – 14
தமிழில் எத்தனை இதழ்கள் வந்தாலும் அவை தமிழையும், தமிழர்களையும் உயர்த்தும் பணியில் தங்கள் பங்களிப்பைச் செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவிப்பதோடு, அரசின் பல்வேறு திட்டங்களையும், நல்ல பணிகளையும் மக்களிடையே எடுத்துச் செல்வதில் எங்கள் சங்க உறுப்பினர்களின் இதழ்கள் நிச்சயம் முனைப்பாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் – 15
ஏப்ரல் தொடங்கி வரும் நிதியாண்டில் (22-23) தேர்வு பெற்ற இதழ்களை நூலகங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை, தேர்வு செய்யப்பட்ட இதழ்களுக்கான நூலக ஆணைகளும், அனுப்ப வேண்டிய நூலகங்களின் பட்டியலும் வழங்கப்படவில்லை. இதனால் பத்திரிகை வெளியீட்டாளர்கள் மட்டுமின்றி வாசகர்களும் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் அஞ்சல்துறை அனுமதித்து உள்ள தேதிக்குள் இதழ்களை அஞ்சலிடவில்லை என்றால், சலுகைக் கட்டணத்தில் இதழ்களை அனுப்ப முடியாது. பன்மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தினால்தான் அனுப்ப முடியும். எனவே நூலக ஆணையையும், நூலக முகவரிகளையும் விரைவில் தந்து உதவுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் – 16
மேலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு உள்ள பத்திரிகைகளுக்கு வரிசைக்கிரம அடிப்படையில் ஆணை வழங்க வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்தப்படி வாங்கினால் கடைசியில் இடம்பெற்று உள்ள இதழ்கள் நூலகங்களுக்கு வாங்கப்படாமலே போய்விட வாய்ப்பு உள்ளது. எனவே வரிசைக்கிரமப்படி வாங்க வேண்டும் என்பதற்கு பதில் தேர்வு பெற்ற அனைத்து இதழ்களையும் வாங்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து நூலகங்களுக்கு வாங்கப்பட்ட சிக்கல் இல்லாத இதழ்களையும் மறுபரிசீலனை செய்து அவற்றையும் நூலகங்களுக்கு வாங்க முயற்சிக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு வேண்டுகிறது.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news