நம் அனைவருக்குமே, நாம் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. சில நேரங்களில் வெற்றி அதுவாகவே தேடி வருகிறது. ஆனால் பல நேரங்களில் நாம் தான் வெற்றிக்கனியை கடும் போட்டிக்குப் பிறகு பறிக்க வேண்டி இருக்கிறது. நம்முடைய இலக்குகளை அடைய நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன திறன்கள் தேவைப்படும்? இதோ பத்து ஆலோசனைகள்:
ஒன்று
வெற்றியை நோக்கியே உங்கள் பார்வை இருக்கட்டும். முயற்சியின் போது வரும் இடைஞ்சல்களைத் தற்காலிகப் பின்னடைவுகளாக எடுத்துக் கொள்ளுங்கள் அவை முழுத் தோல்விகள் அல்ல.
இரண்டு
உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நீங்கள் கொடுத்த வேலைகளை இறுதிவரை முழுமையாக செய்து முடிக்கிறார்களா என்பதைக் கண்காணியுங்கள். கண்காணிப்பின் போது ஒருபோதும் எரிச்சல் அடையக் கூடாது. அந்த வேலையைச் செய்து முடித்து விட்டீர்களா?” என்று கேட்பதைவிட “என்ன, வேலை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?” என்று அனுசரணையோடு கேட்பது கூடுதல் பலனைத் தரும்.
இப்படிக் கேட்பதன் மூலம் வேலை முடிவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொள்வார்கள். அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தால் மட்டுமே வேலை நடக்கும். நீங்கள் கவனிக்க மாட்டீர்கள் என்றால் அவர்களும் கவலைப் பட மாட்டார்கள்.
மூன்று
சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றை நேரடியாக எதிர் கொள்ளுங்கள். அவை உங்களிடம் கூடு கட்டி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் அந்தப் சிக்கல்களுக்கு தீர்வு கண்டுதானே ஆக வேண்டும். தீர்வுகள் குறித்து உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். குறிப்பிட்ட சிக்கல் தொடர்பான ஆலோசகர்களுடன் பேசுங்கள். தீர்வு குறித்த தெளிவு கிடைத்து விடும்.
நான்கு
மக்கள் எப்போதுமே வலிமைக்கு மதிப்பு அளிப்பார்கள். நீங்கள் வலுவானவர் என்பதோடு நல்லவர் என்றும் உணரச் செய்வது, உங்கள் வெற்றிக்கு உதவும்.
ஐந்து
உங்களின் மீது முழு நம்பிக்கை வையுங்கள். உங்களின் பலம் எது என்பதை உணர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்துங்கள்.
Also Read: ராபர்ட் கியோசாகி சொல்லும் பதினைந்து வழிகள்
ஆறு
அரை டம்ளர் தண்ணீர் இருக்கிறது என்றும் அரை டம்ளர் காலியாய் இருக்கிறது’ என்றும் ஒரே விஷயத்தை இரண்டு விதமாய்ச் சொல்லலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் முன் சொன்னதில் ஓர் பாசிட்டிவ் அணுகுமுறை தென்படும்.
இது போல் எல்லா விஷயங்களிலும் பாசிட்டிவ் கண்ணோட்டத்துடன் அணுகுங்கள். தேவையற்ற விஷயமாய் இருப்பினும் அங்கே நமக்கென்று ஏதேனும் பயன்படக் கூடியது கிடைக்கக் கூடும்.
சில செயல்களை உங்களால் செய்ய இயலாத போது மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களால் எதுவரை முடியுமோ அதுவரை தொடர்ந்து செய்யுங்கள்.
யாராவது ‘முடியாது’ என்று பதில் சொன்னால் அதையே முடிந்த முடிவு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். எதனால் முடியாது என்று காரணத்தைக் கேளுங்கள். சமரசத்துக்குக் கொண்டுவந்து வெற்றி அடைய முயற்சியுங்கள்.
ஏழு
பெரிய மனிதர்கள் தங்கள் அருகே இருப்பவர்களை சாதாரணமானவர்கள் என்று நினைக்க வைத்து விடுவார்கள். அப்படிப் பெரிய மனிதர்களுடன் இருக்க நேரும்போது. நீங்களும் ஒரு பெரிய திறமையாளர்தான் என்று எண்ணிக் கொள்வது மட்டும் போதாது. அலட்டிக் கொள்ளாத அணுகுமுறையைக் கையாள வேண்டும். உங்களைப் பற்றிய விவரங்களை அதிகம் பேசாதீர்கள்.
அவர்கள் அதிகம் பேசுவார்கள், அதை அனுமதியுங்கள். செய்திகளைக் கறந்து கொள்ளுங்கள். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பும் இவர்கள், எதிராளிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். உங்களைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்காதீர்கள்.
எட்டு
உங்கள் மீது ஒரு பொறுப்பு சுமத்தப்படும் முன்பு நீங்களாகவே அதை எடுத்துச் செய்யுங்கள்.
ஒன்பது
யாரைப் பற்றியாவது உங்களுக்கு மோசமான கருத்து இருந்தால், அதை மறுபரிசீலனை செய்யுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இருக்கும் திறமைகளைக் கணக்கிட்டு வைத்திருங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் திறமைைையப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதீர்கள்.
Also Read: இலவசமாக விளம்பரம் செய்ய உள்ள வழிகள்
பத்து
சாதாரண மனிதர்கள் என்று பொதுவாகக் கருதப்பட்ட பலர் பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். எந்த சிக்கலாக இருந்தாலும் நீங்கள் முயற்சி செய்தால் தீர்வு காண முடியும். முயற்சி செய்யாவிட்டால் ஒருபோதும் முடியாது. ஒரு சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை யோசித்துப் பட்டியலிட போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். வேடிக்கையாகத் தோன்றும் யோசனை யைக் கூட குறித்துக் கொள்ளுங்கள். இவற்றில் சிறந்த ஒரு யோசனையைச் செயல்படுத்துங்கள். நீங்கள் எதிர் பார்க்கும் பலன் கிடைக்கும்.
-ராசன்