புரதச்சத்து அதிகம் நிறைந்த துவரை குறைந்த நீரை கொண்டு வளரும் பயிராகும். இந்த சாகுபடியில் முக்கியமாக கருதப்படுவது பூக்கும் பருவம் ஆகும். சைவ உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் துவரையை மக்கள் அதிகம் வரவேற்கின்றனர். தமிழகத்தில் பயிர் சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயிறு, தட்டை பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. துவரை சாகுபடி முறையில் கோ(ஆர்.ஜி.) 7, எல்ஆர்ஜி.41, வம்பன் 2, 3, பி.எஸ்.ஆர்.1, ஏபிகே 1, கோ 6 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு உகந்தது.
துவரை பயிறு சாகுபடி முறைக்கு செம்மண் மிகவும் உகந்தது. செம்மண்ணில் துவரை நன்கு வளரும். நடவு முறையில் ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை பொதுவாக சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப்பட்டத்தில் துவரை சாகுபடி செய்தால் துவரை பயிறு அதிகமாக கிடைக்கும். சாகுபடி செய்வதற்கு முன், நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் அடியுரமாக இட்டு உழவு செய்ய வேண்டும். இறவை, மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ அளவுள்ள குழிகளை 5 ஜ் 3 அடி இடைவெளியிலும் (2904 செடிகள்/ஏக்கர்) நடவுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6 ஜ் 3 அடி இடைவெளியிலும் (2420 செடிகள்/ஏக்கர்) குழிகள் எடுக்கவேண்டும்.
Also read: வெந்தயக்கீரை சாகுபடி
துவரை பயிறு சாகுபடி பொறுத்தவரை, இரகங்களை பொறுத்து விதையளவு வேறுபடும். கோ 6, வம்பன் 2, எல்.ஆர்.ஜி 41 ஆகிய இரகங்களுக்கு தனிப்பயிராக 8 கிலோவும், கலப்புபயிறுக்கு 3 கிலோ விதையும் தேவைப்படும். கோ(துவரை) 7, வம்பன் (துவரை) 3, ஏபிகே 1 ஆகிய இரகங்களுக்கு தனிப்பயிராக 15 கிலோவும், கலப்புபயிறுக்கு 5 கிலோ விதையும் தேவைப்படும்.
துவரை நடவு செய்வதற்கு தேவையான நாற்றங்காலை குழித்தட்டு அல்லது பாலிதீன் பையில் வளர்த்து துவரை சாகுபடி செய்யலாம். குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகள் அமைத்து, அக்குழிகளில் மக்கிய தென்னை நார் கழிவுகள் மற்றும் மணல் நிரப்ப வேண்டும். தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருக்க 3 முதல் 4 துளைகள் போட வேண்டும். இக்குழித் தட்டுகளில் 90% பரப்பியுள்ள தென்னைநார் மற்றும் மணலில் குழி ஒன்றில் இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். முளைத்த 10 ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கி, ஒரு குழியில் ஒரு நாற்று மட்டும் இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள் பராமரிக்கப்பட்டு துவரை சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன், இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்வது நல்லது. நாற்றுக்களை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன் குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும்.
துவரை நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, மண்ணின் ஈரத்திக்கேற்ப 3 அல்லது 4 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 30 ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் தர வேண்டும். பூக்கும் தருணத்தில் பஞ்சகாவ்யா கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால், அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும். நடவு செய்த 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 10:23:50 கிலோ தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றை அளிக்கும் வகையில் டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களும், துத்தநாகம், கந்தகச் சத்து அளிக்கும் துத்தநாக சல்பேட் (10 கிலோ) உரங்களை செடியைச் சுற்றி இடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கும். உரம் அளித்த உடன் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும்.
Also read: மரவள்ளி சாகுபடியில் நல்ல லாபம்
துவரை சாகுபடி பொறுத்தவரை, நடவு செய்த 30-40 நாட்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும். நடவுப்பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கைகளில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்து பராமரிக்க வேண்டும்.
நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும். பூ உதிராமல் தடுக்க பிளானோபிக்ஸ் ஊக்கியை பூக்கும் காலத்தில் 0.5 மி.லி./லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், மற்றும் பூண்டு கரைசல் ஆகியவற்றை தெளிக்க வேண்டும். காய் 80% முதிர்ந்தவுடன் முழு பயிரையும் அறுவடை செய்ய வேண்டும். 2 – 3 நாட்களுக்கு குவியலாக வைத்திருந்து பின்பு உலர்த்த வேண்டும்.
துவரை சாகுபடி முறையைப் பொறுத்தவரை, மானாவாரி பயிராக இருந்தால் ஏக்கருக்கு 400 கிலோ, இறவைப்பயிராக இருந்தால் 600 கிலோ மகசூலாக கிடைக்கும்.