பனைமரத்தின் தொடக்கம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.
பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் பொராச
ஸ் ஃப்லாபெல்லிஃபர் – குடும்பம் : அகேசியே (Borassus flabellifer
(Family: Arecaceae) என்ற இனமே இக்கட்டுரையில் விவரிக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் பால்மிரா. டாடி பால்ம் (palmyrah, toddy palm) என்று வழங்கப்படும்.
நன்றாக வளர்ந்த பனைமரம் 10-30 மிட்டர் உயரம் வரை இருக்கும். பனை மரத்தின் தொடக்க வாழ்க்கை பனங்கொட்டை எனப் பொதுவாக அழைக்கப்படும் பனம் விதையிலிருந்து தொடங்கும். விதைகள் பனம்பழங்களில் தோன்றுபவை. மரத்திலிருந்து கனிந்த பனம் பழங்கள் நிலத்தில் விழுந்தபின் இவ்விதைகள் தானாகவே முளைக்கத் தொடங்கும். இவற்றை சேகரித்து நிலங்களின், குளங்களின், ஏரிகளின் ஓரங்களில் ஊன்றி வளர்க்கும் பழக்கமும் இருக்கிறது.
வடலி: பனை மிகவும் மெதுவாக வளரும் ஒரு மரம். குறைந்த வயதுடைய சிறிய பனைமரத்தை வடலி என்று அழைப்பார்கள். வடலி வளர்ந்து முற்றாக பயன் தர 15-20 ஆண்டுகள் வரை செல்லும்.
காயவைக்கப்பட்ட குருத்து ஓலைகளை ஈக்கிலிருந்து பிரித்தெடுத்து பின்னி பனம் ஓலைப் பெட்டிகள், பனங்கட்டிக் குட்டான்கள், நீற்றுப் பெட்டி, பாய்கள் போன்றவை செய்து விற்பனை செய்யப் படுகின்றன.
பதநீர்
ஆண், பெண் இருவகையான மரங்களில் இருந்தும் அவற்றின் பூம்பாளைகளிலிருந்து பதநீர், கள் போன்ற பானங்கள் பெறப்படுகின்றன. ஆண் பனையிலிருந்து அரிபனை, வள்ளுபனை முறைகளிலும், பெண் பனையிலிருந்து தட்டுபனை, காய்வெட்டி முறைகளிலும் பாளைகள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு மென்மையாக தட்டப்படும். இப்படித் தட்டும்போது அவற்றின் திசுக்கள் சிதைபடும். இதனால் அவற்றிலிருந்து சாறு வெளியேறும். வெட்டப்பட்ட பாளைகளின் நுனியில் பானை போன்ற முட்டிகளைக் கட்டிவிடுவார்கள். இவற்றில் வெளியேறும் திரவம் சேகரிக்கப்படும்.
இத்திரவம் மெல்லிய வெள்ளை நிறமுடையது, இனிமையானது. இதுவே பதநீர் என அழைக்கப்படும் முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசி வைப்பார்கள். இது பதநீர் கள்ளாக நொதித்து மாறுவதை தடுக்கும்.
பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சி அதனிலிருந்து நீரை அகற்றி பனஞ்சீனி, கல்லக்காரம், பனங்கல்கண்டு, கருப்பட்டி போன்றவை பெறப்படுகின்றன. பனங்கட்டியில் 70% சுக்கிரோசு வெல்லம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
தற்போது பனந்தேன், பனம்பாணி என்பன பதநீரிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. பனை வெல்லம், சில்லுக் கருப்பட்டி, பனங்கற்கண்டு, சாக்லேட்டுகள், இஞ்சி மிட்டாய் என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கள்ளு
முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசாமல் விட்டால் பதநீரை காற்றிலுள்ள ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்கள் நொதிக்க வைத்து அதனை கள் ஆக மாற்றி விடுகின்றன. கள் 5-6 சதவீதம் எத்தில் ஆல்கஹாலைக் கொண்டிருக்கும்.
நுங்கு
பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இளம் காய்களுக்குள் இருக்கும் நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டு உள்ளது. காய் முதிர்ச்சி அடைந்து பனம் பழமாகவும் நுங்குப் பகுதி பனம் விதையாகவும் மாறும்.
பனம்பழம்
ஒவ்வொரு பனம்பழத்திலும் பொதுவாக பனம்விதைகள் மூன்று காணப்படும். சிலவேளை இரண்டு விதைகளுடனும் அல்லது ஒரு விதையுடனும் பனம் பழங்கள் காய்ப்பதுண்டு.
பனம்பழத்தின் தோல் கருமை நிறம் உடையதும் நார்த்தன்மை கொண்டது ஆகும். இதன் உள்ளே மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய மிகவும் நார்த்தன்மை கொண்ட பழக்கூழ் உள்ளது. பனம்பழத்தின் இந்நிறங்களுக்கு கரோட்டின், லைகோபீன் எனப்படும் நிறப் பொருள்கள் காரணம்.
பனங்கூழைப் பிழிந்து பனங்களி எடுப்பார்கள். இதில் வெல்லம் 14-16%, புரதம் 4% மற்றும் கரட்டின், உயிர்ச்சத்து A, C, E என்பவை உள்ளன. பனங்களி உவர்ப்பு கலந்த இனிமையைக் கொண்டது.
பனங்களியிலிருந்து தயாரிக்கப்படும் பனங்காய்ப் பணியாரம் பலருக்கு விருப்பமான, சுவையான சிற்றுண்டி. பனம்பழத்திலிருந்து பனம்பாணி, பனம்ஜாம், போன்ற பொருட்களும் தற்போது தயாரிக்கப் படுகின்றன.
பனங்களியைப் பாயில் ஊற்றி, வெயிலில் காயவைத்து அதனிலிருந்து பனாட்டு என்னும் உணவுப் பொருளைப் பெறுவார்கள். பனாட்டை தேனில் தோய்த்து காயவைத்து பாணிப்பனாட்டு தயாரிக்கப்படுகின்றது. தற்போது பனம்குளிர்பானம் பனங்களியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. பனம் ஐஸ்கிரீம், பனம் பிஸ்கட்கள், சாக்லேட்கள், பழ பார்கள் என்பனவும் தற்போது செய்யப்படுகின்றன.
பனங் களியில் அதிகளவு பெக்டின் உள்ளது. இதனைப் பிரித்தெடுத்து ஐஸ்கிரீம், சூப் போன்ற உணவுப் பொருட்களை திக் ஆக்க (thickner) பயன் படுத்தலாம்.
தவுண் பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் போது அவற்றுடன் இணைப்பாக உள்ள கொட்டைகளை பிளந்து பார்த்தால் இவற்றின் உள்ளே வெள்ளை நிறமான, மென்மையான விதையின் முளையத்தைக் கொண்ட பகுதி இருக்கும். இது தவுண் எனப்படும். இது மிகச் சுவையானது.
பனங்கிழங்கு
பனம் விதைகள் சேகரிக்கப்பட்டு நிலத்தில் படைபடையாக அடுக்கப்பட்டு மண்ணால் மூடப்படும். இது பனம்பாத்தி எனப்படும். மூன்று, நாலு மாதங்களில் விதைகள் முளைத்து அவற்றிலிருந்து பனங்கிழங்குகள் தோன்றும்.
பனங்கிழங்கு பனைமரத்தின் வேர்ப்பகுதியல்ல. இது உண்மையில், முளைத்த விதையிலிருந்து உண்டான முதல் இலையின் இலை மடலாகும். இது பருத்து அதிகளவில் மாவுச்சத்தைக் (ஸ்டார்ச்) கொண்டிருக்கும். அத்துடன் அதிகளவில் நார்களைக் கொண்டவை.
ஒடியல்
முதிர்ந்த பனங்கிழங்கின் தோலை நீக்கியபின் அவற்றைப் பிளந்து வெய்யிலில் காயவைப்பார்கள். இது காய்ந்து கடினமாக மாறும். இது ஒடியல் எனப்படும். ஒடியலை அரைத்து பெறப்படும் மாவு ஒடியல் மாவு எனப்படும். ஒடியல் மாவில் 82% கார்போஹைட்ரேட், 3% புரதம், அத்துடன் கால்சியம், பொட்டாசியம் என்பன இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஒடியல் மாவை சிலசமயம் முருங்கை இலையுடன் சேர்த்து ஒடியல்புட்டு செய்வார்கள்; பல வகையான சைவ, மாமிச ஒடியல் கூழ்கள் தயாரிக்கப் படுகின்றன. ஒடியல் மாவை வேறு மாவு வகைகளுடன் சேர்த்து தோசை, இட்லி, இடியாப்பம் என்பனவும் செய்ய முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது.
புளுக்கொடியல்
பனங்கிழங்கை அவித்து காய வைத்தபின் அது புளுக்கொடியல் எனப்படும். இது ஒடியலிலும் பார்க்க வைரமானது. இதனை நேரடியாகவே சாப்பிடலாம் அல்லது புளுக்கொடியல் மாவாக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். புளுக்கொடியலை உரலில் இடித்து தேங்காய்ப்பூ, சர்க்கரையுடன் சேர்த்து பெறப்படும் துவையல் மிக ருசியானது. பனங்கிழங்கை சிறிய சில்லுகளாக வெட்டிக் காய வைத்து புளுக்கொடியல் சில்லுகள் செய்வர்.
பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித குலத்திற்கு உணவாகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் பயன்படுகின்றது. தேவையற்றது என்றோ, வீணானது என்றோ வீசி எறிவதற்கு பனை மரத்தில் ஒன்றுமேயில்லை.
பனை மரம் இவ்வளவு பயன்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இன்னும் இதன் பயன்கள் முழுமையாக பயன்படுத்தப் படவில்லை என்றே சொல்லலாம். பனைமரத்தை பொருளாதார ரீதியில், வர்த்தகத்திற்குரிய முறையில் வளப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராய வேண்டும்.
முதலாவதாக, பனை மரம் முற்றாக பயனைத்தர நீண்ட காலம் எடுக்கின்றது. தென்னை மரத்தைப் போல குறுகிய காலத்தில் பயனைத் தரக்கூடிய புதிய வகைகள் இன விருத்தி செய்யப்பட வேண்டும். இத்துடன் குள்ளமான பனை மரங்களை உருவாக்க முடியுமா என ஆராய வேண்டும்.
இரண்டாவதாக, தற்போது தென்னை, பேரீச்சை, எண்ணை மரம் போன்ற மரங்களை திசு வளர்ப்பு என்னும் முறையில் உருவாக்க வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இம்முறையில் இம்மரங்களின் நுனிப்பகுதிகளிலிருந்து மிகச்சிறிய துண்டுகள் எடுக்கப்பட்டு செயற்கையாக ஆய்வு கூடங்களில் வளர்க்கப்படுகின்றன.
இதன் மூலம் ஒரு சிறிய துண்டிலிருந்து நூற்றுக் கணக்கான மரங்களை உரு வாக்கலாம். இதில் இன்னுமொரு நன்மை என்ன வெனில் இவ்வாறு தோற்று விக்கப்படும் மரங்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியானவையாகவும், ஒத்த குணாதிசியங்களை உடையதாகவும் இருக்கும். இத்தொழில் நுட்பமுறையை பாவித்து பனைமரங்களையும் நூற்றுக் கணக்கில் மிகவும் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆராய வேண்டும்.
மூன்றாவதாக, பனை மரத்தின் உற்பத்தி பொருட்களான நுங்கு, பனம்பழத்திலிருந்து பெறப்படும் உணவு, நீர்பானங்கள், பனை ஓலையிலிருந்து பெறப்படும் வெவ்வேறு வகையான கைப்பணிப் பொருட்கள் என்பனவற்றை புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மேலும் நவீனப்படுத்தி மிகவும் இலாபகரமான முறையில் உற்பத்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நான்காவதாக, பல காலம் தொட்டே பனையின் பல பகுதிகள் மருந்தாக பாவிக்கப்பட்டுள்ளன. ஆராய்வுகளின் படி பனை மரத்தில் இருந்து பெறப்படும் பல பொருட்களில் நுண்ணுயிர்க் கொல்லி ஆற்றல் உள்ளதென்றும், தோல் மற்றும் எலும்பு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்றும், இதயத்தின் தசையை வலுப்படுத்தும் என்றும் சிறுநீரக நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது. பதநீர், பனங்களி, ஒடியல் போன்றவற்றின் உணவுப் பயன்பாடுகள் முற்றாக ஆராய்ந்து மென்மேலும் அவற்றை பயன் உள்ளதாக மாற்றி விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.. அளித்தமைக்கு நன்றி உடையவர்களாக இருப்போம்.
– அரு. சிவபாலன், ஆஸ்திரேலியா
(பெற்று அனுப்பியவர் : எட்வர்ட்)