முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம் இல்லாததால் அவர்கள் என்னை கூப்பிடவில்லை.
ஆறு ஆண்டுகள் கழித்து, அதே நிறுவனத்திற்கு மீண்டும் விண்ணப்பம் அனுப்பினேன், எனக்கு அழைப்பு வந்தது. அங்கே சென்றால் மதன் என்றொரு மேலாளர் என்னை தொழில்நுட்ப நேர்முகத் தேர்வை எடுப்பார் என அறிமுகம் செய்து வைத்தனர். அவரும் ஒரு முன்னாள் LabVIEW Developer என்றார்.
நான் கடந்த மூன்று ஆண்டுகளாய் LabVIEW அதிகமாக பயன்படுத்தவில்லை என்றதும், அது வெறும் மென்பொருள்தான், நாம் தொழில்நுட்பத்தை பற்றி பேசுவோம் என்றார். வாகனத்தில் ஓட்டுநர்க்கு எரிபொருள் அளவை காட்டும் மீட்டர் எப்படி வேலை செய்கிறதென விளக்கச் சொன்னார்.
எரிபொருள் டேங்கில் இருக்கும் சென்சார் எரிபொருளின் அளவிற்கு ஏற்ற ரெசிஸ்டன்ஸ் (resistance) எவ்வளவு என அது இணைக்கப்பட்டு இருக்கும் ECU விற்கு (சிறு கணினி) சொல்லும். அதன் அடிப்படையில் ECU வின் மென்பொருள் எவ்வளவு எரிபொருள் இருக்கிறதென கணக்கிட்டு மீட்டர் இருக்கும் ECU விற்கு CAN Bus மூலமாக சிக்னல் அனுப்பும் என நான் படம் வரைந்து விவரித்தேன்.
எரிபொருள் டேங்கிற்குள் சென்சார் வைத்தால் எப்படி தீ பிடிக்காமல் பாதுகாப்பது, அந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால் என்னவாகும், வண்டி மலைப்பாதையில் பயணிக்கையில் டேங்கில் இருக்கும் எரிபொருள் ஒரு பக்கம் தேங்கும் பொழுது எப்படி கணக்கிடுவது, மேடுபள்ளம் நிறைந்த சாலையில் வண்டி பயணிக்கையில் எரிபொருள் டேங்கிற்குள் ததும்பும் பொழுது எப்படி கணக்கிடுவது என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்.
ஒவ்வொரு கேள்விக்கும் நான் பொறி இயலில் படித்த ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் யோசித்து பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். சில கேள்விகளுக்கு எனக்கு சரியான விளக்கம் சொல்ல வரவில்லை. அவர் சில தொழில்நுட்ப சொற்கள் மூலம் அவற்றை எனக்கு நினைவுபடுத்தி உதவியதும், அவற்றை பற்றி எனக்கான புரிதலை விளக்கினேன்.
நேர்முகத் தேர்வு முடிந்ததும், அங்கு இருப்பவரிடமே நேரடியாகவே முடிவுகளை கேட்டு விடும் பழக்கம் எனக்கு. நான் கேட்டதும் அவர் மனிதவள அதிகாரி முடிவுகளை தெரிவிப்பார் என்றார். சரி, ஆனால் நீங்கள் என்னைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்றேன். “இது போன்ற பெரிய நிறுவனங்களில் Holistic Understanding முக்கியம். உங்களுக்கு பொறியியல் பற்றி நல்ல புரிதல் இருக்கு” என்றார்
எந்தப் பாடமாக இருந்தாலும் அவற்றை முற்றும் முழுவதுமாக ஒன்றோடு ஒன்று எப்படி இயங்குகிறது என புரிந்து கொள்ளுதல் அவசியம். விரிவான புரிதல் (Holistic Understanding of a Subject ) ஒரு முக்கியமான வேலை வாய்ப்புக்கான திறமை (EmployableSkill).
– கபிலன் காமராஜ்