ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றை பற்றி கற்பதற்கு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி (SVPISTM) வாய்ப்பு அளிக்கிறது. இக்கல்லூரி இந்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்துடன் இனைந்து இக்கல்லூரி இளங்கலை பி.எஸ்சி., – துகிலியல் (3 ஆண்டுகள்- முழு நேரம்) மற்றும் முதுகலை எம்பிஏ. – ஜவுளி மேலாண்மை/ஆயத்த ஆடை மேலாண்மை/ சில்லறை வர்த்தக மேலாண்மை (2 ஆண்டுகள் – முழு நேரம்) பட்டப் படிப்புக்களை வழங்கி வருகிறது.
பி.எஸ்.சி. இளங்கலை துகிலியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூ வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் 88 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
எம்பிஏ., முதுகலை படிப்புக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஜவுளி மேலாண்மை (Textile Management)/ ஆயத்த ஆடை மேலாண்மை (Apparel Management) / சில்லறை வர்த்தக மேலாண்மை (Retail Management) என மூன்று விருப்பப் பாடங்கள் உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் தலா 45 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு (CUCET) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். CUCET தேர்வுக்கு விண்ணப்பிக்க www.cucetexam.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
கல்லூரியில் சிறந்த ஆசிரியர் குழு, நூலகம் மற்றும் கணினி மையம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகம், நெசவு மற்றும் பின்னல் தறி ஆய்வகம், ஜவுளி பரிசோதனை ஆய்வகம், ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் ஆய்வகம், ஆடைகள் மாதிரி வடிவமைப்பு மற்றும் தர வகைப்படுத்தல் ஆய்வகம், ஜவுளி இரசாயன செயலாக்க ஆய்வகம், கணினி உதவி வடிவமைப்பு ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், கலையரங்கம், விரிவுரை அரங்கம் ஆகியவை உள்ளன.
ஃபேஷன், சுற்றுசூழல், உணவு, ஐடியா, உளவியல் மற்றும் சுகாதாரம், சமுதாய பொறுப்புணர்வு, நிழல்படக் கலை, விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுமம் போன்ற பல குழுமங்களில் பங்கேற்று மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.
பாடத்திட்டம்:
பி.எஸ்.சி. டெக்ஸ்டைல்ஸ் மாணவர்களுக்கு ஜவுளித்துறைக்கு தேவையான பஞ்சு வகைகள் குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும், பேஷன், ஆடை உற்பத்தியின் கோட்பாடுகள், நடைமுறைகள் குறித்த பாடம் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. எம்பிஏ., படிப்பில் 65% மேலாண்மை குறித்த பாடம் மற்றும் பயிற்சியும் 35% டெக்ஸ்டைல்ஸ் குறித்த பாடம் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முனைவோராகச் செயல்பட தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
-முனைவர் சி. ரமேஷ்குமார்
(75982 01968)