சில மாவட்டங்கள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் பெரிய அளவில் பயன் அடைந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய சிறு வயதில் இருந்தே கேரளாவில் மரவள்ளி சாகுபடியில் ஈடுபட்டு வரும் திரு. ஆர். அய்யாக்கண்ணு, மரவள்ளி பயிரிடுதல் தொடர்பான சில செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவற்றில் இருந்து,
”படிப்பதற்கான வாய்ப்பு இல்லாததால் என்னை என் சிறுவயதிலேயே விவசாயப் பணிகளுக்கு கேரளாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். தொடக்கத்தில் இருந்தே அங்கு மரவள்ளி சாகுபடிதான். அதனால் எனக்கு மரவள்ளிப் பயிர் குறித்த அத்தனைப் பணிகளும் அத்துப்படியாகி விட்டன.
இப்போது எனக்கு இங்கே சொந்த வீடும், விவசாய நிலமும் இருக்கிறது. மரவள்ளிக் கிழங்கை குச்சிக் கிழங்கு, குச்சி வள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு என்றெல்லாம் அழைக்கிறார்கள். மலையாளத்தில் கப்பா என்று அழைக்கிறார்கள். கேரள மக்கள் கப்பாவை அதிக அளவில் விரும்பி உண்ணுகிறார்கள். இங்கு உள்ள எல்லா உணவகங்களிலும் மரவள்ளிக் கிழங்கு தொடர்பான உணவுப் பொருட்கள் எப்போதும் இருக்கும்.
மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் பதின்மூன்று மாநிலங்களில் பயிரிடப்பட்டாலும் தென்னிந்தியாவில்தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மரவள்ளி அறுவடைக் காலத்தில வணிகர்கள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்து பல்வேறு ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்புவார்கள். அங்கிருந்து உணவகங்கள், சிப்ஸ் தயாரிப்போர் தங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்வார்கள். இது தவிர சவ்வரிசி ஆலைகளுக்கும் மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். சவ்வரிசிக்கு என நிறைய ஆலைகள் இயங்கி வருகின்றன.
வேறு சில தொழில்களுக்கான மூலப்பொருளாகவும் மரவள்ளி விளங்குகிறது. அண்மையில் மக்கும் பிளாஸ்டிக் தயாரிப்பிலும் மரவள்ளியை மூலப்பொருளாக பயன்படுத்தும் செய்திகள் வந்து கொண்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.” என்றார்.
– ஆர். காயத்ரி (மாணவ பத்திரிகையாளர்)