இருபத்தி நான்கு ஆண்டு கால இசைப் பயணத்தில் கிட்டார் வாசிப்பாளராக, மேடை இசையமைப்பாளராக, மெல்லிசைப் பாடகராக ஒலிப்பதிவாளராக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவர், திரு. ஸ்டீபன் ராயல். திரைப்பட இயக்குநர் சஞ்சய்ராம் உதவியுடன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இனி அவர் கூறியதிலிருந்து;
“எனக்கு சொந்த ஊர் எல்லப்பட்டி. மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ளது. நான், என் தாய் தந்தைக்கு 12ஆவது மகன். குடும்ப பொருளாதார சிக்கலில் உழன்றாலும், தனக்கான இரையை தானே தேடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், 1990ல் சென்னைக்கு வந்தேன்.
முதலில் சாந்தோம் கம்யூனிகேசன் மைய ஒலிப்பதிவு கூடத்தில் சிறிய வேலை கிடைத்தது. ஒலிப்பதிவு கூடத்தில் வேலை பார்த்ததால் நாமும் இசைக்கருவி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கிட்டார் இசையைக் கற்றுக் கொண்டேன்.
பின்னர், ஜெயஸ்ரீ ஒலிப் பதிவு கூடத்தில் வேலை கிடைத்தது. ஜெயஸ்ரீ ஒலிப் பதிவு கூடம் இசைஞானி இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்கள் பயன்படுத்திய கூடம். அதாவது, இசையமைப்பாளர் அனிருத் தாத்தாவின் ஒலிப்பதிவு கூடம். அங்கேதான் ஒலிப்பதிவு செய்யும் நுட்பத்தைக் கற்றுக் கொண்டேன்.
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வமணி ஒலிப்பதிவுக் கூடம் என்ற பெயரில் சொந்தமாக ஒலிப்பதிவு செய்யும் தொழிலை தொடங்கினேன். சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒலிப்பதிவு கூடம், இன்று ரூ.50 லட்சம் செலவில் விரிவாக்கப்பட்டு, பின்னணி பாடுதல், பின்னணி இசை, பின்னணி பேசுதல் மற்றும் எடிட்டிங் என பல பிரிவுகளை உள்ளடக்கிய பெரிய தொழிலகமாக உள்ளது.
தமிழ் பாடல்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் ஆல்பம் (Album) தயாரிக்க விரும்பும்போது என்னையே தேடி வருகிறார்கள்.
தமிழ் மீது பற்று கொண்ட தமிழன் நான் என்பதால் அவர்கள் எங்கள் நிறுவனத்தை விரும்புகிறார்கள். அதன் பயனாக சுமார் ஐநூறு பாடல் ஆல்பங்களுக்கு இசையமைத்து தயாரித்துக் கொடுத்திருக்கிறேன்.
திரு.வைகோ, திரு. திருமாவளவன், திரு. சீமான் போன்ற அரசியல் தலைவர்களின் கொள்கைப் பாடல்களை என் கூடத்தில்தான் ஒலிப்பதிவு மற்றும் இசை அமைத்து வாங்கிச் செல்வார்கள்.
என்னுடைய இசையமைப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆற்றலைப் பார்த்து, திரைப்பட இயக்குநர் திரு. சஞ்சய் ராம், குற்றாலம் என்கிற படத்திற்கு இசையமைக்க வைத்தார்.
அந்தத் திரைப்படம் வெளிவரும் முன்பே ஆனந்த மழை, ஒரு ஓவியம் உயிராகிறது. அதிர்ஷ்டம் 143, முத்துராமலிங்க தேவர் என நான்கு திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
முன்பைவிட இப்போது இசையமைப்பதற்கு புதிய கருவிகள் அதிகம் வந்து உள்ளன. அதனால், வாய் மொழி பாடல், இசை, ராகம் போன்றவற்றை படிக்காதவர்கள்கூட எளிமையாக பாடிவிடலாம்.
காரணம், அவர்களில் குரலை மாற்றி அமைக்கும் வகையிலான டோன்ஸ், பிளக்கிங்ஸ் கருவிகள் மற்றும் குரல், சுதியை மாற்றி அமைக்கும் மென்பொருள்கள், இசைத் தொகுப்புக்கான சி.டி.கள் என வந்து குவிந்து உள்ளன. எனவே, இன்றைக்கு இசை அமைப்பது எளிது. நிலைத்து நிற்பது தான் கடினம்.
நிலைத்து நிற்பதற்கு கிரியேட்டிவிட்டி வேண்டும். அது மண் சார்ந்ததாக, பண்பாடு சார்ந்ததாக, புதிய தொழில்நுட்பம் சார்ந்ததாக எதுவாகவும் இருக்கலாம். அவை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த வெற்றிக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.
தற்போது, திரைப்படத்திற்கு இசையமைப்பது எப்படி? பாடகராக பயிற்சி எடுப்பது எப்படி? வெஸ்டர்ன் இசையைக் கற்றுக் கொள்வது எப்படி? குறும் படம் தயாரிப்பது எப்படி? ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் என அரங்கத்தி லேயே தனி வகுப்பறைகள் வைத்து இருக்கிறேன். அதற் கான பயிற்றுநர்களை கொண்டு நடத்தி வருகிறேன்.
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச் சியை எட்டியிருப்பதாக நினைக்கிறேன்.
இப்போது, என்னுடைய கனவு திரைப் படங்களுக்கு இசையமைப்பது, இளைஞர்களுக்கு இசையமைக்கச் சொல்லிக் கொடுப்பது. வேறு சிந்தனைகளில் கவனத்தை சிதறவிட விரும்பவில்லை” என்றார், திரு.ஸ்டீபன் ராயல். ஆனந்த மழை திரைப்படத்திற்கான பாடலை ஒலிக்க விட்டு நம்மையும் கேட்க வைத்து மகிழ்வித்தார். (9840111103)
-ஆ.வீ. முத்துப்பாண்டி