சுற்றுலாத் தொழிலில் இணையம் ஏற்படுத்திய மாற்றங்கள்

திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா

யண ஏற்பாடு மற்றும் சுற்றுலாத் தொழில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் தொழில்களில் ஒன்றாகும். சில நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கு சுற்றுலாத் தொழிலையே நம்பி இருக்கும் நிலையும் உள்ளது. மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை வசூலித்து, சுற்றுலா அழைத்துச் செல்லும், சிறிய அளவில் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் முதல், பன்னாட்டு அளவில் பயண மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தரும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன.

 திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா
திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா

கண்டிப்பாக வரிசையில் நின்றுதான் தொடர்வண்டி பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டி இருந்த நிலை இன்றைக்கு அடியோடு மாறி விட்டது. அதே போல விமான பயணச் சீட்டுகளும், இருந்த இடத்தில் இருந்தே இணையம் வாயிலாக பதிவு செய்ய முடிகிறது. நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகளையும் இணையம் வாயிலாகவே பெற முடிகிறது.

இணையம் வந்த பிறகு எல்லா தொழில்களிலும் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைப் போலவே, சுற்றுலாத் தொழிலிலும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. உலகின் எந்த மூலைக்கு செல்வதற்கும் ஆன பயணச் சீட்டுகளையும், தங்கும் விடுதிகளையும் எங்கிருந்தும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆகும் செலவினங்ளையும் முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ள முடிகிறது.

தாங்களாகவே பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் என்றால், சுற்றுலா நிறுவனங்கள் வாயிலாக ஏற்பாடுகளைச் செய்து கொள்பவர்கள் மறுபக்கம். இவ்வாறு சுற்றுலா ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்களின் தேவை அண் மைக் காலமாக பெருகி வருகிறது. ஏற்பாடுகள் செய்து தருவதை ஒரு அனுபவமுள்ள சுற்றுலா நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டு நாம் எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் சென்று விட்டு வரலாம் என்று பலரும் கருதுவதே இதற்குக் காரணம்.

சுற்றுலா சேவை நிறுவனங்களுக்கு, இணையத்தின் வருகை மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. அவர்களின் பணியையும் எளிமையாக்கி உள்ளது. வெளிப்படைத் தன்மை அதிகரித்து உள்ளது. இணையம் சுற்றுலாத் தொழிலுக்கு அறிமுகமான காலத் தொடக்கத்திலேயே இணையத் தைப் பயன்படுத்தத் தொடங்கிய சுற்றுலா நிறுவனங்களில் ஒன்று மேக்மைடிரிப் (MakeMyTrip).

ஆன்லைன் பயண ஏற்பாட்டுச் சேவை நிறுவனங்களில் அதிக அளவில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ள நிறுவனம். இதன் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஆக இருப்பவர்,திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா. ஆன்லைன் வழி பயண ஏற்பாட்டுத் தொழில் பற்றி இவர் கூறிய போது, ”இந்த தொழில் துறையில் இன்று நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம். இதை ஒரு தனியார் சந்தை ஆய்வு நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மகிழ்ச்சிக்காக ஊர் சுற்றுபவர்களின் வேலையை எளிதாக்கித் தருவது தான் எங்கள் பணி என்று சொல்லலாம். மேலும் எல்லா தரப்பினருக்கும் இந்த சேவையை கொண்டு செல்வதும் எங்கள் இலக்கு ஆகும்.

இதற்கு நாங்கள் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வது போக, வேறு பல முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.  குறிப்பாக எங்கள் இணைய தளத்தில் உள்ள நீங்களே உங்கள் விடுமுறை சுற்றுலாவை திட்டமிடுங்கள் என்ற டூ இட் யுவர் செல்ஃப் வசதி தங்களுக்கேற்ற பயணங்களை தாங்களே சிறப்பாக திட்டமிட உதவுகிறது. இதன் வாயிலாக வண்டிகளின் முன்பதிவு கிடைக்கும் நாட்கள், விடுதிகளில் அறைகள் கிடைக்கும் நாட்கள், கட்டண விவரங்கள் போன்றவற்றை முன்பே அறிந்து கொண்டு திட்டமிடலாம். வாடிக்கையாளர்களின் செலவழிக்கும் வசதிக்கு ஏற்ப, பின்னரும் சில சுற்றுலா சார்ந்த செயல்பாடுகளைச் சேர்த்துக் கொள்ளவும் இந்த வசதி பயன் உள்ளதாக இருக்கிறது.

இதே போல நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் இன்னொரு வசதி, வழி அறிவோம் என்ற பொருள் உள்ள ரூட் பிளானர். இதைப் பயன்படுத்தி, பயணம் செய்ய இருக்கும் இரண்டு முனைகளுக்கு இடையே உள்ள வெவ்வேறு வகையான வாய்ப்புகளை அறியலாம். விமானம் முதல் பேருந்து வரையில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் கட்டணங்களுடன் அறிந்து கொள்ளலாம்.

எங்கள் சேவைகளை சந்தைப்படுத்த பல்வேறு உத்திகளையும் செயல்படுத்துகிறோம். நாங்கள் அளிக்கும் தள்ளுபடித் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில் எங்களின் சேவைகளை ஏற்கெனவே பயன்படுத்தி உள்ள வாடிக்கையாளர்களை எங்களின் இணைய தளத்தை பார்வையிட உள்ள வாய்ப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்துகிறோம். மொபைல்களிலும் எங்கள் சேவைகளைப் பார்வையிட்டு பதிவு செய்யலாம். இதற்கான சிறந்த ஆப் எங்களால் வழங்கப்படுகிறது. இது இணையத்தை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களையும் இணையப் பயன்பாடு நோக்கி வரச் செய்கிறது.

இந்த துறையில் வளர்ச்சிக்கு உகந்த தரமான போட்டி நிலவுகிறது. இது எதிர்காலத்தில் இணையம் வழி டிராவல் வணிகத்தை இன்னும் மேல் எடுத்துச் செல்லும். ஆன்லைன் இணையம் வழி டிராவல் வணிகத்தைப் பொறுத்த வரை மிதக்கும் ஐஸ் கட்டியின் மேல் முனையை மட்டுமே தொட்டு இருக்கிறோம். இன்னும் அடையப்படாத பெரிய பகுதி உள்ளே மறைந்து இருக்கிறது.

மொத்தத்தில் சுமார் ஐம்பது முதல் அறுபது மில்லியன் வாடிக்கையாளர்கள் இணையம் வழி வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் டிராவல் வணிகத்தைப் பொறுத்தவரை இது சுமார் பதினைந்து மில்லியன் இருக்கக் கூடும். மீதி உள்ள முப்பத்தைந்து முதல் நாற்பது மில்லியன் பேர்கள் ஆன்லைன் பயன்பாடு பற்றித் தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிராவல் தொடர்பான பயன்பாட்டுக்காக இன்னும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இதை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். இணையம் வழியாக விடுதிகளுக்கு முன்பதிவு செய்பவர்கள் சுமார் பத்து விழுக்காட்டினர்தான். இங்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

தற்போது மக்களிடம் சுற்றுலா ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவர்களின் சுற்றுலாக் கனவை நிறைவேற்ற துணை நிற்பதுதான் எங்கள் பணி. இதற்கான சேவைகளை வழங்குபவர் என்ற நிலையில் இருந்து எங்களை நாங்களே பயண வல்லுநர்கள், அதாவது டிராவல் எக்ஸ்பர்ட் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.
வாடிக்கையாளர்கள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களிடம் பயண திட்டங்கள் குவியல் குவியலாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த திட்டங்களில் ஈடுபாடு இல்லை.

தங்களுக்கெனவே ஒரு திட்டத்தை அமைத்துக் கொள்ள விரும்பு கிறார்கள். அவர்களுக்கு ஏற்ப நாங்கள் செயல்பட வேண்டி இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு சுற்றுலா என்ற மனப்பான்மையும் மாறி வருகிறது. நீண்ட நாட்கள் செல்லும் ஒரு சுற்றுலாவை விட குறுகிய நாட்களில் அமையும் சுற்றுலாக்களை விரும்புகிறார்கள்.

ஒரு சுற்றுலா செல்வது என்றால் பல நாட்கள் திட்டமிட்டு, காத்திருந்து செல்வது பழங்காலமாகி விட்டது. இப்போது உடனுக்குடன் திட்டமிட்டு நினைத்த நேரத்தில் சுற்றுலா செல்ல விரும்பும் காலம் ஆகி விட்டது. இதற்கு ஏற்ப நாங்களும் வேகமாக செயல்பட வேண்டி இருக்கிறது.

எங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல பலவிதமான விளம்பர முயற்சிகளை மேற்கொள்கிறோம். தொலைக்காட்சி ஊடகம், பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் செய்தியைக் கொண்டு சேர்க்கிறது. வெளிப்புற விளம்பர போர்டுகளை அமைத்து மக்களிடம் நினைவூட்டுகிறோம். சில வானொலிகளிலும் எங்கள் விளம்பரங்கள் ஒலிக்கின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களையும் பெரிய அளவில் பயன்படுத்துகிறோம்.

சுமார் இருபத்தைந்து முதல் நாற்பது வயதுள்ள வாடிக்கையாளர்களையே நாங்கள் குறி வைக்கிறோம். அதே போல ஐந்து லட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் குறி வைக்கிறோம்.

நாடு முழுவதும் எங்களுக்கு பதினெட்டு அலுவலகங்கள் இருக்கின்றன. நாற்பது தனி உரிமை (ஃப்ரான்சைசி) பெற்ற நிறுவனங்களும் உள்ளன. நாங்கள் தற்போது நேரடி வணிகத்தை விட ஆன்லைன் வணிகத்திலேயே கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
ஆன்லைன் எனும்போது, ஒரு வாடிக்கையாளர் எல்லா போட்டி நிறுவனங்களின் கட்டண விவரங்கள், அவை தரும் சேவைகள், பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் அளித்துள்ள கருத்துரைகள் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறார்கள். எனவே கட்டண நிர்ணயம் தொடர்பாக நாங்கள் எச்சரிக்கையாகவே செயல்படுகிறோம். சேவை சரியில்லை என்றால் மறு நாளே இணையத்தில் ஏற்றி விடுகிறார்கள்.

உள்நாட்டைச் சேர்ந்த சுமார் முப்பதாயிரம் விடுதிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சம் விடுதிகளும் எங்கள் தொடர்பில் உள்ளன. மகிழ்வு உலாவை உண்மையிலே மகிழ்ச்சியாக்குவதில் விடுதிகளுக்கு பெரும்பங்கு உண்டு.

மொபைல்கள் தரும் இணைய வசதிகள் ஒரு புதுப் பாதையை அமைத்து வருகின்றன. எங்களிடம் தொடர்பு கொள்பவர்களில் சுமார் நாற்பது விழுக்காட்டினர் மொபைல் ஆப் வழியாகவே தொடர்பு கொள்கிறார்கள். எனவே மாநில மொழிகளிலும் ஆப்களை உருவாக்கி வருகிறோம். அவர்கள் தங்கள் தாய்மொழி வாயிலாகவே எங்கள் ஆப்களை பயன்படுத்தும் காலம் விரைவிலேயே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து எங்களின் சிந்தனையும், செயல்பாடுகளும் பயணங்களை எளிமையாக்குவது தொடர்பாகவும், வாடிக்கையாளர்களுக்கு சுமையற்ற மகிழ்ச்சியை கூடுதல் ஆக்கும் வாய்ப்புகளை தேடுவதுமாகவே இருக்கிறது.” என்றார்.

– நேர்மன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here