இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் துறையாக மாறி உள்ளது.”. – இப்படி ஒரு முன்னுரையுடன் பேசத் தொடங்கினார் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளரும், பதிப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன்.
உலகளாவிய வணிக வாய்ப்பு
மொழி சார்ந்த பணிகளுக்காக, தனியாக ஒரு நிறுவனத்தை “லேங்ஸ்கேப் (Langscape) என்ற பெயரில் நடத்திக் கொண்டு இருக்கும் அவர், Valar.in வாசகர்களுக்காகச் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அதிகரித்து வரும் உலகளாவிய வணிக வாய்ப்புகளை தமிழகத் தொழில் அதிபர்கள் எப்படி அணுக வேண்டும், எப்படி பயன்பெற வேண்டும், அதற்கு, எப்படி தயாராக வேண்டும் என பல தகவல்களை குறித்து விரிவாகப் பேசினார். அதிலிருந்து..
”இந்தியா டுடே இதழின் தமிழ்ப் பதிப்பு அலுவலகத்தில் இருந்த பணியை 1998-ல் விட்டது முதல், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, தொடர்ந்து இந்த துறையில் இருக்கிறேன். இன்று, தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைக் (Professional Translators) கொண்டு செய்யப்படும் மொழிபெயர்ப்பு, நேரடியாக கணிப்பொறியையே பயன்படுத்தி செய்யும் மொழிபெயர்ப்பு என இரண்டு பகுதிகளில் இந்த துறை இயங்கிக் கொண்டிருக்கிறது.
எந்திர வழி மொழியாக்கம்
மொழி பெயர்ப்புத் துறை மீதான ஆர்வத்தில்தான் இத்துறையில் நுழைந்தேன். நானே ஒரு மொழிபெயர்ப்பாளன் என்கிற வகையில், என் ஒருவனைக் கொண்டே தொடங்கினேன். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence)என சொல்லப்பட்ட செயற்கை அறிவாற்றல் முறையில், மெஷின் ட்ரான்ஸ்லேஷன் (Machine Translation) என சொல்லப்பட்ட எந்திர வழி மொழியாக்கம் அப்போது என்னை நிறையவே ஈர்த்தது. இந்தியாவில் அதிகம் இல்லை என்றாலும், உலக அளவில் அப்போதே ஆராய்ச்சிகள் அதிகம். அது குறித்த புத்தகங்கள், இந்திய சந்தைக்கும் வரத் தொடங்கி இருந்தன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மட்டும், எந்திர வழி மொழியாக்கத்தில் ஒரு முயற்சி நடந்திருந்தது. மற்றவை எல்லாம் மேற்கத்திய உலகில் இருந்துதான். அதோடு, டாட் காம் காலக்கட்டம் (Dot Com Era) என சொல்லப்பட்ட, இணைய ஊடக காலமும் அப்போதுதான் தொடங்கி இருந்தது. அது உருவாக்கிய ஈர்ப்பில், நானும் இழுக்கப்பட்டு, சில காலம் அந்த வெள்ள ஓட்டத்தில் பயணித்தேன். வெள்ளம் வடிந்த போது கரையேறி, மீண்டும் மொழியாக்கத்தைத் தொடர்கிறேன்.
மொழியாக்கத்தின் தேவை
இப்போது, செல்ஃபோனிலேயே இணையத்தை அணுகலாம், என்ற வசதியும், சமூக ஊடகங்களின் வருகை, வளர்ச்சி மற்றும் வீச்சும் சேர்ந்து கொண்டதில்இன்று மிகப் பெரிய மாற்றம் நடந்து இருக்கிறது. நகரங்களைத் தாண்டி, கிராமங்களை நோக்கி சந்தை நகரத் தொடங்கி உள்ளது. அதனால், கிராம மக்களின் மொழியில் அவர்களுக்கு புரியும்படி பேசினால்தான் வியாபாரம்.. என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டு, மொழிக்கான இடத்தை இந்தியாவிலும் தரத் தொடங்கி இருக்கிறார்கள். நிறைய நடந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், பெர்சனல் கம்ப்யூட்டர் காலக் கட்டம் எனும் கடந்த காலம், ஆங்கில மொழிக்கானது, மொபைல் கம்ப்யூட்டிங் காலக் கட்டம் என்கிற, இன்றைய காலக் கட்டம் உள்ளூர் மொழிகளுக்கானது.
மொழி உரிமை
ஒரு நல்ல நிறுவனம் செய்ய வேண்டியதில், முக்கியமானது – தங்கள் தயாரிப்பு, அதைப் பயன்படுத்தும் முறை போன்ற தகவல்களை குறிப்புகளாக்கி, நுகர்வோருக்கு அளிப்பது. உலக சந்தையைக் குறி வைக்கும் நிறுவனங்கள், இந்த குறிப்புகளை ஆங்கிலத்தில் மட்டும் தந்தால் போதாது. பல உலக நாடுகளில், இந்தத் தகவல்களை உள்ளூர் மொழியில் கொடுத்தால்தான், அந்நாட்டு சந்தைக்குள் கால் வைக்க அனுமதி தருகிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட, இது கட்டாயம். சட்டமே அப்படித்தான். பன்னாட்டு நிறுவனங்கள் அங்கே உள்ளூர் மொழி குறிப்புகளுக்கு செலவு செய்கிறார்கள். அதனால், நுகர்வோருக்கும் பயன், மொழி உரிமையும் காக்கப்படுகிறது.
Also Read: பத்தில் ஒன்று – வெற்றியை நோக்கியே உங்கள் பார்வை இருக்கட்டும்
உள்ளூர் மொழியில் தகவல்
ஆனால், இந்திய சந்தையில் ஆங்கிலத்தில் தகவல் தந்தே இத்தனை காலமும் ஓட்டி விட்டார்கள். அண்மையில்தான், இப்போக்கில் மாற்றம் தெரிகிறது. சந்தையின் தேவையால் அது நடக்கிறது. நிறுவனங்களே, உள்ளூர் மொழியில் தகவல் தேவை என்பதைப் புரிந்துகொண்டு உள்ளனர். தகவல் அறிக்கையில் மட்டுமல்ல, இணைய தளம், மின்னஞ்சல், வாட்சாப், சமூக வலைதள பங்களிப்பு என பல வகையிலும் உள்ளூர் மொழிக்கு இடம் அதிகரிக்கிறது. இந்த பணியை சிறப்பாக நிறைவேற்ற உள்ளூர் மொழியை நன்கு தெரிந்த ஆட்கள் தேவை.
தவற விட்ட வாய்ப்பு
ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்துக்கும் இதுபோல ஆட்கள் தேவைப்படும். இதனால், மொத்தமாக எத்தனை பேருக்கு, மொழித்திறன் சார்ந்து வேலை கிடைக்கும் எனப் பாருங்கள். இது, இவ்வளவு நாட்களாக தவற விட்ட வாய்ப்பு. அதனால், மொழிப் பயிற்சி என்பதை, ஆசிரியர் வேலைக்கானது மட்டும் என்ற பார்வை மாற வேண்டும். அண்மையில் நடந்த, டிஜிட்டல் இந்தியா மாநாட்டிலும், அதன் பிறகும்தான், அரசு ரீதியாக மாநில மொழிகளைப் பொறுத்து சின்ன முன்னேற்றம் தெரிகிறது. சான்றாக, மொபைல் ஃபோன் துறையில் அதைப் பார்க்க முடிந்தது. ஒரு பன்னாட்டு மொபைல் ஃபோன் நிறுவனம் இந்திய சந்தையில் காலடி வைத்தால், இனி, அதன் இடைமுகம் (Interface) ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தி மற்றும், அறிந்தேற்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியிலாவது இருக்க வேண்டும் என்பதை இந்திய தரக்கட்டுப்பாடாக மாற்றும் முயற்சி தொடங்கி இருக்கிறது.
Also Read: தெரிஞ்சே ஏமாற, மல்டி லெவல் மார்க்கெட்டிங்
தவறான மொழிக் கொள்கை
ஆனால், இங்கும் கூட, அறிந்தேற்கப்பட்ட எல்லா இந்திய மொழிகளிலும் என ஆணையிட, அரசு முன்வரவில்லை. இதை ஒரு தொடக்கமாக
வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், இது போதாது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடுகள், அவற்றின் மொழியில் ஆவணங்களைக் கோரினாலும், அதைச் செய்ய முன் வரும் பன்னாட்டு நிறுவனங்கள், இங்கே ஆங்கில நகலோடு காலம் கடத்தக் காரணம் – நமது ஆட்சியாளர்களின் தவறான மொழிக் கொள்கையும், மக்கள் மொழியில் தகவல் அளிக்கப்படுவதை சட்டபூர்வமாக ஆக்காததும்தான் ஒரு நிகழ்வை மாற்ற வேண்டும் என்றால், அரசு சட்ட ரீதியாக முயற்சி செய்தால்தான், வலியுறுத்தினால்தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகாவது, அது நடைமுறையாக மாறும். ஏற்கனவே சொன்னது போல, மொழியாக்கம் (அ) மொழிமாற்றத் துறையின் இன்றைய நிலை வேறு.
மொழியாக்கத்தை தொழிலாக செய்ய
இத்துறையில் இருக்க விரும்புகிற வருக்கு அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தத் தெரிய வேண்டும். பிழையில்லா மொழியாக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, இன்று வேகமும் முக்கியம். மின்னஞ்சலில் வரும் ஒரு ஆவணத்தைப் பிரித்து, வேலை முடித்து, திருப்பி அனுப்ப வேண்டும். இது தவிர, கேட் டூல்ஸ் (CAT Tools – Computer Assisted Translation Tools) என்ற பெயரில், மொழியாக்கத்தை எளிமையாக்க, சில நுட்பங்களும், மென்பொருட்களும் உள்ளன. அவற்றை எப்படி, எங்கே பயன்படுத்துவது என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சந்தையின் தேவைக்கு ஈடு கொடுக்க முடியும்.
Also Read: துளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்?
எங்கு உள்ளது வாய்ப்பு
பொதுவாக இல்லாமல், சட்டம், மருத்துவம், மார்க்கெட்டிங் என ஏதேனும் ஒரு துறை சார்ந்து மொழிபெயர்ப்பாளர்கள் இயங்கினால் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சான்றாக, வங்கி சேவை இன்று கிராமப் புறங்களுக்கும் சென்று உள்ள நிலையில், அது தொடர்பான அனைத்து விவரங்களையும் வாடிக்கையாளரின் சொந்த மொழியில் வழங்க வேண்டும் என, இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கிறது. எனவே, எல்லா வங்கிகளும் அவர்களது சேவை, திட்டம் என அனைத்தையும் அந்தந்த மாநில மொழிகளில் மாற்றி வைக்க வேண்டும். அதனால், வங்கிகளின் வலைதளம் உள்ளிட்ட அனைத்தும் விரைவில், எல்லா இந்திய மொழிகளிலும் வர வேண்டும். இதுபோலத்தான், இன்சூரன்ஸ் உள்ளிட்ட மற்ற பல நிதிச் சேவை பணிகளும். இதையெல்லாம் செய்ய, அந்தந்த துறைகளின் சொற்கள், நடப்புகள் பற்றி மாநில மொழியில் தெரிந்த ஆட்கள் தேவை.
இமாலய வாய்ப்பு
பணமதிப்பு நீக்க நடவடிக்கை எனப்படும் டிமானிட்டைசேஷன் நடைமுறைக்கு வந்த அடுத்த நாளே, பேடிஎம் தன் மென்பொருளை பல மொழிகளில் வெளியிட்டதை இங்கே கவனிக்க வேண்டும். ‘இ காமர்ஸ்’ எனும் இணைய வணிகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால், நிறுவனங்கள் தங்களது பொருள்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாநில மொழிகளில் தர திட்டமிடுகிறார்கள். எல்லா நிறுவனங்களுக்கும், இந்த திட்டம் இருக்கிறது.. ஒரு இணைய விற்பனை தளத்தில், சுமார் பத்தயிரம் பொருட்கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலே, எல்லா இணைய வணிக தளங்களுக்கும் சேர்த்து, எவ்வளவு மொழி மாற்றப் பணி நடக்க வேண்டி உள்ளது, எனப் பாருங்கள்! மறுபுறம், அரசு வலைதளங்களை எல்லாம் மொழியாக்கம் செய்வது, இன்னொரு இமாலய வேலை. அடுத்து, இன்று உள்ள எல்லா அச்சு, காட்சி ஊடகங்களும், இணையத்தில் பல மொழி ஊடகமாக தடம் பதிக்க நினைப்பதால், அவர்களுக்கு நிறையவே தேவை இருக்கிறது.. அதோடு, இணையத்தில் மட்டுமே பன்மொழி ஊடகங்களாக தங்களை நிறுவ நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களின் தேவையும், இன்று அதிகம். இது போக, மல்டி மீடியா ஊடகங்களின் தேவை. சான்றாக, யூ ட்யூப் போன்ற வலைதளங்களில் உள்ளதை, மற்ற மொழிகளுக்கு குரல் மாற்றம் செய்வது (Dubbing) போன்ற, மிகப் பெரிய, ஆனால், சவாலான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அந்த வகையில், ஆர்வமுள்ள இளைஞர்களை மொழியாக்க உலகம் வரவேற்கிறது; காத்திருக்கிறது.
Also Read: கடன் பெற்று வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கலாமா?
பன்மொழியில் உருவாக்க வேண்டும்
மொழிபெயர்ப்புத் துறை, இப்போது இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் தொழிலாக உருவெடுக்கத் தொடங்கி உள்ளது. ஒரிசா மக்களுக்கு ஒடியாவிலும், ஜப்பானியர்களுக்கு அவர்கள் மொழியிலும், யூதர்களுடன் ‘ஹிப்ரு’விலும் பேசி, வியாபாரம் செய்வது போல சிறந்த வழி வேறு இல்லை. இங்கு இருந்தபடியே, அவர்களது மொழியில் பேச முடியும். டிவியில் ஜாக்கிசான், தமிழ் பேசுவது போலத்தான். இதற்கான செலவு என பார்த்தாலும், அதிகம் இல்லை. அதனால், உலக சந்தையில் கால் பதிக்க நினைக்கும் தொழிலதிபர்கள் தங்களது தயாரிப்பு
அல்லது பொருள் பற்றி விரிவான தகவல் சொல்ல உருவாக்கப்படும் வலைதளம், தகவலறிக்கை, ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக், வாட்சாப் போன்ற அனைத்திலும் உரையாடல்களை பன்மொழியில் உருவாக்க வேண்டும்.
எங்கள் பணி
லேங்ஸ்கேப் என்ற, எங்களது நிறுவனம் மொழிபெயர்ப்பு சார்ந்த பல்வேறு பணிகளைச் செய்கிறது. இன்று, இந்த துறையில் – நம்பகமான, பன்னாட்டு அளவிலான, குறித்த நேரச் சேவை தருவதுதான், எங்களது அடிப்படை நோக்கம். இந்திய மொழிகளில் மட்டுமின்றி, உலக மொழிகளில் எந்திர வழி மொழியாக்கம் (Interactive Machine Translation) செய்யத் தேவையான ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளோம். ஏற்கனவே அறுபதுக்கும் மேலான மொழிகளில் நாங்கள் பணியாற்றுகிறோம். ஜப்பானிய, சீன, ஜெர்மானிய, ஸ்பானிஷ், ஃபிரெஞ்சு, அரபு, மலாய் என பல மொழிகளில் இப்போதே வேலைகள் நடக்கின்றன. அது மட்டுமல்ல. இன அடிப்படை சிறுபான்மையினர் (Ethnic Minority) பேசும் மொழிகளில் சேவை அளிப்பதில் நாங்கள் தனிமுத்திரை பதித்தவர்கள். கிரீன்லாந்தில் உள்ள மொழிபெயர்ப்பாளரை வைத்து, அமெரிக்காவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு எஸ்கிமோ மொழியில் சேவை அளித்து இருக்கிறோம். பசிபிக் தீவுக் கூட்டங்களில் பேசப்படும் சமோவான், மெக்சிகன் பூர்வீக குடியினரின் நஹூவாத்தல், இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி என்று கருதப்படும் அராமாய்க் என எங்களின் மொழிச்சேவைப் பட்டியல் மிகவும் நீண்டது. நோக்கியா, மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்ற இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி ஆவணங்களை உருவாக்கித் தந்த அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது.” என, தனது உரையாடலை முடித்தார் திரு. ஆழி. செந்தில்நாதன். (9940147473)
– சந்திரன்