பின்னலாடைத் தொழிலை கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்குக் கொண்டுவந்தவர்

திருப்பூர் பின்னல் ஆடைத் தொழிலின் தந்தை யார்? நண்பர் தி.மு.இராசேந்திரன் உடன் பேசிக்கொண்டு இருந்தேன். பின்னல் ஆடைத் தொழில் திருப்பூருக்கு அறிமுகமானது எப்படி என்ற கேள்வி எழுந்தது.          பின்னல் ஆடை துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) முன்னாள் தலைவர் அகில் ரத்தினசாமி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன்.

profile
சங்கத்தின் வெள்ளி விழா மலரை அனுப்பி வைத்தார். அதில் இடம் பெற்றுள்ள கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன். கிறித்து பிறப்பதற்கு முன்பே நெசவுத் தொழிலுக்குக் கருவிகள் அறிமுகம் ஆகிவிட்டன. 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் பெருமளவில் கையினாலேயே ஆடைகளைப் பின்னிக்கொண்டு இருந்தனர்.

1589 ஆம் ஆண்டு வில்லியம் லீ என்ற ஆங்கிலேயர் பின்னல் ஆடைப் பொறியைக் கண்டுபிடித்தார். 1853 ஆம் ஆண்டு மாத்யூ டவுன்சென்ட் என்பவர் லாட்ச் (Latch) என்ற ஊசியைக் கண்டுபிடித்தார். இதைப் பயன்படுத்தி மிக எளிய பின்னல் கருவிகள் வந்தன.அவரது கண்டுபிடிப்பை, பக்ஸ்டார்ப் என்ற பிரெஞ்சுக்காரரும், லாம்ப் என்ற அமெரிக்கரும் காப்புரிமை பெற்று பெருமளவில் வணிகம் செய்யத் தொடங்கினார்கள்.
1867 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த உலகக் கண்காட்சி ஒன்றில், பக்ஸ்டார்ப், லாம்ப் ஆகியோர் வடிவமைத்த கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹென்றி எட்வர்டு டிபைட் அண்டு சீ என்ற நிறுவனத்தின் நிறுவனர், இக்கருவிக்கு ஐரோப்பாவில் காப்புரிமை பெற்று, பெருமளவில் விற்பனை செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லியம் காட்டன் என்பவர் பல்முனை என்கின்ற (Multihead) என்ற கருவி மூலம் செங்குத்து ஊசியும், ஊசி பிணைப்பு தகடு செலுத்தும் முறையையும் அறிமுகப் படுத்தினார்.

இதே நூற்றாண்டில் பீட்டர் ஸ்காட் தொழிற்கூடத்தில், முதன் முதலாக பெண்களுக்கான பின்னல் ஆடைகள் தைக்கப் பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தொழில் வேகமாக வளரத் தொடங்கியது. அங்கிகள், கோட்டுகள், விளையாட்டு ஆடைகள் பின்னல் இழைகளால் பின்னப்பட்டன.

1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பின்னல் கருவிகள் இறக்குமதியாகின. கொல்கத்தாவில் கிட்டர்பூர் என்ற இடத்தில் சிறிய அளவில் பின்னல் ஆடை நெசவு நடைபெற்றது.

1935 ஆம் ஆண்டு திருப்பூர் முன்சீப் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த திரு. முகம்மது கவுஸ் புதல்வர் திரு. எம்.ஜி. குலாம் காதர், தான் நடத்தி வந்த சினிமா தொழில் தொடர்பாக கொல்கத்தா நகருக்குச் சென்றபோது, அங்கு ஒரு வீட்டில் கையால் இயங்கக்கூடிய பின்னல் பொறியில் பனியன் நூற்பதைக் கண்டார். அதில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. கொல்கத்தாவின் பல பகுதிகளில் குடிசைத் தொழிலாக நடந்து கொண்டு இருந்த பல வீடுகளுக்குச் சென்று பார்த்தார். அந்தப் பொறியை வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வந்தார். காதர்பேட்டை பகுதியில் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பனியன் ஆடைத் தொழிலகத்தை நிறுவினார்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் பெத்தி செட்டிபுரம் என்று அழைக்கப்படும் ராயபுரம் பகுதியில், பெத்தி செட்டியாரின் மருமகள் திருமதி செல்லம்மாள், செல்லம்மாள் நிட்டிங் என்ற பெயரில் பனியன் தொழிலைத் தொடங்கினார்.

இவர்கள் இருவரும்தான் திருப்பூர் பனியன் தொழிலின் முன்னோடிகள். அந்தக் காலத்திலேயே ஒரு பெண் தொழில் முனைவோராகத் திகழ்ந்து இருக்கின்றார் என்பது தமிழகத்திற்கே ஒரு பெருஞ்சிறப்பு.

1930-களின் தொடக்கத்தில் திருவாரூரில் பேபி டாக்கீஸ், நாகப்பட்டினத்தில் ராபின்சன் ஹால் ஆகிய திரை அரங்கு களை நடத்திக் கொண்டு இருந்தவர்கள், எம்.ஜெ. குலாம் காதரின் உறவினர்கள்.

குலாம் காதர் பனியன் நிறுவனம் 1980 வரையிலும் நடைபெற்றது. அவர்களது ஒரு குடும்பம் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குப் போய் விட்டது. தற்போது அவருடைய பேரன் திரு. லியாகத் அலிகான் வேறு பெயரில் தொழில் நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

குலாம் காதர் அவர்களை, ‘திருப்பூர் பனியன் தொழிலின் தந்தை’ என, பனியன் துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) ஏற்றுக் கொண்டு இருக்கின்றது. சங்க வெள்ளி விழாவின்போது, குலாம் காதர் அவர்களுடைய வழித்தோன்றல்களை அழைத்துச் சிறப்புச் செய்து உள்ளனர்.

– அருணகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here