பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும். இவை தவிர வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளும் உள்ளன.
இங்கு சீமாஸ் என்பது கணினியின் சிபியூவில் உள்ள மதர்போர்டின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள பேட்டரியைக் குறிப்பது ஆகும். நீங்கள் சற்று நினைத்துப் பாருங்கள். காலை பத்து மணிக்கு கணினியை ஆன் செய்கிறீர்கள். இரவு எட்டு மணி வரை அதில் பணிபுரிந்து விட்டு கணினியை அணைக்கிறீர்கள். மறுநாள் காலை பத்து மணிக்கு கணினியை ஆன் பண்ணும்போது, சிஸ்டம் ட்ரேயில் உள்ள தேதி மற்றும் நேரம் பகுதியில் அன்றைய தேதி, அப்போதைய நேரம், முற்பகலா, பிற்பகலா என்பதை சரியாகக் காட்டுவது எப்படி?
ஒரு வாரம் நாம் கணினியை ஆன் செய்யவில்லை என்றாலும், தேதி, நேரம் சரியாகக் காட்டப்படுவது எப்படி?
இதற்கான முதன்மையான காரணம் சீமாஸ் பேட்டரி ஆகும்.
சீமாஸ் என்பது காம்ப்ளிமென்டரி மெட்டல் ஆக்சைடு செமிகண்டக்டர் (Complementary Metal Oxide Semi Conductor) என்பதன் சுருக்கம் ஆகும். கணினி இயங்கிக் கொண்டு இருந்தாலும், அணைத்து வைக்கப்பட்டு இருந்தாலும் இருபத்து நான்கு மணி நேரமும் கணினியின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பது சீமாஸ் பேட்டரியால்தான்.
மதர் போர்டில் பொருத்தப்பட்டு இருக்கும் சீமாஸ் பேட்டரியின் பயன்படும் காலம் அதிகரிக்க வேண்டும் எனபதற்காக, குறைந்த அளவு மின்சாரத்துடன் இயங்கும் தொழில் நுட்பத்துடன் இந்த பேட்டரி உருவாக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக பயாஸ் ரோமில் உள்ள தகவல்களும் சீமாஸ் பேட்டரி மூலம் பாதுகாக்கப்படுகிறது. மின்சாரம் நின்று விட்டால் டேட்டாக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒரு சிறிய பேட்டரி, அதாவது சீமாஸ் பேட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.
பயாஸ் ரோம் (BIOS ROM) என்பது பேசிக் இன்புட் அவுட்புட் சிஸ்டம் (Basic Input Output System) என்பதன் சுருக்கப் பெயர் ஆகும். கணினி இயங்கத் தேவைப்படும் அடிப்படை உறுப்புகளுக்கான ஆணைத் தொகுப்புகள் அடங்கியது, மெமரி ஆகும். இதைத்தான் ஃபர்ம்வேர் மென்பொருள் என்று சொல்கிறோம்.
இதம பயஸ் ரோம்-க்குள் கணினியின் நுட்பங்கள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம்.
பயாசின் முதன்மையான பணிகளில் ஒன்று, பவர் ஆன் செல்ஃப் டெஸ்ட் (போஸ்ட்). அதாவது சிஸ்டம் போர்டில் உள்ள சர்க்யூட்கள், மெயின் மெமரி, கீ போர்டு, டிஸ்க் ட்ரைவ்கள் அனைத்தையும் பரிசோதிக்கும். இதை முடித்த பிறகு வேறு ஏதாவது எக்ஸ்பேன்ஷன் போர்டுகள், பயாஸ் கோட்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கும்.
அப்படி ஏதாவது இருந்தால் மைக்ரோ பிராசசர் அந்த கோடை சோதித்து அதில் உள்ள குறிப்புகள் படி செயல்படும். இதை முடித்த உடன் முதல் திரை உங்களை அன்புடன் வரவேற்கும். மேலும் ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்களில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஃபைல்களைத் தேடும். அவ்வாறு தேடுவதற்கு பூட் ஸ்ட்ராப் லோடர் என்ற சிறிய புரோகிராம் பயன்படுகிறது. அதன் பிறகுதான் ஐகான்கள் எல்லாம் தெரிய வரும். பயாஸ் செட்அப் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றால் தேதியையும், நேரத்தையும் சரியாகக் காட்டுவதற்கும், பூட் டிவைஸ் ப்ரியாரிட்டியை தேர்வு செய்வதற்கும், சில வசதிகளை சரி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சீமாஸ் பேட்டர் பழுது அடைந்து விட்டால் கம்ப்யூட்டர் பூட் ஆகாமல் கூட போகலாம். சீமாசில் ஒரு நிக்கல் காட்மியம் பேட்டரி இருக்கும். ஒவ்வொரு முறை கணினி ஆன் செய்யப்படும் போதும் இது சார்ஜ் செய்யப்படும். இதைத்தான் அக்குமுலேட்டர் என்று கூறுவார்கள்.
சீமாஸ் பேட்டரி இரண்டு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்று, எக்ஸ்டர்னல் லித்தியம் பேட்டரி, இரண்டாவது, காயின் செல் பேட்டரி.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை உழைக்க வல்லது.
இந்த பேட்டரியின் செயல்பாடு நின்று விட்டால், தேதி மற்றும் நேரம் தவறாகத் தெரியும். சிஸ்டம் சிபியூவில் இருந்து பீப் ஒலி கூட வரலாம்.
சீமாஸ் பேட்டரி, சிபியூவின் உள்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள மதர்போர்டின் மேல்பகுதியில் ஒரு ஐம்பது காசு வடிவத்தில் சற்று மொத்தமாக இருக்கும். அந்த பேட்டரி மேல் சிஆர்2032 என்று எழுதப்பட்டு இருக்கும். நீங்களாகவே இந்த பேட்டரியை வாங்கப்போனால் மேற்கண்ட எண்ணை சொல்லிக் கேட்டால் அந்த பேட்டரியை சரியாக எடுத்துக் கொடுப்பார்கள்.
கணினியின் டெஸ்க்டாப்பில் உள்ள ஸ்டார்ட் பட்டன் அருகில் உள்ள டாஸ்க் பாரின் வலது ஓரத்தில் நேரமும், தேதியும் இடம் பெற்று இருக்கும். நேரத்தின் அருகே காலை, மாலை என்பதைக் குறிப்பிட ஏஎம், பிஎம் இடம் பெற்று இருக்கும். இவற்றை காலை, மாலை என்று மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு Start > Run > Regedit செல்லவும். பின்பு அங்கு திறக்கப்பட்ட Registry Editor விண்டோவில் உள்ள பகுதியில் கர்சரை மைகம்ப்யூட்டர் ஐகானில் வைத்து நேராக மெனு பாருக்கு சென்று Find என்ற ஆப்ஷனை தேர்வு செய்து find what என்ற இடத்தில்
AM அல்லது PM என்று கொடுத்துத் தேடச் சொன்னால் சிறிது நேரம் கழித்து S1159 மற்றும் S2359 என்றபடி இடம் பெற்று இருக்கும் AM அல்லது PM மீது டபுள் கிளிக் செய்து Value data என்ற இடத்தில் Kalai அல்லது Malai என்று தட்டச்சு செய்து ஓகே கொடுப்பதன் மூலம், இந்த சொற்கள் நேரம் அருகில் இடம் பெறுவதைக் காணலாம்.
இவற்றை தமிழிலேயே காலை, மாலை என்றும் வரவைக்க முடியும். இதற்கு கூகுளில் Tamil Transliteration என்று தேடினால் தமிழ் ட்ரான்லிட்டரேஷன் பக்கம் திறக்கும். இதில் காலை, மாலை என்று தமிழில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வேல்யூ டேட்டா என்ற இடத்தில் ஒட்டவும்.
சு. சுரேஷ்குமார், கும்பகோணம்