மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக் கணினியை பாதுகாக்க சில குறிப்புகளை இக்கட்டுரையில் காணலாம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களது மடிக் கணினியில் உள்ள இயங்கு தளம் மற்றும் ஆப்- களை மேம்படுத்துங்கள். ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை உங்கள் மடிக் கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் எனில், மடிக் கணினியில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வையுங்கள். பயன்படுத்தத் தொடங்கும் போது எடுத்து பொருத்திக் கொள்ளலாம்.
மடிக் கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மென்மையான துணிகளை பயன்படுத்தலாம். அல்லது அதற்கென இருக்கும் ஸ்க்ரீன் கிளீனிங் லிக்விட் பயன்படுத்தி துடைக்கலாம். வேறு கரடுமுரடான துணிகளைப் பயன்படுத்தியோ அல்லது கைகளாலோ துடைக்கக் கூடாது. அழுத்தியும் துடைக்கக் கூடாது.
மடிக் கணினிக்கு என கொடுக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு சார்ஜர்களை பயன்படுத்தினால் வெப்ப மாறுதல் மற்றும் அதிக மின்னோட்டம் காரணமாக மடிக் கணினியில் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதிக நேரம் நம் மடியில் வைத்தபடி மடிக் கணினியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் பிராசசர்களின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ள அதில் பூசப்படும் சிலிக்கா என்ற வேதிப்பொருள் நச்சுத் தன்மை வாய்ந்தது. இதனால் வெளியிடப்படும் வெப்பம் தோல் வியாதிகளை உண்டாக்கக் கூடும். எனவே மடிக் கணினிகளுக்கு என விற்கப்படும் லேப்டாப் ஸ்டாண்ட் வாங்கி பயன்படுத்துவது நல்லது.
ஆன்டி வைரஸ் மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள். நிறைய ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாகக் கூட கிடைக்கின்றன. இது உங்கள் மடிக் கணினியில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்களில் இருந்து வன்பொருள் மற்றும் மென்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
மேலும் தங்களது கணினி பயன்பாட்டிற்கேற்ப ஃப்ரீவேர் மென்பொருட்களை தேர்வு செய்யுங்கள். இணையம் அதிகம் பயன்படுத்துபவர்கள் எனில் மால்வேர் வகைகளை நாடுங்கள். இவற்றிலும் நிறைய ஓப்பன்சோர்ஸ் மென்பொருள்கள் கிடைக்கின்றன. பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்களும் கிடைக்கின்றன. முடிந்தவரை இயங்கு தளத்துடன் வரும் விண்டோஸ் டிஃபெண்டர், ஆன்டி மால்வேர்களை மேம்படுத்தி வைப்பது நல்லது.
தொடர்ச்சியாக நீண்ட நேரம் மடிக் கணினியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிக அளவாக எட்டு மணிநேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். அதற்கும் மேலாக மடிக் கணினி பயன்பாட்டில் இருந்தால் விரைவில் வெப்பம் அடைந்து மடிக் கணினியின் ஆயுட்காலம் குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
யுஎஸ்பி பொருட்களை பயன்படுத்தும் போது (ப்ளூ டூத், பென் ட்ரைவ், வயர்லெஸ் மவுஸ்) கணினி பயன்பாட்டில் உள்ளபோது அவற்றை எடுக்க நேரிட்டால் டாஸ்க் பாரில் காட்டப்படும் சேஃப்லி ரிமூவ் ஹார்ட்வேர் கொடுத்து விட்டு எடுக்கவும். பயன்பாட்டில் உள்ள போதே எடுத்தால் யுஎஸ்பி அல்லது அதன் இணைப்பு போர்ட் ஏதேனும் பழுதடையும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக அனைத்து வகையான கணினிகளும் வெப்பம், தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக பயணங்களின் போது மடிக் கணினியை பயன்படுத்தக் கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.
மடிக் கணினி வாங்கும் போது கொடுக்கப்பட்ட பேக் – களையே பயன்படுத்துங்கள். காரணம் அந்த பேக்-கள் தவறுதலாக கீழே விழ நேரிட்டால் அல்லது வாகன பயணங்களின் போது, கீழே வைப்பது, எடுப்பது போன்ற நேரங்களில் ஏற்படும் அதிர்வுகளை மடிக் கணினிக்கு கொடுக்காத வண்ணம் அவை வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஏற்கேனவே பயன்படுத்திய இரண்டாம் கை மடிக் கணினி வாங்குபவர்கள் அதற்கான அசல் பேக் கிடைக்காத போது, லேப்டாப்களை வைப்பதற்கு என வரும் அதற்காக தயாரிக்கப்பட்ட பேக் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
பணி இடையே சிறிது நேரம் அவகாசம் எடுத்துக் கொள்ளும் நிலையில் (சான்றாக உணவு இடைவேளை, வேறு பணி நிமித்தம்) உங்கள் மடிக் கணினியை ஹைபர்னேட் நிலையில் வைப்பது அவசியம். இதனால் மின்சாரம் மிச்சப் படுத்தப்படுகிறது. பிராசசரின் பயனற்ற செயல்பாடும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
மேலும் மடிக் கணினியின் சீரியல் எண்ணைக் குறித்து குறித்து வைத்துக் கொள்வது நல்லது. பழுதடைந்து விட்டால் அதற்கு தகுந்த உதிரிபாகங்கள் வாங்கவும், அவை இயங்குவதற்கான ட்ரைவர் மென்பொருட்களை பதிவிறக்கவும் ஏதுவாக இருக்கும்.
மடிக் கணினிக்கு இடது புறம் உள்ள கென்சிங்டன் துளை மூலம் மடிக்கணினி திருடு போவதை தடுக்கலாம். ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து நகர்த்த முடியாத பொருளுடன் சேர்த்து பூட்டி விட்டால் நமது கணினி நம் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இதை திறக்க நம்பர் பாஸ்வேர்ட் வசதியும் அந்த பூட்டு கேபிளில் தரப்பட்டு இருக்கும்.
மடிக் கணினியை பயன்படுத்திக் கொண்டே சிப்ஸ் போன்ற தீனிகளை உண்பதும், காப்பி மற்றும் குளிர் பானங்களை அருந்துவதும் நமது மடிக் கணினிக்கு நாமே ஆபத்துகளை உருவாக்கும் வழிகளாகும். திரவ உணவுகள் சிந்தினால் கீபோர்டு, ஆடியோ ஸ்லாட் போன்றவற்றுக்குள் சென்று மடிக் கணினியின் மற்ற பாகங்களை பழுதாக்கி விடும். ஹார்ட் ட்ரைவ் பழுதானால் அதில் உள்ள கோப்புகள் மற்றும் அனைத்து தரவுகளுக்கும் விடை கொடுத்து விட வேண்டியதுதான். மானிட்டர் பழுது அடைந்தால் மடிக் கணினியின் விலையில் 15 – 20% தொகை இதற்கே செலவழிக்க நேரிடும். டச் ஸ்க்ரீட் மானிட்டர் அல்லது கம்பேட்டிபிலிட்ட மானிட்டர் என்றால் இன்னும் கூடுதலாக செலவழிக்க நேரிடும்..
– சீநிவாஸ், மத்துவராயபுரம், கோவை