கடலில் இருந்து மின்சாரம் எப்படிப் பெறப்படுகிறது?

0

பொருட்கள் மூலக்கூறு களாலும், மூலக்கூறுகள் அணுக்களினாலும் உருவா னது. எல்லா அணுவிலும் ‘உட்கரு’ என்ற ஒன்று உண்டு. அதில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இடம் பெற்றுள்ளன.

ஒத்த மின்சுமையைப் பெற்று இருப்பதால் புரோட்டான்கள் ஒன்றையொன்று விலக்கும் தன்மையைக் கொண்டவை. அதனால், அணுவின் உட்கருவில் நியூட்ரான்கள் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்கள் இடங்கொள்ள இயலாது.

நியூட்ரான்கள் உட்கருவில் உள்ள நேர்மின்னேற்றம் பெற்ற புரோட்டான் துகள்களுக்கிடையே நிலவும் விலக்கு விசையைக் குறைப்பதன் மூலம் நிலையான உட்கரு உருவாகக் காரணமாகிறது. இந்த உட்கருவைச் சுற்றி அடுக்கடுக்கான நீள் வட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.

untitled

எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றியுள்ள இடை வெளியில் அதிவேகத்தில் இயங்குவதால் அணுவின் பெரும்பாலான கனஅளவை ஆக்கிரமிக்கின்றன.
உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டின் ஆற்றலும் இணையாக உயருகிறது. உட்கருவிற்கு அருகாமையில் உள்ள வட்டப்பாதையில் இருந்து அவை 1,2,3,4 (அ) K,L,M,N எனப் பெயரிடப்படுகின்றன.

ஒரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n2’ (n என்பது வட்டப்பாதையின் எண் ணிக்கை) என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது. முதல் வட்டப்பாதை முழுவதுமாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்ட பின் இரண் டாவது வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் நிரம்பத் தொடங்குகின்றன.

இதுபோன்று இரண்டாவது வட்டப்பாதை நிரம்பிய பின்பு மூன்றாவது வட்டப்பாதை நிரம்பத் தொடங்குகிறது. ஆனால், மூன்றாவது வட்டப்பாதை முழுவதுமாக நிரம்பும் முன்னரே நான்காவது வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் நிரம்பத் தொடங்குகின்றன.
அணுவில் வெளிவட்டப் பாதையில் இடம் பெற்று உள்ள எலக்ட்ரான்களே வேதிப் பிணைப்புகளில் பங்கு வகிக்கின்றன. இந்த எலக்ட்ரான்கள் இணை திறன் எலக்ட்ரான்கள் எனப் படும். A அணுவின் வெளிக் கூட்டில் ஒர் எலக்ட்ரான் அதிகமாகவும், B அணுவின் வெளிக்கூட்டில் ஓர் எலக்ட்ரான் குறைவாகவும்
இருக்கும்போது A B-க்கு ஒரு எலக்ட்ரானை வழங்குவதன் மூலமும் B A-யிலிருந்து ஓர் எலக்ட்ரானை ஏற்றுக் கொள்வதன் மூலமாகவும், இவ்விரு அணுக்களும் நிலையான எண்ம எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன.

water_turbine

இவ்வாறு இணைய A மற்றும் B ஆகிய இரு அணுக்களும் எலக்ட்ரா னைக் கவரும் விசையில் வேறுபட வேண்டும். A அணு எலக்ட்ரான் மீது குறைந்த அளவே கவர்ச்சி விசையைப் பெற்றுள்ளதால் எலக்ட்ரானை இழக்கிறது. B அணு எலக்ட்ரான் மீது அதிக கவர்ச்சி விசையைப் பெற்றுள்ளதால் எலக்ட்ரானை ஏற்கிறது. இவ்விரு அயனிகளும் நிலை மின்னியல் கவர்ச்சி யால் இணைந்து அயனிச் சேர்மத்தை உருவாக்குகின்றன.

எலக்ட்ரானை வழங்கும் அணு நேர் அயனியாகவும், எலக்ட்ரானை ஏற்கும் அணு எதிர் அயனியாகவும் மாறும் இயல்புடையன.

புரோட்டான்களின் எண்ணிக்கை எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்போது நேர்மின்சுமை உடையதாகவும், எலக்ட்ரான்களின் எண்ணிக்கை புரோட்டான்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் போது எதிர்மின்சுமை உடையதாக வும் மாறுகிறது.

பொதுவில் எந்த ஓர் அணுவும் சம எண்ணிக்கையில் எதிர்மின் துகள்களையும், நேர்மின் துகள்களையும் கொண்டதாக உள்ளது. எனவே தான் நம்மை சூழ்ந்துள்ள பெரும் பாலான பொருட்கள் மின் நடுநிலைத்தன்மை உடையதாக இருக்கின்றன.
மின்கடத்தி ஒன்றை நீண்ட கம்பியாக்கி ஒரு பக்கம் கொஞ்சம் எலக்ட்ரானை உள்ளே செலுத்தினால் அதில் இருக்கும் அணுக்கள் உள்ளே வந்த எலக்ட்ரானை ஏற்றுக்கொள்ளும்.

wave_capture

அந்த அணுக்களில் உள்ள எலக்ட்ரான், குறித்த அந்த அணுக்களிலிருந்து விடுபட்டு பக்கத்தில் இருக்கும் அணுக்கள் மீது மோதும். இப்படி ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு மோதிக்கொண்டு ஓடுவதுதான் மின்சாரம். பொருட்கள் மின்னூட்டம் பெறும்போது எலக்ட்ரான்கள் மட்டுமே ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மாற்றப்படுகிறது.

ஆனால் புரோட்டான்களும், நியூட்ரான்களும் அணுவின் உட்கருவில் இறுகப் பிணைந்துள்ளன. அவை அணுவை விட்டு வெளியே வருவதில்லை. கிடைமட்ட குழாயின் ஒரு முனையை மேல்மட்ட நீர்தொட்டியுடன் இணைக்கும்போது குழாயில் நீர் பாய்கிறது. அதாவது, குழாயின் இரு முனைகளுக்கிடையே அழுத்த வேறுபாடு உருவாக்கப்படும்போது நீர் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குள் பாய்கிறது.
அதேபோல், ஒரு உலோகக் கடத்தியின் இரு முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு ஒன்று உருவாக்கப்பட்டால்தான் கடத்தியின் வழியே மின்னோட்டம் பாயும்.

காப்பர், அலுமினியம், இரும்பு மற்றும் தங்கம் போன்ற உலோகங்கள் தன் வழியே மின்சாரம் செல்ல அனுமதிப்பதனால், அவை மின் கடத்திகளாகும். மரம், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்கள் தன் வழியே மின்சாரம் செல்ல அனுமதிப் பதில்லை. அதனால் மின் கடத்தாப் பொருட்களாகும்.

எல்லாப் பொருட்களுமே ஒரே அளவாக மின்சாரத்தைக் கடத்துவதில்லை. மின்சாரம் சில பொருட்களில் தடையே இல்லாமல் வேகமாக ஓடும்; சிலவற்றில் ஓடவே ஓடாது; சிலவற்றில் மெதுவாக ஓடும்.

தங்கத்திற்கும், வெள்ளிக்கும் அடுத்த நிலையில் சிறந்த மின்கடத்தியாக செப்பு (Copper) செயல்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் (60% என்ற அளவில்) அலுமினியம் இருக்கிறது.

மிக உயரமான கட்டிடங் களை மின்னலிலிருந்து பாதுகாக்க உதவும் ஓர் எளிய சாதனம் ‘மின்னல் கடத்தி (இடிதாங்கி)’. இது கட்டிடத்தின் வழியே தரைக்குச் செல்லும் ஒரு நீண்ட தடித்த தாமிரத் தண்டினைக் கொண்டது. தண்டின் கீழ் முனையானது தரையின் அதிக ஆழத்தில் புதைக்கப் பட்டுள்ள தாமிரத் தட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
மேல் முனையில் எண் ணிக்கை மிக்க கூர்முனைகள் உடைய தாமிர ஊசிகள் இணைக்கப்பட்டு கட்டிடத்தின் உயரமான பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

புவி ஏராளமான மின்னூட்டங்களைப் பெற்ற ஒரு அணைக்கட்டு போன்றது. அதனோடு தொடர்பு கொள்ளும் பொருளுக்கேற்ப எலக்ட்ரான்களை அளிக்கவோ அல்லது ஏற்கவோ செய்யும் இயல்புடையது.

எதிர் மின்னூட்டம் பெற்ற மேகம் கட்டிடத்தின் மேல் செல்லும்போது கடத் தியின் கூர்முனைகளில் நேர் மின்னூட்டம் தூண்டப்படுகிறது. நேர்மின்னூட்டம் பெற்று உள்ள கூர்முனைகள் அருகில் உள்ள காற்று மூலக் கூறுகளைச் அயனியாக்கம் செய்கின்றன. இது மேகத்தில் உள்ள எதிர் மின்னூட்டத்தின் ஒரு பகுதியைச் சமன் செய்து மேகத்தின் மின்னழுத்தத்தைக் குறைக்கிறது.

42

கடத்தியால் கவரப்பட்ட எதிர் மின்னூட்டங்கள் தரையை நோக்கிப் பயணிக்கின்றன. இதன் மூலம் கட்டிடம் மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
‘காற்றாலை மின்நிலையங்களில்’ டர்பைன்கள் எனப்படும் பெரிய சுழலும் சக்கரங்கள் தண்டு ஒன்றின் மூலம் மின் இயற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

‘மைக்கேல் ஃபாரடே’யின் மின்காந்த விதிப்படி மின் இயற்றியில் கம்பிச் சுருள் காந்த முனைகளுக்கிடையே சுழலும் போது உருவாகும் மின்னோட்டமானது அதில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகிறது. ‘நீர் மின்நிலையங்களில்’ வேகமாகச் செல்லும் நீரைக் கொண்டு டர்பைன்கள் சுழற்றப்படுகின்றன.

‘ஆனல் மின் நிலையங்களில்’ படிம எரிபொருட்களான எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி எரிக்கப்பட்டு கிடைக்கும் வெப்ப ஆற்றலைத் தண்ணீரில் செலுத்தினால் நீராவி உருவாகிறது.

நீராவி மேலும் மேலும் சூடாகும்போது அதன் அழுத்த ஆற்றல் உயர்கிறது. உயர்ந்த அழுத்த ஆற்றல் மிக்க நீராவி சூழலிகளுக்குள் / டர்பைன்களின் வழியே செலுத்தப்படுகையில் அதனை சுழற்றும் தன்மையைப் பெறுகின்றது.

‘ஃபோட்டோ வோல் டாய்க் (photo voltaic)’ முறை யில் ஒளி மின் (Photo electric) விளைவைப் பயன்படுத்தி சூரிய ஒளி செலேனியம் என் னும் மூலகத்தின் மீது விழ வைக்கப்பட்டு அதிலிருந்து எலக்ட்ரான்கள் தூண்டப்பட்டு மேலெழும்புகின்றன.

‘அணுப்பிளப்பு’ முறையில் தொடர் அணுக்கருப் பிள வின்போது வெளியாகும் அனல் ஆற்றல் அங்குள்ள குளிர்விப்பான் நீரால் உள் வாங்கப்பட்டு வெப்பம் மூட்டப்படுகின்றது. இங்கு நீரும் ஏனையவையும் அதிக அழுத்தத்தில் (அதாவது சுமார் 175 Kg/Cm2 கடல் மட்டத்தின் காற்றழுத்தத்தைப்போல 175 மடங்கு) என்ற அளவில் இருக்கின்றது.

எனவே, சாதாரணமாக 100கு சென்டிகிரேடில் நீராவி யாக மாறும நீர் அதைவிட அதிகமான வெப்பநிலையிலும் நீராகவே இருக்கிறது. இந்த நீர் அணு உலைகளின் அருகில் உள்ள அனலாற்றல் பரிமாற்றிகளில் சுழற்சிக்கு வந்து சற்றுக் குறைவான அழுத்தத்தில் உள்ள நீரோடு அனலாற்றலைப் பரிமாறி பின் குளிர்ந்து மீண்டும் அணு உலையை அடைகிறது.

 

‘கடல் அலைகள் மூலம் நீரை மேலேற்றம் செய்தல்’ முறைகளில் ஒன்றாக, அலைகள் மோதும்போது சக்கரங்கள் அந்த ஆற்றலால் சுழற்றப்பட்டு உயரமான இடத்துக்குக் கடல் நீரை மேலேற்றம் செய்து அங்கிருந்து குழாய்கள் மூலம் மிக வேகமாக டர்பைன்கள் மீது பாய்ச்சப்பட்டு உருளைகள் சுழல வைக்கப்படுகிறது.

இரண்டாவது முறையில், கடலின் மேற்பரப்பில் கரையை நோக்கி வரும் அலை மற்றும் கீழ்ப்பரப்பில் கரைப் பகுதியிலிருந்து மீண்டும் கடலை நோக்கிச் செல்லும் அலை என இரண் டின் உதவியாலும் உருளைகள் சுழல விடப்படுகின்றன.
மூன்றாவது முறையில், டர்பைன்கள் ஒரு காற்று அறையுடன் இணைக்கப்பட்டு அடிப்பகுதி கடல் நீருக்குள் இருக்கும். அலைகள் கரையை நெருங்கும் போது கடல் நீர் இந்தக் காற்று அறைக்குள் புகுந்து அறையினுள் இருக்கும் காற்றின் அழுத்தத்தை அதிகப்படுத்தி உருளைகளை சுழலச் செய்யும். கடல் அலைகள் பின்வாங்கும்போது கடல் நீரும் கீழிறங்கிவிடும்.

நான்காம் முறையில், கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க ஆற்றலைக் கொண்டு கடற்பரப்பில் தடுப்பு சுவர்கள் (Impoundment walls) உருவாக்கி உயர்நீர் மற்றும் குறைநீர் மட்டம் (High Tide & Low Tide) இருக்கும்போது தானாகவே இரு சுவர்களுக்கும் இடையே கடல் நீர் நிரப்பப்படும். மற்றும் மாறுபடும் நீர் உயரம் மற்றும் குறைவு வித்தியாசம் வேகத்தில் பாய்ச்சப்பட்டும் உருளைகள் சுழல வைக்கப்படும்.

ஐந்தாம் முறையில், கடல் நீரின் மேல் மற்றும் கீழ் வெப்ப நிலை வேறுபாடு 250-ல் இருந்து 300 செல்சியஸ் வரை உள்ள பகுதிகளில் குறைந்த அளவு வெப்பத்திலேயே எளிதில் ஆவியாகக் கூடிய அம்மோனியா போன்ற திரவ வாயுக்கள் ஓர் அழுத்தியின் மூலமாகச் செலுத்தப்படும் போது கடல் நீரின் வெப்பம் திரவ நிலையில் இருக்கும் பொருளைச் சூடாக்கும்.

அதனால் திரவ நிலையில் இருந்து ஆவி நிலைக்குச் செல்லும் வாயு, அழுத்தம் மிக அதிகம் கொண்டதாக மாறும். அந்த ஆவி மிக வேகமாகச் செலுத்தப்பட்டு டர்பைன்களைச் சுழல வைக்கப்படுகின்றன. ஆவி நிலையில் இருக்கும் வாயு குளிர்ந்த நீரால் வெப்பம் தணியும் போது தனது பழைய திரவ நிலைக்கே மாறி ஏற்கனவே விவரித்ததைப் போல மீண்டும் சூடாகி மறுபடியும் டர்பைன்கள் இயக்கிக் கொண்டே இருக்கும்.

மின்கடத்தும் பொருளாக தங்கம் மற்றும் வெள்ளிக்கு அடுத்த இடத்தில் தான் தாமிரம் இருக்கிறது. அதனால், மின் உற்பத்தியில் டைனமோவிற்குள்ளாக மட்டுமாவது தங்கம் / வெள்ளி கம்பிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உற்பத்திக்குத் தேவைப்படும் திறனைக் குறைக்கலாம் அல்லது உலோக கம்பியின் கன அளவை கூட்டி உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது ஒரே சாதனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னாக்கிக் கருவிகளைப் பொருத்தலாம்.

மின்சாரத்தை மூடிய மின்சுற்றுகள் வழி கொண்டு செல்வது மின் இழப்பைத் தடுக்கும். சுழலும் எந்திரங்களில் சிறிய ரக விளக்குகள் மற்றும் எந்திரங்களை இயக்க போதுமான திறன் கொண்ட டைனமோ பொருத்தி இயக்க வைக்கலாம்.

tidal7

ஒரே மின்சுற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சாதனங்களைப் (ஒரே அளவிலான மின்தேவை கொண்டதாக) பொருத்தி பயன்படுத்தும்போது; ஒரே அளவிலான மின்சாரமே செலவிடப்படும்.

இன்றைய நாகரீக வாழ்க்கை முறையோடு மின்சாரம் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ‘உற்பத்திக்குத் திறன் இல்லை; வழியும் இல்லை’ என்று சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் என்னென்ன வாய்ப்புகள் என்று ஆராய்ந்து பார்ப்பதில் தான் நம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

– மு. நாகேந்திரபிரபு
மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்,
கருவடிக்குப்பம், புதுச்சேரி

பட்டா மாறுதல் – புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை – உயர்நீதிமன்றம்

0

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.

பதிவுத் துறையின் மூலமாகவே, நமது ‘பட்டா மாறுதல் மனு’ வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

sample-patta-chitta-extract-tnஅதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984.

ஆனால், நடைமுறை அப்ப டியா இருக்கிறது?   இல்லவே இல்லை!
நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, ‘பட்டா பெயர் மாறுதலுக்காக’ வி.ஏ.ஓ.,-விடம் போகிறோம். அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ ‘சல்லிக்காசு’ கூட கட்டணமில்லை.

வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ ‘சல்லிக்காசு’ கூட கட்டணமில்லை.

ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் ‘அளந்து’, நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான ‘பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை’ விரிக்கிறார்.

இந்தக் கொள்ளையை எதிர்த்து, சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து உள்ளார்.                     தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமும் இன்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், “நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!” என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

– அன்புமதி

அப்பாவிடம் இருந்து ஊக்கம் பெறுகிறேன்..

0

பொதுவாக இந்திய தொழில் முனைவோருக்கு, மகன்கள் பிறக்காமல் மகளோ அல்லது மகள்களோ மட்டும் பிறந்து விட்டால், எதிர்காலத்தில் இந்த தொழில்களை எல்லாம் யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி பிறந்து விடும். நம்முடைய நாட்டில் மகள் என்றால் இன்னொருவர் வீட்டுக்குப் போகிற பெண் என்ற நினைப்புதான் பெரும் பாலான பெற்றோருக்கு இருக்கிறது.

மகள் மட்டும் பிறந்துள்ள சில தொழில் குடும்பங்களில் மகளை வாரிசாக்கி, அவரை அதற்கேற்ப சிறிது சிறிதாக நிர்வாகத்துக்கு கொண்டு வருவதையும் காண முடிகிறது.

தமிழ்நாட்டிலும் இப்படி சில தொழில் குழுமங்களில் மகள்களின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மகனையோ, மகளையோ தங்கள் தொழிலுக்கு கொண்டு வந்து அவர்களை சிறந்த நிர்வாகிகளாக உரு வாக்குவது, இன்றைக்கு தொழில் குடும்பங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

அவர்கள் எனக்குத் தந்திருப்பது எல்லாம், என்னை நானே உணர்ந்து என் வழியில் செயல்படும் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை. அவர்கள் சாதனையைப் பார்த்து, நான் அச்சப்படுவது, மிரளுவது இல்லை; ஊக்கம் தான் பெறுகிறேன்” என்றார்

அதன் விளைவாக முதன் முதலாக சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப, நன்கொடை வாங்காத இந்த கல்லூரியில் இடம் பிடிக்க மாணவர்களிடையே ஆர்வம் அலைமோதுகிறது. எல்லா இடங்களுமே மதிப் பெண்கள், இட ஒதுக்கீடு முறையிலேயே நிரப்பப்படுகின்றன.தன்னுடைய பணி தொழில்கள் மூலம் பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல; சம்பாதித்த பணத்தைக் கொண்டு சமுதாயப் பணி களிலும் ஈடுபட வேண்டும் என்ற முனைப்புடனும் இருக்கிறார், பத்மபூஷன் விருது பெற்ற திரு. சிவ் நாடார். அந்த சவாலில் மிகப் பெரிய வெற்றி அடைந்து உள்ளார், திரு. சிவ் நாடார். ஆம், அவருடைய ஒட்டு மொத்த நம்பிக்கைக்கும் உரியவராக, அவருடைய தொழில் வாரிசாக உருவாகி வருகிறார், அவருடைய ஒரே மகள், திருமதி. ரோஷினி நாடார்.

சென்னையைத் தொடர்ந்து டெல்லியில் சிவ் நாடார் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டு உள்ளது. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தரும் நோக்கத்துடன் உத்தரபிரதேசத் தில் வித்யாகியான் பள்ளிகள் தொடங்கப் பட்டு உள்ளன.

4092512538_0aea0bb337_b
திருமதி ரோஷினி நாடார், தன் கணவர் திரு. சிக்கர் மல்ஹோத்ரா மற்றும் அம்மா, அப்பாவுடன். நடுவில் இருப்பவர் திரு.சர் ரிச்சர்ட் ஸ்டேக் (பிரிட்டிஷ் தூதரக அதிகாரி)

திரு. சிவ் நாடாரின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, சரியான மேலாளர் களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுக்கான இலக்கை தெளிவாகச் சொல்லி பணியில் அமர்த்தி, பொறுப்பை அவர்களிடமே ஒப்ப டைத்து விடுவது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றவில்லை என்றாலோ, அவரால் உரிய பயன் நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை என்றாலோ, அவரை தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்க மாட்டார். இந்த விஷயத் தில் அவரிடம் மென்மையான போக்கை எதிர்பார்க்க முடியாது.

இவருடைய முப்பத்தி ரெண்டு வயது மகள் திருமதி. ரோஷினி நாடார், ஊடக வியலில் ஆர்வம் அதிகம் உள்ளவர். இந்த ஆர்வம் அவரது அம்மா, திருமதி. கிரன் நாடாரிடம் இருந்து வந்திருக்கக் கூடும். திருமதி. கிரன் நாடார், விளம்பர நிறுவனத் தில் பணிபுரிந்தவர். திருமதி. ரோஷினி, அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வானொலி இயல், தொலைக்காட்சி இயல், திரைப்பட இயல் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்து பட்டம் பெற்றவர். கெல்லாக் மேலாண்மைப் பள்ளியில் தனது எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தவர்.

அதன் பிறகு ஸ்கைநியூஸ், யுகே மற்றும் சிஎன்என், அமெரிக்கா ஆகிய தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு படிப்படியாக எச்சிஎல் குழும நிர்வாகத்தை ஏற்று நடத்து வதற்கு ஏற்ப அவருடைய தந்தையாரால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எச்சிஎல் குழும நிறுவனங் களின் இயக்குநர்கள் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். எச்சிஎல் கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சமுதாயப் பணி களை நிறைவேற்ற தொடங் கப்பட்ட சிவ் நாடார் ஃபவுண்டேஷனின் அறங்காவலராகவும் (டிரஸ்டி) உள்ளார்.

இது பற்றி திருமதி. ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, கூறும்போது, ”ஒரு மாபெரும் நிறுவனத்தை என் அப்பா கட்டமைத்து உள்ளார். இப்போது என்னால் அவற்றை ஒரு பறவைப் பார்வைதான் பார்க்க முடிந்து இருக்கிறது. ஏற்கெனவே நிர்வாகத்தின் முன்னோடிகளாக இயங்கி வருபவர்களிடம் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு இருக்கி றேன். எங்கள் இயக்குநர் குழுவில் சிறந்த பொருளாதார பேராசிரியர்களுக்கும் இடம் அளித்து உள்ளோம். அவர்களிடம் இருந்து பேரியல் (மேக்ரோ) பொருளாதார அறிவைப் பெற்றுக் கொள்கிறேன்.

நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள எச்சிஎல் டெக்னாலஜிஸ், எச்சிஎல் இன் ஃபோசிஸ்டம் நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளில் நான் சிறப்பாக ஈடுபட இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே கருதுகிறேன். இப்போது நிர்வாகத்தைப் பொறுத்த வரை கற்றுக் கொள்ளும் மாணவி யாகத்தான் இருக்கிறேன்.

அப்பாவுக்கு கல்விப் பணியில் ஆர்வம் அதிகம். அதனால்தான் எஸ்எஸ்என் பொறி யியல் கல்லூரி, சிவ் நாடார் பல்கலைக் கழகம், வித்யாகியான் பள்ளிகள் என்று தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த பணிகளில் நானும் என்னுடைய பங்களிப்பை நல்கி வருகிறேன்.

குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்கு என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள வித்யாகியான் பள்ளி கள் தொடர்பாக நான் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்.

உத்தரப்பிரதேசத்தின் எழுபத்தைந்து மாவட்டங்களிலும் வித்யாகியான் கிளை பரப்பி வருகிறது. இதுவரை ஏறத்தாழ இரண்டு லட்சம் குழந்தைகள் வித்யாகியான் மூலம் பயன் பெற்றுள்ளனர். இன்னும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தலித் மற்றும் முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

எனக்கு மீடியா மிகவும் பிடிக்கும். என்னுடைய தொழில் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி அப்பாவுடன் கார சாரமாக விவாதிப்பேன். மீடியாத் தொழில் எனக்குப் பிடித்திருக்கிறது என்பேன். ஒரு தொழிலை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளாவிட்டால், மீடியா வில் நீ ஒரு ரூபர்ட் முர்டோக் போல வெற்றி பெற முடியாது.

எனவே முதலில் நிர்வாகத்தைக் கற்றுக் கொள் என்று வலியுறுத்துவார். நாளாக நாளாக எங்கள் நிறுவனங்களின் ஆலமரத் தன்மையைப் புரிந்து கொண்ட பிறகு எனக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி பற்றிய புரிதல் ஏற்பட்டது. அப்பா சொல் வதில் உள்ள ஆழமான பொருள் விளங்கியது.

என்னுடைய அப்பா என்னுடைய விருப் பங்களை மதித்து வழிநடத்துவார். கல்லூரி யில் என்னுடைய முதன்மைப் பாடத்தை வணிகவியலில் இருந்து மீடியாவுக்கு மாற்றிக் கொள்ள விரும்பியபோது தடை கூறாமல் ஊக்கப்படுத்தினார். என்னுடைய அப்பா வின் தாக்கம் என்னிடம் அதிகம் இருக்கும்.

அப்பாவை பெற்ற ஆச்சி இருக்கும் வரை, அவ்வப்போது என்னை சென்னைக்கு அனுப்பி வைத்து ஆச்சியுடன் சில நாட்கள் இருந்து விட்டு வரச் சொல்வார்.

என் அம்மாவைப் பொறுத்தவரை எனக்கு அவர் ஒரு ஒளிவீசும் தாரகை. அவருடைய ஆர்வம் பல முனைகளில் இருக்கும். என்னுடைய அப்பாவை காதலித்து மணந்து கொண்டவர். அப்பாவின் பெரிய பலம்.

கலைப்பொருட்கள் என்றால் அவருக்கு உயிர். நிறைய கலைப் பொருட்களை சேகரித்து வைத்து இருந்தார். அவருடைய கலை ஆர்வத்துக்காகவே டெல்லியில் கிரன் நாடார் கலை அருங்காட்சியகம் (கிரன் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்) தொடங்கி உள்ளோம். விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவார். இந்திய அளவில் பிரிட்ஜ் விளையாட்டில் புகழ் பெற்றவர்.

பெற்றோரின் இத்தனை பெரிய தொழில் பேரரசைக் குறித்து உங்களுக்கு என்ன உணர்வுகள் தோன்றுகின்றன, இனம்புரியாத அச்ச உணர்ச்சி ஏதேனும் தோன்றுமா என்று என் நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கும், மற்ற நலம் விரும்பிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது இதுதான் –

”அவர்கள் எனக்குத் தந்திருப்பது எல்லாம், என்னை நானே உணர்ந்து என் வழியில் செயல்படும் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை. அவர்கள் சாதனையைப் பார்த்து, நான் அச்சப்படுவது, மிரளுவது இல்லை; ஊக்கம் தான் பெறுகிறேன்” என்றார்.
– க. ஜெயகிருஷ்ணன்

எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது?

0

ங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விசயம் – எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதாகும். விவரம் தெரியாமல் கண்ட கண்ட திட்டங்களிலும் பங்குகளிலும் பணத்தைப் போட்டுவிட்டு அவதிப்படாமல் இருக்க நினைப்பவர்கள் இதை அவசியம் படித்தாக வேண்டும்.

விதிகள் எளிதானவை
எது, எதில் எல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அப்படியொன்றும் கடினமானதல்ல. நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனம் என்ன விதமான பொருட்களைத் தயாரிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதுவா.. அது என்appearance-innocent-faceன என்பது தெரியவில்லையே.. மிகவும் சிக்கலான தொழில் நுட்ப அடிப்படையிலானது என்று நினைக்கிறேன்.. இதுதான் உங்களது பதிலாக இருக்குமானால் நீங்கள் அந்த நிறுவனத்தின் பக்கமே செல்லாமல் இருப்பது நல்லது.

உங்களுக்குப் புரியாத, சிக்கல் நிறைந்த தயாரிப்புப் பொருளுடன் தொடர்பு உள்ள எந்த நிறுவனத்தின் பங்கையும் உங்கள் முதலீட்டுப் பட்டியலில் இருந்து விலக்கி வையுங்கள். நன்றாகத் தெரிந்த, புரிந்து கொள்ள முடிந்த தொழில்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.

பழைய கால உத்திகள் என்றாலும் அவற்றை இப்போதும் பயன்படுத்தலாம்.

சான்றாக,
என்று ஒரு முதுமொழி உண்டு. அது பங்குச் சந்தைக்கும் பொருத்தமானதுதான். விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். நன்கு விசாரியுங்கள். புரிந்து கொள்ளுங்கள்.

அள்ளிக் கொடுக்கிறார்களா?
எங்களிடம் முதலீடு செய்யுங்கள். .அதற்குக் கைமாறாக நாங்கள் உங்களுக்கு அளவற்ற பலன்களை அள்ளித் தருகிறோம் என்கிறார்களா? இந்த மாதிரியான நிறுவனங்களிடம் நீங்கள் அதிகப்படி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு தொழிலைச் செய்தால் அதில் இந்த அளவுக்கு இலாபம் கிடைக்கும். முதல் கொடுத்தவர்களுக்கு இவ்வளவு பங்கீடு கொடுக்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும். அதைக் காற்றில்விட்டு அவ்வளவு தருவோம், இவ்வளவு தருவோம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுவதற்குரிய சாத்தியங்கள் ஏராளம். எச்சரிக்கை தேவை.

மறைவான இடர்கள்
சில தொழில்கள் இப்போதுதான் புதி தாக அறிமுகமாகும். அவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் இடர்கள் என்னென்ன என்பதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுக்கொண்ட பின் இறங்கலாம் என்பதற்குள் வாய்ப்புகள் பறிபோய்விடும். ஆனால் இதற்காக அவசரப்பட்டு உங்களது கைப்பொருளை இழக்க வேண்டாம்.

உலக அளவில் பங்குச் சந்தை முதலீட்டு மன்னன் என்று சொல்லப்படுபவர் வாரன் பஃபெட். அவரே என்ன சொல்கிறார் தெரியுமா? எனக்குத் தெரிந்த, என்னால் புரிந்து கொள்ளக் கூடிய தொழில்களில் மட்டுமே முதலீடு செய்வேன். அவரே அப்படிச் சொல்லும்போது விவரம் புரியாத அப்பாவிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் பேராசை, அவசரம், முந்திக் கொண்டு சாதிக்கும் முனைப்பு ஆகியவற்றைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டுப் பங்குச் சந்தையில் இறங்குவதே நல்லது.

-சுதா தனபாலன்

பொறுப்பு உணர்ச்சியை உருவாக்கும் ஹோலக்ரசி

0

ந்த ஒரு நிர்வாக கட்டமைப்புக்கும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுவது -Hierarchy. இதனை தமிழில் தமிழறிஞர்கள், படிநிலை அமைப்பு என்பதாக மொழி பெயர்த்துள்ளனர். அதாவது ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கே தலைவர், மேலாண் இயக்குநர், செயல் இயக்குநர், பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் என்றெல்லாம் இருக்கும். இந்த வித நிர்வாக கட்டமைப்பே படிநிலை அமைப்பு என்பது.
இங்கே தமக்கு மேல் இருக்கும் ஒருவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்த நிலை அதிகாரி, எப்படிப்பட்ட திறமையும் அனுபவமும் உள்ளவராக இருந்தாலும் அவருடைய மேல் அதிகாரி சொல்வதே செல்லுபடி ஆகும்.
விதி விலக்காக சிலர், மேல் ஆதிக்கத்தை கை விட்டு கீழே உள்ளவர்களுடன் அனுசரித்து நடந்து தட்டிக் கொடுத்து அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டறிந்து செயல்படுவர். அப்படி செயல்படுபவர்களுக்கு அடுத்த நிலையில்       உள்ளவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்ல அளவில் கிட்டும்.

ஆனால் இந்த படிநிலை என்கிற எல்லைக் கோடுகளை அழித்து விட்டுப் பார்த்தால் என்ன? இந்த தடுப்புகளை உடைத்து பார்த்தால் என்ன? என்று சிலருக்கு சிந்தனை எழுந்தது. hierarchy நிர்வாக முறையில் உள்ள சில பலவீனங்களே காரணம்.

Holacracy1அவையாவன கீழ் நிலையில் உள்ளவர்கள் ஏனோதானோ வென்று பணி புரிவது, வேண்டா வெறுப்பாக வேலை செய்வது, புறம் பேசுவது, ஆக்கத்திறனை குறைத்துக் கொள்வது, கடமைக்கு என்று உற்சாகம் இல்லாமல் செய்வது உள்ளிட்டவை.
அதனால் எழுந்த மேலாண்மை சிந்தனையே Holocracy. இது ஆங்கிலத்திற்கே புதிய சொல். இதனைத் தமிழ் மொழியில் சொல்ல வேண்டுமானால் ஊழியர் பங்கேற்பு மேலாண்மை என்று கூறலாம். இதனுடைய பொருள் மற்றும் நடைமுறை பற்றிப் பார்ப்போம்.

அனைவரிடமும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம் மற்றும் நிர்வாகம். இந்த வித கட்டமைப்பில் மேல் உள்ளவர்கள் கீழ் உள்ளவர்கள் என்பதெல்லாம் கிடையாது.
அவரவருக்கு உரிய பங்கு பணியை அவரவர் வரையறுத்துக் கொண்டு பொறுப்புடன் பணியாற்றுவார்கள்.

ஹோலக்ரசி என்பது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, நியுசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களிலும் இலாபம் பார்க்காத தொண்டு நிறுவனங்களிலும் பின்பற்றப்படுவதாக விக்கிபீடியா கூறுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இயங்கி வரும் மார்னிங் ஸ்டார் – அப்படிப் பட்ட நிறுவனங்களில் முக்கியமானது.

தக்காளி உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்கிற இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு வரும் முனைந்து இணைந்து நிர்வாகத்தை மேற்கொள்கிறார்கள். 700 மில்லியன் டாலர்கள் வர்த்தகம் செய்கிற இந்த நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டு தொய்வில்லாமல் வளர்ச்சியை கண்டு வருகிறது.
இதில் முன்னோடி Zappos நிறுவனம் -மரபுரீதியான நிர்வாக முறையைக் காட்டிலும் ஹோலக்ரசி முறையை செயல்திறன் மிக்கதாக கருதி அதனைப் பின்பற்றி வருகிறது.

-மதுரகவி சீனிவாசன்

பணியாளர் நிர்வாகத்துக்கு என “எச் ஆர்” என்ற பெயரில் தனிப்பிரிவு உருவானது எப்படி?

0

ற்போது நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எச்ஆர் (HR) என்ற பதவியின் பெயர் முதன்மையாக பேசப்படுகின்றது. ஹியூமன்       ரிசோரஸ் என்பதன் சுருக்கப் பெயரான இந்த எச்ஆர் இந்த அளவுக்கு புகழ் பெற என்ன காரணம்?

ஒரு நிறுவனத்தின் நிதியை மேலாண்மை செய்வதற்கு நிதி மேலாளர் இருப்பதைப் போல, உற்பத்தியை மேலாண்மை செய்வதற்கு உற்பத்தி மேலாளர் எனப்படும் புரடக்ஷன் மேலாளர் இருப்பதைப் போல பணியாளர்களை மேலாண்மை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டு உள்ள பதவிதான் ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜர் (Human Resource Manager)இவருடைய பணிகள் என்ன? ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இவரால் என்ன என்ன முயற்சிகளைச் செய்ய முடியும்?
எச்ஆர் பிரிவு எப்படிச் செயல்படுகிறது? எச்ஆர்எம் என்பதை தமிழில் கூறும் போது மனிதவள மேலாளர் என்று கூறப்படுகிறது. இதை எல்லோருக்கும் எளிதில் புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் பணியாளர் மேலாளர் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். நிர்வாகத்துக்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பதால் பணியாளர் மேலாளருக்கு எங்கேயும் இன்றியமையாத இடம் தரப்பட்டு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர் மேலாளர்களை உருவாக்க எம்பிஏ படிப்புகளிலும் எச்ஆர் நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

எச்ஆர்களின் பணிகள் பற்றி ஃப்ரெய்ட் சிஸ்டம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தென்னிந்திய எச்ஆர் ஆக பணி புரியும் திரு. ம. கார்த்திக் இடம் நேர்காணல் கண்ட போது அவர் கூறிய அடிப்படைச் செய்திகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

”யாருக்காக இந்த எச்ஆர்? பணியாளர்களுக்காகவா? நிறுவனத்துக்காகவா? அது மனங்களை ஆராய்வதா? அல்லது மனிதர்களை ஆராய்வதா?எச்ஆர் என்பது உயரிய பதவியா? இயக்குநர் குழுவில் இவருக்கு இடம் உண்டா? தலைமை மேலாளர் அளவுக்கு இவருக்கு மதிப்பு உண்டா? எதனை அடித்தளமாகக் கொண்டு இவர் செயல்படுவார்? இன்றைய காலக் கட்டத்தில் எச்ஆரின் பங்கு என்ன? இவர்களுக்கான அதிகாரம் என்ன? இவர்களைக் கையாள்வது யார்? அல்லது நன்றாக செயல்படாத, நிறுவனத்துக்கு எதிராக செயல்படும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவியா இது?

இப்படிப்பட்ட கேள்விகள் ஒருபுறம் இருக்க பணியாளர்கள் மனதிலோ,  இவர் நம்மை நோட்டம் இட்டுக் கொண்டே இருப்பாரா? கிட்டத்தட்ட இவர் ஒரு காவல் துறை அதிகாரி போல செயல்படுவாரா? இவருடைய முக்கிய குறிக்கோள்கள் (அ) வேலைகள்தான் என்ன? தொழில் மற்றும் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் இவரின் பங்குதான் என்ன? என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.digital-disruption_human-resources
இன்னும் இது திடீரென்று தோன்றிய ஒரு பதவியா? இப்போதுதானே இது பற்றி அடிக்கடி பேசப்படுகின்றது. இதற்கு முன்னர் எச்ஆர்கள் பற்றி இந்த அளவுக்கு பேசப்படவில்லையே? ஒரு நிறுவனத்திற்கு எச்ஆர் தேவைதானா? என்று கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன. என்னிடம் பலராலும் இப்படி எச்ஆர் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பெரிய நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இடையே மற்றும் நகரப்புறங்களில் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டு இருக்கும் எச்ஆர் என்கின்ற இந்த இரண்டெழுத்து சொல் கொஞ்சம் இன்னும் பரவலாக அறியப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
அடிப்படையில் எச்ஆர் என்பவரும் அந்நிறுவனத்தின் ஒரு பணியாளர்தான். நிர்வாகத்துக்கு நெருக்கமாக இருக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகள் அமைக்கப்பட்டு  இருப்பதால் தான் மேனேஜ்மென்ட், பணியாளர்கள் இடையே முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

மனிதர்களின் மனங்களை ஆராயத் தெரிந்தவரே சிறந்த பணியாளர் மேலாளர் ஆக பணியாற்ற முடியும். அப்பொழுதுதான் பணியாளர்களின் சிக்கல்களை இவரால் உணர முடியும். தொழிலாளர்களுக்கும் பாதிப்பு இல்லாத, நிறுவனத்துக்கும் பாதிப்பு இல்லாத கட்டமைப்பை அவரால் உருவாக்க முடியும்.

நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு நாள்தோறும் அனைத்து பணியாளர்களிடமும் தொடர்பு கொள்ளும், பணிகள் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாததால், அந்தப் பணியை பணியாளர் மேலாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பணியாளர் மேலாண்மைப் பிரிவு.shutterstock_141454213_copy
இன்னும் சொல்லப் போனால் பணியாளர்களை மனநிறைவுடன் பணிபுரிய வைக்க உருவாக்கப்பட்ட ஒரு பதவியே எச்ஆர். தொழிலாளர்களின் நன்மைக்காகவும், அவர்களுக்கு பணியின்போது ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்காகவும், நல்ல முறையில் அவர்களை பணிபுரிய வைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவுமே எச்ஆர்  உருவாக்கப்பட்டது.

காலப்போக்கில் தொழிற்சாலைக்குத் தேவையான திறன்மிக்க ஆட்களைத் தேர்ந்து எடுத்து பணியில் அமர்த்துவதும் இவர்களுடைய பணி ஆனது.  சிறந்த பணியாளர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உரிய பயற்சி வழங்கி தயாரிப்பது எச்ஆர்  பணி என்றால், ஒத்துவராத,  ஏற்கனவே பணியில் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்களை நீக்குவதும் எச்ஆர்களின் பணி ஆனது. ஒரு பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு பல காரணங்கள் இருக்கும். நிறுவனம் இழப்பில் போகிறது என்னும் நெருக்கடியான நிலையில் ஆட்குறைப்பு செய்வது வேறு, ஒத்து வராத பணியாளரை நீக்குவது என்பது வேறு. இதனால் பணியாளர்கள் எச்ஆர்களிடம் இருந்து விலகி இருப்பார்கள் என்பதோடு அவர்கள் மீது இனம் புரியாத கசப்புணர்வும் உருவாகிறது.

எச்ஆர் தொழிலாளர்களுக்காகவே. அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது. ஆனால் நிறுவனத்தின் நலன் கருதி செயல்படாத எச்ஆரின் பங்கும் பொருள் அற்றதாகி விடும் என்பதையும் தொழிலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்ந்து எடுக்கப்பட்ட சிறந்த தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்வது என்பதும் பணியாளர் மேலாளர்களின் அடுத்த சவாலாக அமைந்தது.  தக்க வைத்துக் கொள்வது என்றால் அவர்களை மனநிறைவுடன் வைத்து இருக்க வேண்டும், அவர்களுக்கு திறம்பட வேலை செய்வதற்கு தேவையான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இதில் இருந்து உருவானதே Career growth, Employee Welfare program / Activities, Providing good working Tools, Setting up good working Environment போன்றவை எல்லாம். இவை என்ன சொல்கின்றன என்றால் பணியாளர்களுக்கு தொடர் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்க வேண்டும்; பணியாளர் நலன் சார்ந்த செயல்பாடுகள்/நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்; வேலைகளைச் செய்வதற்குத் தேவையான சிறந்த கருவிகள் வழங்கப்பட வேண்டும்; வேலை செய்யும் இடம் மகிழ்ச்சி ஊட்டுவதாக அமைக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் எச்ஆர்களின் பணிகளாகத்தான் இருக்கின்றன. தேர்ந்து எடுக்கப்பட்ட அல்லது ஏற்கனவே பணியில் இருக்கக்கூடிய சிறந்த தொழிலாளர்களுக்கு வேலைகளை திறன்பட செய்வதற்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுத்து பணித்திறனை மேம்படுத்துவதும் எச்ஆர்களின் பணியாக இருக்கிறது.

ஒரு பிரச்சினையை சாதாரண முறையில் அணுகுவதற்கும், அதனை பணியாளர் மேலாண்மை பார்வையில் அணுகுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. சான்றாக நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி அலுவல் தொடர்பாக சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். போக வர இரண்டிற்கும் பயண முன்பதிவு செய்து அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்கிறார். டெல்லி சென்று வேலையை முடித்த பிறகு சென்னை திரும்ப ஆயத்தம் ஆகிறார். டெல்லி விமான நிலையத்தில்தான் அவருடைய விமானம் ரத்தானது அவருக்கு தெரியவருகிறது.
அவருக்கு உடனடியாக திரும்புவதற்கு விமானமும் கிடைக்கவில்லை. உடனே அடுத்த நாளுக்கு பயண முன்பதிவு  செய்து விட்டு, தான் தங்கி இருந்த விடுதிக்கு சென்று விடுகிறார்.

இரண்டாம் முறை முன் பதிவு செய்த பயணச்சீட்டு, முதல் முறை பதிவு செய்ததை விட இரண்டு மடங்கு அதிகம். இதனுடன் மேலும் ஒரு நாள் ஓட்டல் மற்றும் சாப்பாடு செலவும் அதிகம் ஆகிறது.

சென்னை திரும்பியவுடன் கணக்குப் பிரிவில் பில்களைக் கொடுத்து செலவுத் தொகையைக் கோருகிறார். ஆனால் நிதி மேலாளரோ முதலில் பதிவு செய்த விமானக் கட்டணத்துக்குத் தான் அனுமதி உள்ளது. ஆகையால் பழைய கட்டணத்துக்கான பணத்தை மட்டுமே கொடுக்க முடியும் எனக் கூற, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, இதனை தனது மதிப்புக்கு இழுக்காகக் கருதி அந்த உயர் அதிகாரி தனது வேலையை விட்டுப் போய் விடுகிறார்.

இந்த இடத்தில் ஒரு எச்ஆர் இருந்திருந்தால், அவர் அந்த சூழ்நிலைகளை ஆராய்ந்திருப்பார். எதற்காக இப்படி நடந்தது, ஏன் செலவு அதிகமானது, அதனை எந்த விதத்தில் நிர்வாகத்துக்கு எடுத்து உரைப்பது, எப்படி பணிபுரிகிறவர்களின் மனம் கோணாமல் இதனை கையாள்வது, எதிர்காலத்தில் இது போன்று நிகழ்ந்தால் அதற்கான தீர்வை இப்பொழுதே வடிவமைப்பது என அனைத்து விதத்திலும் சிந்தித்து இதனை வேறு விதமாக கையாண்டு இருப்பார். ஒரு நல்ல அதிகாரியையும் நிறுவனம் இழந்து இருக்காது. ஆகையால்தான் இன்றைய காலக் கட்டங்களில் பணியாளர்கள் தொடர்பான அனைத்து செலவுகளும் எச்ஆர் மூலமாகவே கணக்குப் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தொடக்க காலங்களில் அலுவலக நிர்வாகம், நிதி, வணிக வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகள், பணியாளர் மேலாண்மை அனைத்தையும் ஒரு மேலாளரே பார்த்து வந்தார்.

பிறகு அது நிதி, நிர்வாகம் என இரண்டாகப் பிரிந்தது. பிறகு நிர்வாகத்தில் இருந்து பிரிந்ததே பிசினஸ் சப்போர்ட் எனப்படும் வணிக வளர்ச்சிப் பிரிவு. இப்படி மூன்று துறைகளாகப் பிரிந்த பிறகும் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்குமான உறவில் தேக்க நிலை இருந்து கொண்டே வந்தது. தொழிலாளர்கள் உடனான உறவை மேம்படுத்த, அதனை சீரிய முறையில் நிறுவனத்தின் வளர்ச்சியோடு கொண்டு செல்ல மனிதவளத்தில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்பட்டனர். இதனை உணர்ந்த நிறுவனங்கள் பர்சனல் மேனேஜ்மென்ட் என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினார்கள். பர்சனல் மேனேஜ் மென்டும் தேக்க நிலையை உருவாக்கவே எச்ஆர் கான் செப்ட் உருவானது.

தொழிலாளர்களுக்கான சம்பளம், அவர்களுக்கு ஆன சட்ட ரீதியான பயன்கள், ப்ராவிடன்ட் ஃபண்ட், ஈஎஸ்ஐ, போனஸ், கிராச்சு விட்டி, மருத்துவக் காப்பீடு போன்ற அனைத்து சலுகைகளும் நிதித் துறையில் இருந்து, எச்ஆருக்கு மாறியது.
நிறுவனத்தின் செலவுகளை கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது, நிறுவனத்துக்கு தேவையான அனைத்து நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பது என அனைத்தும் அலுவலக நிர்வாகம் ஆன அட்மினில் இருந்து எச்ஆருக்கு மாறியது.

ஆட்களை வேலைக்கு எடுப்பது, அவர்களுக்கான பயிற்சி கொடுப்பது, எத்தனை ஆட்கள் தேவை, என்ன தகுதியுடன் ஆன ஆட்கள் தேவை என்பதை மதிப்பிட்டு கணக்கிடுவது இவையெல்லாம் பிசினஸ் சப்போர்ட் துறையில் இருந்து எச்ஆருக்கு மாறியது.
தொழிலாளர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த, அவர்கள் மீது அக்கறை காட்ட, தொழிலாளர்களின் சிக்கல்களை தீர்க்க எச்ஆர் என்பவர் தேவைப்பட்டார்.
ஒரு வேலையை வெற்றிகரமாக முடிப்பது என்றால் அதில் தொழில்சார்ந்து, உள் கட்டமைப்பு சார்ந்து என பல இடர்ப்பாடுகள் உண்டாகும். இந்த இடத்தில் உள்கட்டமைப்பு என்பது கட்டிடங்கள் தொடர்பானது மட்டும் அல்ல. இது தொழிலாளர்களுக்குள் உள்ள உறவு, தொழிலாளர்கள்- நிர்வாகத்துக்கும் இடையே ஆன  உறவு, தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உள்ள உறவு, தொழிலாளர்கள்-மேற்பார்வையாளர்கள் எனப்படும் சூப்பர்வைசர்கள் இடையே உள்ள உறவு என்று அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். இன்னமும் சொல்லப் போனால் தொழில்-தொழிலாளர்கள்-வாடிக்கையாளர்கள் இடையே உள்ள உறவு எனவும் கூறலாம்.

இதில் ஏதேனும் ஒரு இடத்தில் குளறுபடி ஏற்படுமாயின் அது தொழிலைப் பாதிக்கும். தொழிலாளர்கள் மகிழ்ச்சியாகவும், மனநிறைவு உடனும் அவர்களுடைய வேலையை செய்து முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழிலாளர்களுக்கும் -நிறுவனத்துக்கும் இடையேயான உறவு வலுப்படும். தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தை விரும்பிப் பணிபுரியத் தொடங்குவார்கள்.

இது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இந்தப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றவே எச்ஆர்” என்றார், திரு. ம. கார்த்திக்.

– நேர்மன்

பனை மரம் சார்ந்த தொழில்கள்: மாறுதலாக சிந்திக்க வேண்டிய நேரம்!

0

னைமரத்தின் தொடக்கம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.
பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் பொராச
ஸ் ஃப்லாபெல்லிஃபர் – குடும்பம் : அகேசியே (Borassus flabellifer
(Family: Arecaceae) என்ற இனமே இக்கட்டுரையில் விவரிக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் பால்மிரா. டாடி பால்ம் (palmyrah, toddy palm) என்று வழங்கப்படும்.

நன்றாக வளர்ந்த பனைமரம் 10-30 மிட்டர் உயரம் வரை இருக்கும். பனை மரத்தின் தொடக்க வாழ்க்கை பனங்கொட்டை எனப் பொதுவாக அழைக்கப்படும் பனம் விதையிலிருந்து தொடங்கும். விதைகள் பனம்பழங்களில் தோன்றுபவை. மரத்திலிருந்து கனிந்த பனம் பழங்கள் நிலத்தில் விழுந்தபின் இவ்விதைகள் தானாகவே முளைக்கத் தொடங்கும். இவற்றை சேகரித்து நிலங்களின், குளங்களின், ஏரிகளின் ஓரங்களில் ஊன்றி வளர்க்கும் பழக்கமும் இருக்கிறது.

வடலி: பனை மிகவும் மெதுவாக வளரும் ஒரு மரம். குறைந்த வயதுடைய சிறிய பனைமரத்தை வடலி என்று அழைப்பார்கள். வடலி வளர்ந்து முற்றாக பயன் தர 15-20 ஆண்டுகள் வரை செல்லும்.
காயவைக்கப்பட்ட குருத்து ஓலைகளை ஈக்கிலிருந்து பிரித்தெடுத்து பின்னி பனம் ஓலைப் பெட்டிகள், பனங்கட்டிக் குட்டான்கள், நீற்றுப் பெட்டி, பாய்கள் போன்றவை செய்து விற்பனை செய்யப் படுகின்றன.

panaiபதநீர்
ஆண், பெண் இருவகையான மரங்களில் இருந்தும் அவற்றின் பூம்பாளைகளிலிருந்து பதநீர், கள் போன்ற பானங்கள் பெறப்படுகின்றன. ஆண் பனையிலிருந்து அரிபனை, வள்ளுபனை முறைகளிலும், பெண் பனையிலிருந்து தட்டுபனை, காய்வெட்டி முறைகளிலும் பாளைகள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு மென்மையாக தட்டப்படும். இப்படித் தட்டும்போது அவற்றின் திசுக்கள் சிதைபடும். இதனால் அவற்றிலிருந்து சாறு வெளியேறும். வெட்டப்பட்ட பாளைகளின் நுனியில் பானை போன்ற முட்டிகளைக் கட்டிவிடுவார்கள். இவற்றில் வெளியேறும் திரவம் சேகரிக்கப்படும்.
இத்திரவம் மெல்லிய வெள்ளை நிறமுடையது, இனிமையானது. இதுவே பதநீர் என அழைக்கப்படும் முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசி வைப்பார்கள். இது பதநீர் கள்ளாக நொதித்து மாறுவதை தடுக்கும்.

பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சி அதனிலிருந்து நீரை அகற்றி பனஞ்சீனி, கல்லக்காரம், பனங்கல்கண்டு, கருப்பட்டி போன்றவை பெறப்படுகின்றன. பனங்கட்டியில் 70% சுக்கிரோசு வெல்லம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
தற்போது பனந்தேன், பனம்பாணி என்பன பதநீரிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. பனை வெல்லம், சில்லுக் கருப்பட்டி, பனங்கற்கண்டு, சாக்லேட்டுகள், இஞ்சி மிட்டாய் என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கள்ளு
முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசாமல் விட்டால் பதநீரை காற்றிலுள்ள ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்கள் நொதிக்க வைத்து அதனை கள் ஆக மாற்றி விடுகின்றன. கள் 5-6 சதவீதம் எத்தில் ஆல்கஹாலைக் கொண்டிருக்கும்.

நுங்கு
பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இளம் காய்களுக்குள் இருக்கும் நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டு உள்ளது. 10415717_636664623093527_846997280382662049_nகாய் முதிர்ச்சி அடைந்து பனம் பழமாகவும் நுங்குப் பகுதி பனம் விதையாகவும் மாறும்.

பனம்பழம்
ஒவ்வொரு பனம்பழத்திலும் பொதுவாக பனம்விதைகள் மூன்று காணப்படும். சிலவேளை இரண்டு விதைகளுடனும் அல்லது ஒரு விதையுடனும் பனம் பழங்கள் காய்ப்பதுண்டு.
பனம்பழத்தின் தோல் கருமை நிறம் உடையதும் நார்த்தன்மை கொண்டது ஆகும். இதன் உள்ளே மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய மிகவும் நார்த்தன்மை கொண்ட பழக்கூழ் உள்ளது. பனம்பழத்தின் இந்நிறங்களுக்கு கரோட்டின், லைகோபீன் எனப்படும் நிறப் பொருள்கள் காரணம்.

பனங்கூழைப் பிழிந்து பனங்களி எடுப்பார்கள். இதில் வெல்லம் 14-16%, புரதம் 4% மற்றும் கரட்டின், உயிர்ச்சத்து A,  C, E என்பவை உள்ளன. பனங்களி உவர்ப்பு கலந்த இனிமையைக் கொண்டது.

பனங்களியிலிருந்து தயாரிக்கப்படும் பனங்காய்ப் பணியாரம் பலருக்கு விருப்பமான, சுவையான சிற்றுண்டி. பனம்பழத்திலிருந்து பனம்பாணி, பனம்ஜாம், போன்ற பொருட்களும் தற்போது தயாரிக்கப் படுகின்றன.

பனங்களியைப் பாயில் ஊற்றி, வெயிலில் காயவைத்து அதனிலிருந்து பனாட்டு என்னும் உணவுப் பொருளைப் பெறுவார்கள். பனாட்டை தேனில் தோய்த்து காயவைத்து பாணிப்பனாட்டு தயாரிக்கப்படுகின்றது. தற்போது பனம்குளிர்பானம் பனங்களியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. பனம் ஐஸ்கிரீம், பனம் பிஸ்கட்கள், சாக்லேட்கள், பழ பார்கள் என்பனவும் தற்போது செய்யப்படுகின்றன.

பனங் களியில் அதிகளவு பெக்டின் உள்ளது. இதனைப் பிரித்தெடுத்து ஐஸ்கிரீம், சூப் போன்ற உணவுப் பொருட்களை திக் ஆக்க (thickner)  பயன் படுத்தலாம்.

தவுண்                                                                                             பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் போதுdownload (1) அவற்றுடன் இணைப்பாக உள்ள             கொட்டைகளை பிளந்து பார்த்தால் இவற்றின் உள்ளே வெள்ளை நிறமான, மென்மையான விதையின் முளையத்தைக் கொண்ட பகுதி இருக்கும். இது தவுண் எனப்படும். இது மிகச் சுவையானது.

பனங்கிழங்கு 

பனம் விதைகள் சேகரிக்கப்பட்டு நிலத்தில் படைபடையாக அடுக்கப்பட்டு மண்ணால் மூடப்படும். இது பனம்பாத்தி எனப்படும். மூன்று, நாலு மாதங்களில் விதைகள் முளைத்து அவற்றிலிருந்து பனங்கிழங்குகள் தோன்றும். palm-beet
பனங்கிழங்கு பனைமரத்தின் வேர்ப்பகுதியல்ல. இது உண்மையில், முளைத்த விதையிலிருந்து உண்டான முதல் இலையின் இலை மடலாகும். இது பருத்து அதிகளவில் மாவுச்சத்தைக் (ஸ்டார்ச்) கொண்டிருக்கும். அத்துடன் அதிகளவில் நார்களைக் கொண்டவை.

ஒடியல்
முதிர்ந்த பனங்கிழங்கின் தோலை நீக்கியபின் அவற்றைப் பிளந்து வெய்யிலில் காயவைப்பார்கள். இது காய்ந்து கடினமாக மாறும். இது ஒடியல் எனப்படும். ஒடியலை அரைத்து பெறப்படும் மாவு ஒடியல் மாவு எனப்படும். ஒடியல் மாவில் 82% கார்போஹைட்ரேட், 3% புரதம், அத்துடன் கால்சியம், பொட்டாசியம் என்பன இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஒடியல் மாவை சிலசமயம் முருங்கை இலையுடன் சேர்த்து ஒடியல்புட்டு செய்வார்கள்; பல வகையான சைவ, மாமிச ஒடியல் கூழ்கள் தயாரிக்கப் படுகின்றன. ஒடியல் மாவை வேறு மாவு வகைகளுடன் சேர்த்து தோசை, இட்லி, இடியாப்பம் என்பனவும் செய்ய முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது.

புளுக்கொடியல்
பனங்கிழங்கை அவித்து காய வைத்தபின் அது புளுக்கொடியல் எனப்படும். இது ஒடியலிலும் பார்க்க வைரமானது. இதனை நேரடியாகவே சாப்பிடலாம் அல்லது புளுக்கொடியல் மாவாக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். புளுக்கொடியலை உரலில் இடித்து தேங்காய்ப்பூ, சர்க்கரையுடன் சேர்த்து பெறப்படும் துவையல் மிக ருசியானது. பனங்கிழங்கை சிறிய சில்லுகளாக வெட்டிக் காய வைத்து புளுக்கொடியல் சில்லுகள் செய்வர்.

பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித குலத்திற்கு உணவாகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் பயன்படுகின்றது. தேவையற்றது என்றோ, வீணானது என்றோ வீசி எறிவதற்கு பனை மரத்தில் ஒன்றுமேயில்லை.

பனை மரம் இவ்வளவு பயன்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இன்னும் இதன் பயன்கள் முழுமையாக பயன்படுத்தப் படவில்லை என்றே சொல்லலாம். பனைமரத்தை பொருளாதார ரீதியில், வர்த்தகத்திற்குரிய முறையில் வளப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராய வேண்டும்.

முதலாவதாக, பனை மரம் முற்றாக பயனைத்தர நீண்ட காலம் எடுக்கின்றது. தென்னை மரத்தைப் போல குறுகிய காலத்தில் பயனைத் தரக்கூடிய புதிய வகைகள் இன விருத்தி செய்யப்பட வேண்டும். இத்துடன் குள்ளமான பனை மரங்களை உருவாக்க முடியுமா என ஆராய வேண்டும்.

இரண்டாவதாக, தற்போது தென்னை, பேரீச்சை, எண்ணை மரம் போன்ற மரங்களை திசு வளர்ப்பு என்னும் முறையில் உருவாக்க வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இம்முறையில் இம்மரங்களின் நுனிப்பகுதிகளிலிருந்து மிகச்சிறிய துண்டுகள் எடுக்கப்பட்டு செயற்கையாக ஆய்வு கூடங்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் மூலம் ஒரு சிறிய துண்டிலிருந்து நூற்றுக் கணக்கான மரங்களை உரு வாக்கலாம். இதில் இன்னுமொரு நன்மை என்ன வெனில் இவ்வாறு தோற்று விக்கப்படும் மரங்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியானவையாகவும், ஒத்த குணாதிசியங்களை உடையதாகவும் இருக்கும். இத்தொழில் நுட்பமுறையை பாவித்து பனைமரங்களையும் நூற்றுக் கணக்கில் மிகவும் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆராய வேண்டும்.

மூன்றாவதாக, பனை மரத்தின் உற்பத்தி பொருட்களான நுங்கு, பனம்பழத்திலிருந்து பெறப்படும் உணவு, நீர்பானங்கள், பனை ஓலையிலிருந்து பெறப்படும் வெவ்வேறு வகையான கைப்பணிப் பொருட்கள் என்பனவற்றை புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மேலும் நவீனப்படுத்தி மிகவும் இலாபகரமான முறையில் உற்பத்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நான்காவதாக, பல காலம் தொட்டே பனையின் பல பகுதிகள் மருந்தாக பாவிக்கப்பட்டுள்ளன. ஆராய்வுகளின் படி பனை மரத்தில் இருந்து பெறப்படும் பல பொருட்களில் நுண்ணுயிர்க் கொல்லி ஆற்றல் உள்ளதென்றும், தோல் மற்றும் எலும்பு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்றும், இதயத்தின் தசையை வலுப்படுத்தும் என்றும் சிறுநீரக நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது. பதநீர், பனங்களி, ஒடியல் போன்றவற்றின் உணவுப் பயன்பாடுகள் முற்றாக ஆராய்ந்து மென்மேலும் அவற்றை பயன் உள்ளதாக மாற்றி விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.. அளித்தமைக்கு நன்றி உடையவர்களாக இருப்போம்.

– அரு. சிவபாலன், ஆஸ்திரேலியா
(பெற்று அனுப்பியவர் : எட்வர்ட்)

பங்குச் சந்தையில் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும் அந்தச் சிலர்!

0

நிதி, முதலீடு, பங்குச் சந்தை, வங்கித் துறை போன்றவற்றில் எச்என்ஐ என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். யார் இந்த எச்என்ஐ-கள்? எச்என்ஐ என்பதற்கு ஹை நெட் ஒர்த் இண்டிவிஜுவல்ஸ் (High net worth individuals) என்பது        விரிவாகும்.அதாவது இவர்கள் அதிக நிகரப் பெறுமானம் கொண்டவர்கள். இவர்களது சொத்துக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் கொடுத்துத் தீர்க்க வேண்டிய கடன்களின் அளவு குறைவாக இருக்கும்.

இத்தகையவர்களிடம் அதிக அளவு பணம் முதலீடு செய்யத்தக்க விதத்தில் கிடைக்கும்.

இத்தகையவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை அதிக ஆதாயம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். சிறிது காலத்திற்கு முன்பெல்லாம் இவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். தற்போது இந்தப் போக்கு மாறி வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதை இவர்கள் குறைத்துக் கொண்டு விட்டார்கள். சந்தையில் தங்கத்தின் விலை கண்டபடி ஏறி இறங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக இந்த வகை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் குறுகிய காலத் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். ஆனால் அண்மைக்கால முதலீட்டு விவரங்களை ஆராயும் போது இவர்களில் 32 விழுக்காட்டினர் இரண்டு ஆண்டு களுக்கும் அதிகமான காலத்திற்கான முதலீடுகளையே விரும்பித் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் முதலீடு செய்து அதிக ஆதாயம் பெற்று விடலாம் என்கிற எண்ணத்தோடு இவர்கள் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்து இருப்பார்கள். ஆனால் அம்மாதிரியான எதிர்பார்ப்பு தவறானது என்பதை அவர்கள் அனுபவத்தில் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆகவே தான் நீண்ட கால முதலீடுகளின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள். பங்குச் சந்தையில் நிலைத் தன்மை ஏற்படுவதற்கு இது வழி வகுக்கும். வங்கிகளைப் பொருத்தவரை இந்த எச்என்ஐ வகை வாடிக்கையாளர்களை இரத்தினக் கம்பளம் இட்டு வரவேற்பார்கள். ஏனெனில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை அணுகினாலே போதும்.. மிகப் பெரிய வைப்புத் தொகைகள், பரிமாற்றங்கள் சாத்தியமாகும்.

-சுதா தனபாலன்

வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன?

0

வென்சர் கேப்பிட்டல் (Venture Capital) என்பது புதுமையான வணிக திட்டம் வைத்திருக்கும், ஆனால் போதுமான அளவிற்கு முதலீடு இல்லாத தொழில் முனைவோர் குழுவிற்கு அந்த வணிக திட்டத்தை செயல்படுத்த உதவி செய்யும் ஒரு புற முதலீடு ஆகும்.

இந்த புதுமையான தொழில் திட்டம் சந்தையில் பெரிய வளர்ச்சி அடையும் என்று வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் கருதினால் இந்த குழுவிற்கு தேவையான முதலீட்டை கொடுத்து தொழில் தொடங்க உதவி செய்யும். தொழில் பெரியளவில் வளர்ந்தவுடன், தான் எதிர்பார்த்த தொகையை பெற்றுக் கொண்டு இந்த குழுவிலிருந்து வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் விலகி விடும்.

images

உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனங்களாகிய கூகுள், ஆப்பிள், சன் மைக்ரோ சிஸ்டம் போன்ற நிறுவனங்கள் புதுமையான தொழில் சிந்தனைகளாலும், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீட்டு உதவியினாலும் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன.  இந்தியாவிலும் இதுபோன்ற வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் 1980-களிலிருந்தே செயல்பட்டு வருகின்றன.

சென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் செயல்பாடு டாட்காம் (Dotcom) படையெடுப்பின் போது முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 2001-ம் ஆண்டில் டாட்காம் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததால் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்தன. 2004-ம் ஆண்டில் டாட்காம் மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததால், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் திரும்பவும் வளர்ச்சி அடையத் தொடங்கின.

இந்தியாவில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் அறக்கட்டளை (Trust) அமைப்பிலும், வெளிநாட்டு முதலீட்டு வடிவிலும், பங்கு சந்தையில் ஈடுபடும் நிறுவன வடிவிலும் இயங்குகின்றன.

fianance

இந்த வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீடு தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. சுபிக்ஷா போன்ற குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்று உள்ளன.

ஆனால் சுபிக்ஷா நிறுவனம் சந்தையில் போட்டியிட முடியாமல் மூடப்பட்டது. சுபிக்ஷா நிறுவனத்தை நடத்தியவர் அண்மையில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆகவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் பெருத்த நட்டம் அடைந்தது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றன. ஆனால் மேலை நாடுகளில் புதிய தொழில் சிந்தனை உள்ள ஆனால், பின்புலம் இல்லாத நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன.

இந்தியாவில் உள்ள பங்கு சந்தை மற்ற நாடுகளின் பங்கு சந்தையை விட அதிக இலாபம் தருவதால் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நம் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விரும்புகின்றன. சில வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பம் (Bio-Technology), கம்பி இல்லா தொழில் நுட்பம் (Wireless Technology), மருந்து தயாரித்தல் (Pharmaceuticals), சில்லரை வணிகம் ஆகியவற்றிலும் முதலீடு செய்கின்றன.

தமிழ்நாட்டில் நானூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரியில் இருந்து ஆண்டிற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொறியியல் வல்லுநர்களும், எம்.பி.ஏ.-க் களும் வெளிவருகின்றார்கள். இவர்களில் முப்பது விழுக்காட்டு மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு நம் நாட்டில் இருக்கிறது. மீதமுள்ள எழுபது விழுக்காட்டு மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் தொழிலதிபர்களாக மாறினால் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டும்.

unnamed

வெளிநாட்டிலுள்ள பணம் படைத்த தமிழர்கள் இங்க வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் அமைக்க முன் வந்தால், நம் மாணவச் செல்வங்கள் பயனடைய வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களும் இந்த சமூக பணியை செய்ய முன் வரவேண்டும்.

வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் ஜெனரல் பார்ட்னர்கள், வென்சர் பார்ட்னர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவர்கள் புதிய தொழில் திட்டங்கள் இருக்கின்ற குழுக்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். இதனை நெறி முறை ஒப்பந்தம் (Term sheet) என்று அழைக்கிறார்கள்.

இதில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு தேவையான இலாப விழுக்காடு, அவர்கள் தொழிலில் இணைந்து இருக்கும் வரை எந்தெந்த பொருட்களை விற்க கூடாது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட இலாபத்தை பெற்ற உடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வழி போன்ற நிபந்தனைகளை நெறிமுறை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடுவார்கள்.

வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களை பொறுத்த வரை முதலீடு செய்வதற்கு முன் அதன் தொழில் திட்டம் (Business plan) செயல்படுத்துகின்ற மேலாண்மை குழு, அவர்களின் திறமை மற்றும் நம்பகத்தன்மை, அவர்களின் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை ஆராய்வார்கள்.

அவர்களுக்கு இவை அனைத்திலும் மனநிறைவு இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முன் வருவார்கள். முதலீட்டுத் தொகையை மொத்தமாக கொடுக்கமாட்டார்கள். குழுவின் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக வழங்குவார்கள். அந்த குழு வெற்றிகரமாக சந்தையில் காலூன்றிய பிறகு அவர்கள் எதிர்பார்த்த இலாபத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையையும் (Success Fees) பெற்றுக் கொண்டு வெளியேறி விடுவார்கள்.

இப்போதெல்லாம் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள், வட மாநிலங்களில் தனிப்பயிற்சி நிலையங்கள் நடத்துவதற்குக்கூட முதலீட்டு உதவியை செய்கிறார்கள்.

சான்றாக, கேரியர் லான்ச்சர், மகேஷ் டூட்டோரியல்ஸ் போன்ற ஐஐஎம் (IIM) நுழைவு தேர்விற்கு தயார்படுத்தும் தனி பயிற்சி நிலையங்களில் சில வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீட்டு உதவி செய்து உள்ளன.

(தொடரும்)

– தினேஷ், எம்பிஏ.,

பங்குச் சந்தையில் நாள் வணிகம்

0

ரே நாளில் பங்குகளை வாங்கி-விற்று லாபம் சம்பாதிக்கும் முறைக்குப் பெயர்தான் டே-ட்ரேடிங். அதாவது, நாள் வணிகம். அன்றைய ட்ரேடிங் முடிவதற்குள், கையில் எந்த ஷேர்களும் இல்லாதவாறு வாங்கி –                             விற்றலை முடித்துவிட வேண்டும். அன்றாடம் பங்குகள் வாங்கி-விற்பவர்கள் இரண்டு வகையினர். ஒருவர் முதலீட்டு நிறுவனம் (மியூச்சுவல் ஃபண்ட்) ஒன்றின் சார்பாகப் பணி புரியும் முழு நேர ஊழியர். இன்னொருவர், தன் சொந்த முதலீட்டைச் செலுத்தி, தன் சொந்தத் தொழிலாகச் செய்து வருபவர்.
குறுகிய கால முதலீடு வகையைச் சேர்ந்ததுதான் டே-ட்ரேடிங்கும். ஒரு முழுச் சுற்று டே-ட்ரேடிங் முடிய மணிக்கணக்காக ஆகலாம்; நிமிடங்களில் முடிந்து விடலாம்; அல்லது சில நொடிகளுக்குள்ளேயே கூட முடிந்து விடலாம்.

எனவே டே-ட்ரேடிங் செய்பவர் ‘கம்ப்யூட்டரே கண்ணாயினார்’ என்று நொடிக்கு நொடி மாறும் விலை ஏற்ற – இறக்கங்களைக் கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
ஒரு பங்கின் விலை மாற்றத்தில் 0.125 பாயின்ட்டுகள் கூடவோ குறையவோ செய்வதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சந்தையின் பொதுவான நிலவரம் தெரியும். ஓர் இரவு அதிகபட்சமாகக் கை வசம் பங்குகளை வைத்திருப்பதைக் கூட இவர்கள் ரிஸ்க் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் தப்பித் தவறி விலை சரிந்தால், நஷ்டம் எக்கச்சக்கமாக இருக்கும்.

டே-ட்ரேடிங் எப்படி செயல்படுகிறது?

டே-ட்ரேடிங் பங்குகளின் விலை மாற்றத்தைக் கணித்து அன்றைய தினத்துக்கான வாங்கல் – விற்றல் பணியை மேற்கொள்கிறார்கள். பங்குகளின் விலை ஒரே நாளில் ஏறவோ இறங்கவோ எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சந்தையில் கிடைக்கும் புதிய தகவல்கள், ஊகங்கள் (அல்லது கிசுகிசுக்கள்), முதலீட்டாளர்களின் உணர்வுகளின் எதிர்பார்ப்புகள் – என்று இவை பல வகையானவை. முந்தைய தினம் இருந்த விலையிலிருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் கூட    டே-ட்ரேடர்கள் அன்றைய விலை ஏற்ற இறக்கங்களைக் கணித்துப் பயன் அடையலாம்.
சான்றாக, 11 மணி சுமாருக்கு பிரபல சானல் ஒன்றில் ஒரு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பேசப் போகிறார் என்று ட்ரேடருக்கு 9 மணிக்கே தெரிந்துவிடுகிறது. அந்த அதிகாரி சில நல்ல செய்திகளைச் சொல்லுவார் என்று ஊகித்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 300ஐ 9 ரூபாய் விலைக்கு 9 மணிக்கு வாங்கி விடுகிறார். நிறுவனத்தின் அதிகாரி பேசப் பேச, பங்கின் விலை பத்து ரூபாய்க்கு உயர்கிறது. ட்ரேடர் உடனடியாக அதை விற்று 300 ரூபாய் லாபம் சம்பாதித்து விடலாம்.

டே-ட்ரேடர்களுக்கு உதவும் இரண்டே உத்திகள்

செய்தி : உண்மையோ, ஊகமோ, மேலே சொன்ன உத்தி வாங்கவோ, விற்கவோ ஒரு முடிவுக்கு வர உடனடியாக உதவுகிறது. செய்தியில் எதிர்பாராத டிவிடெண்ட் அறிவிப்பு இருக்கலாம்; அல்லது பொருளாதாரக் கொள்கை மாற்றம் காரணமாக ஊகங்கள் இருக்கலாம்.

டெக்னிகல் அலசல் : சில மணி நேரங்களுக்கே பங்குகளைக் கையில் வைத்திருந்தாலும், நிறுவனத்தின் பொருளாதாரப் பின்னணிகளை அலசப் போதுமான நேரம் இருக்காது. அதனால் டெக்னிகலாகக் கிடைக்கும் தகவல்களை வைத்து – அதாவது விலை மாற்றங்கள் குறித்த சார்ட்டுகள் எதிர்கால விலை ஏற்றங்களைக் கோடி காட்டலாம். டே-ட்ரேடர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி, ஒரே நாளில் நிகழக்கூடிய மாற்றங்களை உணர்ந்து, பங்கை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம்.

டே-ட்ரேடிங்கில் என்ன ஆதாயம் கிடைக்கும்?

அதிக பட்ச ஆதாயத்தை ஒருவர் மனத்தில் வைத்துக் கொண்டுடே-ட்ரேடிங்கில் ஈடுபடுவாரானால், அதிகபட்ச ரிஸ்க்கையும் எடுக்க அவர் தயாராக இருக்க வேண்டும். அது நஷ்டமாகவும் இருக்கலாம்; எதிர்பார்த்த லாபத்தைத் தராமலும் போகலாம்.
சான்றாக, அன்றாடக் கணிப்பில், ஒரு பங்கின் விலை முதல் நாளைவிட மூன்று சதவிகிதம் கூடியிருக்கலாம். ஆனாலும்கூட, ஒரு டே-ட்ரேடர் சுமார் 10 சதவிகித லாபம், ஒரு சில மணியிலேயே கண்டு விட முடியும். அதற்காக நொடிக்கொரு தடவை மாறிவிடும் பங்கின் விலையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
‘ரிஸ்க்’ என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி போன்றது. ‘ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமோ?’ என்று ஒருவர் முடிவு செய்துவிட்டால், அவர் நஷ்டங்களைக் காணவும் தயாராக இருந்தாக வேண்டும்.

ஒரு டே-ட்ரேடர் விலை தொடர்ந்து கீழே சரியும் நிலவரத்தை கவனித்து, சாதகமான விலை மாற்றங்கள் ஏற்படும் போது மட்டுமே செயல்படலாம்.
சான்றாக, அரசியல் சூழ்நிலை காரணமாக, ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 சதவீதம் குறைந்து போய்விடுமானால், டே-ட்ரேடர் அந்தக் குறிப்பிட்ட 50 சதவீத நஷ்டத்தைத் தவிர்த்து விடுவார். ஏனென்றால் அவர் ஒரு நாளின் ஏற்ற – இறக்கத்தை மட்டுமே அனுசரித்துச் செயல்படுவார்.

அதிக ரிஸ்க் / அதிக நஷ்டம் :

டே-ட்ரேடிங்கில் கெட்ட வாய்ப்பாக, அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக நஷ்டம்தான் ஏற்படும். ஒரு சில மணிகளோ, ஒரு சில நிமிடங்களோ அலசி ஆராய எடுத்துக்கொள்ளும் டே-ட்ரேடர் அதிக ரிஸ்க் எடுக்கிறார். எனவே, டே-ட்ரேடர் அதிகபட்சமாகப் பண இழப்புக்கு ஆளாகக் கூடும். “டே-ட்ரேடிங் என்பது முதலீடு செய்வதல்ல; அதிகபட்சமாகச் சொல்வது என்றால் ஊகத்தின் அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபடுவது. அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் பணத்தை இழக்கவே செய்கிறார்கள்!” என்று அமெரிக்க ஆலோசகர் டேவிட் ஷெல்லன் பெர்கர் கூறியிருப்பதை நினைவு கூறலாம்.

சாதகமான ‘புல் ட்ரெண்டுகள்’ மறக்கப்பட்டுவிடும்

நீண்ட கால அடிப்படையில் மேலே ஏறும் பங்குகளை டே-ட்ரேடர் விட்டுவிடுவார். ஏனென்றால் அவருக்கு அன்றாட ஏற்ற – இறக்கம் மட்டும் தான் முக்கியம்.
சான்றாக, தொலைக் தொடர்புத் துறையில் இருக்கும் ஒரு நிறுவனம், முதல் சாட்டிலைட் ஒன்றை அமைக்கும்போது, ஜனவரியிலிருந்து ஏப்ரலுக்குள் பங்கின் விலை 50 சதவீதத்தைக் கூடுதலாக அடையும் வாய்ப்பு உண்டு. டே-ட்ரேடர் இது போன்ற விலை கூடும் ஆதாயங்களைப் பெறாமல் போய்விடுகிறார்.

செலவு எப்படி?

டே-ட்ரேடர் வழக்கமான ஷேர் புரோக்கர் நிறுவனத்துடன் அல்லது ‘ஆன்லைன்’ வழியாக தன் செயல்பாட்டை நடத்திக் கொண்டிருப்பார். அன்றாட கமிஷன் தொகையை அவர் கொடுக்க வேண்டும். எனவே, நஷ்டம் ஏதேனும் அன்றைக்கு ஏற்பட்டிருந்தால், அதுவும் சேர்ந்துவிடும்.

முடிவாக

இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லுதல் அவசியம். இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள், செபியின் விதிகளின்படி நிச்சயமாய் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாளன்று, நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வர்த்தகம் செய்ய நினைத்திருந்தால், 10000/- முதலிலேயே கட்ட வேண்டும். இது போன்ற பகுதி தொகை முகவர்களுக்கு (Broker) முகவர் வேறுபடும்.
டே-ட்ரேடிங் மேல் பார்வைக்குக் கவர்ச்சிகரமான, பளபளப்பானதாகத் தான் தெரியும். இது உடனடி செல்வத்துக்குக் கை கொடுக்கலாம். ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால், கடினமான பணி இது என்பதோடு நிறைய முதலீடு தேவை என்பதும் புரியும். எனவே, ரிஸ்க்கும், பலனும் எப்படி இருக்கின்றன என்று சீர்தூக்கிப் பார்த்தே டே-ட்ரேடர் செயல்படவேண்டும்.

-சாருகேசி கூறக்கேட்டு எழுதியவர்
வாதூலன்