பங்குச் சந்தையில் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும் அந்தச் சிலர்!

0
323

நிதி, முதலீடு, பங்குச் சந்தை, வங்கித் துறை போன்றவற்றில் எச்என்ஐ என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். யார் இந்த எச்என்ஐ-கள்? எச்என்ஐ என்பதற்கு ஹை நெட் ஒர்த் இண்டிவிஜுவல்ஸ் (High net worth individuals) என்பது        விரிவாகும்.அதாவது இவர்கள் அதிக நிகரப் பெறுமானம் கொண்டவர்கள். இவர்களது சொத்துக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் கொடுத்துத் தீர்க்க வேண்டிய கடன்களின் அளவு குறைவாக இருக்கும்.

இத்தகையவர்களிடம் அதிக அளவு பணம் முதலீடு செய்யத்தக்க விதத்தில் கிடைக்கும்.

இத்தகையவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை அதிக ஆதாயம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். சிறிது காலத்திற்கு முன்பெல்லாம் இவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். தற்போது இந்தப் போக்கு மாறி வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதை இவர்கள் குறைத்துக் கொண்டு விட்டார்கள். சந்தையில் தங்கத்தின் விலை கண்டபடி ஏறி இறங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக இந்த வகை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் குறுகிய காலத் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். ஆனால் அண்மைக்கால முதலீட்டு விவரங்களை ஆராயும் போது இவர்களில் 32 விழுக்காட்டினர் இரண்டு ஆண்டு களுக்கும் அதிகமான காலத்திற்கான முதலீடுகளையே விரும்பித் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் முதலீடு செய்து அதிக ஆதாயம் பெற்று விடலாம் என்கிற எண்ணத்தோடு இவர்கள் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்து இருப்பார்கள். ஆனால் அம்மாதிரியான எதிர்பார்ப்பு தவறானது என்பதை அவர்கள் அனுபவத்தில் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆகவே தான் நீண்ட கால முதலீடுகளின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள். பங்குச் சந்தையில் நிலைத் தன்மை ஏற்படுவதற்கு இது வழி வகுக்கும். வங்கிகளைப் பொருத்தவரை இந்த எச்என்ஐ வகை வாடிக்கையாளர்களை இரத்தினக் கம்பளம் இட்டு வரவேற்பார்கள். ஏனெனில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை அணுகினாலே போதும்.. மிகப் பெரிய வைப்புத் தொகைகள், பரிமாற்றங்கள் சாத்தியமாகும்.

-சுதா தனபாலன்