பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விசயம் – எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதாகும். விவரம் தெரியாமல் கண்ட கண்ட திட்டங்களிலும் பங்குகளிலும் பணத்தைப் போட்டுவிட்டு அவதிப்படாமல் இருக்க நினைப்பவர்கள் இதை அவசியம் படித்தாக வேண்டும்.
விதிகள் எளிதானவை
எது, எதில் எல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அப்படியொன்றும் கடினமானதல்ல. நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனம் என்ன விதமான பொருட்களைத் தயாரிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதுவா.. அது என்ன என்பது தெரியவில்லையே.. மிகவும் சிக்கலான தொழில் நுட்ப அடிப்படையிலானது என்று நினைக்கிறேன்.. இதுதான் உங்களது பதிலாக இருக்குமானால் நீங்கள் அந்த நிறுவனத்தின் பக்கமே செல்லாமல் இருப்பது நல்லது.
உங்களுக்குப் புரியாத, சிக்கல் நிறைந்த தயாரிப்புப் பொருளுடன் தொடர்பு உள்ள எந்த நிறுவனத்தின் பங்கையும் உங்கள் முதலீட்டுப் பட்டியலில் இருந்து விலக்கி வையுங்கள். நன்றாகத் தெரிந்த, புரிந்து கொள்ள முடிந்த தொழில்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
பழைய கால உத்திகள் என்றாலும் அவற்றை இப்போதும் பயன்படுத்தலாம்.
சான்றாக,
என்று ஒரு முதுமொழி உண்டு. அது பங்குச் சந்தைக்கும் பொருத்தமானதுதான். விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். நன்கு விசாரியுங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
அள்ளிக் கொடுக்கிறார்களா?
எங்களிடம் முதலீடு செய்யுங்கள். .அதற்குக் கைமாறாக நாங்கள் உங்களுக்கு அளவற்ற பலன்களை அள்ளித் தருகிறோம் என்கிறார்களா? இந்த மாதிரியான நிறுவனங்களிடம் நீங்கள் அதிகப்படி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு தொழிலைச் செய்தால் அதில் இந்த அளவுக்கு இலாபம் கிடைக்கும். முதல் கொடுத்தவர்களுக்கு இவ்வளவு பங்கீடு கொடுக்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும். அதைக் காற்றில்விட்டு அவ்வளவு தருவோம், இவ்வளவு தருவோம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுவதற்குரிய சாத்தியங்கள் ஏராளம். எச்சரிக்கை தேவை.
மறைவான இடர்கள்
சில தொழில்கள் இப்போதுதான் புதி தாக அறிமுகமாகும். அவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் இடர்கள் என்னென்ன என்பதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுக்கொண்ட பின் இறங்கலாம் என்பதற்குள் வாய்ப்புகள் பறிபோய்விடும். ஆனால் இதற்காக அவசரப்பட்டு உங்களது கைப்பொருளை இழக்க வேண்டாம்.
உலக அளவில் பங்குச் சந்தை முதலீட்டு மன்னன் என்று சொல்லப்படுபவர் வாரன் பஃபெட். அவரே என்ன சொல்கிறார் தெரியுமா? எனக்குத் தெரிந்த, என்னால் புரிந்து கொள்ளக் கூடிய தொழில்களில் மட்டுமே முதலீடு செய்வேன். அவரே அப்படிச் சொல்லும்போது விவரம் புரியாத அப்பாவிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் பேராசை, அவசரம், முந்திக் கொண்டு சாதிக்கும் முனைப்பு ஆகியவற்றைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டுப் பங்குச் சந்தையில் இறங்குவதே நல்லது.
-சுதா தனபாலன்