பங்குச் சந்தையில் நாள் வணிகம்

ரே நாளில் பங்குகளை வாங்கி-விற்று லாபம் சம்பாதிக்கும் முறைக்குப் பெயர்தான் டே-ட்ரேடிங். அதாவது, நாள் வணிகம். அன்றைய ட்ரேடிங் முடிவதற்குள், கையில் எந்த ஷேர்களும் இல்லாதவாறு வாங்கி –                             விற்றலை முடித்துவிட வேண்டும். அன்றாடம் பங்குகள் வாங்கி-விற்பவர்கள் இரண்டு வகையினர். ஒருவர் முதலீட்டு நிறுவனம் (மியூச்சுவல் ஃபண்ட்) ஒன்றின் சார்பாகப் பணி புரியும் முழு நேர ஊழியர். இன்னொருவர், தன் சொந்த முதலீட்டைச் செலுத்தி, தன் சொந்தத் தொழிலாகச் செய்து வருபவர்.
குறுகிய கால முதலீடு வகையைச் சேர்ந்ததுதான் டே-ட்ரேடிங்கும். ஒரு முழுச் சுற்று டே-ட்ரேடிங் முடிய மணிக்கணக்காக ஆகலாம்; நிமிடங்களில் முடிந்து விடலாம்; அல்லது சில நொடிகளுக்குள்ளேயே கூட முடிந்து விடலாம்.

எனவே டே-ட்ரேடிங் செய்பவர் ‘கம்ப்யூட்டரே கண்ணாயினார்’ என்று நொடிக்கு நொடி மாறும் விலை ஏற்ற – இறக்கங்களைக் கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
ஒரு பங்கின் விலை மாற்றத்தில் 0.125 பாயின்ட்டுகள் கூடவோ குறையவோ செய்வதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சந்தையின் பொதுவான நிலவரம் தெரியும். ஓர் இரவு அதிகபட்சமாகக் கை வசம் பங்குகளை வைத்திருப்பதைக் கூட இவர்கள் ரிஸ்க் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் தப்பித் தவறி விலை சரிந்தால், நஷ்டம் எக்கச்சக்கமாக இருக்கும்.

1டே-ட்ரேடிங் எப்படி செயல்படுகிறது?

டே-ட்ரேடிங் பங்குகளின் விலை மாற்றத்தைக் கணித்து அன்றைய தினத்துக்கான வாங்கல் – விற்றல் பணியை மேற்கொள்கிறார்கள். பங்குகளின் விலை ஒரே நாளில் ஏறவோ இறங்கவோ எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சந்தையில் கிடைக்கும் புதிய தகவல்கள், ஊகங்கள் (அல்லது கிசுகிசுக்கள்), முதலீட்டாளர்களின் உணர்வுகளின் எதிர்பார்ப்புகள் – என்று இவை பல வகையானவை. முந்தைய தினம் இருந்த விலையிலிருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் கூட    டே-ட்ரேடர்கள் அன்றைய விலை ஏற்ற இறக்கங்களைக் கணித்துப் பயன் அடையலாம்.
சான்றாக, 11 மணி சுமாருக்கு பிரபல சானல் ஒன்றில் ஒரு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பேசப் போகிறார் என்று ட்ரேடருக்கு 9 மணிக்கே தெரிந்துவிடுகிறது. அந்த அதிகாரி சில நல்ல செய்திகளைச் சொல்லுவார் என்று ஊகித்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 300ஐ 9 ரூபாய் விலைக்கு 9 மணிக்கு வாங்கி விடுகிறார். நிறுவனத்தின் அதிகாரி பேசப் பேச, பங்கின் விலை பத்து ரூபாய்க்கு உயர்கிறது. ட்ரேடர் உடனடியாக அதை விற்று 300 ரூபாய் லாபம் சம்பாதித்து விடலாம்.

2டே-ட்ரேடர்களுக்கு உதவும் இரண்டே உத்திகள்

செய்தி : உண்மையோ, ஊகமோ, மேலே சொன்ன உத்தி வாங்கவோ, விற்கவோ ஒரு முடிவுக்கு வர உடனடியாக உதவுகிறது. செய்தியில் எதிர்பாராத டிவிடெண்ட் அறிவிப்பு இருக்கலாம்; அல்லது பொருளாதாரக் கொள்கை மாற்றம் காரணமாக ஊகங்கள் இருக்கலாம்.

டெக்னிகல் அலசல் : சில மணி நேரங்களுக்கே பங்குகளைக் கையில் வைத்திருந்தாலும், நிறுவனத்தின் பொருளாதாரப் பின்னணிகளை அலசப் போதுமான நேரம் இருக்காது. அதனால் டெக்னிகலாகக் கிடைக்கும் தகவல்களை வைத்து – அதாவது விலை மாற்றங்கள் குறித்த சார்ட்டுகள் எதிர்கால விலை ஏற்றங்களைக் கோடி காட்டலாம். டே-ட்ரேடர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி, ஒரே நாளில் நிகழக்கூடிய மாற்றங்களை உணர்ந்து, பங்கை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம்.

3டே-ட்ரேடிங்கில் என்ன ஆதாயம் கிடைக்கும்?

அதிக பட்ச ஆதாயத்தை ஒருவர் மனத்தில் வைத்துக் கொண்டுடே-ட்ரேடிங்கில் ஈடுபடுவாரானால், அதிகபட்ச ரிஸ்க்கையும் எடுக்க அவர் தயாராக இருக்க வேண்டும். அது நஷ்டமாகவும் இருக்கலாம்; எதிர்பார்த்த லாபத்தைத் தராமலும் போகலாம்.
சான்றாக, அன்றாடக் கணிப்பில், ஒரு பங்கின் விலை முதல் நாளைவிட மூன்று சதவிகிதம் கூடியிருக்கலாம். ஆனாலும்கூட, ஒரு டே-ட்ரேடர் சுமார் 10 சதவிகித லாபம், ஒரு சில மணியிலேயே கண்டு விட முடியும். அதற்காக நொடிக்கொரு தடவை மாறிவிடும் பங்கின் விலையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
‘ரிஸ்க்’ என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி போன்றது. ‘ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமோ?’ என்று ஒருவர் முடிவு செய்துவிட்டால், அவர் நஷ்டங்களைக் காணவும் தயாராக இருந்தாக வேண்டும்.

ஒரு டே-ட்ரேடர் விலை தொடர்ந்து கீழே சரியும் நிலவரத்தை கவனித்து, சாதகமான விலை மாற்றங்கள் ஏற்படும் போது மட்டுமே செயல்படலாம்.
சான்றாக, அரசியல் சூழ்நிலை காரணமாக, ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 சதவீதம் குறைந்து போய்விடுமானால், டே-ட்ரேடர் அந்தக் குறிப்பிட்ட 50 சதவீத நஷ்டத்தைத் தவிர்த்து விடுவார். ஏனென்றால் அவர் ஒரு நாளின் ஏற்ற – இறக்கத்தை மட்டுமே அனுசரித்துச் செயல்படுவார்.

4அதிக ரிஸ்க் / அதிக நஷ்டம் :

டே-ட்ரேடிங்கில் கெட்ட வாய்ப்பாக, அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக நஷ்டம்தான் ஏற்படும். ஒரு சில மணிகளோ, ஒரு சில நிமிடங்களோ அலசி ஆராய எடுத்துக்கொள்ளும் டே-ட்ரேடர் அதிக ரிஸ்க் எடுக்கிறார். எனவே, டே-ட்ரேடர் அதிகபட்சமாகப் பண இழப்புக்கு ஆளாகக் கூடும். “டே-ட்ரேடிங் என்பது முதலீடு செய்வதல்ல; அதிகபட்சமாகச் சொல்வது என்றால் ஊகத்தின் அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபடுவது. அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் பணத்தை இழக்கவே செய்கிறார்கள்!” என்று அமெரிக்க ஆலோசகர் டேவிட் ஷெல்லன் பெர்கர் கூறியிருப்பதை நினைவு கூறலாம்.

5சாதகமான ‘புல் ட்ரெண்டுகள்’ மறக்கப்பட்டுவிடும்

நீண்ட கால அடிப்படையில் மேலே ஏறும் பங்குகளை டே-ட்ரேடர் விட்டுவிடுவார். ஏனென்றால் அவருக்கு அன்றாட ஏற்ற – இறக்கம் மட்டும் தான் முக்கியம்.
சான்றாக, தொலைக் தொடர்புத் துறையில் இருக்கும் ஒரு நிறுவனம், முதல் சாட்டிலைட் ஒன்றை அமைக்கும்போது, ஜனவரியிலிருந்து ஏப்ரலுக்குள் பங்கின் விலை 50 சதவீதத்தைக் கூடுதலாக அடையும் வாய்ப்பு உண்டு. டே-ட்ரேடர் இது போன்ற விலை கூடும் ஆதாயங்களைப் பெறாமல் போய்விடுகிறார்.

6செலவு எப்படி?

டே-ட்ரேடர் வழக்கமான ஷேர் புரோக்கர் நிறுவனத்துடன் அல்லது ‘ஆன்லைன்’ வழியாக தன் செயல்பாட்டை நடத்திக் கொண்டிருப்பார். அன்றாட கமிஷன் தொகையை அவர் கொடுக்க வேண்டும். எனவே, நஷ்டம் ஏதேனும் அன்றைக்கு ஏற்பட்டிருந்தால், அதுவும் சேர்ந்துவிடும்.

7முடிவாக

இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லுதல் அவசியம். இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள், செபியின் விதிகளின்படி நிச்சயமாய் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாளன்று, நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வர்த்தகம் செய்ய நினைத்திருந்தால், 10000/- முதலிலேயே கட்ட வேண்டும். இது போன்ற பகுதி தொகை முகவர்களுக்கு (Broker) முகவர் வேறுபடும்.
டே-ட்ரேடிங் மேல் பார்வைக்குக் கவர்ச்சிகரமான, பளபளப்பானதாகத் தான் தெரியும். இது உடனடி செல்வத்துக்குக் கை கொடுக்கலாம். ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால், கடினமான பணி இது என்பதோடு நிறைய முதலீடு தேவை என்பதும் புரியும். எனவே, ரிஸ்க்கும், பலனும் எப்படி இருக்கின்றன என்று சீர்தூக்கிப் பார்த்தே டே-ட்ரேடர் செயல்படவேண்டும்.

-சாருகேசி கூறக்கேட்டு எழுதியவர்
வாதூலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here