வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பலர், பெரும்பாலும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு அல்லது எல்லோருக்கும் மத்தியில் உயர்ந்தவராக காட்டிக் கொள்வதையே விரும்புகின்றோம். உண்மையில், நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்திற்கு ஏற்ப மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் தலைமை நிர்வாக அதிகாரி பண்பு உள்ளது. அதை பயன்படுத்த தயங்குகிறோம். ஒரு செயலை மேற்கொள்ளும் போது முதலில் தயங்குகிறோம். நம்மால் செய்யக்கூடிய வேலையைக்கூட தட்டி கழிக்கின்றோம் அல்லது தடுத்து நிறுத்துகிறோம், சாத்தியமானதைக் கூட கட்டுப்படுத்துகிறோம். அனைத்து பெரிய சாதனைகளும் புதுமையான மனநிலையில்தான் தொடங்குகின்றன. ஒரு செயலை தொடங்கும் முன்பு, என்ன செய்யவேண்டும் ? எப்படி செய்யவேண்டும் ? இதன் அடிப்படை என்ன? என்ற கேள்விகளை எழுப்பி விடை காண முயலவேண்டும். மனதை விரித்து புதிய தீர்வுகளை காண முயற்சிக்கவும். இதற்கு இடையில் உங்களைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.
Also read: பணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்
முதலீட்டு மனநிலை:
அமெரிக்காவின் உயர்மட்ட தொழில் அதிபர் மற்றும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ஒரு தொழில் அதிபர் பின்வருமாறு கூறினார். நான் பங்குச் சந்தையில் தேர்ச்சி பெறுவேன் என்று ஒரு முடிவை எடுத்தேன். நான் வளர்ந்தவுடன், முதலீடுகள் மற்றும் பங்கு பற்றிய புத்தகங்களைப் படித்தேன். அவை பயன் அளிக்க வில்லை. எனவே, எனது மனநிலையை மாற்றிக்கொண்டேன். எது உங்களது மனநிலைக்கு பொருத்துகிறதோ அதில் நேரத்தை செலவிடுங்கள் அல்லது முதலீடு செய்யுங்கள். அதுதான், தொழிலுக்கு வெற்றியைத் தரும். நீங்கள் சார்ந்துள்ள துறையில், ஒரு நிபுணராக பயிற்சி எடுப்பது, தொழில்துறையில் முதலிடம் பெற அவசியம் ஆகும். தலைமை நிர்வாக அதிகாரியானவர் தமது திறமை களைப் பற்றி மிகவும் குறைவாகவும், நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் உள்ள திறமைகளைப் பற்றி நிறையவே தெரிந்து கொள்ளவேண்டும். ஒத்த வயதுடையவர்களிடம் காணப்படும் திறமைகளைவிட இளம்வயதினரிடம் அதிகமான திறமைகள் ஒளிந்து கொண்டிருக்கும். அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்களது நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
உள்ளுணர்வு மனநிலை:
அதிக உள்ளுணர்வு கொண்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் நிறுவனங்களை முதன்மையாக கொண்டுவருவதிலும், தனது தலைமையில் உள்ளவர்களை இப்போது உள்ள நிலையை விட, மிக அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதாக ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு உள்ளுணர்வு மனநிலையை வளர்க்க பழகிக்கொள்ளவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள்; புதுமை மற்றும் வெற்றிக்கு நமது உள்ளுணர்வு முக்கியமாகும்.
Also read: புதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா?
ஒவ்வொரு நாளும் புதியதாக எதையாவது கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா ?வளர்ச்சி வாய்ப்புகளை நீங்கள் தேடுகிறீர்களா? நீங்கள் வெற்றிபெற உந்தப்படுகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு பதில் ‘ஆம்’ என்றால், நீங்கள் ஒரு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
– த. செந்தமிழ்ச் செல்வன்