வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன?

0
373

வென்சர் கேப்பிட்டல் (Venture Capital) என்பது புதுமையான வணிக திட்டம் வைத்திருக்கும், ஆனால் போதுமான அளவிற்கு முதலீடு இல்லாத தொழில் முனைவோர் குழுவிற்கு அந்த வணிக திட்டத்தை செயல்படுத்த உதவி செய்யும் ஒரு புற முதலீடு ஆகும்.

இந்த புதுமையான தொழில் திட்டம் சந்தையில் பெரிய வளர்ச்சி அடையும் என்று வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் கருதினால் இந்த குழுவிற்கு தேவையான முதலீட்டை கொடுத்து தொழில் தொடங்க உதவி செய்யும். தொழில் பெரியளவில் வளர்ந்தவுடன், தான் எதிர்பார்த்த தொகையை பெற்றுக் கொண்டு இந்த குழுவிலிருந்து வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் விலகி விடும்.

images

உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனங்களாகிய கூகுள், ஆப்பிள், சன் மைக்ரோ சிஸ்டம் போன்ற நிறுவனங்கள் புதுமையான தொழில் சிந்தனைகளாலும், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீட்டு உதவியினாலும் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன.  இந்தியாவிலும் இதுபோன்ற வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் 1980-களிலிருந்தே செயல்பட்டு வருகின்றன.

சென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் செயல்பாடு டாட்காம் (Dotcom) படையெடுப்பின் போது முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 2001-ம் ஆண்டில் டாட்காம் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததால் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்தன. 2004-ம் ஆண்டில் டாட்காம் மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததால், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் திரும்பவும் வளர்ச்சி அடையத் தொடங்கின.

இந்தியாவில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் அறக்கட்டளை (Trust) அமைப்பிலும், வெளிநாட்டு முதலீட்டு வடிவிலும், பங்கு சந்தையில் ஈடுபடும் நிறுவன வடிவிலும் இயங்குகின்றன.

fianance

இந்த வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீடு தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. சுபிக்ஷா போன்ற குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்று உள்ளன.

ஆனால் சுபிக்ஷா நிறுவனம் சந்தையில் போட்டியிட முடியாமல் மூடப்பட்டது. சுபிக்ஷா நிறுவனத்தை நடத்தியவர் அண்மையில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆகவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் பெருத்த நட்டம் அடைந்தது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றன. ஆனால் மேலை நாடுகளில் புதிய தொழில் சிந்தனை உள்ள ஆனால், பின்புலம் இல்லாத நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன.

இந்தியாவில் உள்ள பங்கு சந்தை மற்ற நாடுகளின் பங்கு சந்தையை விட அதிக இலாபம் தருவதால் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நம் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விரும்புகின்றன. சில வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பம் (Bio-Technology), கம்பி இல்லா தொழில் நுட்பம் (Wireless Technology), மருந்து தயாரித்தல் (Pharmaceuticals), சில்லரை வணிகம் ஆகியவற்றிலும் முதலீடு செய்கின்றன.

தமிழ்நாட்டில் நானூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரியில் இருந்து ஆண்டிற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொறியியல் வல்லுநர்களும், எம்.பி.ஏ.-க் களும் வெளிவருகின்றார்கள். இவர்களில் முப்பது விழுக்காட்டு மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு நம் நாட்டில் இருக்கிறது. மீதமுள்ள எழுபது விழுக்காட்டு மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் தொழிலதிபர்களாக மாறினால் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டும்.

unnamed

வெளிநாட்டிலுள்ள பணம் படைத்த தமிழர்கள் இங்க வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் அமைக்க முன் வந்தால், நம் மாணவச் செல்வங்கள் பயனடைய வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களும் இந்த சமூக பணியை செய்ய முன் வரவேண்டும்.

வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் ஜெனரல் பார்ட்னர்கள், வென்சர் பார்ட்னர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவர்கள் புதிய தொழில் திட்டங்கள் இருக்கின்ற குழுக்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். இதனை நெறி முறை ஒப்பந்தம் (Term sheet) என்று அழைக்கிறார்கள்.

இதில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு தேவையான இலாப விழுக்காடு, அவர்கள் தொழிலில் இணைந்து இருக்கும் வரை எந்தெந்த பொருட்களை விற்க கூடாது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட இலாபத்தை பெற்ற உடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வழி போன்ற நிபந்தனைகளை நெறிமுறை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடுவார்கள்.

வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களை பொறுத்த வரை முதலீடு செய்வதற்கு முன் அதன் தொழில் திட்டம் (Business plan) செயல்படுத்துகின்ற மேலாண்மை குழு, அவர்களின் திறமை மற்றும் நம்பகத்தன்மை, அவர்களின் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை ஆராய்வார்கள்.

அவர்களுக்கு இவை அனைத்திலும் மனநிறைவு இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முன் வருவார்கள். முதலீட்டுத் தொகையை மொத்தமாக கொடுக்கமாட்டார்கள். குழுவின் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக வழங்குவார்கள். அந்த குழு வெற்றிகரமாக சந்தையில் காலூன்றிய பிறகு அவர்கள் எதிர்பார்த்த இலாபத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையையும் (Success Fees) பெற்றுக் கொண்டு வெளியேறி விடுவார்கள்.

இப்போதெல்லாம் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள், வட மாநிலங்களில் தனிப்பயிற்சி நிலையங்கள் நடத்துவதற்குக்கூட முதலீட்டு உதவியை செய்கிறார்கள்.

சான்றாக, கேரியர் லான்ச்சர், மகேஷ் டூட்டோரியல்ஸ் போன்ற ஐஐஎம் (IIM) நுழைவு தேர்விற்கு தயார்படுத்தும் தனி பயிற்சி நிலையங்களில் சில வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீட்டு உதவி செய்து உள்ளன.

(தொடரும்)

– தினேஷ், எம்பிஏ.,