லத்தீன் மொழியில் ஓசிமம் சாங்டம் (Ocimum Sanctum) என்று அழைக்கப்படும் துளசியின் தாவரவியல் பெயர், ஓசிமம் டென்யூஃப்ளோரம் (Ocimum Tenuiflorum). லேமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்த செடி வகைத் தாவரம். துளசி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. பஞ்சாப், ஆந்திரா உட்பட பல மாநிலங்களிலும் கூட பயிரிடப்படுகிறது.
துளசி மாலைகள் சில கோயில்களில் சிறப்பிடம் பெற்று இருக்கிறது. இதற்காக துளசி பெரும்பாலும் மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பூ வியாபாரிகளும் மற்ற பூக்களுடன் துளசியையும் விற்பனை செய்கிறார்கள். இந்த தேவை தவிர சில வகை மருந்து தயாரிப்பிலும், அழகுப் பொருட்கள் தயாரிப்பிலும், மணப் பொருட்கள் தயாரிப்பிலும், சோப் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை கோவையில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இதனால் மற்ற மல்லிகை, செவ்வந்தி, சாமந்தி, மரிக்கொழுந்து போன்ற மலர் வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் துளசியைப் பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக மதுரை நிலக்கோட்டை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள மலர் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகிறார்கள்.
துளசி பொதுவாக எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை படைத்தது. சாலை ஓரங்களில், வரப்பு ஓரங்களில், காட்டுப் பகுதிகளில் தானாகவே புதர் போல வளர்ந்து இருப்பதைக் காண முடியும். அப்படி வளர்ந்து இருக்கும் துளசியை சேகரித்து மருந்து செய் நிலையங்களுக்கு விற்பவர்களும் இருக்கிறார்கள்.
துளசி எப்படி பயிரிடப்படுகிறது?
ஒரு ஏக்கருக்கு நூற்றைம்பது கிராம் விதைகள் தேவைப்படும். விதைகள் மிகவும் சிறியவை என்பதால் நான்கு பங்கு மணலுடன் ஒரு பங்கு விதைகள் என்று கலந்து கொள்ள வேண்டும். சுமார் பதினைந்து அடி நீளம், நான்கு அடி அகலத்தில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். மண்ணை நன்றாக பொலபொலவென்று வருமாறு மண்வெட்டியால் நன்றாக கொத்தி சமன் செய்த பிறகு மணலுடன் கலந்து வைத்து இருக்கும் விதைகளைத் தூவி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆறு அல்லது ஏழு வாரங்களில் மூன்று முதல் ஐந்து இலைகளுடன் நாற்று, நடுவதற்கு தயாராக வளர்ந்து விடும்.
ஏற்கெனவே துளசி பயிரிடுபவர்கள் விதை இல்லாத முறையிலும் நாற்றுகளை வளர்த்து நடுகிறார்கள். இதற்கு அவர்கள் துளசி செடிகளின் முனைப் பகுதிகளை எட்டு முதல் பத்து கணுக்கள் இருக்குமாறு சுமார் பத்து முதல் பதினைந்து சென்டி மீட்டர் உயரத்துக்கு வெட்டி நாற்றங்காலில் நட்டு விடுகிறார்கள். அல்லது பாலிதீன் பைகளில் நட்டு வளர்க்கிறார்கள். நான்கு முதல் ஆறு வாரங்களில் வயலில் நடுவதற்கு தயாராக நாற்றுகள் வளர்ந்து விடுகின்றன.
நிலத்தை இரண்டு முறை டிராக்டரால் நன்றாக உழுது மண்ணை பதமாக்கிய பின் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய விரும்பினால் சுமார் பன்னிரெண்டு டன் தொழு உரம் போட வேண்டும். நாற்பது சென்டி மீட்டர் இடை வெளியில் பாத்திகளை அமைக்க வேண்டும்.நாற்பது சென்டி மீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் ஏக்கருக்கு நாற்பத்தெட்டு கிலோ நைட்ரஜன், இருபத்து நான்கு கிலோ பாஸ்பரஸ், இருபத்து நான்கு கிலோ பொட்டாசியம் உரங்களைப் போட வேண்டி இருக்கும்.
நாற்று நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். உரங்களைப் பொறுத்தவரை முதலில் பாஸ்பரஸ் உரத்தையும், பொட்டாசியம் உரத்தையும் முழுமையாகப் போட்டு விட வேண்டும். நைட்ரஜன் உரத்தை மட்டும் பாதியை முதலில் போட வேண்டும். மீதியை இரண்டாகப் பிரித்து முதல் அறுவடையை ஒட்டி ஒரு பாதியையும், அடுத்த அறுவடையின் போது மீதி பாதியையும் போட வேண்டும். மூன்றாவது மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். பிறகு ஒரு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. மூன்று ஆண்டுகளுக்கு இவ்வாறு அறுவடை செய்யலாம். ஒரு முறை அறுவடைக்கு சுமார் நானூறு கிலோ கிடைக்கும்.
முதலில் வாரத்துக்கு இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப இருபது நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாற்று நட்ட ஒரு மாதத்தில் ஒரு முறையும், இரண்டாம் மாதம் ஒரு முறையும் களை எடுத்தால் போதும்.
நேரடியாக மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யலாம். கோயம்பேடு, தோவாளை போன்ற மலர்ச் சந்தைகளில் துளசியும் குவித்து வைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இம்ப்காப்ஸ், எஸ்கேஎம், டாம்ப்கால் போன்ற சித்த, ஆயுர்வேத மருந்துகள் செய் நிறுவனங்களும், பெருய பார்மசூட்டிகல் நிறுவனங்களும் துளசியை வாங்குகின்றன. துளசியின் இலைக் கொழுந்து, விதைகள், உலர்த்தப்பட்ட வேர்களுக்கு சந்தை வாய்ப்பு இருக்கிறது. உலர்த்தப்பட்ட துளசி இலைகளும் வாங்கப்படுகின்றன.துளசியில் இருந்து வடிக்கப்படும் யூஜெனால் (Eugenol) எண்ணெய் மருந்து தயாரிப்பில் மட்டும் அல்லாமல் சோப்பு தயாரிப்பு போன்ற வேறு தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. துளசிப் பொடியை தேநீர் தயாரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள். வேறு மூலிகைத் தேநீர் உடன் கூடுதலாக துளசிப் பொடியும் சேர்க்கப்படுகிறது.
புதிதாக துளசி சாகுபடியில் இறங்குபவர்கள், ஏற்கெனவே துளசி பயிரிட்டு இருக்கும் இடங்களை நேரடியாகப் பார்த்து மேலும் தகவல்களை அறிந்து செயல்படலாம். துளசியை வாங்குபவர்களிடமும் விலை முதலான செய்திகளை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
– எவ்வி