தேவை இல்லாதது என்று தூக்கி எறியும் பொருட்கள் நமக்குத் தெரியாமலேயே நம் தேவையை நிறைவு செய்பவையாக இருக்கின்றன. அதாவது, நம்மால் அன்றாடம் கொட்டப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் வருவாய் கிடைக்கின்றது. இந்தியாவில் மட்டும் நான்கு லட்சம் டன் அளவிற்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளால் இயற்கை வளங்களான மண், காற்று, நீர் ஆகியவை அதிக அளவில் மாசு அடைகின்றன. மேலும், சுகாதார கேடையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும், இந்த குப்பைகள் மூலம் நம் பொருளா தாரத்தையும், வளங்களையும் பெருக்கிக் கொள்ளமுடியும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றால் வருமானம் ஈட்ட முடியும்.
Waste Recycling Management (WRM) என்ற முறையைப் பயன்படுத்தி பல நாடுகள் பொருளாதாரம், பொது சுகாதாரம், சுற்றுப்புறம், இயற்கை வளம், மிக பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. நாடுகள் மட்டும் அல்லாது, நம்மால் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் மூலம் நாமும் வருமானம் ஈட்டலாம். வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தரலாம்.
இந்த வாய்ப்பில் முதலில் கைகொடுப்பது, வீட்டில் உருவாகும் குப்பைகளே. காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், அட்டைகள், பேப்பர்கள், ஆகியவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அவற்றை பணமாக்க முடியும். அதாவது, காய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை நுண்ணுயிர் உரங்களை தயாரிக்க முடியும். இதற்கான எந்திரங்களும் கிடைக்கின்றன. இருந்தாலும் வீட்டிலேயே தயாரிக்கலாம். இயற்கை உரங்களுக்கு தற்போது நல்ல சந்தை உள்ளது. இவற்றை தயாரித்து மொத்தமாகவும் விற்கலாம். நாம் கொட்டும் குப்பைகளில் பேப்பர், அட்டைகள், புத்தகங்கள் இருக்கும். இவற்றை கொட்டுவதற்கு பதிலாக பொருளாக ஈட்டலாம். இதற்கு பெரிய அளவில் சந்தை உள்ளது. பழைய காகிதங்களை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து காகிதக் கூழ் தயாரித்து புதிய பேப்பர்கள், எழுதும் தாள்கள், அட்டைப் பெட்டிகள், காகித தட்டுகள், காகித பொம்மைகள், காகித கப்புகள், அலங்காரப் பொருட்கள் என பல செய்யப்படுகின்றன.
காகிதக் கூழ் தயாரிக்கவே பெரிய அளவில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதுபோன்ற காகிதக் குப்பைகளை வாங்கவும், விற்கவும் நகர்புறத்தை சுற்றி நிறைய இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி வருமானத்தை பெருக்க முயற்சிக்கலாம்.
இந்த மேனேஜ்மென்ட் மூலம், நகர்ப்புறத்தில் மட்டும் அல்லாது கிராம புறங்களிலும் செயல்படுத்தலாம். எரிபொருள், கால்நடைகளுக்கான தீவனங்கள், உரங்கள் போன்றவற்றை தயாரிக்கலாம். கால்நடை கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கலாம். பின், தழைகள், காய்ந்த சோளக் கதிர்கள், இவற்றைக் கொண்டு கால்நடைகளுக்கு தீவனங்கள் தயாரிக்கலாம். இதன் மூலம், வெளியில் வாங்கும் செலவு குறையும். நம் தேவைக்குப் போக, மற்றவர்களுக்கு விற்பனை செய்யலாம். வருவாய் பெருகும். இதை சிறுதொழிலாகவும் செய்யலாம்.
Also read: குப்பைகளைப் பிரித்து விற்பனை செய்யும் ஆப்
மேலும், கிராமத்தில் கிடைக்கும் மரத்தூள்கள், மரப் பட்டைகள், காய்ந்த மரப்பொருட்கள் இவற்றைக் கொண்டு எரிபொருள் தயாரிக்கலாம். மேலும், உயிரி நிலக்கரி தயாரிக்கலாம். இவற்றை, உணவு விடுதிகள், செங்கல் சூளைகள், திருமணக் கூடங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம்.
அடுத்து, இயற்கை வளத்திற்கு பெரிய பாதிப்பாக இருப்பது மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும். இதன் பயன்பாட்டால் மண்வளத்தை கெடுப்பதற்கு பதிலாக, பணமாக மாற்றலாம். இதற்கென்று தனி சந்தையே செயல்படுகின்றது. இவை தொடர்பான தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அவை, பெரிய பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் என தரம் பிரித்து வாங்கிக் கொள்கின்றன. அவற்றை அரைத்து மறுசுழற்சி மூலம், பிளாஸ்டிக் மணிகள், வளையல்கள் என செய்யப்படுகின்றன.
அடுத்து எலக்ட்ரானிக் பொருட்கள், இவை 20 சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. பல நாடுகள் டிவி, லேப்டாப், மொபைல் ஃபோன், கம்ப்யூட்டர் போன்றவற்றின் உதிரிப்பாகங்களில் இருந்து காப்பர், அலுமினியம், ஈயம், தங்கம் போன்றவை தரம் பிரித்து எடுக்கின்றனர். மேலும், பழைய லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றை மறுவிற்பனை செய்கின்றனர். இதன் மூலம் ஒரு பெரிய வருமானத்தை ஈட்டுகின்றனர்.
மேலும், பயன்படுத்திய ரப்பர் டயர்கள் மூலம் எரிபொருள் தயாரித்து, அதை தார்ச்சாலை அமைக்க பயன்படுத்துகின்றனர். மற்றும், பயனற்ற மோட்டார் செட்டுகள், பம்பு செட்டுகள், இரும்பு பொருட்கள், அலுமினியப் பொருட்கள், பித்தளை ஸ்டீல் பைப்புகள் போன்றவற்றை பிரித்து அதிலிருந்து இரும்பு, காப்பர் போன்றவற்றை விற்கின்றனர்.
மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகள் பற்றிக் காண்போம்.
வீட்டுக் கழிவுகள்:
காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள் – இயற்கை நுண்ணுயிர் உரங்கள் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்க.
காகிதம்: தின இதழ்கள், பேப்பர்கள், அட்டைகள், புத்தகங்கள் – எழுதும் தாள்கள், அட்டைப் பெட்டிகள், காகிதப் பைகள், காகித பிளேட்டுகள், தட்டுகள், கப்புகள், அலங்கார பொம்மைகள், பரிசுப் பொருட்கள், பேக்கிங் செய்ய..
பிளாஸ்டிக்: பாட்டில்கள், பிவிசி பைப்புகள் இன்னும் பலவகையானப் பிளாஸ்டிக் பொருட்கள் – வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் குடங்கள், தண்ணீர் தொட்டிகள்.
Also read: புறந்தூய்மை நீரான் அமையும்
எலக்ட்ரானிக் பொருட்கள்: லேப்டாப், கம்ப்யூட்டர், யூபிஎஸ், டிவி, கீபோர்ட் – மறுவிற்பனை சந்தை, உதிரி பாகங்கள், காப்பர், தங்கம், ஈயம்.
மோட்டார்கள், பெரிய இரும்பு எந்திரங்கள், பம்பு செட்டுகள், இரும்பு கம்பிகள், பித்தளை பொருட்கள் – மறுவிற்பனை, உதிரிபாகங்கள் தனிதனியாக விற்பனை செய்தல்.
பழைய கட்டடங்கள் உடைத்தல்:
அதிலிருந்து இரும்பு, ரப்பீஸ் துகள்கள், செங்கல், மணல், கம்பிகள், மர சாமான்கள் – ஆறு, ஏரிகள் பாதுகாத்தல், இரும்பு, ரப்பீஸ், மணல் துகள்கள், மரம் என தனித்தனியாக விற்பனை செய்தல்.
மரங்கள்: மரத் துகள்கள், மரப் பட்டைகள், சறுகுகள், பழைய மரங்கள் – உயிரி நிலக்கரி, எரிபொருள் தயாரிப்பு, உணவு விடுதிகள், பேக்கரி, மாடி தோட்டம் அமைக்க.
டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளில், குறைந்த அளவுப் பொருட்களை மறுசுழற்சி செய்தாலே நல்ல வருவாயும், நல்ல இயற்கை வளமும், சிறந்த மண்வளமும் கிடைக்கும். இதனால் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் உயர்த்தலாம். சுவீடன் நாடு, கொட்டும் குப்பைகளில் 53% மறுசுழற்சி செய்து முதல் இடத்தில் உள்ளது. அடுத்து, சிங்கப்பூர் 50% சுழற்சி செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
– விநாயகம்